சமூகம்
Published:Updated:

“என் தம்பிகள்... தங்க கம்பிகள்!”

சிலிர்க்கும் உதயநிதிம.கா.செந்தில்குமார்

''தமிழ்நாட்டின் முதலமைச்சர்னு இருக்கும் ஒருத்தர், தன்னை முதலமைச்சர்னு சொல்லிக்கவே கூச்சப்படுறார். இன்னொரு பக்கம், நீதிமன்றத்தாலேயே குற்றவாளினு அறிவிக்கப்பட்ட அந்த அம்மாவோட போட்டோஸ்தான் தமிழகம் முழுக்க நிறைஞ்சிருக்கு. இதுவே தி.மு.க ஆட்சியில் இப்படி ஒரு விஷயம் நடந்திருந்தா, எப்படியெல்லாம் குதிச்சிருப்பாங்க? அந்த விமர்சகர்கள், போராளிகள், பொதுநல ஆர்வலர்கள் எல்லாம்  இப்ப என்ன பண்றாங்கன்னே தெரியலை! இதெல்லாம் தாண்டி சினிமாவிலேயும் அரசியல்தான். என் எல்லா படங்களுமே கிளீன் 'யு’ சர்ட்டிஃபிகேட் வாங்கினவை. ஆனால், வரிவிலக்குக்குத் தகுதி இல்லைன்னு நிராகரிக்கிறாங்க. அப்புறம் எதுக்கு சென்சார் போர்டு இருக்குனு தெரியலை'' - எந்தக் கேள்வி கேட்டாலும் இயல்பாகப் பேசும் உதயநிதி, அன்று அரசியலுடன் தொடங்கினார்.   

   “என் தம்பிகள்... தங்க கம்பிகள்!”

'' 'நண்பேன்டா’ பட போஸ்டர்களைப் பார்த்ததுமே உங்களுடைய முந்தின பட பாணி காமெடினு தெரியுது. என்ன கதை?''

''கரெக்ட். இதை 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் இரண்டாம் பாகம்னு சொல்லலாம். உங்களை எங்கேயும் நெளியவைக்காமல் ரிலாக்ஸா சிரிக்கவெச்சுட்டே இருக்கும் படம். நான், சந்தானம், கருணாகரன் மூணு பேரும் தஞ்சாவூர் ஸ்கூல்ல ஒண்ணா படிச்சிருப்போம். அப்ப நடந்த சண்டையில் சின்ன வயசுலயே எங்களைவிட்டு கருணா பிரிஞ்சுடுவார். அதை மனசுல வெச்சுக்கிட்டு எங்களைப் பழிவாங்க அவர் சமயம் பார்த்துட்டு இருப்பார். இடையில் பல வருஷங்கள் ஓட, சந்தானம் திருச்சியில் ஒரு இடத்தில் வேலைக்குச் சேர்ந்திருப்பார். என்னை வேலைக்குச் சேர்த்துவிட, எங்க அப்பா முயற்சி பண்ணிட்டு இருப்பார். ஆனாலும் நான் தஞ்சாவூர்ல இருந்து திருச்சிக்குப் போய் சந்தானம் காசைக் காலிபண்ணி, ஊர் சுத்திட்டு இருப்பேன். அந்தச் சமயத்துல எங்க ஏரியாவுக்கே இன்ஸ்பெக்டரா கருணா வருவார். அந்தச் சின்ன வயசுப் பழைய பகையை மனசுலவெச்சுக்கிட்டு அவர் எங்களைப் பழிவாங்க முயற்சி பண்ணுவார். அது நடந்ததா... இல்லையா என்பதுதான் கதை.

   “என் தம்பிகள்... தங்க கம்பிகள்!”

என் கேரக்டர் பேர் - சத்யா. சந்தானம் பேர் சிவக்கொழுந்து. கருணா, இன்ஸ்பெக்டர் தங்கதுரை. இதற்கு இடையில் சந்தானத்தைப் பார்க்க வர்றப்ப நயன்தாராவைச் சந்திச்சு, அவங்களைக் காதலிக்க ஆரம்பிப்பேன். எங்க காதலை சந்தானம் பிரிக்க முயற்சிபண்றது, அவரோட காதலுக்கு நான் ஹெல்ப் பண்றதுனு காமெடி ஸ்கோர் பண்ண செமையான ஸ்கிரிப்ட். இயக்குநர் ஜெகதீஷ் புதுமுகம். இவர் இயக்குநர் ராஜேஷ§டன் வேலைபார்த்தவர். அந்த கமர்ஷியல் காமெடி மிக்ஸ்ல பின்றார்!''

''நயன்தாரா என்ன சொல்றாங்க?''

''ஹீரோயினை முதல் முறை பார்த்ததுல இருந்து அவங்களை எப்பப் பார்த்தாலும், 'சீக்கிரமா லவ்வைச் சொல்லுங்க. நான் போய் மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுக்கணும்’னு படம் ஃபுல்லா சொல்லிட்டே இருப்பேன். க்ளைமாக்ஸ்ல அதே டயலாக்கை நயன்தாரா சொல்லணும். நான் என்ன மாடுலேஷன்ல சொன்னேனோ, அதே மாடுலேஷன்ல சொல்லணும். ஆனா, அவங்க வெவ்வேற மாடுலேஷன்ல சொல்றாங்க. அப்ப சந்தானம் கலாய்க்க ஆரம்பிக்க, அடுத்த அரை மணி நேரத்துக்கு அவங்களால நடிக்கவே முடியலை. ஆக்ஷன் சொன்னாலே சிரிப்புதான். இப்படி எல்லாரும் அப்பப்ப சிரிச்சதைத்தான் அங்கங்க கட் பண்ணி டீஸரா ரிலீஸ் பண்ணினோம். இப்படி எவ்வளவு கலாயச்சாலும் செம கூலா இருப்பாங்க. ஆனா, செம சென்சிட்டிவ். அவங்க இந்தக் கதையைக் கேட்டதுமே சொன்ன விஷயம், 'சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுற சென்சிட்டிவ்வான இந்த ரம்யா கேரக்டர், அப்படியே என் ஒரிஜினல் கேரக்டர்’னு சொன்னாங்க. அது வசதியாப்போச்சு.''

   “என் தம்பிகள்... தங்க கம்பிகள்!”

''உங்கள் நண்பர் அன்பில் மகேஷ், உங்கள் அப்பாவின் அரசியல் உதவியாளர்போல அவருடனே சுற்றிச் சுழன்றுவருகிறார். உங்களுக்கு அரசியலில் ஈடுபாடு இல்லையா?''

''நாள் தவறாமல் முரசொலியில் தலைவரின் கடிதம், அப்பாவின் அறிக்கைகள் வந்தால் படிப்பது என்ற அளவுதான், இப்போ என் அரசியல் ஆர்வம். தவிர மகேஷ§ம் பாரம்பர்யமான அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். என் நண்பர். நான் நடிகனானதும், எனக்கான ரசிகர்களை ஒருங்கிணைச்சு ரசிகர் மன்றம் தொடங்கினார். ஆனாலும் அவருக்கு அரசியல்லதான் ஆர்வம்.  அப்பாவுக்கும் நம்பகமான ஒரு நபர் தேவை என்பதால், அவர் அப்பாவுடன் இருக்கார். அதனால்தான் அவருக்கு இளைஞர் அணியில் பொறுப்பு கொடுத்திருக்காங்க. அப்பாவுடன் அவர் இருப்பதை, நான் இருப்பதாகவே நினைக்கிறேன்.''

''உங்க தம்பி அருள்நிதி திருமண நிச்சயதார்த்தத்தில் உங்களைப் பார்க்க முடியலையே?''

   “என் தம்பிகள்... தங்க கம்பிகள்!”

''அருளுக்கு திருமணம்னு முடிவானதுமே என்கிட்ட தகவல் சொன்னார்... சந்தோஷமா இருந்துச்சு. சினிமா, பெர்சனல்னு எந்த விஷயமா இருந்தாலும் என்னிடம் சொல்லிடுவார். அவர் திருமணம் செய்யப்போகும் பெண் வீட்டாரும் நாங்களும், தலைவரின் கோபாலபுரம் வீட்ல சமீபத்தில் சந்திச்சோம். ஆனா, நிச்சயதார்த்தம் சமயத்தில் நான் கொச்சினைத் தாண்டி படப்பிடிப்பில் இருந்ததால் கலந்துக்க முடியலை. இதேபோல, என் 'நண்பேன்டா’ படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில், அவரின் 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ ரிலீஸ்னு அறிவிப்பு வந்தது. உடனே போன் செய்து, 'தப்பா எடுத்துக்காதண்ணே. உன் படத் தேதி தெரியாமல் அன்னைக்கு அனௌன்ஸ் பண்ணிட்டாங்க. என் படத்தைத் தள்ளிவைக்கச் சொல்லிட்டேன்’னு சொன்னார். இப்படி என்னை எப்பவும் எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டார்.''

''ஆனால் இன்னொரு தம்பி துரைதயாநிதியுடன் பழைய அளவுக்குத் தொடர்பு இல்லையோ?''

''யார் சொன்னா? என் பிறந்த நாளுக்குக்கூட  போன் பண்ணி விஷ் பண்ணினார்.  அப்பப்ப சினிமா பற்றி நிறையப் பேசுவோம். இப்ப படங்கள் தயாரிப்பைத் தள்ளிவெச்சிருக்கார்னு நினைக்கிறேன். இருந்தாலும், முன்பு இருந்த நெருக்கம் இப்ப இல்லையோனு எனக்கே தோணுது. காலப்போக்கில் எல்லாம் சரியாகிடும்னுதான் நினைக்கிறேன்!''