இந்தியா பாகிஸ்தான் - சினிமா விமர்சனம்
காதலன் இந்தியா என்றால், காதலி பாகிஸ்தான். காதல் ஜெயித்ததா..?
ஈகோ இடிக்கும் காதல், படீர் படீரென வெடிக்கும் காமெடி... அவ்வளவுதான். லாஜிக், ஜிம்மிக்ஸ் என்றெல்லாம் மெனக்கெட்டுக் கொள்ளாமல் 'சிரிச்சாப்போச்சு’ ரவுண்டு ஓட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்.
வக்கீல்கள் விஜய் ஆண்டனி, சுஷ்மா ராஜ் இருவருக்கும் கேஸ் பிடிப்பதில் போட்டா போட்டி. இருவரிடமும் ஒரே வழக்கின் எதிரெதிர் பார்ட்டிகள் கேஸ் கொடுக்க, அதகள ஆட்டம்.
செம சேஃப் கேம் ஆடியிருக்கிறார் விஜய் ஆண்டனி. படம், முழு நீள காமெடி மேளா. ஆனால், 'பவர் ப்ளே’ ஏரியாக்களை எம்.எஸ்.பாஸ்கர், பசுபதி, ஜெகன், மனோபாலா என 'பின்ச் ஹிட்டர்’களிடம் கொடுத்துவிட்டு, 'ஃபினிஷிங்’ ஸ்கோர் மட்டும் அடித்திருக்கிறார். ஒருமாதிரி மையமான ரியாக்ஷனையே காதல், காமெடி, அடிதடி என அனைத்துக்கும் கொடுத்து சமாளித்தது... வெவரம்ஜி. கொஞ்சம் கனிஹா... கொஞ்சம் அனுஷ்கா, நெகுநெகு உயரம்... அழகிலும் அலேக் நடிப்பிலும் சுஷ்மாவுக்கு தம்ஸ்-அப்!

படத்தின் சம்பிரதாயக் காதல் போர்ஷனை ஹீரோ-ஹீரோயின் பார்த்துக்கொள்ள, கலகலப்பு அத்தியாயங்களை, பந்தி பிரித்துப் பரிமாறுகிறது காமெடிக் கூட்டணி. 'முரட்டு முட்டாள்’களாக எம்.எஸ்.பாஸ்கர், பசுபதி முறுக்கி இறுக்கித் திரிவது... அலம்பல் அட்ராசிட்டி.
மூணாப்பில் ஆறு தடவை ஃபர்ஸ்ட் வந்த பெருமித பசுபதியும், ஆத்தாவின் சிக்னலுக்காகத் தவமாய்த் தவமிருக்கும் பவ்ய பாஸ்கரும் பஞ்சாயத்து, ஷாப்பிங் மால் மல்லுக்கட்டு எனக் கிச்சுகிச்சிக்கொண்டே இருக்கிறார்கள். அதிலும் மனோபாலாவுக்கு டிரெஸ் மாட்ட தூக்கிச் செல்வது... அதகளம்!
ஆனால், குபுக் குபுக்கெனச் சிரித்த பிறகு, 'ஏன் இந்த லொள்ளுசபா காமெடிக்கு இவ்வளவு சிரித்தோம்?’ எனத் தோன்றாமல் இல்லை. 'டிக்கெட் வாங்கினவங்க சிரிக்காமப் போகக் கூடாது. அதுக்காக கதை, திரைக்கதையில எந்தக் கோக்குமாக்கும் பண்ணுவோம்ல’ என முடிவெடுத்து, காமெடி நடிகர்களைச் சுளுக்கெடுத்திருக் கிறார்கள்.

விஜய் ஆண்டனி - சுஷ்மா காதலை கரை சேர்ப்பதுதான் படத்தின் நோக்கமே. ஆனால், அந்தக் காதல் தீவிரமாகவும் இல்லை... அழுத்தமாகவும் இல்லை. அட, காதல் என்றில்லை... வம்புதும்பு
பஞ்சாயத்து, என்கவுன்ட்டர் பதற்றங்கள்கூட காமெடிக்கு வழிவிட்டு 'ஜஸ்ட் லைக் தட்’ கடக்கிறது.
பாட்டனோட பாட்டனோட முப்பாட்டனுக்குப் பாட்டனும் பார்த்த காதல் கதை சினிமாதான். அதில் அச்சுபிச்சு காமெடியைக் கலக்கிக் குலுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்!
- விகடன் விமர்சனக் குழு