Published:Updated:

'பாய்ஸ்... அந்த ரெண்டு பொண்ணும் நான் தான் !’

பா.ஜான்ஸன்படம்: குமரகுருபரன்

ழகுக்காக இல்லாமல் தன்  நடிப்புக்காக மட்டுமே லைக்ஸ் குவித்த உற்சாகம் ஐஸ்வர்யா ராஜேஷ் முகத்தில். 'காக்கா முட்டை’களின் 'அம்மா’  ஐஸ்வர்யா பிரதிபலித்த தாய்மையில் அவ்வளவு பிரியம்... பாசம்! 

''அப்பா ராஜேஷ், தெலுங்கு சினிமாவில் வில்லனா... ஹீரோவா நிறைய நடிச்சிருக்கார்; சித்தி ஸ்ரீலட்சுமி, 500 படங்களுக்கு மேல் காமெடி ரோலில் நடிச்சிருக்காங்க; தாத்தாவும் நடிகர்தான். குடும்பத்துல இப்படி நிறையப் பேர் தெலுங்கில் நடிச்சவங்க. நான்தான் தமிழ் சினிமாவில் நடிக்கிறேன்.

'இங்கே நிறைய ஐஸ்வர்யா இருக்காங்க. பெயரை மாத்திக்கங்க’னு சொன்னாங்க. அப்படி மாத்திக்கணும்னு தோணலை. அப்பா பெயரை மட்டும் சேர்த்துக்கிட்டேன். அப்பா கூடவே இருக்கிற மாதிரி ஒரு ஃபீல். ஏன்னா, என் எட்டாவது வயசுலயே அப்பா இறந்துட்டார்'' - குட்டி ஃப்ளாஷ்பேக்கில் பெரிய சோகம் சொல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.  

'' 'மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் நீங்க ஆடிப் பார்த்திருக்கோம். டான்ஸர் டு ஹீரோயின் பயணம் பற்றி சொல்லுங்க?''

''குடும்பச் சூழ்நிலைக்காக டான்ஸ் ஷோ பண்ணேன். ஒரு எபிசோடுக்கு 10,000 ரூபாய் கிடைக்கும். மாசம் நாலு எபிசோடு பண்ணிட்டா, 40,000 கிடைக்கும். பெரிய பைசா. குடும்பத்துக்கு ரொம்ப உதவியா இருந்தது. அப்போதான் டான்ஸ் மாஸ்டர் தாரா மூலமா 'அவர்களும் இவர்களும்’ பட ஹீரோயின் வாய்ப்பு கிடைச்சது.  அப்புறம் 'சட்டப்படி குற்றம்’, 'அட்டகத்தி’ படங்கள்ல சின்னச்சின்ன ரோல் கிடைச்சது. 'இனிமே சின்ன ரோல் பண்ணக் கூடாது’னு நினைச்சிட்டு இருந்தப்ப, 'ரம்மி’ படத்துல விஜய் சேதுபதி ஜோடியா நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போதான் 'பீட்சா’, 'சூதுகவ்வும்’னு அவர் பரபரப்பா இருந்த நேரம். சந்தோஷமா சம்மதம் சொன்னப்ப, 'பண்ணையாரும் பத்மினியும்’ படத்திலும் அவருக்கு ஜோடியா நடிக்கக் கேட்டாங்க. 'ஐஸ்வர்யா டபுள் ஹேப்பி அண்ணாச்சி’னு உற்சாகமாகிட்டேன். இப்போ 'காக்கா முட்டை’  படம் இன்னும் இன்னும் ஹேப்பி!''

'பாய்ஸ்... அந்த ரெண்டு பொண்ணும் நான் தான் !’

'' 'சின்னச் சின்ன ரோல் நடிக்க வேண்டாம்’னு நினைச்சீங்க. ஆனா, 'காக்கா முட்டை’யில் ரெண்டு பசங்களுக்கு அம்மாவா நடிக்க எப்படிச் சம்மதிச்சீங்க?''

''அட... அதை ஏன் கேட்கிறீங்க..? முதல்ல அந்தப் படத்துல நடிக்கக் கூடாதுனுதான் நினைச்சேன். 'பண்ணையாரும் பத்மினியும்’ படத்துல நடிச்சிட்டு இருந்தப்பதான் 'காக்கா முட்டை’ ஆடிஷன். 'நீங்க ஓ.கே. படத்துல ரெண்டு பசங்களுக்கு அம்மாவா நடிக்கணும்’னு சொன்னாங்க. 'யோசிச்சு சொல்றேன்’னு வந்துட்டேன். 'நம்மளைப் பார்த்தா அவ்வளவு வயசானவ மாதிரியா தெரியுது? அம்மாவா நடிக்கணுமாம்ல’னு நினைச்சேன். 'பண்ணையாரும் பத்மினியும்’ ஷூட்டிங் ஸ்பாட்ல

விஜய் சேதுபதி சார்கிட்ட இதை நான் சொல்ல, 'அட... மணிகண்டன் ஒரு ரோல் கொடுக்கிறார்னா சும்மா இருக்காதுங்க. அதை மிஸ் பண்ணாதீங்க’னு சொன்னார். அப்புறம் எனக்கு முழுக் கதையும் சொன்னார் இயக்குநர் மணிகண்டன். ' அந்த ரோலை மிஸ் பண்ணவே கூடாது’னு தோணுச்சு. உடனே சரினு சொல்லிட்டேன். நல்லவேளை... மிஸ் பண்ணியிருந்தா, காலத்துக்கும் வருத்தப்பட்டிருப்பேன்.''

'''காக்கா முட்டை’ பட நடிப்புக்குக் கிடைச்ச மறக்க முடியாத பாராட்டு?''

''நான் தியேட்டர்ல 'காக்கா முட்டை’  பார்த்துட்டு இருந்தப்போ, முன் ஸீட்ல உட்கார்ந்திருந்த மூணு பசங்களுக்குள்ள சண்டை. 'டேய் அந்தப் பசங்களுக்கு அம்மாவா நடிச்சிருக்கிற பொண்ணுதான்டா 'பண்ணையாரும் பத்மினியும்’ படத்துல நடிச்ச பொண்ணு’னு ஒருத்தன் சொல்ல, 'சான்ஸே இல்லை. இது நிச்சயமா வேற பொண்ணுடா’னு அவங்களுக்குள்ள சண்டை. ஒருகட்டத்துல 'நான்தாங்க அதுனு சொல்லிடலாமா!’னு தோணுச்சு. ஆனா, அவங்க சண்டையைப் பார்க்க, எனக்குப் பிடிச்சிருந்தது; சந்தோஷமா இருந்தது. அதுதான் என் நடிப்புக்கான உண்மையான பாராட்டு.''  

''சென்னைக் குப்பத்து வாழ்க்கையில் நீங்க உணர்ந்தது என்ன?''

''முழுசா 55 நாட்கள் அங்கேதான் இருந்தேன். குளிக்க மட்டும்தான் வீட்டுக்குப் போவேன். அவங்க இருக்கிறதைவெச்சே நிம்மதியா, சந்தோஷமா இருக்காங்க. திடீர்னு பார்த்தா, ஒரு அம்மா நடுவீட்ல உட்கார்ந்து துணி துவைச்சுட்டு இருந்தாங்க. 'என்னம்மா நடுவீட்ல துணி துவைக்கிறீங்க? அப்ப எங்கே தூங்குவீங்க... சமைப்பீங்க?’னு கேட்டேன். 'துவைச்சு முடிச்சு ஃபேன் போட்டுக் காயவெச்சுட்டுப் பொழங்கிக்கவேண்டியதுதான்’னு சிரிச்சாங்க. எனக்கு அதிர்ச்சியா இருந்தது. கொஞ்சம் கஷ்டப்பட்டாவது குழந்தைகளைப் படிக்க வெச்சுட்டா, அவங்க லைஃப்ஸ்டைல் முன்னேறும்னு எனக்குத் தோணுது.''

'' 'தமிழில் ஓர் உலக சினிமா’னு 'காக்கா முட்டை’யைக் கொண்டாடுறாங்க. உங்களுக்குப் பிடிச்ச உலக சினிமா எது?''

''அதான் சொல்லீட்டீங்களே... 'காக்கா முட்டை’தான்!''