வார ராசிபலன்
இந்த வார ராசிபலன்: மார்ச் 1 முதல் 7 வரை... மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி.
மேஷம்
மேஷராசி அன்பர்களே!
வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. மற்றவர்களின் தலை யீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியா ளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். கணவரின் மூலம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதால் உற்சாகமாகவே இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நாள்கள்: 4, 7
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச்: 5, 6
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை பாராயணம் செய்யவும்.
அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
அஞ்சலென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே
ரிஷபராசி அன்பர்களே!
பணவரவுக்கு குறைவிருக்காது. ஆனால், அவ்வப்போது சிறுசிறு குழப்பங் கள் தோன்றுவதால் சற்று சோர்வாகக் காணப்படுவீர்கள். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்று வதில் சற்று தாமதம் ஏற்படும்.. சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளால் ஏற்பட்டு வந்த தேவையற்ற செலவுகள் குறையும். பழைய கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை..
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் நல்ல முறை யில் பணி செய்வார்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். செலவுகளும் அதிகரிப்பதால் சிறுசேமிப்பு கரையக்கூடும்..
அதிர்ஷ்ட நாள்கள்: 4, 5, 6
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச்: 7
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
பித்தா பிறை சூடி, பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள்
அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே
மிதுனராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். உணவு விஷயத் தில் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் சிலருக்கு பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்கு தாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.
குடும்பநிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கணவருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 3, 5, 6, 7
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே
கடகராசி அன்பர்களே!
எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அரசாங்க வகையில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காகக் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். வியாபார அபிவிருத்திக்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். பிறந்தவீட்டு உறவினர்கள் மூலம் ஆதாயம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நாள்கள்: 1, 2, 3, 5
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு, அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டினியே
சிம்மராசி அன்பர்களே!
குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். பொருளாதார வசதிக்கு குறைவிருக்காது. ஆனாலும், புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்வது நல்லது.
வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. சக வியா பாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். புகுந்தவீட்டு உறவினர் களுடனான உறவு சுமுகமாகவே காணப்படுகிறது.
அதிர்ஷ்ட நாள்கள்: 4, 5, 6
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே!
கன்னிராசி அன்பர்களே!
பணவரவுக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். தந்தையாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
வியாபாரத்தில் முதலீடுகள் விஷயத்தில் தக்கவர்களின் ஆலோசனை அவசியம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பங்குதாரர்களின் ஆதரவு ஆறுதல் தரும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிறந்தவீட்டு உறவினர்கள் மூலம் சுபச் செய்தி ஒன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் கிடைத்துவிடும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 5, 6, 7
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
துலாராசி அன்பர்களே!
நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணவரவு அதிகரிக்கும் என்றாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கூடுமானவரை அவருடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூல மாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். இளைய சகோதரிகள் கேட்கும் பண உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நாள்கள்: 1, 2, 3
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9
வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்
விருச்சிகராசி அன்பர்களே!
அதிர்ஷ்டம் தரும் வாரம். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க் கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு சில நிபந்தனைகளுடன் சிறிய பயணம் மேற்கொள்ளவும் அதன் மூலம் ஆதாயம் பெறவும் வாய்ப்பு உள்ளது. சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும் என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொள்ளவேண்டாம். வாடிக்கையாளர்களுடன் கனிவான அணுகுமுறை அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். கணவருடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 4, 5, 7
அதிர்ஷ்ட எண்கள்:4, 9
வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேனாவேனே
தனுசுராசி அன்பர்களே!
பணவரவு ஓரளவுக்கு திருப்தி தருவதாக இருக்கும். குடும்பம் தொடர்பான. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது குடும்பப் பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. வீட்டில் சிறிய அளவில் ஒரு சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் விரைவில் சரியாகிவிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வாரப் பிற்பகுதியில் புகுந்தவீட்டு உறவினர்களுடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுசரித்துச் செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நாள்கள்: 3, 5, 6, 7
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே
மகரராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சுபச் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்க வகையில் எதிர் பார்த்த காரியம் முடிவதில் சிற்சில பிரச்னைகள் ஏற்படும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தருவதாக இருக்கும்.
வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் ஏற்பட்டால், அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி செயல்படவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். அக்கம்பக்கத்தில் இருக்கும் பெண்களால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நாள்கள்: 2, 3, 4
அதிர்ஷ்ட எண்கள்:2, 6
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்.
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்றங்கு அடைந்தவர்க்கெலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே.
கும்பராசி அன்பர்களே!
பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற் படாது. கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்கள், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். அவர்களால் ஆதாயமும் உண்டாகும். அரசாங்க வகையில் சில பிரச்னை களை எதிர்கொள்ள நேரிடும். தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.
வியாபாரத்தின் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படக்கூடும். பழைய பாக்கிகளை வசூலிப் பதில் கனிவான அணுகுமுறை அவசியம். பணியாளர்கள் உற்சாகமாகச் செயல்படுவார்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு புகுந்தவீட்டு உறவினர்களின் வருகையால் பொறுப்புகள் அதிகரித்தாலும் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 3, 6, 7
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச்: 1, 2
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
மீனராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தையுடன் ஏற்பட்டி ருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். அவர் மூலம் எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்தும் வாய்ப்பு ஏற்படும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் வாரம். குடும்பப் பொறுப்புகளை உறவினர்கள் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 1, 2, 5
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச்: 3, 4
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
வேதியா வேத கீதா விண்ணவரண்ணா வென்றென்று
ஓதியே மலர்கள் தூவி யொருங்கிநின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே.