Vikatan

சனிபகவான் கதைகள்

நவகிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் சனீஸ்வர பகவான்தான். சனி பகவானுக்கு மந்தன், ரவிபுத்ரன், ஜடாதரன், ஆயுள்காரகன் என்று பல பெயர்கள் உண்டு. சனீஸ்வரர் நீதிதேவன் ஆவார். தர்மவானும்கூட. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல், அவரவர்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தருபவர்.

சனியின் தசாபுக்தி காலத்திலும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி போன்ற கோசார காலங்களிலும் சனிபகவான் அவரவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களைத் தருவார்.

இதைக் கண்ட ஆங்கீரஸ முனிவர், உலக நன்மைக்காக அக்னி தேவன் விட்டுச் சென்ற பணியைத் தானே செய்யத் தொடங்கினார். உலகம் மீண்டும் செழித்தது.

சனி பகவான்

இந்திரனே ஆனாலும் சனியின் பிடியில் இருந்து தப்பமுடியாது. ஒருமுறை இந்திரனை பிடிக்கவேண்டி இருந்தது. தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்பதால், முன்கூட்டியே தான் இந்திரனைப் பிடிக்கப்போவதாகக் கூறினார்.

இதனால் கடும் கோபம் கொண்ட இந்திரன் சனிபகவானிடம்,

" உலகமே போற்றிப் புகழும் தேவர்களின் அரசன் நான், என்னைப் பிடிக்கும் உரிமையை உனக்கு யார் கொடுத்தது" என்றார். சனிபகவானோ " மனிதரோ, தேவரோ எனக்கு அனைவரும் சமமே, இதில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றெல்லாம் யாரும் இல்லை. என் பார்வையில் இருந்து விலக யாருக்கும் விலக்கு இல்லை'' என்றார்.

''சரி அத்தனை வல்லமை பொருந்திய நீ, என்னைப் பிடிக்கும் நேரத்தையாவது சொல்'' என்றார் இந்திரன். சனிபகவானும் அந்த நேரத்தைச் சொல்லி அனுப்பினார்.

சரியாக அந்த நேரத்தில் பெருச்சாளியாக மாறி, ஒரு சாக்கடையில் போய் ஒளிந்து கொண்டார் தேவேந்திரன். அந்த நேரத்தைக் கடந்து சாக்கடையில் இருந்து வெளிவந்த இந்திரன் மகிழ்ச்சியோடு சனிபகவானிடம் சென்று " உன் பார்வையில் இருந்து எப்படி தப்பினேன் பார்த்தாயா " என்று கர்வத்தோடு சொன்னார்.

அதற்கு சனிபகவான், " தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக புகழுடன் விளங்கும் நீங்கள், வீற்றிருக்கும் சிம்மாசனத்தை விட்டு சாக்கடையில் உழன்றது கூட என்னுடைய பார்வையால்தான்" என்றார்.

அப்போதுதான் சனியின் வல்லமையை உணர்ந்தார் தேவேந்திரர்.

இந்திரன்

சனீஸ்வர பகவான் தர்மவான் என்பதால், எப்போதுமே நன்மையே அருள்வார். ஆனால், நாம் பாவங்கள் செய்திருந்தால் சனிபகவான் தரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.

தன்னலம் இல்லாமல் மக்கள் நலனுக்காக வாழ்பவர்கள் கேட்கும் வரங்களை எல்லாம் தப்பாமல் தருவார் சனீஸ்வர பகவான்.

அப்படி ஒருமுறை தசரத மன்னருக்கு சனீஸ்வர பகவான் வரம் தந்த சம்பவம்...

ரகுவம்ச மன்னரான தசரத மன்னர் அயோத்தியை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். அப்போது சனி கிரகமானது ரோகிணி நட்சத்திரத்தைப் பிளந்து செல்ல இருந்தது.

அப்படி சனி பகவான் ரோகிணி நட்சத்திரத்தைப் பிளந்துகொண்டு சென்றால், அதன் விளைவாக நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் மழை இல்லாமல், கடுமையான வறட்சி ஏற்பட்டு மக்கள் துன்பப்படுவார்கள் என்று அரண்மனை ஜோதிடர்கள் கூறினார்கள்.

தன் மக்களுக்கு சனியினால் எந்தத் துன்பமும் வரக்கூடாது என்ற எண்ணத்தில், தசரதர் தன்னுடைய பறக்கும் தேரில் ஏறி, சனீஸ்வர பகவானுடன் போருக்குச் சென்றார்.

அதைக் கண்டு, 'ஈஸ்வரப் பட்டம் பெற்ற தன்னையே எதிர்த்துப் போருக்கு வரத் துணிந்தானே தசரதன்' என்று திகைத்தார். நேரில் வந்த தசரதனின் துணிச்சலைப் பாராட்டிய சனீஸ்வரர், தான் ரோகிணியை பிளந்து செல்வது தவிர்க்கமுடியாது என்று கூறியதுடன், வேறு ஏதேனும் வரம் கேட்டால் தருவதாகக் கூறினார்.

தசரதரும், ''அப்படியானால், நீங்கள் ரோகிணி நட்சத்திரத்தைப் பிளந்துகொண்டு செல்வதால், நாட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் ஏற்பட இருக்கும் பஞ்சத்தை வராமல் தடுக்கவேண்டும். எப்போதும் என் நாட்டு மக்கள் செழிப்புடன் வாழவேண்டும்'' என்று வரம் கேட்டார். அப்படியே சனீஸ்வர பகவானும் வரம் தந்தார். வரம் தந்த சனீஸ்வர பகவானைப் போற்றி தசரத மன்னர் ஸ்லோகங்கள் இயற்றி வழிபட்டார்.

நாம் மற்றவர்களின் நலனுக்காகப் பாடுபட்டால், சனீஸ்வர பகவான் எப்போதும் நமக்குத் துணையாக இருந்து அருள் புரிவார் என்பது உறுதி.

சனீஸ்வர தோஷம் நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள்:

சனிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று விரதம் கடைப்பிடித்தால், நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

அந்த நாள்களில் சனிபகவானின் அதிபதியான மகாவிஷ்ணுவைப் பாராயணம் செய்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். மேலும், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ புண்ணிய தினத்தில் , சிவாலயங்களில் வில்வ இலையால் அர்ச்சனை செய்து வழிபடுவது சாலச்சிறந்தது.

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்.

சங்கடஹர சதுர்த்தி தினத்தில், விநாயகப் பெருமானுக்கு எட்டு சிதறு தேங்காய்களை உடைத்து வழிபட்டால், சனியின் பாதிப்புகள் குறையும்.

பரிகாரம்

சனிபகவானின் தானியம் எள். அந்த எள் எண்ணெயில் (நல்லெண்ணெய்) அவருக்கு விளக்குப் போடுவது நன்மைகள் பலவற்றைத் தரும்.

எள்ளுச் சாதத்தை நைவேத்யமாக சனீஸ்வரருக்குச் செய்துவிட்டு, அதைக் காகத்துக்கு வைத்துவிட்டுச் சாப்பிட்டால் நன்மைகள் பெருகும்.

திருநள்ளாறு சென்று, சனீஸ்வரரை வழிபடத் தோஷங்கள் நீங்கும்.

நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டி ஆகியவற்றை ஏழை, எளியோருக்கு தானம் செய்யலாம்.

சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி வரும் நாள்களில் அன்னதானம் செய்வது சிறப்பு.

உழைப்பாளிகளுக்கு உதவி செய்தால், சனீஸ்வரனின் அனுகூலம் கிட்டும். அதேபோல ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவினாலும் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார்; நம் சங்கடங்களைப் போக்குவார்.

சனி பகவான் ஸ்தோத்திரம்

'நீலாஞ்ஜன ஸமா பாஸம்

ரவிபுத்ரம் யமாக் ரஜம்'

'சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்

தம் நமாமி ஸனைச்சரம் '

சனிபகவானும் தர்ப்பை புல்லும்...

காரைக்காலில் இருந்து பேரளம் செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது திருநள்ளாறு. இங்கேயுள்ள இறைவனின் திருநாமம் - ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர். அந்தக் காலத்தில் தர்ப்பை வனமாக இருந்த பகுதியாம் இது; இங்கு எழுந்தருளியதால், தர்ப்பையிலான வடுக்கள் இறைத் திருமேனியில் இன்றைக்கும் காணப்படுவதாகச் சொல்வர்!

அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீபோகமார்த்த பூண்முலையாள். பக்தியுடன் வழிபடுவோருக்கு, உயிருக்கு உயிராக இருந்து தாயுள்ளத்துடன் காத்தருள்வதால், அம்பிகைக்கு ஸ்ரீபிராணாம்பிகை எனும் திருநாமமும் உண்டு.

திருநள்ளாறு திருத்தலத்தின் முக்கியமான மூர்த்தி... ஸ்ரீசனீஸ்வர பகவான்தான் என்பது நமக்குத் தெரியும். அரசன் முதல் ஆண்டி வரை அனைவரையும் ஆட்டிப் படைக்கிற பெருமான், இவர்! இவரின் பிடியில் இருந்து எவராலும் தப்பமுடியாது. இவரின் கோபத்தைக் கட்டுப் படுத்தவும் இறைவனின் கருணைப் பார்வையைப் பெறவும், எண்ணற்ற பக்தர்கள் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர்.

சனீஸ்வர பகவான், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்கள் வசிக்கிறார். 12 ராசிகளையும் சனீஸ்வர பகவான் ஒருமுறை சுற்றி வருவதற்கு, 30 வருடங்கள் ஆகும். எனவே 30 வருடத்தில், இவரது பிடியில் சிக்காதவர்களே இருக்கமுடியாது.

சனீஸ்வர பகவான், 12, 1, 2 ஆகிய வீடுகளில் பிரவேசிக்கும் போது, அதனை ஏழரைநாட்டுச் சனி என்பர். 4-ஆம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாகவும், 7-ஆம் வீட்டில் கண்டகச் சனியாக வும், 8-ஆம் வீட்டில் அஷ்டமச் சனியாகவும் இருந்து, கர்ம வினைகளுக்குத் தகுந்த பலாபலன்களைத் தருவார் சனீஸ்வர பகவான் என்கின்றன ஜோதிட நூல்கள்.

சனியின் பிரவேசத்தால் வியாபாரத்தில் மந்தம், சொத்துகள் இழப்பு, மனைவி, குழந்தைகள் மற்றும் அரசாங்கத்தால் தொல்லைகள் ஆகியன மட்டுமின்றி, ஒருசிலருக்கு தொழுநோய் பீடிப்பதற்கும் வாய்ப்பு உண்டு என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

மனித வாழ்வில், ஏழரைநாட்டுச் சனி என்பது மூன்று முறை ஏற்படும். முதலில் மங்கு சனி; அடுத்து பொங்கு சனி; மூன்றாவதாக மரணச் சனி என்பர். 'சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை' என்பார்கள். சனீஸ்வரனை வழிபட்டால், கஷ்டங்களைப் போக்கி, நிம்மதியைத் தந்தருள்வார் என்பது உறுதி.

சனீஸ்வர பகவான் குடிகொண்டிருக்கும் தலத்தின் விருட்சம்- தர்ப்பைப் புல். இதனை குசா என்றும் சொல்வர். ஸ்ரீராமபிரானின் இரண்டாவது மைந்தனின் திருநாமம்- குசா. இதனைக் குறிக்கும் வகையில், தர்ப்பைக்கு குசா என்று பெயர் அமைந்த தாகவும் சொல்வர்.

சங்க இலக்கியமான 'பெரும்பாணாற்றுப்படை'யில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர்,

'வேழம் நிரைத்து வெண்கோடு வரைகி

தாழை முடித்து தருப்பை வேய்ந்த

குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றில்' - என்று பாடியுள்ளார்.

அந்தக் காலத்தில், வீட்டுக் கூரை வேய்வதற்கு தர்ப்பையைப் பயன்படுத்தினார்களாம். 'வேழக் கோலாலே வரிசை நிரைத்துத் தாழையின் நாரினாலே கட்டுவார்கள்' என நச்சினார்க்கினியார் குறிப்பிட்டுள்ளார்.

மகத்துவம் கொண்ட தர்ப்பைக்கு, மருத்துவ குணங்களும் உண்டு. இது உஷ்ணத்தைத் தணிக்கவல்லது; சிறுநீரகப் பிரச்னையைப் போக்கும் தன்மை கொண்டது; பாம்புக் கடி விஷத்தை அகற்றும் வீரியம், தர்ப்பையில் உண்டு. பித்தம், கபம், வாதம் ஆகிய பிரச்னைகளை நீக்குகிறது. ரத்தத்தில் தேங்கி விடும் யூரியா, கிரியாட்டினின் எனும் கழிவுப் பொருட்களை அகற்றும் சக்தி கொண்டது. அவ்வளவு ஏன்... உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது தர்ப்பை என்கின்றன மருத்துவ நூல்கள்.

உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்ட தர்ப்பையில், தாமிரத்தில் உள்ள மின் சக்தியும் உண்டு. இதனால்தான், தங்கம், வெள்ளிக் கம்பிகள் உள்ள இடத்தில் தர்ப்பையையும் பயன்படுத்துகின்றனர்.

அதுமட்டுமா? ஆசனங்களில் தர்ப்பாச னமே சிறந்தது என்கின்றனர் முனிவர்கள். இறை வழிபாடு, ஜபம், ஹோமம், தானம், பித்ரு தர்ப்பணம் ஆகியவற்றின்போது, கையில் பவித்திரமாக (மோதிரம்) தர்ப்பையை அணிவது உரிய பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம். தர்ப்பை மோதிரம் அணிந்துதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பதும் வழக்கமாக உள்ளது.

கிரகண மற்றும் அமாவாசை காலங்களில், தர்ப்பைக்கு வீரியம் அதிகம் என்பதால், அந்த வேளையில் உணவுப் பண்டங்கள் கெட்டுப்போகாமல் இருக்க, தூய்மையான தர்ப்பையைப் பரப்பி வைப்பது, இன்றைக்கும் நடைமுறையில் உள்ள ஒன்று!

''தர்ப்பை வனமாக இருந்த தலம் என்பதால், இறைவனுக்கு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் என்று பெயர் வந்தது. தர்ப்பை வனத் தில், தர்ப்பைப் புற்களுக்கு நடுவே காட்சி தந்ததால், இங்குள்ள இறைவனின் நெற்றியில் இயற்கையாகவே மூன்று தர்ப்பைக் கோடுகள் இருக்கின்றன.

உயிர் எனும் ஜீவ சக்தியை, ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குக் கொண்டுசெல்லும் சக்தி தர்ப்பைக்கு உண்டு. நம் திருமணம், ஆயுஷ்ஹோமம் ஆகிய சடங்குகளின்போது, தர்ப்பைக்கு முக்கியத்துவம் தருகிறோம்'' என்று சொல்கிறார் இந்த ஆலயத்தில் பணிபுரியும் வெங்கடேச குருக்கள்.

''கோயிலுக்கு அருகிலேயே உள்ளது, நள தீர்த்தம். இதில் நீராடினால், அனைத்து கிரக தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்! நள மகாராஜா, தன்னுடைய தோஷம் நீங்குவதற்காக, இந்தத் தீர்த்தத்தில் நீராடிவிட்டு, இறைத் தரிசனம் பெற்றார் என்பது நம்பிக்கை.

சனி பகவானின் வாகனம் - காகம்; நிறம் - கறுப்பு. எனவே, கறுப்பு நிற வஸ்திரத்தை சனீஸ்வர பகவானுக்குச் சார்த்தி, எள் எண்ணெய் தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட, சனிக்கிரக தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்'' என்கிறார் வெங்கடேச குருக்கள்.

சனிபகவான் கதைகள்

நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான் என்று சொல்வார்கள். அதனால் அவரை 'சனீஸ்வரன்’ என்று போற்றுவர். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், அவரவர் ராசிக்கேற்ப ஏழரை ஆண்டுகள் சனியின் பிடிக்குள் அடங்கி, உயர்வு- தாழ்வுகளைச் சந்தித்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதைத்தான் 'ஏழரைச்சனி’ என்கிறார்கள். 'கொடுப்பதும் சனி; கெடுப்பதும் சனி’, 'யாரை விட்டது சனி’ என்றெல்லாம் பழமொழிகள் பல உண்டு.

ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து, ''உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?'' என்று கேட்டான். அதற்கு சனீஸ்வரன், 'இதுவரை இல்லை. ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை. ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!' என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார்.

'எங்கே செல்கிறீர்கள்?'' என்று இந்திரன் கேட்க, 'சிவனைத் தரிசிக்க!'' என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்.

நேராக கயிலாயம் சென்றவர், சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்.

''சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?'' என்று கேட்டார்.சிவபெருமான்.

''பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே வந்தேன்'' என்றார் சனீஸ்வரன்.

''எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா... விளையாடுகிறாயா? கிரகங் களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?' என்று கேட்டார்.

''ஆம் ஸ்வாமி! நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார் சனீஸ்வரன்.

''ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது' என்று கூறிய சிவபெருமான், பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராக்ஷத்தில் மறைந்துகொண்டார். ருத்ராக்ஷத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது. அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?

ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன். ஏழரை நாழிகை கடந்தது. சிவபெரு மான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார். சனீஸ்வரனை நோக்கி, ''பார்த்தாயா சனீஸ்வரா... உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே?'' என்றார்.

''இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள்'' என்றார்.

'சனீஸ்வரனின் விதி’யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான். ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.

சிவனைப் பீடித்த சனி அதோடு விட்டு விடவில்லை. திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.

ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன். இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன. ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்’ என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.

அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ''பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று வேண்டினார்.

'எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்' என்றார் ஸ்ரீராமன்.

உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ''ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு'' என்றார்.

''சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ள லாம்'' என்றான் அனுமன்.

''ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?''என்று கேட்டார் சனீஸ்வரன்.

''என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். 'எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன். அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று. அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. 'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்றுகூடச் சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.

''சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?'' என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன், ''ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன். சாக்ஷ£த் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்' என்றார் சனீஸ்வரன்.

''இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?' என்றார் அனுமான். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், ''அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றார். ''ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்' என வரம் கேட்டார் அனுமன். சனியும் வரம் தந்து அருளினார்.

பொதுவாக ஒருவரை ஏழரைச் சனி பீடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து மங்குசனி, தங்குசனி, பொங்குசனி என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியின் மங்குசனி, தங்குசனி காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைகளைச் சமாளித்து, முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற, ''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம'' என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.

மற்ற ராசிகளுக்கான சனிபெயர்ச்சி பலன்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...