மீனம் - Sani Peyarchi 2020 - 2023 Tamil

2020-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

எப்போதும் நல்லவழியில் செல்பவர்களே!

எதையிழந்தாலும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்காது உழைக்கும் மீனராசிக்காரர்களே... ஆன்மிக ஈடுபாடும் இறைவழிபாடும் கஷ்டமான சூழ்நிலையிலிருந்து எப்போதும் காக்கும் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10 - ம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்னைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டையையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டத்தில் லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். இதுவரை எந்த வேலையை எடுத்தாலும் முழு மன நிறைவுடன் முடிக்கமுடியாத நிலை இருந்ததே... உழைப்பு உங்களுடையது. பாராட்டும், பயனும் மற்றொருவருக்கு போய் சேர்ந்தது. வேலைப்பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக் கெட்ட பெயர் எடுத்தீர்கள். நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்கள். அடுத்தடுத்து வருத்தம் தரும் செய்திகள் வந்து கொண்டு இருந்தது. பணம், காசு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தியது. இனி இவையெல்லாம் மாறும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். மனத்தெளிவடைவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பணவரவுக்கு இனி குறைவிருக்காது. சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்படும். நாடாளுபவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் - மனைவி இருவரும் கலந்து பேசி குடும்பச் செலவுகளைக் குறைக்க முடிவுகளெடுப்பார்கள். பூர்விகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக் கேற்பப் புது வீடு வாங்குவீர்கள்.

மருந்து மாத்திரை என்று சதா சாப்பிட்டும் பிரயோஜனமில்லாமல் போன தம்பதியருக்கு இனி குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படித் திருமணம் முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். பழைய கடன் பிரச்னைகளைத் தீர்க்கப் புது வழி பிறக்கும். மனைவிவழியில் மதிப்பு, மரியாதைக் கூடும். இதுவரை கண்டும் காணாமல் இருந்தவர்கள், இனி உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்துப் பேசுவார்கள். பழுதான டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷினை மாற்றுவீர்கள். சகோதரர்கள் நெருங்கி வருவார்கள். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். பழைய நகைகளை மாற்றி புதிய டிசைனில் வாங்குவீர்கள். வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தாய்வழி விசேஷங்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அத்தை, மாமன் வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.

29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 12ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் செலவுகள், கடன் பிரச்னை, திடீர் பயணங்கள், கவலைகள் வந்துச் செல்லும். வாகனத்தில் செல்லும் போதும் சாலையை கடக்கும் போதும் கவனம் தேவை.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

லாப வீட்டில் அமர்ந்தாலும் சனிபகவானின் 3 ம் பார்வை உங்கள் ராசிக்கு அமைகிறது. இதனால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தேவையற்ற பதற்றத்தைத் தவிர்ப்பது நல்லது. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செறிமானக் கோளாறு, நரம்பு பிரச்னைகள் வந்து நீங்கும்.

சனிபகவான் உங்களின் 5 - ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். சில நாள்களில் தூக்கமில்லாமல் போகும். பூர்விகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

சனிபகவான் உங்களின் 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வாகனத்தை இயக்கும்போது அலைப்பேசியில் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. சாலையைக் கடக்கும்போது கவனம் தேவை.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் சின்னச் சின்னத் தடைகள், வீண் பகை, அலைச்சல் ஆகியன ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் அக்காலகட்டத்தில் சொத்து வழக்கில் வெற்றி கிட்டும். வெளிநாட்டுப் பயணங்கள் தேடி வரும். சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

28.12.2021 முதல் 26.01.2023 வரை

உங்களின் பூர்வபுண்யாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தை பாக்கியம் கிட்டும். பணவரவு உண்டு. சொத்து வாங்குவீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வருங்காலத்தை அமைத்துத் தருவீர்கள். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் வீண் அலைச்சல், தர்ம சங்கடம், சிறுசிறு நஷ்டங்கள் வந்து செல்லும்.

27.01.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் தன - பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் குடும்பத்தில் சந்தோஷம், பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரமடைவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மீனராசிப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

தன் பொருளை விட்டுக்கொடுக்காமலும் பிறர்பொருளுக்கு ஆசைப்படாமலும் இருப்பதை வைத்துக்கொண்டு வாழத்தெரிந்த மீன ராசிப் பெண்களே...

இதுவரை 10 - ம் வீட்டில் நின்ற சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை லாப வீட்டில் அமர்ந்து உங்களை ஆளப்போகிறார். தொழில் ஸ்தானத்தில் சனிபகவான் இதுவரை இருந்து கொண்டு உங்களை எந்த வேலையையும் மன நிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்தார். கடினமாக உழைத்தும் அதற்கான பலனேதுமில்லாமல் போனது. குடும்பத்தில் பணம் தண்ணீராய் செலவானது. பல பிரச்னைகளையும் நினைத்து அவ்வப்போது சோர்ந்து போனீர்கள். இனி குடும்ப வருமானத்தை உயர்த்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். தாயாருக்கு இருந்த நோயெல்லாம் விலகும். பாதியிலேயே நின்று போன வீடுகட்டும் பணி இனி முழுமையடையும். கணவர் உங்களின் தியாகத்தைப் புரிந்து கொள்வார். அந்நியோன்யம் அதிகரிக்கும். பல காரியங்கள் முதல் முயற்சியிலேயே முடியும். சொத்து வாங்குவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். உறவினர்கள், தோழிகளுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

சனிபகவான் உங்களின் 5 - ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

சனிபகவான் உங்களின் 8- ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

வியாபாரம் செய்யும் பெண்கள், இதுவரை சிலரின் தவறான அறிவுரையால் தடுமாறினீர்கள். அந்த அவலநிலையெல்லாம் மாறும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. அடிக்கடி விடுமுறையில் சென்று வேலையாள்கள் உங்களை நிலை குலைய வைத்தவர்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் தொந்தரவு கொடுத்த பங்குதாரர்களை மாற்றிவிட்டுப் புதியவர்களை சேர்ப்பீர்கள்.

உத்தியோகம் பார்க்கும் பெண்கள் இதுவரை மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்த்தீர்கள். இரவு பகலாக உழைத்தும் பலனில்லாமல் வேறு சிலருக்குத்தான் பதவி உயர்வு கிட்டியது. இவையெல்லாம் இனி மாறும். இழந்த சலுகைகளைக் கேட்டுப் பெறுவீர்கள். உங்கள் திறமையை அறிந்துகொண்ட மேலதிகாரி பதவியுயர்வு, சம்பள உயர்வு தருவார். கலைத்துறைப் பெண்களை அலைக்கழித்த நிறுவனமே புது வாய்ப்பு கொடுக்கும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். வரவேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். உங்கள் படைப்புகள் பெரிதும் பேசப்படும். இந்த சனி மாற்றம் உங்களை வெளியுலகுக்கு அழைத்து வருவதுடன், புதிய தொடர்புகளையும், வசதி வாய்ப்பையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

மாற்றம் பெறப்போகும் மீனராசி வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

வியாபாரிகளுக்கு...

தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர்களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.

உத்தியோகஸ்தர்களுக்கு...

உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி புகழ்வார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கணினி துறையினர் பணி செய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள். மொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி திக்கித் திணறித் தவித்துக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் திடீர் திருப்பத்தையும், புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைப்பதாக அமையும்.

பரிகாரம்:

திருச்சி மாவட்டம் லால்குடி இடையாற்று மங்கலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலட்சுமி சமேத ஸ்ரீலட்சுமி நாராயணரை, சனிக்கிழமைகளில் சென்று வணங்கி வழிபட்டு வாருங்கள். காரியத் தடைகள் யாவும் நீங்கும்; நினைத்தது நிறைவேறும்.