சினிமா
Published:Updated:

கத்தி - சினிமா விமர்சனம்

கத்தி
News
கத்தி

சிறையின் ப்ளூபிரின்ட் பார்த்து விஜய் ஸ்கெட்ச் போடுவது, 'காயின்’ கேமில் ரௌடி கும்பலைச் சிதறடிப்பது, 'செத்த பிறகு எங்களுக்குத்தான் முதல்ல சொல்லணும்

திருடன் 'கத்தி’ பிடிக்கும் விஜய், குடிநீர்க் கொள்ளையைத் தடுக்க தலைவன் கத்தியை நீட்டினால்... என்ன ஆகும்?

இரட்டை வேட ஆள்மாறாட்டக் கதை. அதில், விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் பின்னணி காட்டி, சமூக அக்கறை விதைத்திருக்கிறார்கள். 'மாஸ்’ ஹீரோவைக்கொண்டு 'கமர்ஷியல்’ கலாட்டாக்களுடன் நிதர்சன அரசியலையும் பேச முயற்சித்திருக்கிறார் இயக்குநர் முருகதாஸ்! கார்ப்பரேட் நிறுவனங்களின் அசுர அரசியல், அப்பாவி விவசாயிகளை நசுக்கும் கடன், மோசடி தொழிலதிபர்களைப் போஷிக்கும் வங்கிகள், ஊடகங்களின் அராஜகங்கள் என, பின்பாதி முழுக்க  ஆவேசம்!

கத்தி - சினிமா விமர்சனம்

ண்ணா.... 'இளைய தளபதி’ங்ளாண்ணா இது?! '2ஜி-ன்னா என்ன..? வெறும் காத்துய்யா... அதுலேயே ஊழல் பண்ணின தேசம் இது!’, 'ஒருத்தன் 5,000 கோடி கடன் வாங்கிட்டு, திரும்பக் கட்ட முடியாதுனு சொல்வான். அவனை இந்த நாடு ஒண்ணும் பண்ணாது; ஆனா 5,000 ரூபாய் கடன் வாங்கின விவசாயி, பணத்தைக் கட்டலைனா அவனை தற்கொலை செய்யவெச்சிரும்!’ என ஆவேசத்துடன் நடப்பு அரசியல் பேசுகிறார். அட, இந்த மாதிரி எல்லாம் பேசி உங்களைப் பார்த்தது இல்லையே ப்ரோ!

'அழகா இருக்கிற சமந்தா, படத்தில் எங்கே இருக்காங்க?’ எனக் கும்பலில் தேடவெச்சுட்டீங்களே தாஸ¨! கோட் -சூட் அமுல் பேபி வில்லனாக நீல் நிதின் முகேஷ். வேலைக்கு ஆள் அனுப்புவதுபோல விஜய்யைக் காலி பண்ண ரௌடிகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறார்... அம்புட்டுத்தேன்.

சிறையின் ப்ளூபிரின்ட் பார்த்து விஜய் ஸ்கெட்ச் போடுவது, 'காயின்’ கேமில் ரௌடி கும்பலைச் சிதறடிப்பது, 'செத்த பிறகு எங்களுக்குத்தான் முதல்ல சொல்லணும்’ என்று ஊடக உள்குத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பது என பின்பாதியின் ஒவ்வோர் அத்தியாயமும் அசத்தல். ஆனால், அதற்கு முன் காமாசோமாவெனக் கடக்கும் முன்பாதியைப் பொறுமையாகப் பொறுத்தருள முடியவில்லை முருகா! நீர்வளச் சுரண்டலை வார்த்தைப் புள்ளிவிவரங்களிலேயே கடந்திருக்க வேண்டுமா? ஒரு பாட்டில் கோலாவுக்காக நீர், மண், விவசாயம் போன்றவை சீரழிக்கப்படுவதை, பளீர் பொளேர் காட்சிகளாகப் பதிவுசெய்திருந்தால், இடைவேளையின்போது தியேட்டரின் கோலா விற்பனையிலேயே பாதிப்பு உண்டாக்கியிருக்குமே!

சென்னை மக்களைத் தவிக்கவைக்கும் திட்டங்கள் எல்லாம் ஜோர்தான். ஆனால், அந்தக் குழாய் ஆபரேஷன் செம காமெடி. மிகச் சில சீனியர் சிட்டிசன்கள் ஒரு பாட்டில் பெட்ரோலுடன் அரசு இயந்திரத்தையே இறுக்கி முறுக்குவது... மொக்க பிளான் முருகேசு. ஊடகங்களை விஜய் புரட்டியெடுக்க, 'கோலா விளம்பர ஃப்ளாஷ்பேக்’கைச் சொல்லி தியேட்டரிலேயே கலாய்க்கிறார்கள்.

கத்தி - சினிமா விமர்சனம்

அம்மாம் பெரிய கம்யூனிச சித்தாந்தத்தை ஒரு இட்லியை வைத்து சொல்வதை... சட்னிகூட நம்பாது சாரே!      

ஹீரோயிச பில்டப் பின்னணியில் மட்டும் மாஸ் காட்டுகிறது அனிருத்தின் பின்னணி இசை. பாடல்களில் 'செல்ஃபி புள்ள...’, 'பக்கம் வந்து...’ இரண்டும் ஹிட் மிக்ஸ். கிராம வறட்சி, கார்ப்பரேட் வளர்ச்சி, குழாய் கிளர்ச்சி என எந்த ஆங்கிளிலும் பளிச் ஸ்கோப் பிடிக்கிறது ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு.

நிலத்தை, நீர் ஆதாரத்தை, விவசாயிகளைக் காக்க, புத்தியைத் தீட்டச் சொல்லுது 'கத்தி’!

- விகடன் விமர்சனக் குழு