சிம்மம் - Sani Peyarchi 2020 - 2023 Tamil

2020-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

தன்னம்பிக்கையும் இரக்கமும் கொண்டவர்களே!

மனதை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொண்டு மற்றவர்களை நேர்மறை எண்ணங்களுடன் பார்க்க கூடிய சிம்மராசிக்காரர்களுக்கு இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் செய்யவிடாமல் பலவேறு தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுத்து வந்த சனிபகவான் தற்போது 6-ம் வீட்டுக்கு இடம்பெயர்கிறார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல், சாதகமாக முடியவேண்டிய சில வேலைகள்கூடப் போராடி முடிக்கவேண்டியதாக இருந்த சூழ்நிலை மாறும். கடன் பிரச்னையால் உங்களை வாட்டியெடுத்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் 6-ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித்தருவார்.

எப்போது பார்த்தாலும் ஒருவித மனஇறுக்கத்துடனும், கோபத்துடன் காணப்பட்டவர்கள், இனி அவற்றிலிருந்து எல்லாம் விடுபடுவார்கள். புதிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம், தயக்கம் இருந்து வந்த நிலை மாறும். இனி உங்களின் வாழ்கை பாதையை சீராக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும். இனி பக்குவமாகப் பேசிப் பல காரியங்களையும் கச்சிதமாக முடிப்பீர்கள். எதையோ இழந்ததைப் போல் உள்ள உங்கள் முகம் இனி தெளிவடையும். இனி முழுத்தூக்கம் வரும். குழந்தைபாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தம்பதிக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். நெடுநாள்களாகத் தடைபட்டுவந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். கூடாப் பழக்க வழக்கங்களால், கெட்ட நண்பர்களால் பாதை மாறிச் சென்ற பிள்ளைகள் இனி உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். உங்களை உதாசீனப்படுத்திய சொந்த பந்தங்கள், நண்பர்கள் இனித் தேடி வந்து உறவாடுவார்கள். பல காலங்கள் இருந்த வீட்டிலிருந்து புது வீடு மாறுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடுக் கட்டி குடிப்புகுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிப்பீர்கள். மகனுக்கு எங்கெல்லாமோ பெண் தேடி அழைந்தீர்களே, இனி உங்கள் அருகிலேயே உங்களுக்குத் தெரிந்த சம்பந்தமே அமையும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் புகழ் பெற்ற நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். இனி நாலுகாசு கையில் தங்கும். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். இனி ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்விகச் சொத்து கைக்கு வரும். பங்காளிப் பிரச்னைகள் ஓயும். வழக்கு சாதகமாகும். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். 29.3.2023 முதல் 24.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 7 - ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் எதிலும் தடுமாற்றமும், வீண் செலவுகளும் வந்துபோகும். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்யுங்கள். நடைப்பயிற்சியும் இருக்கட்டும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் வரும் 27.12.2020 அன்று அதிகாலை தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனால் அதிக பலன்பெறும் ராசிகளில் சிம்ம ராசியும் ஒன்று. சிம்ம ராசிக்கு இதுவரை 5 ம் வீட்டில் இருந்த சனிபகவான் 6 ம் வீட்டுக்குச் சென்று மறைகிறார்.மேலும் அங்கு அமர்ந்து உங்களின் ராசிக்கு 3, 8, 12 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார்.

3 - ம் வீட்டை சனிபகவான் பார்ப்பதால் தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். ஆனால் கூடாப் பழக்கம் உள்ளவர்களைத் தவிர்க்கப்பாருங்கள். குடலுக்கும், உடலுக்கும் கேடு விளைவிக்கும் உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

சனிபகவான் 8 - ம் வீட்டை பார்ப்பதால் வாகனங்களை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். அந்தரங்க விஷயங்களை அடிமனதில் தேக்குவது நல்லது. ஆனால் மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

சனிபகவான் 12 - ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் ராசிநாதனான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்லும் இக்கால கட்டத்தில் நினைத்திருந்த காரியங்கள் நிறைவேறும். மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். எதிர்த்தவர்கள் வீழ்வார்கள். விலையுயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். பூர்விகச் சொத்துச் சிக்கல்கள் தீரும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் நெஞ்சுவலி, முதுகுத் தண்டில் வலி வரக்கூடும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

28.12.2021 முதல் 26.1.2023 வரை

உங்களின் விரையஸ்தானாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் என வீடு களைகட்டும். பழைய கோயில்களைப் புதுப்பிப்பீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் பணத்தட்டுபாடு, ஏமாற்றம், துரோகங்களைச் சந்திக்க நேரிடும்.

27.01.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் சுக - பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் திடீர் யோகங்கள், சொத்து சேர்க்கை உண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். இதற்கிடையில் 27.6.2023 முதல் 23.10.2023 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் இக்காலக் கட்டத்தில் புதிய சொத்து வாங்குவீர்கள். வேலைக் கிடைக்கும். வாகனம் அமையும். திருமணம், காதுகுத்து, உபநயனம் என வீடு களைகட்டும். சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள்

சிம்மராசி சிங்கப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

இதுவரை உங்களின் பூர்வ புண்ணிய வீடான 5 - ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை சிரமப்படுத்திய சனிபகவான் தற்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டத்தில் அதிரடி யோகம் தரும் 6 ம் வீட்டில் அமர்ந்து பல இன்ப அதிர்ச்சிகளையும், புகழ், பாராட்டுகளையும் அள்ளித் தரவுள்ளார். குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகள் புகைந்து கொண்டே இருந்த நிலை மாறும். இனி உங்கள் ஆலோசனைகளை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். கரடுமுரடாகப் பேசிய கணவர் இனி பாசமாகப் பேசுவார். எடுத்து வைக்க முடியாத படி அடுத்தடுத்து செலவுகள் இருந்த நிலை மாறி இனி உங்கள் கையிலும் நாலு காசு தங்கும்.

அடிவயிற்றில் இருந்த வலி, ஹார்மோன் பிரச்னைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் கூடும். பிள்ளைகள் நீங்கள் எதை சொன்னாலும் அதற்கு ஏட்டிக்கு போட்டியாகச் செய்த நிலைமாறி இனி உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். தள்ளிப் போய் கொண்டிருந்த மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மாமனார், மாமியாருக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். நாத்தனார், மச்சினருடன் இருந்த ஈகோ பிரச்னைகள் நீங்கும்.

தாய்வழி உறவினர்களுடன் இருந்த மோதல் போக்கு நீங்கி அவர்களால் ஆதாயம் உண்டாகும். பூர்விகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிரார்த்தனை நிறைவேறும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். புது வாகனம் வாங்குவீர்கள். கண்டுகொள்ளாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். அயல்நாடு சென்று வர அனுமதி கிடைக்கும். சனிபகவான் உங்களின் 3 - ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். சனிபகவான் 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் வாகனங்களை இயக்கும்போது அலைபேசியில் பேச வேண்டாம். சனிபகவான் 12 - ம் வீட்டை பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரம் செய்யும் பெண்கள் மறைமுகமாகத் தொல்லை கொடுத்தவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பார்கள். புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய பாக்கியெல்லாம் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுக்காக இனி பயப்படவேண்டாம். புதுக் கிளையும் உங்களின் கணவர் உதவியுடன் தொடங்குவீர்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மதிப்பார்கள். சம்பளம் கூடும். சக ஊழியர்களோட இருந்த மோதல்கள் விலகும். தனியார் நிறுவனம், கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறைப் பெண்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரும். புகழ் கிடைக்கும். இந்த சனி மாற்றம் திடீர் யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.

சிம்ம ராசி வியாபாரிகளுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

சிம்மராசிக்கு 5 ம் வீட்டிலிருந்த சனிபகவான் தற்போது 6 ம் வீட்டில் சென்று அமர்கிறார். அதனால் இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். அதிரடி லாபம் கிடைக்கும். பல முறை கேட்டும் வராமலிருந்த பாக்கித் தொகைகள் உடனடியாக வசூலாகும். சந்தை நிலவரம் தெரியாமல் சரக்குகளை வாங்கிப் போட்டு சங்கடப்பட்ட காலம் முடிந்து, இனி மக்கள் ரசனைக் கேற்ப மாறுவீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பிரபலமானவர்களைப் பயன்படுத்தி விளம்பரம் செய்து கூடுதல் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். பங்குதாரர்கள், வேலையாள்கள் ஆதரவாக இருப்பார்கள். மொத்தத்தில் எதிர்பாராத லாபம் தரக்கூடிய காலமாக இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டம் அமையும்.

சிம்மராசி உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

இதுவரை 5 ம் இடத்தில் இருந்த சனிபகவான் உங்களுக்கு நிறைய தொல்லைகள் கொடுத்துவந்தார்.

வேலைபார்க்கும் இடங்களில் நிராகரிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டீர்கள். இந்த நிலை இப்போது முற்றிலும் மாறும். இனி உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். எந்த வேலையிலும் நிலைக்காமல் அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தவர்களுக்கு இனி அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, சம்பளம் உயர்வு எல்லாம் கிடைக்கும். வெகுநாள்களாகப் போராடிய சம்பள பாக்கியும் கைக்கு வரும். மேலதிகாரியுடன் இருந்த மோதல் நீங்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கணினித்துறையிலிருப்பவர்களுக்கு அயல்நாட்டுத்தொடர்புடைய புதிய நிறுவனங்களில் நல்ல சம்பத்துடன் வாய்ப்பு கிடைக்கும். இந்த சனிப் பெயர்ச்சி எங்கும் எதிலும் திடீர்யோகங்களையும், எதிர்பாராத வெற்றிகளையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

திருவண்ணாமலை மாவட்டம் சோகத்தூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅமிர்த வல்லி உடனுறை ஸ்ரீயோக நரசிம்மரை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி வாருங்கள். சகலமும் நன்மையில் முடியும்.