SANI PEYARCHI 2020 - 2023 IN TAMIL - சிம்மம்

1ஜூலை2019

தன்னம்பிக்கையும் இரக்கமும் கொண்டவர்களே!

மனதை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொண்டு மற்றவர்களை நேர்மறை எண்ணங்களுடன் பார்க்க கூடிய சிம்மராசிக்காரர்களுக்கு இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எந்த வேலையையும் செய்யவிடாமல் பலவேறு தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுத்து வந்த சனிபகவான் தற்போது 6-ம் வீட்டுக்கு இடம்பெயர்கிறார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல், சாதகமாக முடியவேண்டிய சில வேலைகள்கூடப் போராடி முடிக்கவேண்டியதாக இருந்த சூழ்நிலை மாறும். கடன் பிரச்னையால் உங்களை வாட்டியெடுத்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் 6-ம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகத்தை அள்ளித்தருவார்.

எப்போது பார்த்தாலும் ஒருவித மனஇறுக்கத்துடனும், கோபத்துடன் காணப்பட்டவர்கள், இனி அவற்றிலிருந்து எல்லாம் விடுபடுவார்கள். புதிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம், தயக்கம் இருந்து வந்த நிலை மாறும். இனி உங்களின் வாழ்கை பாதையை சீராக அமைத்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் அமையும். இனி பக்குவமாகப் பேசிப் பல காரியங்களையும் கச்சிதமாக முடிப்பீர்கள். எதையோ இழந்ததைப் போல் உள்ள உங்கள் முகம் இனி தெளிவடையும். இனி முழுத்தூக்கம் வரும். குழந்தைபாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தம்பதிக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். நெடுநாள்களாகத் தடைபட்டுவந்த குலதெய்வப் பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். கூடாப் பழக்க வழக்கங்களால், கெட்ட நண்பர்களால் பாதை மாறிச் சென்ற பிள்ளைகள் இனி உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள்.

மகளின் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். உங்களை உதாசீனப்படுத்திய சொந்த பந்தங்கள், நண்பர்கள் இனித் தேடி வந்து உறவாடுவார்கள். பல காலங்கள் இருந்த வீட்டிலிருந்து புது வீடு மாறுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடுக் கட்டி குடிப்புகுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்திற்காக சேமிப்பீர்கள். மகனுக்கு எங்கெல்லாமோ பெண் தேடி அழைந்தீர்களே, இனி உங்கள் அருகிலேயே உங்களுக்குத் தெரிந்த சம்பந்தமே அமையும். பிள்ளைகளை அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் புகழ் பெற்ற நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். இனி நாலுகாசு கையில் தங்கும். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வீடு கட்ட, வாங்க, தொழில் தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். இனி ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். பூர்விகச் சொத்து கைக்கு வரும். பங்காளிப் பிரச்னைகள் ஓயும். வழக்கு சாதகமாகும். நாடாளுபவர்கள் அறிமுகமாவார்கள். 29.3.2023 முதல் 24.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 7 - ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் எதிலும் தடுமாற்றமும், வீண் செலவுகளும் வந்துபோகும். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்யுங்கள். நடைப்பயிற்சியும் இருக்கட்டும்.

மேஷம்

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் வரும் 27.12.2020 அன்று அதிகாலை தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனால் அதிக பலன்பெறும் ராசிகளில் சிம்ம ராசியும் ஒன்று. சிம்ம ராசிக்கு இதுவரை 5 ம் வீட்டில் இருந்த சனிபகவான் 6 ம் வீட்டுக்குச் சென்று மறைகிறார்.மேலும் அங்கு அமர்ந்து உங்களின் ராசிக்கு 3, 8, 12 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார்.

3 - ம் வீட்டை சனிபகவான் பார்ப்பதால் தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். ஆனால் கூடாப் பழக்கம் உள்ளவர்களைத் தவிர்க்கப்பாருங்கள். குடலுக்கும், உடலுக்கும் கேடு விளைவிக்கும் உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

சனிபகவான் 8 - ம் வீட்டை பார்ப்பதால் வாகனங்களை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். அந்தரங்க விஷயங்களை அடிமனதில் தேக்குவது நல்லது. ஆனால் மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

சனிபகவான் 12 - ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும்.