மகரம் - Sani Peyarchi 2020 - 2023 Tamil

2020-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

தோல்விகளால் சோர்வு அடையாதவர்களே!

தன் கருத்தில் உறுதியாகவும் அதே வேளையில் மனசாட்சிக்கு பயந்தும் நடக்கும் மகர ராசி அன்பர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு 12 - ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக செலவுகளையும், அலைச்சல்களையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உங்கள் ராசிக்குள்ளேயே வந்து ஜன்ம சனியாக அமர்கிறார். ஜன்ம சனி என்ன செய்யப் போகிறதோ... என்றெல்லாம் புலம்பித்தவிக்காதீர்கள். உங்களின் ராசிநாதனான சனிபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே ஆட்சிப் பெற்று அமர்வதால் அனைத்து வசதிகளை அள்ளித்தருவார். பணவரவையும் அதிகரிப்பார்.

பதுங்கி வாழ்ந்த நீங்கள், இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டீர்களே! ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக் கூடப் பல முறை அலைந்து முடித்தீர்களே... இழப்புகளும், அவமானங்களும் உங்களை துரத்தியதே... இனி நிம்மதி பிறக்கும். பிரச்னையால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த பணமெல்லாம் வந்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜன்ம சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன்பு போல் நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அல்சர் எட்டிப்பார்க்கும். உடல் பருமனாக வாய்ப்பிருக்கிறது. எனவே எண்ணெயில் வறுத்த,பொறித்த மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிக நீர் பருகுங்கள். காய்கறி, பழவகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். தோலில் நமைச்சல், எரிச்சல், கட்டி வந்து போகும். மனைவிவழியில் செலவுகள் வரும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்களால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். இளைய சகோதரரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

நீண்ட நாள் பிரார்த்தனைகளைக் குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்றுபோனதே, இனி வங்கிக் கடனுதவியால் முழுமையாகக் கட்டி முடிப்பீர்கள். உங்களின் சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். பிள்ளைகளிடம் இருக்கும் தாழ்வுமனப்பான்மை, அலட்சியப் போக்கு மாறும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மகளுக்கு இதோ, அதோ என்று தள்ளிப்போய் கொண்டிருந்த கல்யாணம் விரைவில் நடக்கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிவிட்டு சந்தையில் புதிதாக அறிமுகம் செய்த வண்டியை வாங்குவீர்கள்.

29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 02ம் வீடான கும்ப ராசியில் சென்று பாதச்சனியாக அமர்வதால் இக்காலக்கட்டத்தில் யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்காதீர்கள். பணம் கொடுக்கல் - வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உறவினர்கள், நண்பர்களில் சிலர் உங்களைக் குறைக் கூறுவார்கள். பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை காட்டுங்கள்.

சனிபகவானின் இந்தப் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு நல்லதொரு மாற்றத்தைத் தருவதாக அமையும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் உங்கள் ராசியில் அமர்ந்து 3,7,10 ஆகிய ராசிகளைப் பார்க்கிறார். சனிபகவான் உங்களின் 3 -ம் வீட்டை பார்ப்பதால் கௌரவப் பதவி தேடி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான்

உங்களின் 7 - ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்குக் கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தைக் குறையுங்கள்.

சனிபகவான் உங்களின் 10 -ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் மரியாதைக் கூடும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

ஆட்சி பலம் பெற்று உங்கள் ராசியில் அமர்ந்திருக்கும் சனிபகவான் தன் பார்வையாலும் மிகுதியான நற்பலன்களையே வழங்க இருக்கிறார்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் அதிர்ஷ்டவசமான வாய்ப்புகள் தேடி வரும். முடங்கிக் கிடந்த சில பணிகள் இனி முழுமையடையும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாக முடியும். வேற்றுமதத்தினர், வேற்றுநாட்டினர் உதவுவார்கள். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் அக்காலகட்டத்தில் வாகனத்தை கவனமாக இயக்குங்கள். சின்னச் சின்ன விபத்துகள், மனஉளைச்சல்கள், வீண்பழி வந்து நீங்கும்.

28.12.2021 முதல் 26.01.2023 வரை

உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வீடு, மனை வாங்குவீர்கள். மனைவி, பிள்ளைகளுக்கு விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்கித் தருவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் வாழ்க்கைத்துணை வழியில் வீண் அலைச்சல், செலவினங்களும், உடல் நலக் குறைகளும் வந்து போகும்.

உங்களின் சுக - லாபாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். இதற்கிடையில் 27.6.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரமடைவதால் ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். மனைவியின் உடல்நலம் பாதிக்கும். மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.

மகர ராசிப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

தெளிந்த சிந்தனையும் தொலை நோக்குப் பார்வையும் கொண்ட மகர ராசிப் பெண்களே... இதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரண்டிலே அமர்ந்து கொண்டு பணத்தை வரவிடாமல் தடுத்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலத்தில் உங்கள் ராசிக்குள்ளேயே ஜன்ம சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.

கட்டுக்கடங்காத செலவு, அவமானம், மன உளைச்சல், அடுக்கடுக்காகப் பிரச்னைகள் ஆகியனவற்றைச் சந்தித்தீர்கள். அந்த நிலை மாறும். குடும்பத்தில் இனி கூச்சல் குழப்பங்கள் விலகும். தண்ணீரும் தாமரை இலையுமாய் ஒட்டாமல் இருந்த கணவன் - மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். எதிலும் தெள்ளத்தெளிவாக முடிவெடுக்க முடியாமல் ஒருவிதத் தயக்கத்துடன் இருந்த நிலை மாறும்.

உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள், அல்லாதவர்கள் யாரென்பதை உடனே புரிந்து கொள்வீர்கள். ஏதேனும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டீர்களே... இனி உடல்நிலை சீராகும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. அலைபாய்ந்த மனசில் இனி நிம்மதி கிடைக்கும். உடல் அசதியாக இருந்தும், தூங்க முடியாமல் தவித்தீர்களே... இனி தூக்கம் வரும். கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த கணவர் இனி உற்சாகம் அடைவார். அதிக வட்டிக் கடனை கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து முடிப்பீர்கள்.

எதிர்பாராத பண வரவு இனி உண்டு. ஆனால் எடுத்து வைக்க முடியாது. செலவுகள் வரும். ஜன்ம சனி என்பதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலட்சியமாக இருக்க வேண்டாம். மெடிக்ளைம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காரசார மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. நாக்கைக் கொஞ்சம் கட்டுங்கள். கணவர்வழியில் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் உறவினர்களால் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும். சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் கௌரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். சனிபகவான் உங்களின் பத்தாம் வீட்டை பார்ப்பதால் உத்யோகத்தில் மரியாதைக் கூடும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

வியாபாரம் செய்யும் பெண்களுக்குத் தொட்டதெல்லாம் நட்டத்தில் போய் நின்ற நிலை மாறி லாபமும் விருத்தியும் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தக்கூடக் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கணவரின் அரவணைப்பால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். வேலையாள்கள் அவ்வப்போது உங்களை ஏமாற்ற முயற்சி செய்வார்கள். கனிவாகப் பேசி கறாராக நடந்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் பொருட்களை வாங்கி வைப்பீர்கள். உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். வேற்று மொழி பேசுபவர் - வெளிநாட்டினர் மூலம் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.

உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கு... உங்களை வெறுத்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காகப் பதவியுயர்வு, சம்பள உயர்வெல்லாம் உண்டு. குறைகூறிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் உங்களுக்காகப் பரிந்து பேசுவார். அலுவலக விஷயங்களை வெளியிடவேண்டாம். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறைப் பெண்கள், பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். யாரையும் குறை சொல்லிப் பேசாதீர்கள். சம்பளபாக்கி கைக்கு வந்துசேரும்.

இந்த சனி மாற்றம் சங்கடங்கள், சவால்களில் வெற்றியையும், தருவதுடன் அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப் படுத்துவதாகவும் அமையும்.

மகரராசி வியாபாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இதுவரை ராசிக்கு 12 ல் இருந்து செயல்களை எல்லாம் தடை செய்துகொண்டிருந்த சனிபகவான் தற்போது உங்கள் ராசியிலேயே ஆட்சி பலம் பெற்று அமர்கிறார். இதனால் வியாபாரத்தில் தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலைப் போட்டு மாட்டிக்கொள்ளாமல் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. இனி கணிசமாக லாபம் உயரும். வேலையாள்கள் இனி அடிக்கடி விடுப்பில் செல்ல மாட்டார்கள். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலியுங்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்து போங்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமைகள் அதிகரித்துக் கொண்டே போகும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பாரபட்சமாக நடந்துகொண்ட பழைய அதிகாரிகள் மாற்றப்பட்டுப் புது அதிகாரியால் உற்சாகம் அடைவீர்கள். அநாவசியமாக விடுப்புகள் எடுக்க வேண்டாம். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனித் தாமதம் இல்லாமல் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது உஷாராக இருங்கள். சட்டத்திற்குப் புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். கணினி துறையினர் கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும். இந்த சனி மாற்றம் இழப்பு, எதிர்ப்பு, ஏமாற்றங்களிலிருந்து விடுவிப்பதுடன், ஓரளவு வருமானம், வசதிகளையும் தரும்.

பரிகாரம்:

விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஸ்ரீவாலீஸ்வரர் கோயிலில் அருளும்... வாலியால் தென்முகமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வர பகவானை வணங்கி வாருங்கள். வளம் பெருகும்.