Published:Updated:

எலி - சினிமா விமர்சனம்

எலி - சினிமா விமர்சனம்

டத்தல் புலிகளை உளவுபார்க்கச் செல்லும் ஒரு திருட்டு 'எலி’யின் கதை! 

இந்திய சுதந்திரத்துக்கு சற்றே பிந்தைய அறுபதுகள் காலகட்டத்தில் நடக்கிறது கதை.  'காவலர் வேலை’ என்ற ஆசை நிராசையாகிறது வடிவேலுவுக்கு. அதனால் காவல் பணிக்கு எனக் கூர்தீட்டிய புத்தியை, திருட்டு உத்தி அமைக்கப் பயன்படுத்துகிறார். அவரது திருட்டுத் திறமையைப் பார்த்து வியந்து, 'வெண் சுருட்டு’ கடத்தும் கும்பலை உளவுபார்க்க அனுப்புகிறார் காவல் துறை உயர் அதிகாரி. தனது உயிரைத் துச்சமாக மதித்து அந்தச் சதிகாரக் கும்பலை 'எலி’ பிடித்ததா என்பதே... ஆவ்வ்!

படத்தில் கதை நாயகன்... வடிவேலு. அவரிடம் எந்த வசனத்தைக் கொடுத்தாலும் தனது சேஷ்டை உடல்மொழி துணைகொண்டு  சிரிக்கவைத்துவிடுவார் என்ற இயக்குநரின் நம்பிக்கையே படத்தின் எதிர் நாயகன். 'காலைப் போடுறியா..? இரு உனக்கு மாலை போடுறேன்’ ரக ராக வசனங்களால் சிரிக்கவைக்க முயற்சிக்கிறார்கள். ம்ஹ்ம்... திரையரங்கில் மயான அமைதி!  

வடிவேலு... அசாகயசூரர்தான். கழிவறையில் முக்கி முனகுவது, 'யார் அந்த எலி?’ என தலைவனிடமே கோபப்படுவது போன்ற மிகச் சில தருணங்களில் அசத்துகிறார். ஆனால், மற்ற சமயங்களில் அந்த யானைக்கு சோளப்பொறி அளவுக்குக்கூட தீனி போடவில்லை திரைக்கதை.  

எலி - சினிமா விமர்சனம்

படத்தில் வடிவேலு குழாமின் அத்தனை உறுப்பினர்களும் 'உள்ளேன் ஐயா’ சொல்கிறார்கள். ஆனால், வடிவேலுவே திக்கித் திணறித் திண்டாடும்போது, அவர்களால் மட்டும் வெள்ளாமையை வீடு சேர்க்க முடியுமா என்ன? பளபள கதை நாயகிக்கான பொறுப்பை சதா ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவ்வளவே!

எலி - சினிமா விமர்சனம்

ஜேம்ஸ்பாண்டு முதல் ஜெய்சங்கர் வரையிலான நடிகர்கள் சலிக்கச் சலிக்க நடித்த உளவாளி கதையில் கலகலப்பு சேர்க்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், அதற்காக திரைக்கதையில் எந்த மெருகூட்டலும் இல்லாமல் கற்காலப் போக்கிலேயே தற்காலத்தில் படம்பிடிக்கலாமா இயக்குநரே? கடத்தல் கும்பலில் 'எலி’ நுழைவது முதல், உச்சக்கட்டத் திருப்பம் வரையிலான அனைத்தும் நாடக பாணி சம்பவங்கள். அதிலும் அந்தச் சிறைக் காட்சிகளும் எதிர் அணியின் சரக்கைக் கைப்பற்றும் முயற்சிகளும்... அய்யகோ!

அறுபதுகளின் காலகட்டத்தை உணரவைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது தோட்டா தரணியின் கலை இயக்கம்.

வடிவேலு, ஓர் அசாத்தியக் கலைஞன். இன்றும் சின்னத்திரைகளில் அவரது முந்தைய கலகல நடிப்பு லட்சக்கணக்கானோரை வெடிச் சிரிப்பு சிரிக்கவைக்கிறது. ஆனால், அதனாலேயே 'வடிவேலு’ எனும் தேங்காயைக் காண்பித்து நம்மைப் பொறியில் சிக்கவைப்பது நியாயமாரே..!

- விகடன் விமர்சனக் குழு