கும்பம் - Sani Peyarchi 2020 - 2023 Tamil

2020-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அஞ்சாதவர்களே!

இழப்பு, ஏமாற்றம், தோல்வி, துக்கம் வந்தாலும் ஏற்றுக் கொண்டு மாற்றம் இல்லாமல் எப்போதும் ஒன்றுபோல் நடந்துகொள்ளும் கும்ப ராசி அன்பர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், எதையும் முடித்துக் காட்டும் வல்லமையையும் தந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் விரைய சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். ஏழரைச்சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார்.

இதுவரை லாப வீட்டில் நின்றிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு எதையும் தரவில்லை. ஆனால் இப்போது உங்கள் ராசிநாதன் சனிபகவான் ஆட்சி பெற்று அமர்வதால் தடைப்பட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள். ஏழரைச் சனி தொடங்குகிறதே... என்று பதற வேண்டாம். இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான் மனதில் ஒருவித பதட்டத்தையும், அச்சத்தையும், எதிலும் ஈடுபாடற்ற நிலையையும், மன உளைச்சலையும் தந்தார். நம்பிக்கையின்மையால் துவண்டு போனீர்கள். குடும்பத்தில் சின்னச் சின்ன வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய் முடிந்தது. எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாமல் அடுத்தடுத்து வீண் செலவுகள் செய்து கொஞ்சம் கடனும் வாங்க வேண்டி வந்ததே, ஆனால் தற்சமயம் விரைய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார்.

இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் கம்பீரமாகப் பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். இருவரும் பரஸ்பரம் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களையும் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளா சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட குலதெய்வ பிராத்தனையைத் தொடருவீர்கள். வாகனம் பழுதாகி சரியாகும். பால்ய நண்பர்களானாலும், பழைய சொந்தங்கள் ஆனாலும் அத்துமீறிப் பழகவோ, குடும்ப ரகசியங்களைச் சொல்லி ஆறுதல் அடையவோ வேண்டாம். யாருக்கும் விலை உயர்ந்த பொருள்களை, ஆபரணங்களை இரவல் தர வேண்டாம். நீங்களும் இரவல் வாங்க வேண்டாம். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகளை எடுக்காதீர்கள். நீதி மன்றம் செல்லாமல் முடிந்த வரை பிரச்னைகளைப் பேசி முடிக்கப்பாருங்கள். முக்கிய ஆவணங்களில் கையொப்பம் இடுவதற்கு முன் வழக்கறிஞரைக் கலந்தாலோசிப்பது நல்லது. உங்களைப் புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்திய சொந்த பந்தங்கள் வலிய வந்துப் பேசுவார்கள்.

29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு ஜன்மச் சனியாக அமர்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் விரையம், விரக்தி, ஏமாற்றம், காரியத் தடை வந்து நீங்கும். வறட்டு கௌரவத்திற்கும், போலி புகழ்ச்சிக்கும் மயங்காதீர்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

நவகிரகங்களில் சனிபகவானுக்கும் குருபகவானுக்குமே சிறப்பு பார்வைப் பலன்கள் உண்டு. சனிபகவான் தான் இருக்கும் ராசியிலிருந்து 3, 7, 10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். அந்த வகையில் இந்த சனிப்பெயர்ச்சியினால் கும்பராசிக்கு 2,6,9 ஆகிய வீடுகளை சனிபகவான் பார்க்க இருக்கிறார்.

சனிபகவான் உங்களின் 2 - ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும். அவ்வப்போது கைமாற்றாக கடனும் வாங்க வேண்டி வரும். கொடுத்த வாக்கைக் காப்பற்றப் போராட வேண்டியது இருக்கும். பேச்சால் பிரச்னை, பார்வைக் கோளாறு வரக்கூடும். சொந்த பந்தங்கள் மதிப்பார்கள்.

சனிபகவான் உங்களின் 6 - ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகைப் பிறக்கும். சகோதரிக்குத் திருமணம் முடியும்.

சனிபகவான் உங்களின் 9 - ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம் என்பதால் அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். கை, கால் அசதி வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். மாமியார், நாத்தனாரின் ஆதரவு பெருகும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். கணவர்வழி உறவினருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் அக்காலகட்டத்தில் தந்தையாருடன் கருத்துமோதல்கள் வரும். அவரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

உங்களின் சஷ்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் அடிவயிற்றில்வலி, அலர்ஜி, சளித் தொந்தரவு மற்றும் கடன் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி வரும். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை வக்ரத்தில் செல்வதால் பூர்விகச் சொத்து சம்பந்தபட்ட வழக்கில் வெற்றி, திடீர் பணவரவு உண்டு.

உங்களின் திருதிய - ஜீவனாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் தடுமாறிக் கொண்டிருந்த நீங்கள், தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்டநாள் பிராத்தனைகளையெல்லாம் செய்து முடிப்பீர்கள். கணவரின் சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். இதற்கிடையில் 27.6.2023 முதல் 23.10.2023 வரை உள்ள காலக்கட்டத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் அலைச்சல் அதிகரிக்கும். தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். தாய்வழியில் ஆதரவு பெருகும்.

கும்பராசிப்பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

எடுத்த காரியங்களில் ஆர்ப்பாட்டமில்லாமல் சாதித்துக் காட்டும் கும்பராசிப் பெண்களே... இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நின்று ஓரளவு நல்ல பலன்களை தந்த சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை விரையச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் சஞ்சரிக்க இருக்கிறார். 12 - ம் வீடான விரைய வீட்டில் இப்போது நுழைந்தாலும் அங்கு ஆட்சிப் பெற்றிருப்பதால் உங்களுக்கு நல்லதையே செய்வார் சனிபகவான். ஏழரைச் சனி தொடங்குகிறதே... என்று கலங்கவேண்டாம். இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனி, உங்களிடமிருந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் எடுத்த எடுப்பிலேயே பிடுங்கிக் கொண்டார். சோர்ந்து, துவண்டு போனீர்கள். திறமை இருந்தும் சரியான சந்தர்ப்ப சூழ்நிலை அமையாதலால் முடங்கிக் கிடந்தீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாமல் திண்டாடினீர்கள். இனி கொஞ்சம் சேமிப்பீர்கள்.

எலியும், பூனையுமாக இருந்த கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்தும் வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்தீர்களே... இனி முதல் முயற்சியிலேயே வெல்வீர்கள். பிள்ளைகள் ஆசைப்பட்டுக் கேட்டதை நம்மால் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் நீங்கும். தற்சமயம் விரைய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். கணவர் உங்கள் பணிகளுக்கு ஒத்தாசையாக இருப்பார். குடும்ப வருமானம் உயரும். சனிபகவான் உங்களின் 2 - ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் செலவுகளும் இருக்கும். சனிபகவான் உங்களின் 6 - ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகைப் பிறக்கும். சனிபகவான் உங்களின் 9 - ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். திடீர் பயணங்கள் குறையும்.

வியாபாரம் செய்யும் பெண்கள் இதற்கு முன், நமக்குப் பின் கடையை தொடங்கியவர்களெல்லாம் அதிகம் சம்பாதித்தார்களே என்று வருத்தப்பட்டீர்கள். இனி தொழிலில் உங்களின் அணுகுமுறை மாறும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தேடி வருவார்கள். பற்றுவரவு உயரும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையே செலுத்திவிடுவது நல்லது. கொடுக்கல் - வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.

அதேபோன்று வேலைக்குச் செல்லும் பெண்கள், பகல் இரவு பார்க்காமல், குடும்பத்தையும் சரிவர கவனிக்க முடியாமல் நிறுவனத்திற்காக உழைத்து ஓடாய் தேய்ந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இனி பதவி உயர்வு கிடைக்கும். வேலைபளு அதிகரிக்கத்தான் செய்யும். மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிவரும். உங்களுக்கு எதிராகச் சிலர் சதித் திட்டம் தீட்டுவார்கள். அதை முறியடிப்பீர்கள். கலைத்துறைப் பெண்களுக்கு ஏற்பட்ட வீண் வதந்திகளும், அவப்பெயர்களுமே நீங்கும். உங்களின் படைப்புகளுக்குப் பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். அரசு உதவும். சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்து போங்கள். இந்த சனிப்பெயர்ச்சி பழைய பிரச்சனைகளிலிருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும்.

கும்பராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்!

வியாபாரிகளுக்கு...

இதுவரை உங்களின் லாபஸ்தனத்திலிருந்த சனிபகவான் இப்போது விரைய ஸ்தானத்துக்கு ஏழரைச் சனியாக வருகிறார். அதனால் தொழிலில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வேலையாள்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. அனுபவமிகுந்த புது வேலையாள்களையும் பணியில் அமர்த்துவீர்கள். மற்றவர்களை நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். மருந்து, கமிஷன், மரவகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும். விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு...

அலுவலகச் சூழலில் இருந்த சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். வேலைசுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். சக ஊழியர்களுடன் சலசலப்பு உண்டு. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு. கணினித் துறையினருக்குப் பதவியுயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவீர்கள்.

இந்த சனி மாற்றம் உங்களுக்குப் பழைய பிரச்சனைகளிலிருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாக அமையும்.

பரிகாரம்:

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாளை, ஏகாதசி திதி நடை பெறும் நாளில் சென்று வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.