Published:Updated:

"நான்தான் ஃபோக் மார்லி !”

ம.கா.செந்தில்குமார், கார்க்கிபவா படம்: கே.ராஜசேகரன்

'' 'ஏயப்பா... பட்டையைக் கிளப்புறியே..! இந்த வார்த்தைகளை எல்லாம் எங்கே இருந்து புடிக்கிற?’னு கேப்பாங்க. நான் என்ன காலேஜு போயி படிச்சவனா? ஆறாப்பு தாண்டாதவன். ஆனா, தமிழ்நாட்ல நான் கச்சேரி பண்ணாத ஊர்களை  விரல்விட்டு எண்ணிடலாம். இந்த மண்ணும் மக்களும்தான் என் ஆசான்!'' - அந்தோணிதாசன் நெக்குருகிச் சொல்ல, அதை கண்கள் கலங்க ஆமோதிக்கிறார் ரீட்டா. இந்த நாட்டுப்புற ஜோடியின் எழுத்தும் குரலும் தமிழ் சினிமாவில் கலகலக்கிறது. 

'பாண்டிநாட்டுக் கொடியின் மேலே தாண்டிக் குதிக்கும் மீனைப்போல...’, 'கல்யாணமாம் கல்யாணம்...’, 'கட்டிக்கிடும் முன்னே நம்ம ஒத்திகையைப் பார்க்கணும்டி...’ என அந்தோணி அதிரடிக்க, 'கண்ணம்மா... கண்ணம்மா காதலிச்சாளாம்...’ 'ராசா மகராசா... கேளய்யா’ என மெல்லிசையால் வருடுகிறார் ரீட்டா.

''சொந்த ஊர் ராமநாதபுரம்.  செட்டிலானது தஞ்சாவூர். ரொம்பக் கஷ்டப்பட்ட குடும்பம். அப்பா

    "நான்தான் ஃபோக் மார்லி !”

நாகஸ்வரக் கலைஞர். அம்மா கூலி வேலைக்குப் போய் எங்களைக் காப்பாத்துச்சு.  நான் உழைச்சாதான் குடும்பத்தைக் காப்பாத்த முடியும்கிற சூழல். அதனால ஆறாவதோடு படிப்பை ஏறக்கட்டிட்டு அப்பாவோடு கச்சேரிக்குப் போக ஆரம்பிச்சேன். அப்பவே சினிமா பாட்டுன்னா உசுரு. ஒரு பாட்டை ஒரு தடவை கேட்டா, அதை அப்படியே திரும்பப் பாடிருவேன். வீட்டு வாசல்லயே சர்ச். கிறிஸ்துமஸ், நியூ இயர்னா ஏரியாவே களைகட்டும். அப்ப சினிமா பாட்டு டியூனுக்கு வரிகளை மாத்திப்போட்டு இயேசு பாடல்களைப் பாடுவேன். அப்புறம் கரகாட்டத்துல பஃபூன் வேஷம் போட்டு குறவன் வேஷம் போடுற வரை வளர்ந்தேன். ஏன்னா, கரகாட்டத்துல குறவன்தான் ஹீரோ!''

அந்தோணி நிறுத்திய இடத்தில் இருந்து தொடர்கிறார் அவருடைய காதல் மனைவி ரீட்டா. ''எனக்கு அரியலூர் மாவட்டம். அப்பா, கரகாட்டத்துல மெயின் குறவர். அம்மாவும் வேஷம் கட்டுவாங்க. நானும் அவங்ககூட ஆட்டத்துக்குப் போவேன். அப்படிப் போன இடத்துலதான் இவரு என்னைப் பார்த்தாரு...''

''அப்படியே வெள்ளரிப்பழம் மாதிரி கலரா இருந்த என்னைப் பார்த்ததும், அம்மணிக்கு டாங்கு டீங்காகி டாசு பீசாகிடுச்சு'' என வாருகிறார் அந்தோணி.

''இவருக்கு என்னைப் பார்த்ததும் லவ் ஆகிருச்சு. எனக்கு இவரைப் பார்க்கப் பார்க்க லவ் ஆகிருச்சு. அப்புறம் அப்பா-அம்மா சம்மதத்தோடு கல்யாணம் கட்டிக்கிட்டோம். ஆரம்பத்துல நிறையக் கஷ்டங்கள். இப்ப நல்லா இருக்கோம்.  பெரியவன் விஸ்காம், பொண்ணு இன்ஜினீயரிங், கடைசிப் பொண்ணு ஸ்கூல் படிக்குது'' - ரீட்டா முகத்தில் நிறைவான புன்னகை.  

கரகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த கதையை ஆரம்பித்தார் அந்தோணி. ''கரகாட்டத்துல நாங்க கொஞ்சம் ஃபேமஸ் ஆனதும், வீட்டுக்குத் தெரியாம வட்டிக்குக் காசு வாங்கி ஒரு பாட்டு ஆல்பம் போட்டேன். ஆல்பம் பேரு 'ஆத்தோரம் அஞ்சல’. நானே மெட்டுக்கட்டிப் பாடினேன். அதுல ரீட்டாவும் பாடியிருக்கு. அந்தப் பாட்டு பத்திக்கிச்சு. எங்கே போனாலும் அந்தப் பாட்டைப் பாடச் சொன்னாங்க. அப்படித்தான் நான் மேடைப் பாடகர் ஆனேன். மேடையில பாடுறதுக்காக நானே பாடல்கள் எழுத ஆரம்பிச்சேன். சந்தோஷம், துக்கம்னு எதுவா இருந்தாலும் பாட்டா எழுதிருவேன். ஒரு தடவை, 'ரீட்டா நான் என்னென்ன தப்பு செஞ்சேனோ, அதையெல்லாம் நினைச்சுட்டு என்னை நல்லா திட்டு’னு சொன்னேன். இவங்க பாத்திரம் விளக்கிட்டே கரடுமுரடாத் திட்டினாங்க. அதையே பிடிச்சு பாட்டா எழுதிட்டேன். 'அன்பே அமுதே என்று ஆசை வார்த்தை சொன்னவரே... கண்ணே கனியே என்று காதல் மொழி சொன்னவரே... பெண் இனத்தை வாழ்த்துகின்ற தாய்த் தமிழ் நாட்டினிலே என்னை வைத்து மட்டும் வாழ உனக்கு யோக்கியதை இல்லை... தங்கத்துல தாலி போட யோக்கியதை இல்லை... சாராயம் குறைச்சலும் இல்லை... தரம்கெட்ட மனுஷனாக நடந்துகொள்ளுற... நம் வம்சத்தோட பெரும் புகழை அழிக்கப்பாக்குற... அதனால உன்னோட சேர்ந்து இனி..’னு எழுதினேன். இப்படி எந்தச் சூழ்நிலையில மனசுல தோணுறதையும் கச்சேரிக்கான பாட்டா மாத்திருவேன். அதுதான் இப்போ சினிமாவுக்கும் கை கொடுக்குது.

சென்னை அம்பத்தூர்ல ஒரு கரகாட்டக் கச்சேரி. அதைப் பார்த்த திருமாறன் சார் மூலமா 'மகளிர்க்காக’னு ஒரு படத்துல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. திரும்ப கச்சேரிகள்ல பாடிட்டு இருந்தேன். கிராமியப் பாடகி சின்னப்பொண்ணு அக்கா மூலம்  'சென்னை சங்கமம்’ல பாடுற வாய்ப்பு கிடைச்சது. வந்த இடத்துல தர்புகா சிவா, பால்ஜேக்கப் சார், சந்தோஷ் நாராயணன் சார்னு நிறையப் பேர் அறிமுகம் கிடைச்சது. அப்போ கருணாஸ் அண்ணன் கொடுத்த வாய்ப்புதான் 'திண்டுக்கல் சாரதி’ படத்துல வர்ற 'திண்டுக்கல்லு... திண்டுக்கல்லு...’ பாட்டு. தினா சாருக்கு நன்றி. 'சூது கவ்வும்’ல 'காசு பணம் துட்டு... மணி மணி...’ பாட்டுல இன்ட்ரோ மட்டும் பாடி நடிச்சேன். சந்தோஷ் நாராயணன் சாருக்கு நன்றி. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில், 'ஜில்லாவோ திண்டுக்கல்லு சின்னாளப்பட்டி பக்கம் சொல்லு...’னு ஓப்பனிங் பாடலை தம்பி சிவகார்த்திகேயனோடு பாடினேன். இமான் சாருக்கு நன்றி.

    "நான்தான் ஃபோக் மார்லி !”

பாடகனா இருந்த என்னை பாடலாசிரியரா, நடிகனா ஆக்கினது சந்தோஷ் நாராயணன் சாரும், கார்த்திக் சுப்புராஜ் சாரும்தான். ரெண்டு பேருக்கும் நன்றி. 'ஜிகர்தண்டா’ல 'பாண்டி நாட்டு கொடியின் மேல தாண்டி குதிக்கும் மீனப்போல’ பாட்டை நானே எழுதி, பாடி... நடிக்கவும் செஞ்சேன். இப்போ 'காக்கி சட்டை’ல 'கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகையைப் பார்க்கணும்டி’ பாட்டை எழுதிப் பாடியிருக்கேன். அனிருத் தம்பிக்கு நன்றி. அதே சமயம் நான் ஒரு சுதந்திரக் கலைஞன். அதனால 'லா பொங்கல்’, 'அந்தோணி இன் பார்ட்டி’னு குரூப் வைச்சும் நிறையப் பாடுறோம். ஏன்னா, என் தாய்த் தமிழ்க் கலையை முடிஞ்ச வரை ஊரு உலகத்துக்கெல்லாம் கொண்டுபோய்ச் சேர்க்கணும்!''

-கலகலவென சிரிக்கிறார் அந்தோணி.

''கிராமிய இசைக்கு யாரெல்லாம் இன்ஸ்பிரேஷன்?''

''இளையராஜா சார் பாட்டுல பல  விஷயங்கள் இருக்கே. தவிர 'ஏய்... கட்டப்புள்ள குட்டப்புள கருகமணி போட்ட புள்ள...’ பாடின டி.கே.எஸ். நடராஜன், தேக்கம்பட்டி சுந்தர்ராஜன், பச்சேரி அழகன், தேனி குஞ்சரம்மா இவங்க எல்லாரும்தான். இவங்கள்ல பச்சேரி அழகன் எனக்கு பெரியப்பா முறை. அவர் ஒரு பல்கலைக்கழகம் மாதிரி. கிராமிய இசையில் எல்லாமே அவருக்கு அத்துப்படி. நல்லா பாடுவார், எல்லா இசைக் கருவிகளும் வாசிப்பார். கிராமியப் பாடல் பொக்கிஷங்களை கொஞ்சம் தோண்டி எடுத்துத் தந்தவங்கள்ல பச்சேரி அழகன் முக்கியமானவர். டாக்டர் கே.ஏ.குணசேகரன், கோட்டைச்சாமி, மாரியம்மா, ஆறுமுகம், சின்னப்பொண்ணு... பலரும் அவர்கிட்ட படிச்சவங்கதான்!''

''சினிமாவில் முழுமூச்சா நடிக்கவும் ஆரம்பிச்சுட்டீங்கபோல!''

''ஆமாங்க..! சின்னச் சின்னதா சினிமால தலை காட்டிட்டு இருந்தேன். இப்போ பாலா சார் படத்துல நடிச்சுட்டு இருக்கேன். 'தாரை தப்பட்டை’ல செம கேரக்டர். ரொம்ப சந்தோஷமா இருக்கு!''  

''அதென்ன ஃபேஸ்புக்ல 'ஃபோக் மார்லி’ங்கிற பேர்ல ரகளையா போட்டோஸ் அப்லோடு பண்றீங்க?''

''அட... அந்த கெட்டப்புக்கு எக்குத்தப்பு லைக்ஸ் விழுகுதப்பு. அதெல்லாம் இந்திய கிராமத்தான் லுக். பாப் மார்லி இசையை மக்களுக்காகப் பயன்படுத்தினவர். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரும் ஒரு சுதந்திர இசைக் கலைஞர். இன்னொரு முக்கியமான ஒற்றுமை... அவர் மனைவி பேரும் ரீட்டா. அவர் தன் நாட்டுக்கொடியை தன் பின்னாடி வெச்சுக்கிட்டார். நான் நம் நாட்டுக் கொடியை வெச்சுக்கிட்டேன். அவர் பேர் பாப் மார்லி. நான் ஃபோக் மார்லி. 'இங்க ஒருத்தன் ஃபோக் மார்லினு சுத்துறான்டா’னாச்சும் நம்மளைப் பத்திப் பேசுவாங்க இல்லை. அதான்... அப்படி ஒரு பேரு வெச்சுக்கிட்டேன். சீக்கிரமே வீடியோ ஆல்பம் ஒண்ணு வெளியிடப்போறேன். நீர்வளம், நிலவளம், சூற்றுச்சூழல் மாசுனு இன்றைய காலகட்டத்துக்கு என்னென்ன தேவையோ, அதைப் பாட்டா பண்ணியிருக்கோம்!''

    "நான்தான் ஃபோக் மார்லி !”

கணவன் பேசுவதை ஆதுரமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார் ரீட்டா. அதைக் கவனித்த அந்தோணி நெகிழ்ச்சியான குரலில் மனைவி பற்றிப் பேசுகிறார்.

    "நான்தான் ஃபோக் மார்லி !”

''அப்போ நான் இருந்த இருப்புக்கு கையில கத்தி, கபடா தூக்கிட்டு திரிஞ்சிருப்பேன். இல்லைன்னா கட்டப்பஞ்சாயத்து பண்ணிட்டு இருந்திருப்பேன். ஆனா, என்னையும் ஒரு மனுஷனா மாத்தி கலைஞன் ஆக்கினது ரீட்டாவோட காதல்தான். பெத்தவங்க ஆசி, நல்லவங்க உதவி எல்லாம் இருந்தாலும், கூடவே இருந்து அதட்டி, அணைச்சுக் கொண்டு வந்தது ரீட்டாதான். ரீட்டாவுக்கு நான் நன்றி சொல்ல மாட்டேன். ஏன்னா, உசுருக்கு யாராவது நன்றி சொல்லுவாங்களா!''