மேஷம் - Sani Peyarchi 2020 - 2023 Tamil

2020-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

சாதுர்யமாகப் பேசி சாதிப்பவர்களே!

நம்பிக்கையுடன் செயலில் இறங்கும் மேஷ ராசி அன்பர்களே, சூழலுக்கேற்ப பேசியும் செயல்பட்டும் வெற்றிவாகை சூடுபவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்னைகளாலும், மனக் கவலைகளாலும் கலங்கடித்த சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரையிலும் 10-ம் வீட்டில் அமர்கிறார். ஆகவே நல்லதே நடக்கும்.

‘காரியவன் காரியத்தில் அமர, காரிய பங்கமடா’என்று மூல நூல்கள் சொன்னாலும், உங்களின் ஜுவனாதிபதியும், லாபாதிபதியுமான சனிபகவான் தனது சொந்த வீட்டில் ஆட்சிப்பெற்று அமர்வதால் யோக பலன்களையே தருவார். இனி நீங்கள் விஸ்வரூபமெடுப்பீர்கள். எடுத்த காரியத்தை சாதித்துக் காட்டுவீர்கள். திறமை இருந்தும் சரியான சந்தர்ப்பங்கள் அமையாதலால் அது உபயோகமில்லாமல் இருந்தது ஆனால் இப்போது உங்கள் அனைத்து திறமையும் வெளிபடும்.

இதுவரையிலும் தந்தைக்கும் உங்களுக்கும் ஓர் இடைவெளி இருந்து வந்திருக்கும். அவருக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்திருக்கும். இனி, இந்த நிலைகள் அனைத்தும் மாறும். தந்தையாருடன் சுமூகமான உறவு தொடரும். அவரின் உடல் நலமும் முன்னேறும்.

நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கு இடையே இருந்து வந்த வீண் சந்தேகம், பிரச்னைகள் அனைத்தும் தீரும். உங்களின் பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பல சிக்கல்கள் இனி முடிவுக்கு வரும். கிரகநிலைகளோ, வினைப்பயனோ... எந்தக் காரணத்தாலோ, உங்களில் சிலர் சில நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்திருப்பீர்கள். நீங்கள் எதிர்பாராத வகையில் அந்தப் பணம் கைக்கு வரும்.

உங்கள் வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில் கடன் கிடைக்கும். சொந்த ஊரில் உங்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். மனஸ்தாபம் கொண்டிருந்த சகோதரர்கள் இனி வலிய வந்து பேசுவார். குழந்தை இல்லாத தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். அக்கம்பக்கத்தாருடன் மனஸ்தாபங்கள் நீங்கும். சொந்தபந்தங்களின் வீட்டு விஷேசங்களில் அதிகம் கலந்துகொள்வீர்கள்.

கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். தந்தைவழியில் நன்மை உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கலாம் என்ற யோசனை பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 11ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பணவரவுக்கு இனி குறைவிருக்காது. சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்படும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனி பகவான் 27.12.2020 முதல் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்கிறார். அடுத்த இரண்டரை வருடங்களுக்கு அவரின் பார்வை உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று அறிவதும் அதற்கே செயல்படுவதும் அவசியம்.

இந்தப் பெயர்ச்சி காலத்தில் சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 4, 7 மற்றும் 12-ம் வீடுகளில் அமைகிறது.

4-ம் வீட்டைப் பார்ப்பதால்...

சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.

புது வாகனம் வாங்குவீர்கள்.

தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும்.

யாருக்கும் பொறுப்பேற்று சாட்சி கையெழுத்திட வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

7-ம் வீட்டைப் பார்ப்பதால்

சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கர்ப்பப்பைக் கோளாறு, அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

வாழ்க்கைத் துணைவருடன் விட்டுக்கொடுத்துப் போகவும். மூன்றாம் மனிதர்களிடம் குடும்ப விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

வி.ஐ.பிகளின் அறிமுகமும் அதன் மூலம் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

12-ம் வீட்டைப் பார்ப்பதால்...

சனி பகவான் இந்தப் பெயர்ச்சி காலத்தில் 12-ம் வீட்டை பார்ப்பதால், தூக்கமின்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. யோகா, தியானம் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டவும்.

சுப விரயங்கள் ஏற்படலாம். அதற்காக மனச் சலனம் வேண்டாம்.

புண்ணிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

உங்களின் பூர்வபுண்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத் திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் குழந்தை பாக்யம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். கர்பிணிப் பெண்கள் இக்காலக்கட்டத்தில் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அரசு விவகாரங்கள் மற்றும் வழக்குகள் வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி செலுத்துங்கள். அரசு அனுமதி பெறாமல் வீடு கட்ட வேண்டாம்.

உங்களின் சுகாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் சிலர் புதிதாக சொத்து வாங்குவீர்கள். தாயாருக்கு இருந்து வந்த மூட்டு வலி, முதுகு வலி நீங்கும். வாகனப் பழுது சரியாகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் வாகன விபத்துகள், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், மனக்குழப்பங்கள், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.

உங்களின் ராசிநாதனான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். எதிர்ப்புகள் குறையும். சகோதரங்களுக்கிடையே இருந்து வந்த கசப்புகள் நீங்கும். என்றாலும் துக்கம் குறையும். செரிமானக் கோளாறு வந்து நீங்கும். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை இக்காலக்கட்டத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் தைரியமாக சில காரியங்களை முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

மேஷ ராசிப் பெண்களே...

மேஷராசியைச் சேர்ந்த பெண்களுக்கு, 27.12.2020 அன்று நிகழும் சனிப்பெயர்ச்சியால் நல்ல பலன்களே ஏற்படப்போகின்றன. அடுத்த இரண்டரை வருடங்களுக்கு சகல விஷயங்களிலும் உங்களின் அணுகுமுறை வெற்றியை ஈட்டித் தருவதாக அமையும். மனத்தில் புது நம்பிக்கை பிறக்கும்.

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் அமரப் போகிறார் சனி பகவான். 10-ல் சனி பகவான் எனில் காரிய பங்கம் நேரிட வாய்ப்புள்ளதே என்று கவலை வேண்டாம். உங்கள் ராசிக்கு சனி பகவான் ஜுவனாதி பதியும், லாபாதிபதியுமாகத் திகழ்கிறார். அவர் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமரப் போகிறார். ஆகவே யோக பலன்களே தருவார் என்கின்றன ஜோதிட நூல்கள்.

இல்லத்தரசிகளே! உற்சாகமே இல்லாமல் சோர்வாகவும், சலிப்பாக வும் இருந்தீர்களே! இனி கலகலப்பாக பேசுவீர்கள். ஆகவே, சோர்வும் தாழ்வு மனப்பான்மையும் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். கணவர் சகல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வார். உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்.

கணவன்- மனைவிக்கு இடையே இருந்து வந்த வீண் சந்தேகம், பிரச்னைகள் அனைத்தும் தீரும். உங்களின் பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். அவர்களின் எதிர்காலம் குறித்த வீண் கவலைகள் அனைத்தும் விலகும். நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும்.

நீங்கள் வேலைக்குச் செல்லும் பெண்கள் எனில், அலுவலகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். உங்களின் வெற்றிகரமான திட்டங்களைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வும் சம்பள உயர்வும் வந்து சேரும்.

மேஷ ராசியைச் சேர்ந்த கன்னிப்பெண்களே, உங்களின் திருமண விருப்பம் நீங்கள் நினைத்தபடி நிறைவேறும். கல்யாண விஷயத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். உங்களின் மனத்துக்குப் பிடித்தமான கணவர் அமைவார். வீட்டில் பார்க்கும் வரன் நல்லபடியாக உங்களின் கரம் பிடிப்பார். ஊரே மெச்சும்படி கல்யாணம் கோலாகலமாக நடந்தேறும்.

மேஷ ராசி வியாபாரிகளே...

இதுவரையிலும் 9-ம் இடத்தில் அமர்ந்திருந்து கடன் பிரச்னை, வீண் மனக்கவலைகள் என உங்களைத் திணறவைத்திருப்பார் சனி பகவான். தற்போது 27.12.2020 முதல் உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்தில் அமர்ந்து அடுத்த இரண்டரை வருடங்களுக்குப் பலன் தரப் போகிறார்.

உங்கள் ராசிக்கு லாபாதிபதியும் ஜீவனாதிபதியுமான சனிபகவான் இந்தப் பெயர்ச்சியில் மகர ராசிக்குப் பெயர்கிறார். அது சனி பகவானின் சொந்தவீடு. ஆக, சொந்த வீட்டில் சனிபகவான் ஆட்சி பெற்று அமர்வதால், உங்களுக்கு லாப பலன்களையே அருள்வார்.

இதுவரையிலும் எதைத் தொட்டாலும் எதிர்பார்த்த வெற்றி இல்லையே எனச் சோர்ந்து கிடந்த நீங்கள், இனி சுறுசுறுப்பு அடைவீர்கள். தொழில் போட்டியாளர்களை லாகவமாகச் சமாளிப்பீர்கள். உங்களின் அணுகுமுறைகளால் அவர்கள் திணறு வார்கள்.

உங்களில் சிலர் பழைய கடையை புதுப்பித்து விரிவுப்படுத்துவீர்கள். புதிய அனுபவங்கள் மூலம் வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தொழிலில் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துத் தள்ளிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும்.

வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தும் விதம் புதிய யுக்திகளோடு விளம்பரங்கள் செய்து வெற்றி பெறுவீர்கள். அதேநேரம், உங்களிடம் பணிபுரியும் வேலையாட்களிடம் அதிகம் கெடுபிடி வேண்டாம். அவர்களிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். அவர்களின் தவறுகளைப் பொறுமையாகச் சொல்லி புரியவைக்கவும்.

கண்ணாடி, துணி, பெட்ரோல், டீசல் மற்றும் கட்டுமானப் பொருள்களால் நீங்கள் லாபம் அடைவீர்கள். இவை சார்ந்த தொழிலைக் கையில் எடுங்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள்.

மேஷ ராசி உத்தியோகஸ்தர்களே...

மேஷ ராசியைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களுக்கு, இந்தப் பெயர்ச்சி காலம் பெரும்பாலும் ஏற்றங்களைத் தரும் காலம்தான்.

ஜீவனாதிபதியும் லாபாதிபதியுமான சனி பகவான் மகரத்தில் அமர்வதால் உயர்வு உண்டு. சனி பகவான் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது உங்களுக்குச் சாதகமே. எதிர்பாராத உயர்வுகளை அளித்து உங்களைச் சந்தோஷப் படுத்துவார்.

அதேநேரம், வீண் அலட்சியம் கவனக்குறைவு ஆகியவற்றை நீங்கள் தவிர்க்கவேண்டும். சில பணிகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. அடுத்தவரை நம்பி ஒப்படைக்கவேண்டாம். அதேபோல் அநாவசியமாக விடுப்பு எடுப்பதையும் தவிருங்கள். இதுபோன்ற செயல்கள், மேல் அதிகாரிகளுக்கு உங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.

வேலை பார்க்கும் இடத்தில் பணிகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சில பணிகளைப் போராடி முடிக்கவேண்டியது இருக்கும். ஆனாலும் அதன் பொருட்டு சலித்துக்கொள்ள வேண்டாம். மற்றவர்களிடம் புலம்புவதும் வேண்டாம். விரைவில் புதிய - முக்கியமான பொறுப்புகளில் நீங்கள் அமரத்தபட வாய்ப்பு உண்டு. ஆகவே, பொறுமை மிக அவசியம்.

மேலதிகாரி உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருப்பார். முக்கியமான விஷயங்களில் அற்புதமான வழிகாட்டலையும் வழங்குவார். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். முக்கிய பதிவேடுகளைக் கவனமாகக் கையாளுங்கள்.

சிலருக்கு திடீர் இடமாற்றங்கள் நிகழ வாய்ப்பு உண்டு. அது உங்களுக்குச் சாதகமாகவே அமையும். அதேபோல் பணியிடத்தில் புதிய சலுகைகளும் சம்பள உயர்வும் வந்துசேரும்.

வாட்ஸ்அப், முகநுல் போன்ற சமூக வளைதலங்களில் அதிகாரிகள் மற்றும் அலுவலக விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி, யதார்த்தமான முடிவு களாலும் விட்டுக்கொடுத்துப் போகும் அணுகுமுறையாலும் உங்களை வெற்றி பெற வைப்பதாக அமையும்.

பரிகாரம்:

ஸ்ரீபெரும்புதூரில் அருளும் பெருமாளையும் ராமாநுஜரையும் ஏகாதசி தினத்தில் வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் ஏற்றம் உண்டாகும்.