சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

அங்கிள் பாவம்... ஆன்ட்டி பாவம்!

அங்கிள் பாவம்... ஆன்ட்டி பாவம்
பிரீமியம் ஸ்டோரி
News
அங்கிள் பாவம்... ஆன்ட்டி பாவம்

`போக்கிரி’ படத்தில் கொண்டையை மறைக்காமல் திரியும் வடிவேலு போல, 40 வயதைத் தாண்டிய வர்கள் தங்கள் வயதை மறைக்க எத்தனை வேஷமிட்டுக்கொண்டு திரிந்தாலும் சில அறிகுறிகளை வைத்து, பார்த்ததும் டக்குன்னு கண்டுபிடிச்சு டலாம்!

பொதுவாக நாற்பத்தைந்து வயதைத் தாண்டிய பெண்களுக்கு இருக்கும் பெரிய குழப்பமே தான் ஒரு மருமகளா, இல்லை மாமியாரா என்பதே! இந்த வயதில் மருமகள் என்ற இளமையான சிந்தனையிலிருந்து மாறி மாமியாருக்கான மெச்சூரிட்டியைப் பெற்றிருப்பார்கள். அதுவரை தொலைக்காட்சி சீரியல்களில் மருமகள்களுக்கு சப்போர்ட் செய்துவந்தவர்களின் வானிலை சட்டென மாறி, “மாமியாரை அட்ஜஸ்ட் பண்ணிப் ்போனால்தான் என்ன?” என்று மருமகள் கேரக்டர்களை விமர்சிக்கத் தொடங்கியிருப்பார்கள்.

அங்கிள் பாவம்... ஆன்ட்டி பாவம்!

கூட்டுக்குடும்பம் வேண்டுமானால் காலாவதியாகியிருக்கலாம், ஆனால் வாட்ஸப் குரூப் இல்லாத குடும்பங்களே இல்லையென்றாகிவிட்டது. இந்த வாட்ஸப் குரூப்பில் காலை வணக்கத்தைக் கடவுள் படத்தோடு பக்திப்பழமாகத் தெரிவிப்பவர்கள் இந்த 40+ மக்களாகத்தான் இருப்பார்கள். குறிப்பாக, ‘நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?’, ‘திருநள்ளாறு கோயிலைப் பார்த்து நாசாவே வியந்த செய்திகள்’ போன்றவற்றை ஃபார்வேர்டு பண்ணும் இவர்கள், கண்ணை மூடிட்டுத்தான் ஃபார்வேர்டு பண்றாங்கங்கிறத கன்பார்ம் பண்றது சிம்பிள். அமாவாசைக்கு அடுத்த நாள் ‘நேற்றைக்கு நிலாவில் தெரிந்த பாட்டி வடைசுடும் படம். தமிழனாக இருந்தால் ஷேர் செய்யுங்கள்’ என்று வந்த மெசேஜை உடனே அனுப்பிப் புளகாங்கித மடைவார்கள். அமாவாசைல எப்டி பாபா நிலா தெரியும்?!

நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள், தாங்கள் பெற்ற மகராசிகளுக்கு அக்கா போலக் காட்டிக்கறதுல ரொம்ப ஆர்வம் இருக்கும். அதுக்காகவே கொஞ்சம் ஓவர் கோட்டிங்கோட தங்கள் பெண் குழந்தைகளுக்குப் பக்கத்தில் நின்று செல்ஃபி எடுத்து பேஸ்புக்ல போட்டு ‘உங்க பொண்ணுக்கு அக்கா மாதிரி இருக்கீங்க மாதிரியான கமென்ட்டுகள் வரவேற்கப்படுகின்றன!’ என்று அவர்களாகவே லீடும் கொடுப்பார்கள். முதல் கமென்ட்டாக ‘வணக்கம் தோழி. நம்பமுடியவில்லை’, ‘தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் தோழி... மகளுக்கு ஷால் போடுங்கள்’ என்று கமென்ட் போடுபவர்கள் எல்லாமே அவங்க செட்டுதான் பாஸ். ‘நம்ம காலத்துலல்லாம் பேஸ்புக்கெல்லாம் இல்லையே’ங்கற ஏக்கம் இவங்க மனசோட ஆழத்துல புதைஞ்சிருக்கும். அதுக்காகவே ரெட்டை ஜடை சேலஞ்ச், ஜிமிக்கி கம்மல் சேலஞ்ச், குழந்தை போட்டோ சேலஞ்ச், வேட்டி சட்டை சேலஞ்ச், முறுக்கு மீசை சேலஞ்ச்னு ஏகப்பட்ட சவால்களை சளைக்காமல் கிளப்பிவிட்டுக்கிட்டே இருப்பாங்க! இந்த 40+ மக்களோட நட்பைப் பெறுவதற்கு அதிகமா மெனக்கெடவே வேண்டாம்... குச்சி ஐஸ், தேன் மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய், ஜவ்வு மிட்டாய்னு அந்தக் காலத்தில் ஸ்கூலுக்கு முன்னால வித்துக்கிட்டிருந்த ஐட்டங்களோட போட்டோவை ஃபேஸ்புக்ல போட்டுட்டு கம்னு இருந்தாலே போதும்... லைக்கும் கமென்ட்டுமா போட்டுத்தாக்குவாங்க!

அங்கிள் பாவம்... ஆன்ட்டி பாவம்!

குரூப் போட்டோ எடுக்குறப்ப ஸ்மைல் ப்ளீஸ் சொன்னால், சிரிக்கிறதவிட தொப்பைய இறுக்கிப்பிடிச்சு தம் கட்டுறதுலயே குறியா இருந்தால் அவங்க 40+ ஆசாமிகளாகத்தான் இருப்பாங்க பாஸ்! இந்த நாற்பதைக் கடந்தவங்களுக்குப் பல விஷயங்கள், ‘இருக்கு ஆனா இல்லை’ ரகம்தான்! பையில எப்பவும் சீப்போடதான் திரிவாங்க. ஆனால் அதை வைத்து சீவுறதுக்குத் தலைல பெருசா ஒண்ணும் முடி இருக்காது! பர்ஸ்ல நாலைஞ்சு டெபிட் கார்டு வெச்சிருப்பாங்க. ஆனால், மாசத்துல 25 நாள் அந்தக் கார்டில் பணம் இருக்காது. மாதம் தொடங்கி ஐந்தே நாளில் ஹோம் லோன், கார் லோன், பர்சனல் லோன்னு அம்புட்டு பேரும் இருக்குற பணத்தை மொத்தமா உறிஞ்சி எடுத்துட்டு, சக்கை மாதிரிதான் அந்தக் கார்டை வெச்சிருக்க விடுவாங்க! இவங்க அடிக்கடி ஏடிஎம் சென்டருக்குப் போறதே வெயிலுக்கு சிலுசிலுன்னு கொஞ்ச நேரம் நின்னுட்டு, பேலன்ஸ் எவ்வளவுன்னு பார்க்கத்தான். இதுலயும் கடைசியா இருக்குற 400 ரூபாயை எடுக்குறதுக்காக ஒவ்வொரு ஏடிஎம் சென்டரா அலையிற கொடுமை இருக்கே, எல்லா ஏடிஎம் மெசினும் 500 ரூபாய்க்குக் குறைவா எடுக்க முடியாதுன்னு டெபிட் கார்டைத் துப்பிடும்... 400 ரூவா எடுக்க முடியாத விரக்தில. வெளில வந்து ஆன்டி இந்தியனா ஒரு பதிவப் போட்டு மோடிக்கே சவால் விடுவாங்க.

முப்பத்தஞ்சு வயசுவரைக்கும் ஒழுங்கா தியேட்டருக்குப் போயிதான் படம் பார்த்துட்டிருப்பாங்க. ஆனால் இந்த நாற்பதை எட்டியதும்தான் திருட்டுத்தனமா நெட்ல படத்தை டவுன்லோடு பண்ணிப் பார்க்குற கஞ்சத்தனமெல்லாம் எட்டிப்பார்க்கும். தமிழ் ராக்கர்ஸ வாழவைக்கும் தெய்வங்களே இந்த 40+ மக்கள்தான்! இதுக்கு அவங்க கொடுக்குற சமாளிப்பு இருக்கே, “இப்பல்லாம் படமாய்யா எடுக்காய்ங்க? இந்தப் படத்தையெல்லாம் பைத்தியக்காரங்கதான் தியேட்டர்ல போயி துட்டு குடுத்துப் பார்ப்பாங்க! ஒரு கதையுமில்ல, மண்ணுமில்ல!”ன்னு சலிச்சுப்பாங்க! அதோட நிறுத்தாமல் ஃபேஸ்புக்லயும் முதல் ஆளா, “அயோக்யா... அய்யோக்யா!”ன்னு பஞ்ச் டயலாக் மாதிரி ஒரு வரி விமர்சனம் எழுதி லைக்ஸ் அள்ளிடுவாங்க! ஆனால் தப்பித்தவறிகூட ஆன்லைன்ல திருட்டுத்தனமா டவுன்லோடு பண்ணிப்பார்த்தத சொல்லமாட்டாங்க!

அங்கிள் பாவம்... ஆன்ட்டி பாவம்!

பிள்ளைகள் என்ன வகுப்பு படிக்கிறாங்கன்னுகூடத் தெரியாமல் பொறுப்பில்லாமல் இருந்த ஆளுங்கதான், அதே பிள்ளைகள் பத்தாவது வந்துட்டா மட்டும் “என்னோட பையன் பப்ளிக் எக்ஸாம் எழுதப்போறான், வாழ்த்துங்க ஃபிரெண்ட்ஸ்!”, “என்னோட பொண்ணுக்குப் பிறந்த நாள், வாழ்த்துங்க ஃபிரெண்ட்ஸ்!”, “என்னோட பையன் பத்தாவதுல 488 மார்க் ஃபிரெண்ட்ஸ்!”னு ‘தங்க மீன்கள்’ அப்பா மாதிரி சீனெல்லாம் போடுவாங்க! வீட்டம்மாகிட்ட கேட்டால்தான் தெரியும், அவரு பிராக்ரஸ் கார்டுல கையெழுத்து போடுறதோட வேறெந்த வேலையும் செய்றதில்லைன்னு! இதுலயே இன்னொரு பொறுப்பான 40+ அப்பா வர்க்கமும் இருக்குது பாஸ்... பசங்களை டெய்லி ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போறது... கூட்டி வரது... முக்கியமா பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்கைத் தவறாமல் அட்டண்ட் பண்றதுன்னு ஓவர் பொறுப்பா இருப்பாங்க... அவங்க ஸ்கூல்ல அமலா பால் மாதிரி டீச்சர்ங்க இருக்கற விஷயம் வீட்டம்மாவுக்குத் தெரியாதவரைக்கும் வண்டி பிரச்னையில்லாம ஓடிட்டிருக்கும்!

இவங்கள என்னதான் காமெடியா பார்த்தாலும், இவங்கள மாதிரி காலத்தோட பொருந்திப்போற மக்களைப் பார்க்கவே முடியாது. ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி கேட்டவங்க, இப்ப எஃப்எம்ல தடதடன்னு பேசுற ஆர்ஜேக்களின் பேச்சையும் ரசிக்கப் பழகிட்டாங்க... பிளாக் அண்டு ஒயிட் டிவி அறிமுகமான காலத்துல இருந்து எல்.இ.டி டிவி வரைக்கும் தங்களை அப்டேட் பண்ணிட்டே வந்திருக்காங்க... இணையத்தில் யாகூ மெசெஞ்சர்ல நுழைஞ்ச கூட்டம் இப்ப டிக்டாக்ல டான்ஸ் ஆடுறவரைக்கும் தங்களை மாத்திக்கிட்டாங்க! இப்படி இவங்களையும் அறியாமல் மாற்றத்தை ஏத்துக்கிட்டு ஓடிட்டிருக்கும் 40+ மக்கள் இல்லாமல் உலகில் கலகலப்பே இல்லை பாஸ்!