Vikatan

சனிபகவான் திருத்தலங்கள்

வாழ்க்கையில் நல்ல திருப்பம் வேண்டுபவர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய தலம்; பிறக்கும் மனிதர்க்கெல்லாம் புகலிடமாக அமைந்திருக்கும் கோயில்; முன்பிறவி பாவங்களைப் போக்கும் அற்புதத் தலம்; வீடு கட்டுவதற்கு பூஜிக்கப்பட்ட கற்கள் வேண்டுவோர் செல்லவேண்டிய தலம்! சனி தோஷம் விலக சனீஸ்வர பகவான் அருளும் திருத்தலம்.

இத்தனை சிறப்புகளுக்கும் உரியதாக அமைந்திருக்கிறது ஓர் அற்புத திருத்தலம். நாகப்பட்டினம் அருகில் அமைந்துள்ள திருப்புகலூர் திருத்தலம்தான் அந்தத் தலம். நாற்புறமும் அகழி சூழ அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் அருளும் இறைவன் அக்னீஸ்வரர்; இறைவி கருந்தார்க்குழலி. சூளிகாம்பாள் என்ற பெயரும் அம்பிகைக்கு உண்டு.

வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்தில் இருக்கும் இந்தக் கோயிலில் 18 சித்தர்கள் வழிபட்டதாகச் சொல்கிறார்கள். காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநீலக்க நாயனார், முருக நாயனார், சிறுத்தொண்ட நாயனார் ஆகியோர் வந்து பாடியும் வழிபட்டும் இருக்கின்றனர். இங்கு ஒரு சித்தரின் சமாதியும் இருக்கிறது. போகரின் சமாதியாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

அக்னி பகவானுக்கு பாவ விமோசனம் கொடுத்து காட்சி தந்த தலம் இது என்பதால், அக்னிக்கு உருவச் சிலை இந்தக் கோயிலில் அமைந்திருப்பது விசேஷம்.

பண்டைய காலத்திலேயே சாதி மத வேறுபாடின்றி அப்பர், திருஞானசம்பந்தர், திருநீலக்க நாயனார், முருக நாயனார், சிறுதொண்ட நாயனார் ஆகிய ஐவரும் ஒரே சமயத்தில் ஒன்றாக அமர்ந்து ஸ்ரீ அக்னீஸ்வரரை வணங்கியது குறிப்பிடத் தக்கது.

கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்துக்கும் உரிய தோஷ நிவர்த்தி அருளும் தலம். அதற்கேற்ப இங்கே பூதேஸ்வரர், வர்த்தமானேஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் ஆகிய மூவரும், தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருக்கிறார்கள். இவர்களை வணங்கினால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைப்பதுடன், பொருட்செல்வம், கல்விச்செல்வம், வேலைவாய்ப்பு, பேரின்ப பெருவாழ்வு அடையலாம் என்கிறார்கள்.

அருகில் உள்ள போலகம் கிராமத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்ற அவரின் தாய் அம்பாள் கருந்தார்குழலியை வேண்ட, அம்பாளே வெள்ளைப் புடவை அணிந்து மருத்துவச்சியாய் சென்று சுகப்பிரசவம் செய்து கொடுத்ததால், சூளிகாம்பாள் என்று அழைக்கப்படுகிறார். அதற்காக அக்குடும்பத்தினர் கோயிலுக்கு காணிக்கையாக கொடுத்த நிலம் இன்றும் மருத்துவ காணி நிலம் என்று அழைக்கப்படுகிறது. இன்று வரை இப்பகுதியில் பிரசவத்தால் யாரும் இறந்ததில்லை என்பதிலிருந்து அம்பாளின் அருள் விளங்கும். திருமணம் ஆகாத பெண்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டும் பெண்கள் சாயரட்சை கால பூஜையின்போது அம்பாளுக்கு வெள்ளைப் புடவை சாற்றி வேண்டுதல் செய்தால் அது நிச்சயம் பலிக்கும் என்பது நம்பிக்கை.

நளமகராஜன், சனி தோஷம் விலக இக்கோயில் குளத்தில் குளித்தெழுந்த போதுதான் இங்கிருந்து 7 கல் தொலைவில் இருக்கும் திருநள்ளாற்றில் விலகிக்கொள்கிறேன் என்று சனிபகவான் அசரீரியாகக் கூறினாராம். அதனால் இத்தலத்தில் உள்ள சனீஸ்வர பகவான் அனுக்கிரஹ மூர்த்தியாக வணங்கப்படுகிறார். காக்கையை தோளில் சுமந்தபடி நளமகராஜனுக்கு இக்கோயிலில் சிலை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குடும்ப சமேதராக மங்கள சனி பகவான்!

சனிதசை, கண்டச்சனி, ஏழரைச்சனி மற்றும் அஷ்டம சனி ஆகிய கால கட்டங்களில் சனி பகவான் அருள் புரியும் திருத்தலங்களுக்குச் சென்று, மனமுருகி அவரை வழிபடுவது நன்மை பயக்கும். அப்படி நமது சங்கடங்களைத் தீர்த்து, சந்தோஷம் தரும் சனி பகவானுக்குரிய திருத்தலங்களில் குறிப்பிடத் தக்கது நாச்சியார்கோவில் எனும் திருநறையூர்.

கும்பகோணம்- திருவாரூர் சாலையில், கும்ப கோணத்துக்குத் தெற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில், அரசலாறு மற்றும் திருமலைராஜன் ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது நாச்சியார்கோவில். 108 வைணவத் தலங்களில் ஒன்றான இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், சித்தநாத சுவாமி திருக்கோயில் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது ஸ்ரீபர்வதவர்த்தனி உடனுறை ராமநாத ஸ்வாமி திருக்கோயில். இது ராமேஸ்வரம், ஸ்ரீராமநாத ஸ்வாமி ஆலயத்துக்கு இணையானது என்கிறார்கள்.

ராவணனிடம் போரிட இலங்கை செல்லுமுன் ராமன் வணங்கிச் சென்ற கோயில் இது என்றும். தன் தந்தை தசரதர் வழிபட்ட இங்கு, போரில் வெற்றி வீரராகத் திரும்பி வந்த ராமர் தீர்த்தக் குளம் ஒன்றை வெட்டி, அதில் சீதாதேவி மற்றும் லட்சுமணனுடன் நீராடி, இங்குள்ள இறைவனை வழிபட்டு ராவண வதத்தால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்றும் சொல் கிறார்கள். அனுமனும் இங்கு வழிபட்டதுடன் கோஷ்டத்தில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, அதற்கு ‘ஹனுமந்த லிங்கம்’ என்று நாமம் சூட்டி உள்ளார். ராமர் வழிபட்ட மூலவரின் திருநாமம் ஸ்ரீராமநாதஸ்வாமி. அம்பாளின் திருநாமம் ஸ்ரீபர்வதவர்த்தினி. இந்தக் கோயி லில் சனிபகவான் தன் மனைவியர் மந்தாதேவி- ஜேஷ்டாதேவி மற்றும் மகன்கள் மாந்தி-குளிகன் ஆகியோருடன் குடும்ப சமேதராக- மங்கள சனியாக அருள் புரிகிறார்.

‘ரோஹிணி நட்சத்திரத்தில் 12 வருட காலம் சனி வாசம் செய்து வெளியேறினால், ரோஹிணி சகட பேதம் எனும் கடும் பஞ்சம் ஏற்படும். அதை எவராலும் தடுக்க இயலாது!’ என்று சிவபெருமான் நாரதரிடம் கூறினார். நாரதர் இதை வசிஷ்ட மகரிஷியிடம் கூறினார். வசிஷ்ட மகரிஷி இதை தசரதரிடம் கூறினார்.

இதைக் கேள்விப்பட்ட தசரதர், ரோஹிணியை விட்டு சனி கடக்குமுன் தடுத்து நிறுத்தி, போரிட விரும்பினார். இதை உணர்ந்த சனி பகவான், ‘‘அரசே, உனது வீரத்தையும், மக்கள் மீது நீ கொண்டுள்ள அன்பையும் கண்டு மகிழ்கிறேன். எனினும், நான் எதுவும் செய்ய இயலாது. விலகி வழிவிடு!’’ என்றார். உடனே தசரதர், சனி பகவானை நோக்கி ஒரு ஸ்லோகம் சொன்னார். இதனால் மனங்குளிர்ந்த சனி பகவான், ‘‘திருநறையூர் வந்து என்னை வழிபட்டால், நான் மங்கள சனியாக தரிசனம் தந்து, மகத்தான இரண்டு வரங்கள் தருகிறேன்!’’ என்றார்.

அதைக் கேட்ட தசரதர் திருநறையூர் வந்து சூரிய குளத்தில் நீராடி சனி பகவானை வணங்கினார். இதில் மனம் மகிழ்ந்த சனி பகவான் குடும்ப சமேதராக தசரதருக்குக் காட்சி தந்து, இரு வரங்களை அருளினார். அதில் முதலாவது, ‘ரோஹிணி சகடபேத காலத்தில் தாம் எவருக்கும், எந்தக் கஷ்டமும் கொடுப்பது இல்லை!’ என்பது. இரண்டாவது, ‘தான் குடும்ப சமேதராக விளங்கும் இந்த ஆலயத்துக்கு வந்து தன்னை தரிசிப்போருக்கு மற்ற எட்டு கிரகங்களால் ஏற்படும் தீய பலன்களை முற்றிலுமாக நீக்குவேன்’ என்பது. அதன்படி, தம்பதி சமேதராகக் இங்கு காட்சி தரும் சனி பகவானின் அருகே தசரதர் கை தொழுதவாறு காட்சி தருகிறார். சனி பகவானுக்கு பாலபிஷேகம் செய்தால், உடம்பிலிருந்து வழியும் பால் (சனி பகவானின் நிறமான) நீல வண்ணத்தை அடைகிறது. சனிப் பெயர்ச்சி அன்று இங்குள்ள சனி பகவானுக்கு (உற்சவமூர்த்திக்கு) திருக்கல்யாணம் நடைபெறும். அன்று அவர் திருவீதி உலா வருவதும் வேறெங்கும் காண முடியாத சிறப்பு. சனிக்கிழமை தோறும் காலை 6 முதல் 7:30 மணிக்குள் மாந்திக்கும், 9 முதல் 10:30 மணிக்குள் சனி பகவானுக்கும் நடக்கும் அபிஷேகத்தைக் காண இங்கு வருபவர்களது எண்ணிக்கை அதிகம். இங்குள்ள தீர்த்தம் ராம தீர்த்தம் எனப்படுகிறது. இதில் தசரதரும், ஸ்ரீராமபிரானும் நீராடியுள்ளனர். இதில் நீராடினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.

திருச்சி- உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோயிலில் தனிச் சந்நிதி கொண்டு, நின்ற நிலையில் கிழக்கு நோக்கி அருள் புரியும் சனி பகவான் பெயர் பொங்கு சனி.

விழுப்புரம்- திருக்கோவிலூர் சாலையில் விழுப்புரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ளது கல்பட்டு கிராமம். இங்குள்ள சுயம்பிரகாச ஆசிரமத்தில், நின்ற கோலத்தில் சனீஸ்வரன் அருள் புரிகிறார். இதன் உயரம் இருபது அடி.

தென்காசி- மதுரை சாலையில் தென்காசியிலிருந்து சுமார் 10 கி.மீ. தூரத்தில் உள்ளது இலத்தூர், இந்தத் தலத்தில் உள்ள ஸ்ரீமதுநாதர் சமேத அறம்வளர்த்தநாயகி கோயிலில் தனிச் சந்நிதியில் எழுந்தருளியுள்ள சனி பகவான், அபய ஹஸ்த முத்திரையுடன் காட்சி தருகிறார்.

குரு ஸ்தலமான திருச்செந்தூர் முருகன் கோயிலில் நவக்கிரக சந்நிதி இல்லை. ஆனால், சனீஸ்வரன் மட்டும் சுமார் நான்கு அடி உயரத்தில் கிழக்கு நோக்கிய நிலையில் காக்கை வாகனத்தில் காட்சி அளிக்கிறார்.

கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார்கோவிலில் சனி பகவான் மனைவியர் இருவருடன் தனிச் சந்நிதியில் அருள் புரிகிறார். இங்கு இவருக்கு வாகனம் இல்லை.

மயிலாடுதுறை அருகில் உள்ள கூறைநாடு திருத்தலத்தில் ஸ்ரீபுனுகீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு சனி பகவானுக்கு தனி விமானம், தனி கும்பம், தனிச் சந்நிதி உண்டு. இவர், இங்கு சிவப்பு நிறக் கல்லில் காட்சி தருகிறார்.

கும்பகோணம்- கதிராமங்கலம் சாலையில் உள்ளது திருக்கோடிக்கா திருத்தலம். இங்குள்ள கோயிலில் சனி பகவான் பால சனீஸ்வரராக காட்சி தருகிறார்.

திருவூர் சனீஸ்வர வாசல்

காசியின் புண்ணியத்தை நல்கும் திருத்தலம், தனது திருப்பெயரை மும்முறை சொன்னாலே பாவங்களையெல்லாம் பொசுக்கி வாழ்வை விருத்தியடையச் செய்யும் விருத்தகங்கா எனும் நதி பாயும் புண்ணிய பூமி, காசியைப் போன்றே காலபைரவரின் சாந்நித்தியம் பெற்ற க்ஷேத்திரம், நம் சங்கடங்களையும் ஜாதகத்தில் தன்னால் ஏற்படும் குறைபாடு களையும் நீக்கி சந்தோஷத்தை வாரி வழங்கும் சனி பகவானின் திருவருள் பொங்கிப்பெருகும் பெரும் பதி... இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிவனார் ஸ்ரீ சங்கர நாராயணர் எனும் திருநாமத் துடனும், அம்பிகை ஸ்ரீநாராயணி அம்பாள் எனும் திருப்பெயருடனும் கோயில் கொண் டிருக்கும் திருவூர் சனீஸ்வர வாசல்.

தற்போது 'காரையூர்’ என்றே இதை அழைக் கிறார்கள். திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது காரையூர்.

ஒருமுறை, நளமகாராஜனைப் பிடிப்பதற்காக திருநள்ளாறு நோக்கிப் புறப்பட்டார் சனி பகவான். இலக்கை அடைய வெகு தூரம் இருக்கும் நிலையில், இருள்கவியத் தொடங்கி விட்டது. எனவே, சனி பகவானின் காக வாகனத்துக்குப் பார்வை மங்க ஆரம்பித்தது. வழியில் எங்கேனும் தங்க வேண்டிய நிலை. அப்போது, பூமியில் சிவாலயம் ஒன்று தென்படவே, அந்த இடத்திலேயே தரையிறங் கினார் சனிபகவான்.

இரவில் அங்கு தங்கியிருந்தவர் காலையில் எழுந்தபோது, கோயிலின் எதிரில் விருத்தகங்கா பாய்வதைக் கண்டார். தனது வாகனத்துடன் அதில் நீராடி, அந்தத் தலத்தில் கோயில் கொண்டிருந்த சங்கரநாராயணரையும் நாராயணி அம்பாளையும் வழிபட்டு மகிழ்ந்தார். இங்ஙனம், சனி பகவான் தங்கி வழி பட்டதால், 'சனீஸ்வர வாசல்’ என்ற திருப் பெயர் கிடைத்தது அந்தத் தலத்துக்கு. சனி பகவானுக்கு மந்தன், அனிதன், சாயாபுத்திரன் எனப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று காரி. இதையொட்டியே காரையூர் எனும் பெயரும் வந்ததாகச் சொல்கிறார்கள். இவ்வூரின் மகிமையைப் பற்றிப் பலவாறு சிறப்பிக்கின்றன புராணக் கதைகள்.

ஒருகாலத்தில், காசியின் ராணியாகத் திகழ்ந்த சம்யுக்தை என்பவளிடம் மந்திரை என்பவள் பணிபுரிந்து வந்தாள். அவள் மகத இளவரசனான சுதாங்கனைக் காதலித்து வந்தாள். ஒருநாள், ராணியும் அரசனும் அந்தப் புரத்தில் தனித்திருந்த வேளையில், அவர்களின் அனுமதி இல்லாமல் நுழைந்து விட்டாள் மந்திரை. இதனால் கோபம் கொண்ட ராணி, 'ஆயுள் முழுக்க நீ கன்னியாகவே திகழ்வாய்’ என்று மந்திரையைச் சபித்துவிட்டாள்.

இதனால் பெரிதும் வருந்திய மந்திரை, சுதாங்கனை அழைத்துக் கொண்டு சாப விமோசனம் தேடியலைந்தாள். அப்போது, சலந்திரன் எனும் அசுரன் அவளின் சாப விமோசனத்துக்குத் தான் வழிகாட்டுவதாகக் கூறி, அவர்களை ஏமாற்றி அழைத்துச் சென்று, தருணம் வாய்த்தபோது இருவரையும் விழுங்கி விட்டான். அசுரனின் வயிற்றுக்குள் சென்ற இருவரும், சிவாம்சமான பைரவ மூர்த்தியால் அசுரனின் பெருவயிறு கிழிக்கப்பட்டு வெளியேறினர் என்கிறது புராணம். அப்போது, பூமி அதிர விழுந்த அசுரன், மீண்டும் எழுந்து நின்றான். அவனை மீண்டும் பூமியில் மூன்று இடங்களில் விழும்படி சாய்த்தார் பைரவர்.

உயிர்விடும் தருணத்தில், 'பூமியில் விழும் எனது பாகங்கள் வணக்கத்துக்கு உரியதாக வேண்டும்’ என பைரவரிடம் பிரார்த்தித்தான் அசுரன். பைரவரும் அவனை மன்னித்து, வீரனார் எனும் பெயருடன் இப்பகுதி மக்க ளின் குலதெய்வமாகத் திகழ அருள் புரிந்தார். அப்படி, சலந்திரனின் தலைப்பகுதி விழுந்த இடம் சனீஸ்வர வாசல். கழுத்து முதலான உடல் பகுதி தென்பாதி கிராமத்திலும், பாதப் பகுதி நாகூர் அருகிலுள்ள தெத்தி வடகுடியிலும் விழுந்தனவாம். இந்தப் பகுதிகளில் குல தெய்வ மாக வணங்கப்படுகிறான் சலந்திரன்.

அதையடுத்து, சனீஸ்வர வாசலாகிய காரை யூர் தலத்தில், விருத்தகங்காவில் நீராடி, சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவதுடன், இத்தலத்தில் அருளும் சங்க ரநாராயணரையும் நாராயணி அம்பாளையும் தரிசித்து வணங் கினால் விமோசனம் கிடைக்கும் என்று மந்திரைக்கும் சுதாங்கனுக்கும் அருள்பாலித்தார் பைரவர். அதன்படி, அவர்கள் இருவரும் இந்தத் தலத்துக்கு வந்து இறைவழிபாடு செய்து நலம் பெற்றனர்.

அவர்களுக்குத் திருவருள் புரிந்ததோடு, தானும் இந்தத் தலத்தில் எழுந்தருளிய பைரவ மூர்த்தி, சனீஸ்வரரின் சந்நிதிக்கு அருகில் மேற்கு முகமாகத் தனிச்சந்நிதி கொண்டிருக் கிறார். இவர், உலக வாழ்க்கையில் மனிதர்களின் நிலை பற்றி உபதேசிப்பதாக ஐதீகம்.

வாரணாசியில் கங்கை பாய்வது போன்று இங்கே விருத்தகங்காவும் வடக்கு தெற்காகப் பாய்கிறது. 'விருத்தகங்கா என்று இதன் பெயரை மும்முறை சொன்னாலே போதும்; நம் பாவங்கள் பொசுங்கி, வாழ்க்கை விருத்தி அடையும்’ என்கின்றன ஞான நூல்கள்.

தேய்பிறை அஷ்டமியில்...

வாரணாசியில் கங்கைக்கரையில் பைரவரும் சிவனாரும் அம்பிகையும் அருள்வதுபோல், இங்கேயும் ஸ்வாமி அம்பாள் ஆகியோருடன் யோக பைரவரும் அருள்பாலிப்பதால், காசிப் புண்ணியம் இங்கும் கிடைக்கும் என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

இவருக்குத் தேய்பிறை அஷ்டமி மற்றும் பௌர்ணமி தினங்களில் பைரவ ஹோமம் நடைபெறும். அப்போது, செவ்வரளி மலரால் இவருக்கு அர்ச்சனை செய்து, புனுகு சாற்றி வழிபட்டால், வறுமை நீங்கும்; பொருளாதார நிலை உயரும் என்பது நம்பிக்கை.

மேலும், இந்த ஆலயத்தில் வலம்புரி கணபதி, குரு, லக்ஷ்மி நாராயணர், முருகப் பெருமான், சண்டிகேசர், நந்திதேவர் ஆகி யோரையும் தரிசிக்கலாம்.

மாங்கல்ய தோஷம் விலகும்!

சனிக்கிழமை அல்லது ஜென்ம நட்சத்திர திருநாளில் காலையில் இந்த திருத்தலத்துக்கு வந்து, நல்லெண்ணெய் தேய்த்து 'விருத்தகங்கா’ நதியில் நீராடி, நீல வண்ண கரை இடப்பட்ட வஸ்திரத்தை வேதம் அறிந்தவருக்கு தானம் செய்வதுடன், நீல மலரால் சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து, எள் அன்னம் படைத்து, சனி கவசம் மற்றும் ஷோடச நாம துதி படித்து வழிபடுவதால், மாங்கல்ய தோஷங்கள் விலகும்.

ஆயுள் பலம் பெற...

பொதுவாக, மனிதர்களின் ஆயுள்காலத்தில் மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என மூன்று முறை சனிபகவான் வந்து செல்வார். அவர் அமர்கின்ற இடத்தின்படி ஆயுள் நீட்டிப்பைத் தருவார் என ஞானநூல்கள் தெரிவிக் கின்றன. ஒருவேளை, சனியின் பாதிப்பால் ஆயுள் பலத்தில் பங்கம் இருந்தால், இந்தத் தலத் துக்கு வந்து, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து, எள் முடிப்பு தீபம் ஏற்றி, சனிக் கவசமும், ஷோடச நாமாவளியும் படித்து வணங்குதல் வேண்டும். இதனால் ஆயுள் பலம் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

அதே போன்று, இங்கே எள் தீபம் ஏற்றிவைத்து சனீஸ்வரரை வழிபடுவதுடன் சங்கர நாராய ணரையும், நாராயணி அம்பா ளையும், பைரவரையும் மனம் உருகப் பிரார்த்தித்துச் சென்றால் தொழில் யோகம் ஸித்திக்கும்; வியாபாரத்தில் இருந்துவந்த தடை களும், பெரு நஷ்டங்களும் விலகி, லாபம் பெருகும் என்பது நம்பிக்கை.

நமது வாழ்வு சிறக்கவும், குடும்பமும் சந்ததியும் செழிக்கவும் முன்னோரின் ஆசியும் அருளும் அத்தியாவசியம். அவர்களின் அருளைப் பெறுவதற்கு ஆடி, தை மற்றும் மஹாளய அமாவாசை புண்ணிய தினங்கள் மிக உகந்தவை. இநந்த் தினங்களில் தீர்த்தக் கரை களில் தர்ப்பணம் அளித்து, முன் னோரை வழிபடுவதால், அவர்களின் அனுக்கிரகத்தை பரிபூரணமாகப் பெறலாம்.

இந்தத் திருத்தலத்துக்கு வந்து விருத்த கங்காவில் நீராடி முன்னோரை வழிபடுவதுடன், ஆலய தெய்வங் களையும் தரிசித்து வரம்பெற்றுச் செல்லலாம்.

உங்கள் கவனத்துக்கு...

திருவாரூர், திருவிற்குடி, திருப்பள்ளி முக்கூடல், திருக்கொள்ளிக்காடு, திருச்செங்காட்டாங்குடி ஆகிய புகழ்பெற்ற தலங்களுக்கு நடுவே அமைந்துள்ளது காரையூர் எனப்படும் சனீஸ்வர வாசல் திருத்தலம்.

திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ.தொலைவு பயணித்தால், காரையூர் பஸ் நிறுத்தம் வரும். அருகிலேயே இந்த ஆலயத்தைத் தரிசிக்கலாம்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், விசேஷ பூஜை களும் வழிபாடுகளும் நடந்து வந்த சனீஸ்வர வாசல் திருக்கோயில் கோபுரங்கள், தற்போது சற்று சிதிலம் அடைந்துள்ளன. கோடை காலத்தில் இத்தலத்தைத் தரிசிக்க வருவோர், விருத்தகங்கா நடுவே யுள்ள ஊற்றில்தான் நீராட வேண்டும். இந்தக் கோயிலுக்குச் செல்லும் அன்பர்கள் பூஜைப் பொருட்களை திருவாரூர், கங்களாஞ்சேரி ஆகிய ஊர்களில் வாங்கிச்செல்வது சிறப்பு.

குச்சனூர் சனிஸ்வரன்

நவகிரகங்களில் மிகமுக்கியமானவர் சனீஸ்வர பகவான். ஈஸ்வர பட்டம் பெற்ற குச்சனூர் சனீஸ்வரன் சிறப்பை உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். வடநாட்டில் மணி என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு கலிங்க நாட்டை ஆட்சிசெய்து வந்தார் தினகரன் என்ற மன்னர். நல்லாட்சி செய்து வந்தபோதும் அவருக்கு ஒரே ஒரு குறை இருந்தது. திருமணமாகி நீண்ட காலம் ஆகியும் புத்திரப்பாக்கியம் இல்லாததுதான் அது. ஒருநாள் அரசர் தினகரனுக்கு கடவுளின் சித்தத்தால் அசரீரி ஒன்று கேட்டது. அதில் 'உன் வீட்டுக்கு ஒரு சிறுவன் வருவான். நீ அவனை தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அதனால் உன் குறை தீரும்' என்று கூறியது. அரசரான தினகரனும் அவருடைய மனைவி வெந்துருவையும் மகிழ்ந்து, அசரீரி சொன்னபடி சந்திரவதனன் என்ற ஆண்மகனைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

சில மாதங்களுக்குப் பிறகு அரசர் தினகரனின் மனைவி வெந்துருவை கர்ப்பமாகி அழகான ஆண்மகன் பிறந்தான். அவன் பெயர் சுதாகன். சுதாகனும் அவருடைய அண்ணனான சந்திரவதனனும் வளர்ந்து வந்த நிலையில் சுதாகனைக் காட்டிலும் வளர்ப்பு மகனான சந்திரவதனன் திறமையாலும், ஆற்றலாலும் சிறந்து விளங்கினான். அதை அறிந்த தந்தை தினகரன் வளர்ப்பு மகனான சந்திரவதனனுக்கு முடிசூட்டி மகிழ்ந்தார்.

சில தினங்களில் தந்தை தினகரனுக்கு விதிப்படி 7 ½ சனி பிடித்து உடல்நிலை மோசமானது. இந்நிலையைக் கண்ட வளர்ப்பு மகன் சந்திரவதனன் ஜோதிடரிடம் சென்று பரிகாரம் கேட்டான். அதற்கு ஜோதிடர், 'சனிபகவானை தரிசித்து வா, உன் தந்தையின் நோய் குணமாகும்' என்று கூறினார். உடனே சந்திரவதனன் தென்னாட்டில் அழகிய பகுதியான மதுரையம்பதிக்கு அருகில் சுரபி நதிக் கரைக்குச் சென்று சனி பகவானின் உருவத்தைக் கற்பனை செய்து, இரும்பால் சனீஸ்வரனின் உருவத்தைச் செய்தான். உருவாக்கிய சனி பகவானைப் பார்த்து 'கடவுளே என் தந்தையின் அனைத்து துயரங்களையும் போக்கி அத்துன்பங்கள் யாவற்றையும் எனக்கு கொடுங்கள்... அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என்று வணங்கினான். அவன் குரலில் நெகிழ்ந்த சனி பகவான் அவன் முன் காட்சியளித்தார். 'நான் உன் தந்தைக்கு கொடுத்த துயரங்கள் யாவும் அவர் முற்பிறவியில் செய்த பாவங்களுக்காக மட்டுமே. இப்போது உன் வேண்டுதலை ஏற்று, தந்தையின் துன்பங்கள் யாவற்றையும் போக்கி அந்தத் துன்பங்களை உனக்குத் தருகிறேன். உன் நல்ல மனதை எண்ணி நீ வெறும் 7 ½ நாழிகை மட்டுமே துன்பத்தை ஏற்றால் போதும். இதுகூட நீ முற்பிறவியில் செய்த பாவத்துக்காகக் கொடுக்கப்பட்டது தான்' என சனிபகவான் கூறினார். அதன்படியே சந்திரவதனன் சனி பகவானின் அருளைப்பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தான்.

சந்திரவதனன் சுரபி நதிக்கரையில் தோற்றுவித்த சனி பகவான் திருவுருவமே குச்சனூர் ஆலய மூலவராக மாறியது. அது இன்றும் வணங்கப்பட்டு வருகிறது. செண்பகநல்லூர் என்று இருந்த ஊரே, சந்திரவதனன் சுயம்பு வடிவ சனீஸ்வரப் பகவானுக்கு குச்சுப்புல்லினால் கோவில் கட்டியதால் குச்சனூர் என்றானது. 2000 வருடங்களுக்கு முன் தோன்றிய கோயில் என்றாலும் இது சுயம்புவாக தோன்றிய காரணத்தினால் இன்று வரை கும்பாபிஷேகம் நடக்கவில்லை.

இந்த ஆலயம் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது. பெரியாறும், சுருளியாறும் இணைந்து உருவானது தான் சுரபி ஆறு. இக்கோயிலில் அரூப வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்துகொண்டே வருவதால் இதைக் கட்டுப்படுத்த மஞ்சள்காப்பு கட்டப்பட்டுள்ளது. குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபட நினைப்பவர்கள் தினமும் காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலை 4 முதல் 8 மணி வரையிலும் இந்த ஆலயம் சென்று வழிபடலாம். சனிக்கிழமைகளில் சிறப்புப்பூஜைகள் நடைபெறும். 2 ½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும். இக்கோயிலில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை கருங்குவளையாலும், வன்னி இலையாலும் அர்ச்சிக்கலாம். அவரின் வாகனமாக உள்ள காகத்தை வணங்கி உணவிட்டு வழிபட வேண்டும். எள் தீபமிட்டு, கறுப்பு வஸ்திரம் சாத்தி, எள்ளு சாதம் பிரசாதம் வைத்து சனி பகவானின் ஆசிர்வாதத்தை பெறலாம்..!

மற்ற ராசிகளுக்கான சனிபெயர்ச்சி பலன்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...