ரிஷபம் - Sani Peyarchi 2020 - 2023 Tamil

2020-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் உங்கள் ராசிக்கு 3,6,11 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார். இது மிகவும் நல்ல அமைப்பாகும்.

சனிபகவான் உங்களின் 3 - ம் வீடான கடக ராசியைப் பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, வாகன வசதி பெருகும். சனிபகவான் உங்களின்

6 - ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பழைய சொந்த - பந்தங்கள் தேடி வருவார்கள். புது சொத்து சேரும். நிலுவையிலிருந்த வழக்கு வெற்றியடையும்.

சனிபகவான் உங்களின் லாப வீடான 11 ம் இடத்தைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அத்தை, மாமா வகையில் ஆதரவு பெருகும். இந்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு சனியின் பார்வை மிகவும் சிறப்பான பலன்களையே தரும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

27.12.2020 முதல் 27.12.2021 வரை

ரிஷப ராசி அன்பர்களே உங்களின் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் சனிபகவான் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சஞ்சாரம் செய்வதால் இக்கால கட்டத்தில் அரைகுறையாக நின்ற கட்டிட வேலைகள் முழுமையடையும். பழைய கடன் தீரும்.

இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரும். இரவு நேர பயணங்களை தவிர்த்துவிடுங்கள். சிறுசிறு விபத்துகள் வரக்கூடும்.

28.12.2021 முதல் 26.1.2023 வரை

உங்களின் தைரியஸ்தானாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார்கள். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் ஏமாற்றம், வீண் அலைச்சல், காரியத்தடைகள் வந்துபோகும்.

27.01.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் சப்தம மற்றும் விரையஸ்தானாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, வீண் செலவுகள், சிறுசிறு வாகன விபத்து வந்து நீங்கும்.

ரிஷபராசிப் பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

இதுவரை உங்களின் அஷ்டமஸ்தானத்திலிருந்து உங்களுக்குத் தொல்லைகள் கொடுத்துவந்த சனிபகவான் தற்போது 9 ம் இடம் சென்று அமர்கிறார். இதுவரை தலைமுடி கொட்டி, கவலை தோய்ந்த முகத்துடன் கைகால் சோர்ந்து காணப்பட்டீர்கள். 'என்ன பிரச்சனை, ஏன் இப்படி ஆகிவிட்டீர்கள்' என துக்கம் விசாரிக்கும் அளவிற்கு உடைந்து போனீர்கள். அந்த நிலைமை தற்போது மாறுகிறது. அஷ்டமத்துச் சனி விலகுவதால் மனக்கவலைகள் நீங்கும். இனி சிரிக்கத் தொடங்குவீர்கள். அன்றாட வாழ்க்கை ஆடம்பரமாகும். இதுவரை கணவர் வார்த்தையாலே வாட்டியெடுத்தார் அல்லவா, இனி உங்களைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டார்.. நாத்தனாருக்கு நல்ல வரன் அமையும். அலுவலகம் செல்லும் பெண்கள், தகுதியிருந்தும் தள்ளி வைக்கப்பட்டார்கள். இனி அவர்களின் திறமையை உலகறியும். உயரதிகாரிகள் தேடி வந்து ஆலோசனை கேட்பார்கள். பதவியுயர்வு, சம்பள உயர்வு என வாரி வழங்குவார். வேலை கிடைக்கும். கை நிறைய சம்பாதிப்பீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். என்ன நோயென்று தெரிந்து கொள்ளவே ஏகப்பட்ட ரூபாயைச் செலவழித்தவர்கள், சாதாரண மருந்து மூலம் நிவாரணம் பெறுவார்கள். நோய் குணமாகும். தெய்வ நம்பிக்கையே குறைந்து போனவர்களுக்கு இனி ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

இனி நீங்கள் மற்றவர்களுக்குத் தருமளவுக்கு வருமானம் உயரும். திட்டமிட்டு எதையும் செய்வீர்கள். பெரிய ஏமாற்றங்கள், பேரிழப்புகளிலிருந்து மீள்வீர்கள். கடன்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நின்று போன கல்யாணம் நல்ல விதத்தில் முடியும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். வெகுநாள்களாக வீடு, மனை வாங்கவேண்டுமென கனவு கண்டவர்களுக்கு இப்பொழுது அந்தக் கனவு நிறைவேறும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவீர்கள்.

வியாபாரம் செய்யும் ரிஷபராசிப் பெண்களுக்கு இதுவரை இழப்புகளையே சந்தித்துவந்தீர்கள். இரவு பகலாக உழைத்தும், எதுவும் லாபம் தங்கவில்லையே என்று வருந்தினீர்கள். இனி தொழிலில் கணவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் தொலைநோக்குச் சிந்தனையால் ஆதாயம் கூடும். உணவு, அனுபவமிகுந்த நல்ல வேலையாள்கள் கிடைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் அற்ப சம்பளத்திற்காக அடிமைப்போல் அதிக பணிகளை செய்து வந்தீர்கள். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் அவமானப் படுத்தினார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவியுயர்வை வேறொருவர் தட்டிச் சென்றார். இனி அந்த அவலநிலையெல்லாம் மாறும். உங்கள் கை மேலோங்கும். உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வு வந்து சேரும். கலைத்துறைப் பெண்கள் கிசு கிசுத் தொல்லைகள், அவமானங்களிலிருந்து மீள்வார்கள். உங்களை அலைக்கழித்த நிறுவனம், இனி வாய்ப்பு தருவதற்காக உங்களை நாடி வரும். பாராட்டுகள், பண முடிப்புகள் குவியும்.

இந்தச் சனிப் பெயர்ச்சி வறுமை, வருத்தங்களிலிருந்து விடுபட வைப்பதுடன் நிம்மதியையும், செல்வ வளத்தையும் தருவதாக அமையும்.

ரிஷப ராசி வியாபாரிகளுக்கான சிறப்பு பலன்கள்

ரிஷப ராசி வியாபாரிகள், இதுவரை தொழிலுக்காக அதிக வட்டிக்குப் பணம் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டீர்கள். கடன் தொல்லையால் சில நேரங்களில் தலைமறைவாகவும் இருந்தீர்கள். இரவு பகலாக உழைத்தும், ஆதாயம் பார்க்க முடியாமல் தவித்தீர்கள். வேலையாள்களை நம்பித் தொழில் ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்தீர்கள். ஆனால் அவர்கள் உங்களையே பதம் பார்த்தார்கள். சிலர் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு ஓடிப் போனார்கள். அந்த நிலை இப்போது மாறுகிறது. இனி அனுபவமிகுந்த நல்ல வேலையாள்கள் கிடைப்பார்கள். ஹோட்டல், ஏற்றுமதி - இறக்குமதி, வாகன வகைகளால் லாபம் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் பங்குதாரர்களாக வருவார்கள். உங்களின் லாப ஸ்தானத்தை சனிபகவான் பார்ப்பதால் உங்கள் பேச்சுத் திறமை அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை உங்கள் பேச்சினால் மயக்குவீர்கள். லாபம் இரட்டிப்பாகும். தொழிலுக்காக வாங்கியிருந்த கடன்களை அடைத்துமுடிப்பீர்கள்.

ரிஷப ராசி உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்!

இதுவரை அஷ்டமத்தில் அமர்ந்து எந்த வேலையும் சிறப்பாகச் செய்யவிடாமல் ஆக்கிய சனிபகவான், தற்போது ஒன்பதாம் இடத்தில் சென்று அமர்கிறார். அஷ்டமத்தில் சனி இருந்தபோது சிலருக்கு பணியில் இடைநீக்கம் செய்தார். யாரோ செய்த தவறுக்கு உங்களை பலிகடா ஆக்கினார்கள். அந்த நிலையெல்லாம் மாறும். சிலர் நீதிமன்ற ஆணை பெற்று பணியில் சேருவீர்கள். உயர்மட்ட அதிகாரிகள் குழுவில் இடம் பிடிப்பீர்கள். ரிஷப ராசி அரசுப் பணியாளர்களின்மீது வீண் பழி சுமத்தினார்கள். மேலதிகாரியுடன் கருத்துவேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே போனது. இனி அவரின் கோபம் தணியும். வேலை காரணமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள், இப்போது சொந்த ஊருக்கே மாற்றல் ஆவார்கள். கணினி துறையினர் இதைவிட வேறு நல்ல வேலைக்குப் போகலாம் என்றிருந்தாலும், சரியான வாய்ப்பில்லாமல் தவித்தீர்கள். இப்போது கூடுதல் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.

இதுவரை அடிமையாய் இருந்தவர்களை அதிகாரத்தில் அமரவைக்கப் போகிறது இந்த சனிப் பெயர்ச்சி. பற்றாக்குறையிலிருந்து மீண்டு பணம், காசையும் அள்ளித்தரும்.

பரிகாரம்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எனும் ஊரில் அமைந்திருக்கும் ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீநாமபுரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று இளநீர் சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள்; உயர்வு உண்டு.