கன்னி - Sani Peyarchi 2020 - 2023 Tamil

2020-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

கன்னிராசி வியாபாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்பவர்களே!

இருப்பதை வைத்து கொண்டு சந்தோஷமாக வாழ நினைக்கும் கன்னிராசி அன்பர்களே இதுவரை உங்கள் ராசிக்கு 4 - ம் வீட்டில் அமர்ந்து நாலாவிதத்திலும் உங்களை சின்னாபின்னமாக்கிய சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசிக்கு 5 ம் வீடான பூர்வபுண்ணியஸ்தானத்தில் ஆட்சிப் பெற்று அமர்வதால் நல்லதே நடக்கும்.

சனிபகவான் ஆட்சிப்பெற்றிருப்பதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும். இதுவரை சுக ஸ்தானத்தில் அமர்ந்து சின்னச் சின்ன சந்தோஷங்களைக் கூட அனுபவிக்க விடாமல், ஏமாற்றங்களையும், அலைக்கழிப்புகளையும் சந்தித்தீர்களே, நிலையான ஓர் இடமில்லாமல் அடிக்கடி வீடு மாறிக் கொண்டிருந்தீர்களே... தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரித்துக் கொண்டே போனதே, அதுமட்டுமில்லாமல் அவருடன் கருத்து மோதல்களும் வெடித்ததே, உத்தியோகத்திலும் அவமானத்தை சந்தித்தீர்களே... இனி அந்த அவல நிலை மாறும். உங்களை உருகுலைய வைத்த சனி பகவான் இப்போது உங்களின் ராசிக்கு 5 - ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழக் கூடிய இனிய நிலை உருவாகும். பூர்விகச் சொத்துப் பிரச்னை தீரும். தாயாருடன் பாசமாக நடந்து கொள்வீர்கள். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பாதியிலேயே நின்ற பணி இனித் தொடரும். பணவரவு அதிகரிக்கும். வீட்டைக் கட்டி முடித்து கிரகப் பிரவேசம் கோலாகலமகச் செய்வீர்கள். உங்களைக் கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள், நண்பர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். கணவன் - மனைவிக்குள் சாதாரணமாகப் பேசினாலே உண்டான சண்டை சச்சரவுகள் இனி இல்லை. நீண்ட நாள்களாகக் குழந்தை வரம் வேண்டிக் கோயில் குளமென்று சுற்றிச் சுற்றி ஒரு பலனுமில்லாமல் போனநிலை மாறும். இனி கவலை வேண்டாம்.

5 - ம் இடத்தில் சனி அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். என்றாலும் கர்ப்பிணிகள் தொலை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சாலைகளைக் கடக்கும் போது நிதானம் தேவை. அலைபேசியை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம். பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாகப் பழகுங்கள். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

29.3.2023 முதல் 24.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 6 ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம், சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு, வாகன அமைப்பு போன்ற சுபபலன்கள் உண்டாகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

உங்கள் ராசிக்கு 4 ம் வீடான தனுசு ராசியிலிருந்து 5 ம் வீடான மகரராசிக்குச் சென்று அங்கே ஆட்சி பலம் பெற்று அமர இருக்கிறார் சனிபகவான். தன் ஸ்தானத்தினாலும் பார்வையினாலும் அடுத்த இரண்டரை ஆண்டுகளுப் பலன் அளிக்க இருக்கிறார். உங்கள் ராசிக்கு 2,7,11 ஆகிய வீடுகளை சனிபகவான் பார்க்கிறார்.

இரண்டாம் வீடான வாக்குஸ்தானத்தை சனிபகவான் பார்ப்பதால் பேச்சில் கவனம் தேவை. இடம்,பொருள், ஏவல் அறிந்து பேசுவது நல்லது. சில நேரங்களில் உங்களையும் அறியாமல் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டு அவஸ்தைப் படுவீர்கள். எனவே, யோசித்துப் பின் பேசுவதை இந்தக் காலகட்டத்தில் தாரக மந்திரமாகக் கொள்ளுங்கள். கண்ணைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. அக்கம் - பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். சிலசமயங்களில் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போகக்கூடும். ஆகவே அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.

சனிபகவான் உங்களின் 7 - ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கை, கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும்.

சனிபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நெடுநாள்களாக வரமாலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். மூத்த சகோதரர்களுடன் வீண் வாக்கு வாதங்கள் இருந்ததல்லவா, இனி அந்த நிலை மாறும். பாசமாக நடந்து கொள்வார். மார்கெட்டில் புதிதாக வந்த வாகனத்தை வாங்குவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் விரையாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் காரியத்தடையும், அலைச்சலும் இருக்கும். உத்திரம் நட்சத்திக்காரர்களின் உடல்நலம் பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். குடும்பத்திலும் பிரச்னைகள் வந்து போகும். இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் எதிர்பாராத வகையில் பணம் வரும். திடீர் யோகம் உண்டாகும். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும்.

28.12.2021 முதல் 26.01.2023 வரை

உங்களின் லாபாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் வசதி வாய்ப்புகள் பெருகும். வாழ்வின் முன்னேற்றத்திற்குக் காரணமானவர்களைச் சந்திப்பீர்கள். ஆனால் அஸ்தம் நட்சத்திரக் காரர்களுக்கு வீண்பழி, சிறு விபத்து, பொருள் இழப்பு, உடல் நலக்குறைகள் ஏற்படலாம். 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். தூரத்து உறவினர்கள் மற்றும் பால்ய சிநேகிதர்கள் உதவுவார்கள்.

27.01.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் திருதிய, அட்டமாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் நெருங்கிய உறவினர், நண்பர்களின் இழப்பைச் சந்திக்க நேரிடும். பூர்விகச் சொத்துப் பிரச்சனைகள் வரும். உடன்பிறந்தவர்களுக்கிடையே கருத்துமோதல்களும் அதிகரிக்கும். இதற்கிடையில் 27.6.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரமடைவதால் பழைய பிரச்னைகள் தீரும். புது சொத்து வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் அமர்வீர்கள். பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேர்வீர்கள்.

கன்னிராசிப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

இதுவரை உங்கள் ராசிக்கு 4 - ம் வீட்டில் அமர்ந்து கொண்டு பலவகையிலும் உங்கள் முன்னேற்றங்களைத் தடை செய்த சனி பகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டங்களில் 5 - ம் வீட்டில் அமர்வதால் உங்களின் தயக்கம், தடுமாற்றம் யாவும் நீங்கும். உங்களுக்குள் அடங்கிக்கிடந்த ஆற்றல்கள் வெளிப்படும். மனோ பலம் அதிகரிக்கும். சோகமான முகம் மலரும். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் குழப்பம், பணப்புழக்கம் குறைந்த நிலை, அவையெல்லாம் இனி மாறும்.

இனி உங்கள் கை ஓங்கும். கணவரின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அவரை மாற்றுவீர்கள். உங்களுக்கும் விட்டுக் கொடுக்கும் மனசு வரும். தாயாரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகள் ஸ்தானத்தில் சனி அமர்வதால் பிள்ளைகள் உங்களை புரிந்து கொள்ளாமல் சில நேரங்களில் பேசுவார்கள். அவர்களின் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. நாத்தனார், மச்சினர், மாமியார் தொந்தரவுகள் குறையும். இனி மற்றவர்கள் மனம் புண்படாத படி பேசுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். உங்களிடம் கடன் வாங்கி நீண்ட நாள்களாக ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவார்கள். சனிபகவான் உங்களின் 7&ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கை, கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். ஆனால் சனிபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நெடுநாள்களாக வரமாலிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வரும். மூத்த சகோதரர் பாசமாக நடந்து கொள்வார்.

வியாபாரம் செய்யும் பெண்களுக்கு இருந்த கஷ்டங்கள் எல்லாம் தீரும்.வியாபாரம் அமோகமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் கடின உழைப்பைக் கண்டு அதிசயிப்பார்கள். வியாபார ரீதியான வழக்குகளின் நல்ல தீர்ப்பு வரும்.

உத்தியோகம் பார்க்கும் பெண்களைத் தவறாகப் பேசியவர்களெல்லாம் இப்போது தேடிவந்து மன்னிப்புக்கேட்பார்கள். பாராட்டுகள் குவியும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்ப்பார்த்ததைபோலக் கிடைக்கும். கலைத்துறைப் பெண்களின் வளர்ச்சிக்கு இருந்து வந்த தடைகளெல்லாம் விலகி இனி புகழடைவீர்கள். இந்த சனி மாற்றம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிக் கொணர்வதுடன் கௌரவம், புகழையும் தரும்.

கன்னிராசி வியாபாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

வியாபாரிகளே...

பணவரவில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். 5 ம் இடத்துக்கு வரும் சனிபகவானால் தேவையான பணம் தங்கு தடையின்றிக் கிடைக்கும். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாள்கள் இனி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்து கொண்டு கொள்முதல் செய்யப்பாருங்கள். கூட்டுத்தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். விளம்பர சாதனங்களை சரியாகப் பயன்படுத்தி விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். பிரபலங்களும் வாடிக்கையாளர்களாவார்கள். ஏற்றுமதி - இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. ஏஜென்ஸி, புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபமடைவீர்கள். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே....

வரும் சனிப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறது. இதுவரை 4 ம் இடத்தில் அர்த்திராஸ்டம சனியாக இருந்தவர் 5ம் இடத்துக்கு மாறி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதுவரை மற்றவர்களின் பணிகளையும் இழுத்துப் போட்டுப் பார்க்க நேரிட்டதே, இனி அந்த நிலை மாறும். உங்கள் திறமையை குறைத்து எடைப்போட்டார்களே... இனி அதிகாரிகளே ஆச்சர்யப்படும்படி சில கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக்காட்டுவீர்கள். சக ஊழியர்களும் உங்களின் செல்வாக்கை நினைத்து நட்புறவாடுவார்கள். கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். துறைமாறிப் பணியாற்றியவர்களுக்கு படிப்புக் கேற்ற வேலைக் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினி துறையினர்களுக்கு வெளிநாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சி குழப்பங்கள், தடுமாற்றங்களில் இருந்து விடுவிப்பதுடன் வெளிவட்டாரத்தில் செல்வாக்கையும் தருவதாக அமையும்

பரிகாரம்:

திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில், வேலூர் மாவட்டம் பெரியமணலி எனும் ஊரில் அருளும் ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வில்வம் சாற்றி வழிபட்டு வாருங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.