என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

மெரினாவில் வாழ்ந்திருக்கோம்!

நா.கதிர்வேலன்

##~##

''செமத்தியான ஹீரோ சப்ஜெக்ட்... படம் முழுக்க ஹீரோ மேலதான் ஃபோகஸ். படத்துக்கே ஹீரோ பேர்தாங்க... 'மெரினா’!'' உலகின் இரண்டாவது நீளமான கடற்கரைபற்றிக் கதை சொல்ல வருகிறார், தேசிய விருது ஸ்பெஷல் இயக்குநர் 'பசங்க’ பாண்டிராஜ்.

''ஒவ்வொரு தடவையும் 'கடற்கரைக்குக் கூட்டிட்டுப் போறேன்’னு வீட்டுல கொடுத்த வாக்குறுதி காலாவதி ஆகி, கலவரமாகி, வேற வழியே இல்லாம ஒரு நாள், அவங் களை மெரினா பார்க்கக் கூட்டிட்டுப் போனேன். அப்போதான் பீச்சை அவ்வளவு ரிலாக்ஸ்டாப் பார்த்தேன். எங்கே பார்த்தாலும் பசங்க. ஒருத்தன் சுண்டல் விக்கிறான். இன்னொருத்தன் சங்கு விக்கிறான். பத்து பேரு டீ விக்கிறான். விசாரிச்சா, எல்லாரும் சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் பக்கத்துல இருந்து கிளம்பி வந்திருக்கானுங்க. அவங்க கஷ்டம், சந்தோஷம், துக்கம், வருத்தம், கோபம்னு எல்லாத்தையும் கேட்டேன். கடற்கரைக்கு வந்தால், காத்து மட்டும் இல்லே... ஏகப்பட்ட கதைகளும் கிடைக்கும்னு புரிஞ்சுது. சடசடனு கண்ணிகளைக் கோத்தா, அபாரமா ஒரு கதை விரிஞ்சுது. என் நண்பன் பாலாகிட்ட சொன்னேன். 'நீயும் நானுமே தயாரிக் கலாம். யார்கிட்டயும் கதை சொல்லிப் புரியவைக்கக் கஷ்டப்பட வேண்டாம்’னு சொன்னான். இதோ... 'மெரினா’வைக் கொஞ்சம் கேமராவுக்குள்ளே அடக்கிட் டேன்னு நினைக்கிறேன்!''

மெரினாவில் வாழ்ந்திருக்கோம்!

''அவ்வளவு பெரிய கடற்கரையை இரண்டரை மணி நேர சினிமாவில் அடக்கிட முடியுமா?''

''அதுதான் சவாலே! மெரினாவின் பலமும் பலவீனமும் அதன் பிரமாண்டம்தான். 'வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது’னு இளையராஜா ஒரு புத்தகம் எழுதி இருப்பார். அந்தக் கடற்கரை மணலில் அவ்வளவு கதைகள் கொட்டிக்கிடக்கு. பொதுவா, ஒரு புன்னகை, ஒரு கண்ணீர்த் துளி போதும் சில விஷயங்களைப் புரிஞ்சுக்க. ஆனால், இது அப்படி இல்லை. காத்து வாங்கப் போய், கவலை வாங்கி வந்த மாதிரி ஆகிப்போச்சு. லட்சம் பேர் தினமும் வந்து போகும் இடம். ஒரே இடம், நிறைய மனிதர்கள், ஒரே உலகம், ஆயிரக்கணக்கான வாழ்க்கை, எக்கச்சக்கமான எமோஷன்ஸ். இந்த இடத்தில் பிழைக்கிறதுக்கு மனுஷன் என்னல்லாம் பாடுபடுறான்னு சொல்லணும்னு பட்டுச்சு. படம் பார்த்து முடிச்சதும் எனக்கே பெருமையா இருந்துச்சு. பார்த்துட்டு நீங்க சொல்லுங்க!''

''உங்க மெரினா கேரக்டர்கள் எப்படிப்பட்டவர்கள்?''

''இங்கே மனசு பாதிக்கப்பட்ட மனுஷங்க நிறையத்  திரியுறாங்க. பேசினா, இங்கிலீஷ்ல பிச்சு எடுக்கிறாங்க. மெரினா பீச்சை விலைக்கு வாங்கி வாடகைக்கு விட்டிருக்கேன்னு சொல்றான். அப்புறம் ஏன் இங்கே திரியுறேனு கேட்டா, 'வாடகை வசூல் பண்ண உங்கொப்பனா வருவான்?’னு கேள்வி கேட்கி றான். என்ன படிச்சிருக்கேனு கேட்டா, ஏகாம், பிகாம், ஸிகாம்னு அடுக்குறான்.

அடுத்து பிச்சைக்காரங்க. ஒரு பெரிய வரைப் பார்த்துப் பேசினேன். அவர் வீம்புக்காகவே பிச்சை எடுக்கிறார். வீட்டில் மருமகள் மதிக்கலையாம். அவங்க பேச்சைக் கேட்டு மகனும் கண்டுக்கலை. 'இங்கே பிச்சை எடுக்கிறேன். காந்தி சிலைகிட்டயே பிச்சை எடுக்கிறேன். பார்த்துட்டு நாலு பேர் அவன்கிட்ட போய்ச் சொல்லட்டும். நாக்கைப் புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்கட்டும்’னு சொல்லிட்டு, 'அய்யா... சாமி’னு அடுத்தவங்ககிட்ட கையேந்த ஆரம்பிக்கிறார்.

மெரினாவில் வாழ்ந்திருக்கோம்!

அப்புறம் சொல்லவே வேணாம், மெரினாவின் காதல். லட்சக்கணக்கான காதல்கள். எவ்வளவு ஜெயிச்சு இருக்கும்... எத்தனை தோத்து இருக்கும். அப்படி ஒரு  காதலை, அதுவும் இன்றைய அசல் சென்னைக் காதலை பெரிய பங்கா எடுத்து வெச்சிருக்கேன்.''

மெரினாவில் வாழ்ந்திருக்கோம்!

''இந்த சினிமாவில் நீங்க சொல்ல வருகிற செய்தி என்ன?''

''குழந்தைத் தொழிலாளர்களை ஒரு கதையில் கமர்ஷியலாகப் பதிவு செய்து இருக்கேன். உங்க வீட்ல, தெருவுல, கடையில, அலுவலகத்துல ஒரு குழந்தைத் தொழிலாளர் இருந்தா, இந்தப் படம் அவனை ஒரு ஸ்கூலில் சேர்க்க உங்க மனசைத் தூண்டும். குழந்தைகளை முதலில் குழந்தைகளாப் பார்க்கணும் சார். இப்பக்கூட சமச்சீர்க் கல்வி நடைமுறைக்கு வராமல் இருந்தபோது, 'பசங்க’ படத்தை சும்மா அஞ்சு ரூபானு டிக்கெட் வசூலிச்சு, தமிழகம் முழுக்கத் தியேட்டர்களில் காட்டி இருக்காங்க. அப்படிப் பார்த்தா, தமிழக அரசே இந்தப் படத்தை முன்கூட்டியே வாங்கி வெளியிடலாம். எவ்வளவோ இருக்கு இதில்!''

''அப்போ, மெரினா என்ன ஆர்ட் ஃபிலிமா?''

''என்னடா, இந்தக் கேள்வி இன்னும் வரலையேனு நினைச்சேன். 'பசங்க’ பார்த்தபோது, ஆர்ட் ஃபிலிம் மாதிரியா இருந்துச்சு. அதேதான் இந்த மெரினாவும். துக்கத்தோடும் கனத்தோடும் சொல்ல வேண்டிய கதைதான். ஆனா, அதை நகைச்சுவையா, இனிப்புச் சுவை சேர்ந்த மாதிரி செய்திருக்கேன். படம் பார்த்துட்டுப் போகும்போது, நிச்சயம் மனசு கனக்கும். மனசு ரிலாக்ஸ் ஆகி அடுத்த வேலைக்குப் போக, நிச்சயம் நேரம் ஆகும். பார்த்த, கேட்ட, தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களே ஒரு அனுபவமா உங்ககிட்ட வந்து சேரும்போது, அது நிச்சயம் மகத்தான விஷயமா இருக்கும்.''

மெரினாவில் வாழ்ந்திருக்கோம்!

''டி.வி. ஜாலி சிவகார்த்திகேயன், இதில் எப்படி?''

''ஒரு விழாவில் அவரைப் பார்த்தேன். மேடைக்கு வந்த கொஞ்ச நேரத்துல அப்படியே எல்லாரையும் தன் வசம் ஆக்கிட்டார். எனக்கு ஒரு நல்ல காதலன் வேணும். குறும்புக்காரன். சென்னைப் பையன். லொடலொடனு பேசணும். சரியாச் சிக்கினார் சிவகார்த்திகேயன். அவரோட ஜோடி 'களவாணி’ ஓவியா. ரெண்டு பேர் காதலும் உங்க மனசை அள்ளும். ஓவியா பெயர் இதில் சொப்பன சுந்தரி. கௌதம்னு ஒரு பையன் பிரமாதப்படுத்தியிருக்கான். 'பசங்க’ பக்கடாதான் இதில் முக்கியமான கேரக்டர். அவன்தான் இதில் சூப்பர் ஸ்டார்!''

மெரினாவில் வாழ்ந்திருக்கோம்!
மெரினாவில் வாழ்ந்திருக்கோம்!

''பாடல்கள் இருக்கா?''

''இல்லாமலா! கிரிஷ்னு லண்டன்ல படிச்சுத் திரும்பின தமிழன். பிரமாதமான மியூஸிக். 'காதல்’ தொடங்கி 'வம்சம்’ வரைக்கும் ஸ்டில் போட்டோகிராஃபரா இருந்த ஸ்டில்ஸ் விஜய், என் கேமராமேன். பரபரப்பு ஏற்படுத்தி இருக்கார் விஜய். நாலஞ்சு மாசமா மெரினா காத்தையே சுவாசிச்சுக் கிடந்தோம். ஹாலிவுட்ல ஒரு படைப்பாளி சொன்னாரு, 'சினிமாவை உருவாக்கக் கூடாது. அதை ஒரு வாழ்க்கை மாதிரி வாழணும்’னு... அதுதான் மெரினா!''