விருச்சிகம் - Sani Peyarchi 2020 - 2023 Tamil

2020-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்களே!

எப்பொழுதும் அடுத்தவர்களை வாழ வைத்து அவர்களை சந்தோஷப்படுத்தி அதில் அழகு பார்க்கும் விருச்சிக ராசி அன்பர்களே... ஏறக்குறைய எட்டு ஆண்டுகளாக உங்களை சனிபகவான் ஆட்டிப்படைத்தார். அதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக 2 - ம் வீட்டில் அமர்ந்து பேச்சால் பல பிரச்னைகளில் சிக்க வைத்து உங்களைக் கேலிக்குள்ளாக்கி, கேள்விக்குறியாக்கிய சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்களை விட்டு விலகி 3 - ம் வீட்டில் அமர்வதால் தொட்டதெல்லாம் துலங்கும்.

கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். எதையும் முதல் முயற்சியிலேயே முடித்துக் காட்டுவீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். எப்போது பார்த்தாலும் நோய், மருந்து, மாத்திரை, எக்ஸ்ரே, ஸ்கேன் என்று அலைந்துக் கொண்டிருந்த நீங்கள், இனி ஆரோக்கியம் அடைவீர்கள். நடைபயிற்சி, யோகா, தியானம் என்று மனதை பக்குவப்படுத்திக் கொள்வீர்கள். குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் கூச்சல், குழப்பம் என்று நிம்மதியில்லாமல் தத்தளித்தீர்களே, இனி ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்தான்.

அழகிய வாரிசு உருவாகும். நல்ல வரன் அமையவில்லையே என்று வளர்ந்து நிற்கும் உங்கள் பெண்ணை பார்த்து நீங்கள் பட்ட வருத்தங்கள் நீங்கும். எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமைவார். சொந்தம் பந்தங்கள் வியக்கும்படித் திருமணத்தை முடிப்பீர்கள். அடிக்கடி இனி வீடு மாற்றத் தேவையில்லை. கையில், கழுத்தில் இருந்ததைப் போட்டு, கடனை உடனை வாங்கி சொந்த வீட்டில் குடி புகுவீர்கள். பலரின் உள்மனசில் என்ன நினைக்கிறார்கள் என்று புரிந்துக் கொள்ளாமல் வெளிப்படையாக, வெகுளியாக பேசி சிக்கிக் கொண்டீர்களே... இனி எதிலும் கறாராக இருப்பீர்கள். யாரோ செய்த தவறால் நீங்கள் தலைமறைவானீர்களே, வழக்கில் இனி வெற்றிதான். கடனை நினைத்தும் நடுங்கினீர்களே, கல்யாணம் கிரகபிரவேசத்தில் எல்லாம் உங்களை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்தார்களே, இனி எல்லோரும் ஆச்சர்யப்படும்படி சாதிப்பீர்கள்.

29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 04ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் வேலைச்சுமை, வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் வரக்கூடும். தாயாரின் உடல் நலனின் அக்கறை தேவை. திடீரென பணப்பற்றாக்குறை வந்து நீங்கும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் உங்கள் ராசிக்கு 3 ம் இடத்தில் அமர்ந்து, 5, 9,12 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார். சனிபகவானின் பார்வைக்கேற்ப பலன்கள் ஏற்படும். சனிபகவான் உங்களின் 5 - ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்விகச் சொத்தை சீரமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காகச் செலவு செய்வீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்து கொண்டு உங்களை டென்ஷன் படுத்துவார்கள்.

சனிபகவான் உங்களின் 9 - ம் வீட்டைப் பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். தந்தையாருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும். சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும்.

சனிபகவான் உங்களின் 12 - ம் வீட்டை பார்ப்பதால் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

27.12.2020 முதல் 27.12.2021 வரை

விருச்சிக ராசிக்கு தசமஸ்தானாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் எதிலும் வெற்றியுண்டு. சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. நல்ல தீர்ப்பு கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அதிகம் உழைக்க வேண்டி வரும். டென்ஷன், மன உளைச்சல், மறைமுக பகைகள் அதிகரிக்கும்.

28.12.2021 முதல் 26.01.2023 வரை

உங்களின் பாக்யாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டு. பொன் பொருள் சேரும். பிதுர் வழி சொத்துகள் வந்து சேரும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் தந்தையுடன் கருத்துமோதல்கள் வெடிக்கும். வீண்செலவுகள், காரியத்தடைகள் வந்து நீங்கும்.

27.01.2023 முதல் 19.12.2023 வரை

உங்கள் ராசிநாதான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.1.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் அழகு அறிவு கூடும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை உள்ள காலத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் திடீர் பயணங்கள், வீண் டென்ஷன், பாகப் பிரிவினையால் பிரச்னைகள் வந்துச் செல்லும். சகோதரகளுடன் மனத்தாங்கல் வரும்.

விருச்சிக ராசிப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

விருச்சிக ராசியைப் பொறுத்த அளவில் இதுவரை பாத சனியாக அமர்ந்து உங்களை நாலாவிதங்களிலும் பாடாய்படுத்திய சனி பகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை ராஜயோகம் தரும் வீடான 3 - ம் வீட்டில் அமர்ந்து, திடீர் யோகங்களை வாரி வழங்க இருக்கிறார்.

இதுவரை எதைத் தொட்டாலும் இழு பறியாக இருந்தது. பல வேலைகள் பாதியிலேயே நின்று போன நிலை. கண்ணில் சோகம், முகத்திலே சுருக்கம், பேச்சிலே சலிப்பு என முதுமையாக இருந்த நீங்கள், இனி இளமையுடன் வலம் வருவீர்கள். ஏமாற்றங்களிலிருந்தும், இழப்புகளிலிருந்தும் கொஞ்சம், கொஞ்சமாக விடுபடுவீர்கள். காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கும்வரை தினந்தோறும் குடும்பத்தில் சண்டைகள் தொடர்ந்து கொண்டே தானே இருந்தன. கணவருடன் ஒருவேளைகூட நிம்மதியாகப் பேசி சிரிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிப் பலநேரங்களில் மௌன யுத்தமெல்லாம் நடத்தினீர்கள். அந்த அவல நிலை இனி மாறும்.

கணவருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். தாம்பத்யம் இனிக்கும். குடும்பத்தில் கலகம் ஏற்படுத்தியவர்களை ஓரங்கட்டுவீர்கள். சொத்தை விற்றும் பணம் வராமல் தடைப்பட்டதே... இனி முழுப்பணமும் வரும். வருங்காலத்திற்காக சேமிப்பீர்கள். உங்களின் நீண்ட காலக் கனவான வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். புது வீட்டில் குடி புகுவீர்கள். பிள்ளைகளின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

சனிபகவான் உங்களின் 5 -ம் வீட்டைப் பார்ப்பதால் பூர்விகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிள்ளைகளின் உயர்படிப்பு, திருமணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள். சனிபகவான் உங்களின் 9 - ம் வீட்டை பார்ப்பதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். சனிபகவான் உங்களின் 12 - ம் வீட்டைப் பார்ப்பதால் மகான்கள், சித்தர்களின் ஆசி கிடைக்கும்.

வியாபாரம் செய்யும் பெண்களுக்கு இனிப் புது முதலீடுகள் செய்யப் பணம் வரும். உங்களுக்கு உறுதுணையாகக் கணவர் இருப்பார். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். பழைய வேலையாள்களை நீக்கி விட்டுப் புதியவர்களைப் பணியில் அமர்ந்துவீர்கள். முரண்டுபிடித்த பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசால் இருந்த கெடுபிடிகள் விலகும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு... எந்த வேலைச் செய்தாலும் அதில் ஒரு குற்றம் குறையை கண்டுப்பிடித்து அலைக்கழித்த உயரதிகாரி, இனி பாராட்டுவார். சக ஊழியர்களும் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வெகுநாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவியுயர்வு, சம்பள உயர்வெல்லாம் இப்பொழுது உங்கள் இருக்கை தேடி வரும். கலைத்துறைப் பெண்களின் படைப்புகளுக்கு விருது கிடைக்கும். நழுவிப் போன வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது.

இந்த சனிப்பெயர்ச்சி திக்குத் திசையறியாது திணரிக்கொண்டிருந்த உங்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அமையும்.

விருச்சிக ராசி வியாபாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

வியாபாரிகளே...

இதுவரை 2 ம் இடத்தில் அமர்ந்து உங்களின் தொழிலில் முட்டுக்கட்டை போட்டுவந்த சனிபகவான் இப்போது மூன்றாம் இடம் சென்று அமர்கிறார். இதுவரை, நமக்குப் பின்னால் வந்து முதல் போட்டு எதிர்கடையில் உள்ளவர்கள் ஏகப்பட்ட லாபம் பார்த்துவிட்டார்கள். பல வருடம் இங்கேயே இருந்தும் லாபத்தைப் பார்க்க முடியவில்லையே... என்று புலம்பித் தவிர்த்தீர்கள். அந்த நிலை மாறப்போகிறது.

இனி கடையை நவீன மயமாக்குவீர்கள். பொறுப்பில்லாத வேலையாள்களை மாற்றுவீர்கள். அனுபமிகுந்த புது வேலையாள்கள் அமைவார்கள். விளம்பர யுக்திகளைச் சரியாக கையாண்டு பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். திடீர் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அயல்நாட்டுத் தொடர்புடனும் வியாபாரம் செய்வீர்கள். சினிமா, பதிப்புத்துறை, ஹோட்டல், கிரானைட், டைல்ஸ், மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. அரசாங்கக் கெடுபிடிகள் குறையும். ஏற்றமும் மாற்றமும் நிறைந்த காலகட்டமாக இந்தக் காலகட்டம் அமையும்.

உத்தியோகஸ்தர்களே...

பாத சனியாக அமர்ந்து வேலைபார்க்கும் இடத்தில் அமைதி இன்மையையும் அவமரியாதையையும் ஏற்படுத்தி வந்த சனிபகவான் தற்போது 3 - ம் இடத்தில் அமர்கிறார். இதனால் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு இருந்த பிரச்னைகள் தீரும். பிரச்னை தந்த மேலதிகாரி மாற்றப்படுவார். தடைப்பட்ட பதவி உயர்வு உடனே கிடைக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புது வேலை அமையும். வழக்கு சாதகமாகும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். எதிர்ப்புகள் நீங்கும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகமானாலும் அதற்குத் தகுந்த சம்பள உயர்வும் உண்டு. இந்த சனி மாற்றம் எல்லாவற்றையும் இழந்து தவித்துகொண்டிருந்த உங்களை ஆடம்பரமான வாழ்க்கைக்கு அழைத்துச் சென்று வாழ வைக்கும்.

பரிகாரம்:

சீர்காழி-தரங்கம்பாடி பாதையில் உள்ளது திருக்கடையூர். இங்கு கோயில் கொண்டிருக் கும் அருள்மிகு அமிர்தகடேஸ்வரரை வழிபடுவதுடன், அருகிலேயே ஈசனின் அருள் பெற்று திகழும் யமதர்மனையும் வணங்கி வாருங்கள்; முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.