துலாம் - Sani Peyarchi 2020 - 2023 Tamil

2020-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

நடுநிலைமை தவறாதவர்களே!

நியாயத்துக்கு குரல்கொடுத்து அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் துலாம் ராசி அன்பர்களுக்கு இதுவரை ராசிக்கு 3 - ம் வீட்டில் அமர்ந்து நற்பலன்களையும் மதிப்பு, மரியாதையும் தந்து கொண்டிருந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை சுக வீடான 4 - ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருக்கத் தான் செய்யும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தை பெறுவீர்கள். ஏனென்றால் சனிபகவான் ஆட்சிப் பெற்று அமர்கிறார். குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கும். சொந்த ஊரை விட்டு இடம் பெயர்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் சின்னச் சின்ன வேலைகளைக் கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கிக் கொள்வீர்கள். எந்த விஷயத்திலும் கூட்டு வேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாகி முடியும். அதிக வட்டிக்குக் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. எந்த சொத்து வாங்கினாலும் தாய் பத்திரத்தை சரி பார்ப்பது நல்லது.

அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். புது வண்டியாக இருந்தாலும் கூட அடிக்கடிப் பழுதாகும். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. விலை உயர்ந்தப் பொருள்கள், தங்க ஆபரணங்களை இரவல் தரவும் வேண்டாம், பெறவும் வேண்டாம். குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் சந்தேகத்தால் அவ்வப்போது சண்டை சச்சரவுகள் வரத்தான் செய்யும். பெரிது படுத்திக் கொள்ளாதீர்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். அரசின் அனுமதிப் பெறாமல் கூடுதல் தளங்கள் அமைத்து வீடு கட்ட வேண்டாம். கழிவுநீர் பிரச்சனை, மின்சார சாதனங்கள் பழுதடைதல், வேலையாள்கள் பிரச்சனையும் வந்துபோகும். எதிர்வீடு, பக்கத்து வீட்டுக்காரருடன் எந்த வம்பும் வேண்டாம். வழக்கில் தீர்ப்பு தாமதமாகும்.

நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைத்து அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பிள்ளைகள் கொஞ்சம் செலவு வைப்பார்கள். அவர்களின் நடவடிக்கையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வறுத்த, பொரித்த உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். புளி ஏப்பம், அல்சர் வரக்கூடும். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். 29.3.2023 முதல் 24.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 5 - ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் பிள்ளைகளால் செலவு, மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். பூர்விகச் சொத்தில் திடீர் சிக்கல்கள் வந்து போகும். கர்ப்பிணிகள் தங்கள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி பல சோதனைகளின் மூலம் உங்களின் உள்ளே இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வந்து சாதிக்கச் செய்யும் பெயர்ச்சியாக அமையும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் இருக்கும் இடத்தைவைத்துப் பலன் தருவதுபோல அவர் பார்க்கும் இடங்களை அடிப்படையாகக் கொண்டும் பலன்கள் வழங்குவார். பொதுவாக சனிபகவான் இருக்கும் இடத்திலிருந்து 3,7,10 ஆகிய வீடுகளைப் பார்ப்பார். அந்த வகையில் 10 ம் பார்வையாக உங்கள் ராசியையே சனிபகவான் பார்க்கிறார். சனி பகவான் உச்சம் அடையும் வீடு துலாம் என்பதால் அவர் பார்வையினால் பெரிய கெடுதல்கள் வராது என்றாலும் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படலாம்.

சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். கண்ணிற்கு கீழ் மற்றும் கழுத்துப் பகுதியில் கருவளையம் வரக்கூடும். அவ்வப்போது கோபப்படுவீர்கள். வெளியிடங்களில் தண்ணீர் அருந்துவதைத் தவிருங்கள்.

சனிபகவான் உங்களின் 6 -ம் வீட்டை பார்ப்பது மிகவும் நல்ல அம்சமாகும். பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

சனிபகவான் 10 - ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேலை மாறுவீர்கள். புது பொறுப்புகளும் உங்களை நம்பி தரப்படும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சியில் பகவானின் பார்வை உங்களுக்கு சாதகமாகவே அமைகிறது.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் மருத்துவச் செலவுகள், கருத்துமோதல்கள் வரும். பாகப் பிரிவினையால் சில பிரச்சனைகள் வந்து நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வாகனத்தில் நிதானம் தேவை. சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் கெடுபலன்கள் குறைந்து நன்மை பிறக்கும்.

28.12.2021 முதல் 26.01.2023 வரை

உங்களின் ஜீவனாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். சொந்த ஊர் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் அலுவலகத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள், வீண்பழி, உறவினர்களின் இழப்பு வரக்கூடும்.

27.01.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் தன - சப்தமாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் மனைவி வழியில் ஆதாயம் உண்டு. சொத்துச் சேர்க்கையுண்டு. கருத்து வேறுபாடுடன் இருந்த சகோதரர் இனி வலிய வந்து பேசுவார். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் மனைவியுடன் மனஸ்தாபங்கள், மோதல்கள் அதிகரிக்கும். செலவினங்கள், சிறுசிறு நெருப்புக் காயங்கள், வாகனப் பழுது வந்து நீங்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சியில் சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரத்தின் பெரும்பான்மை உங்களுக்கு நல்ல பலன்களையே தருவனவாக அமையும்.

துலாம் ராசிப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்பு பலன்கள்

எதிலும் புதுமையை விரும்பும் துலாராசிப் பெண்களே... இதுவரை உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டில் அமர்ந்து, தைரியத்தையும், விடாமுயற்சியையும் தந்த சனிபகவான் இப்போது சுகவீடான 4 - ம் வீட்டில் 27.12.2020 முதல் 19.12.2023 வரை வந்தமர்வதால் அர்த்தாஷ்டமச் சனியாச்சே என்றெல்லாம் பயப்படாதீர்கள். சனிபகவான் ஆட்சிப் பெற்று அமரப் போகிறார். அவர் 4 - வீட்டுக்கு வந்தாலும் ஓரளவு நல்லதையே செய்வார். கெடுபலன்கள் குறையும். முடங்கிக் கிடந்த பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் தாயாருடனும், தாய்வழி உறவிர்களுடனும் மனஸ்தாபங்கள் வந்து போகும். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பிள்ளைகளின் போக்கைக் கண்காணியுங்கள். உங்களின் நடத்தை குணங்கள் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாமியார், மாமனாரிடம் அனுசரித்துச் செல்லுங்கள். சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 6 - ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனிபகவான் 10 - ம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். வேறு வேலை மாறுவீர்கள். குடும்பத்திலும் வேலைச்சுமை கூடும்.

வியாபாரம் செய்யும் பெண்கள் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி அனுபவமில்லாத துறையில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாள்கள், பங்குதாரர்களிடம் கோபப்படுவதை விட விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. புது கிளைகள் தொடங்குவதைப் பற்றி கணவருடனும் ஆலோசனை கேட்டு யோசித்து முடிவெடுங்கள்.

உத்தியோகம் பார்க்கும் பெண்களின் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுவார்கள். அநாவசியமாக விடுப்புகள் எடுக்க வேண்டாம். சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். மூத்த அதிகாரிகளைப் பற்றி விமர்சனம் வேண்டாம். இடமாற்றம் உண்டு. கலைத்துறைப் பெண்கள் பற்றிய விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் வந்து கொண்டே தான் இருக்கும் அதைப் பெரிதாக்க வேண்டாம். இதனால் உங்கள் வளர்ச்சி தடைபடாது. மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி நல்லது கெட்டது என அனைத்தையும் கற்றுத்தரும் பாடசாலையாக அமையும்.

துலாம் ராசி வியாபாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

வியாபாரிகளே....

இதுவரை துலாம் ராசிக்கு மூன்றில் இருந்து நல்ல பலன்களை வழங்கிவந்த சனிபகவான் தற்போது 4 ல் சென்று அர்த்திராஷ்டம சனியாக அமர்கிறார். ஆனால் பயப்படும்படியான எந்த வீழ்ச்சியும் நடக்காது. கொஞ்சம் கறாராக இருங்கள். யாராக இருந்தாலும் கையில் காசு வாயில தோசை என்று சொல்லிவிடுங்கள். போட்டிகள் அதிகரிக்கத்தான் செய்யும். வாடிக்கையாளர்களைக் கனிவாக நடத்துங்கள். கடையைக் கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். அயல்நாட்டுத்தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் விபரீத லாபம் உண்டாகும். பங்குதாரர்களிடையே அவ்வப்போது வாக்குவாதங்களும், கருத்து மோதல்களும் வந்தாலும், கடைசியில் உங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வார்கள். வேலையாள்களை முழுமையாக நம்பிப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள்.

இந்த சனிப்பெயர்ச்சிக் காலகட்டத்தில் பேராசையில்லாமல் எச்சரிக்கையோடு உழைத்தால் சனிபகவானின் அருளோடு தொழிலை நல்ல முறையில் நடத்தி லாபம் ஈட்டலாம்.

உத்தியோகஸ்தர்களே...

சனிபகவான் உச்சமடையும் வீடு துலாம். எனவே ஒருபோது சனிபகவான் உங்களுக்குப் பெரும் தீமைகள் செய்ய மாட்டார். என்றாலும் இந்த முறை சனியின் பார்வை உங்கள் ராசியின் மீதே விழுகிறது. அதனால் பணிகளை முடிப்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். மேலதிகாரிகள் உங்களைக் குறைகூறினாலும் அமைதியாக ஏற்றுக் கொள்ளுவது நல்லது. முக்கிய பதிவேடுகளை கவனமாகக் கையாளுங்கள். அலுவல ரகசியங்களை வெளியிட வேண்டாம். சக ஊழியர்களுடன் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். உங்களை வழக்கில் சிக்க வைக்க சிலர் முயல்வார்கள். சம்பள பாக்கியைப் போராடிப் பெறுவீர்கள். ஏமாற்றங்களும், மறைமுக அவமானங்களும் அவ்வப்போது வந்து செல்லும். கடின உழைப்பால் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். கணினித் துறையினர் கண்பார்வையைக் கோளாறு,தசை பிடிப்பு ஆகியன நீங்கும். புதிய சலுகைகள் கிடைக்கும். இந்த சனி மாற்றம் வேலைச்சுமையையும், செலவுகளையும் அவ்வப்போது தந்து அலைக்கழித்தாலும் தொலை நோக்குச் சிந்தனையால் துவளாமல் வெற்றி பெற வைக்கும் காலமாக அமையும்.

பரிகாரம்

பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீவிருத்தாம்பிகை உடனுறை ஸ்ரீவிருத்தகிரீஸ்வரரை, பிரதோஷ நாளில் சென்று வணங்கி வாருங்கள்; தொட்டதெல்லாம் துலங்கும்.