பா.ஜான்ஸன்
மகள், அலுவலக மீட்டிங்கில் பரபர விவாதத்தில் இருக்கிறாள். அப்பாவிடம் இருந்து அவசரத் தகவல் வருகிறது... 'மோஷன் கொஞ்சம் தண்ணியாகப்போகிறது’!
சிநேகம் வளர்க்கவேண்டி, ஒரு நண்பருடன் ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்கிறாள் மகள். உணவுக்கான ஆர்டர் கொடுக்கும் சமயம் அப்பாவிடம் இருந்து போன்... 'மோஷன் மஞ்சளும் பச்சையுமாக வெலவெலவெனப் போகிறது. உடனே டாக்டரிடம் பேசிவிட்டுச் சொல்’ - அதை டாக்டரிடம் மகள் விவரிக்க, முகம் சுளிக்கும் நண்பர் 'ரொம்பப் பசிக்கலை எனக்கு’ என ஜகா வாங்குகிறார்.
ஒரு விசேஷத்தில் 'சிங்கிள்’ இளைஞன் ஒருவன், திருமண எண்ணத்துடன் தன் மகளிடம் பேசுவதைப் பார்த்துப் பதறும் அப்பா, 'அவள், வெர்ஜின் அல்ல; பாய் ஃப்ரெண்டோடு உடலுறவு கொண்டிருக்கிறாள். அவளுக்குக் கல்யாணம் பிடிக்காது. உன் எண்ணம் பலிக்காது’ என அலறுகிறார். தலையில் அடித்துக்கொண்டு இடத்தைக் காலி செய்கிறாள் மகள்.
இந்த அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான 'டிஷ்யூம்... டிஷ்யூம்’ பாச நேச எ'மோஷன்’தான் 'பிக்கு’!
படத்தின் இயக்குநர் சூஜித் சிர்கார், இதற்கு முன் இயக்கிய 'விக்கி டோனர்’ படத்தின் பேசுபொருள் விந்து. 'பிக்கு’ படத்தில் அது... அமிதாப்பின் 'மோஷன்’. ஆனால், ஓர் இடத்தில்கூட முகம் சுளிக்கத் தோன்றவில்லை. வயோதிகத்தின் பிரச்னை, வீம்பு, பாதுகாப்பற்ற மனநிலை... எனப் பல உணர்வுகளைப் பதிக்கிறது படம்!
வேலையில் இருந்து ஓய்வுபெற்று வீட்டில் இருக்கிறார் அமிதாப். அவரது மகள் தீபிகா படுகோன் (பிக்கு) பரபரப்பான ஆர்க்கிடெக்ட். மலச்சிக்கல் பிரச்னையால் அவதிப்படும் அமிதாப், அதனாலேயே தன் உடல் நலனில் அதீத அக்கறை காட்டுகிறார். மகள் கல்யாணம் கட்டிக்கொண்டு சென்றுவிட்டால், தன்னை கவனிக்க ஆள் இல்லாமல்போய்விடுமோ என்ற பதற்றத்தில் கல்யாணத்தைப் பற்றி நெகட்டிவாகப் பேசிப் பேசி, தீபிகாவுக்குக் கல்யாணம் நடக்காமல் பார்த்துக்கொள்கிறார். வயோதிகத்தில் குழந்தைபோல நடந்துகொள்ளும் அமிதாபைச் சமாளிக்க முடியாமல், அடிக்கடி எரிச்சலாகிறாள் தீபிகா. இதனால் அடிக்கடி இவரது கோபத்துக்கு ஆளாகிறார் டிராவல்ஸ் நடத்தும் இர்ஃபான் கான்.

அமிதாப்பின் உடல்நிலை மோசமாக, 'ஒரே ஒருமுறை சொந்த ஊருக்குப் போகணும்’ என்கிறார். இர்ஃபானின் காரில் தொடங்குகிறது டெல்லி டு கொல்கத்தா பயணம். அந்தப் பயணத்தில் நடக்கும் கலாட்டாக்களும் கொல்கத்தாவில் நடக்கும் சென்டிமென்ட்களும்தான் படம்.
மகளைப் பாடாய்ப்படுத்துவது, அவள் திருமணத்துக்குத் தடைபோடுவது என கிட்டத்தட்ட படத்தின் வில்லன்... அமிதாப். ஆனால், பெரும் தொந்தியை, பிள்ளைத்தாய்ச்சி பெண் கையால் பிடித்துக்கொண்டே சிரிப்பு மத்தாப்பு கொளுத்தும் ஹீரோவும் அவரே. உடலின் வெப்பம் .1 டிகிரி உயர்ந்ததற்கும் பதறுவது, கொல்கத்தாவுக்கும் கம்மோடு நாற்காலியைத் தூக்கிச் செல்வது, சாப்பாட்டு மேஜையில் தவறாமல் 'மோஷன்’ கவலையில் புலம்புவது, போதையில் ஆடுவது... என அமிதாப்... செம மாஸ்.
காட்சிக்குக் காட்சிக்கு மெஸ்மரிக்கிறார் தீபிகா. அப்பா உண்டாக்கும் எரிச்சலில் எல்லோரிடமும் கடுகடுப்பது, அவ்வளவு கோபத்திலும் அப்பாவை விட்டுக்கொடுக்காமல் பாசம் பாராட்டுவது, பாய் ஃப்ரெண்டுக்கும் மலச்சிக்கல் எனத் தெரிந்ததும் நொந்துபோவது... என இது புது தீபிகா! இர்ஃபான் கான் தொடங்கி அமிதாப்பின் வேலையாள் வரை அனைவரும் கதாபாத்திரத்துக்கு அவ்வளவு பொருத்தம்.
'மலச்சிக்கல் பற்றிப் பேசினால், 'பாசிட்டிவ்வான விஷயம் பற்றிப் பேசலாமே’ என்று ஏன் சொல்கிறீர்கள்? அதில் நெகட்டிவ்வாக என்ன இருக்கிறது?’ என்று அமிதாப் ஆதங்கப்படுவது முதல், தீபிகா உச்சக்கட்ட கோபத்தில் கத்திக்கொண்டிருக்கும்போது நிம்மதியாக மலம் கழித்துவிட்டு வந்து... 'ஹப்பா... முன்னாடி எப்பவும் இப்படிப் போனதில்லை!’ என பரமானந்த ரியாக்ஷன் கொடுப்பது வரை படத்தின் அத்தனை திருப்பங்களுக்கும் காரணம் கழிப்பறைதான். ஆயுளின் ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களைக் கழிக்கவேண்டிய 'மோஷன் பிரச்னை’ பற்றிய முழுநீள சினிமா அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். ஆனால், வயோதிகத்தின் பிரச்னையை இளைஞர்களுக்கும் இளையவர்களின் மனநிலையை முதியவர்களுக்கும் நறுக்கென நூல் பிடித்துச் சொல்கிறாள் பிக்கு.
'நீ குழந்தையா இருக்கும்போது நான் உன்னைக் கவனிச்சுக்கிட்டேன்ல... இப்போ நான் குழந்தை. என்னை நீ கவனிச்சுக்கோ!’ என அமிதாப் சொல்லும் ஒரு வசனம்தான், படத்தின் ஒட்டுமொத்த எமோஷன்!