அடி பொளக்கிறாரு டி.ஆரும.கா.செந்தில்குமார்
'' 'வாடி என் சில் சிலா...
காட்டாத சல் சலா...
குத்தாட்ட கும்தலா...
ஆடுவோமா அசத்தலா?’
எப்படி சார் இருக்கு 'விழித்திரு’ படப் பாட்டு? ஆல் 'லா’தான் சார். பாட்டுலாம் இப்படித்தான் எழுதணும்னு எதுவும் 'லா’ இருக்கா சார்? அந்தப் படத்துல நான் பாட்டு எழுதி, பாடி, ஆடவும் செய்றேன்'' - ஃபுல் ஸ்விங்கில் இருக்கிறார் டி.ராஜேந்தர்.

''சார்... சென்னையில பெரிய படங்களை மூணு, நாலு தியேட்டர்கள்ல போட்டப்பவே, 10, 15 தியேட்டர்கள்ல படத்தை ரிலீஸ் பண்ணவன் நான். அப்படி இன்னைக்கு டிரெண்டை அன்னைக்கே பண்ண நான்தான் இப்பவும் ஃபேஸ்புக் பசங்களுக்காக, 'ஏன் இருக்க சிங்கிளா... ஃபேஸ்புக்ல ஆவோம் மிங்கிளா’னு பாட்டு எழுத வேண்டியிருக்கு. ஒரு சினிமா விழாவில், 'இனிமே '100-வது நாளை நோக்கி’னு விளம்பரம் கொடுத்து காசை வேஸ்ட் பண்ணாதீங்க. ஒரு சீனியரா சொல்றேன்... 'காலை, மதிய, மாலை, இரவுக் காட்சி என நாலு காட்சிகள் ஓடிய வெற்றிப் படம்’னு சொல்ற நிலைமை சீக்கிரமே வந்துடும். அதனால இப்போ நாலு நாள் ஓடினாலே வெற்றிப் படம்தான். 25 நாள் ஓடினா வெள்ளிவிழாப் படம்னு நினைச்சுக்கங்க’ன்னேன். அதான் உண்மை,

யதார்த்தம், சயின்ஸ், ஃபேக்ட்!''
''அதெல்லாம் சரி சார். சிம்பு நடிச்ச 'வாலு’ பலமுறை ரிலீஸ் தேதி அறிவிச்சு தள்ளிப்போனது ஏன்? இப்ப அதை நீங்க வாங்கி ரிலீஸ் பண்றது ஏன்?''
''30 வயசைத் தொடுறதுக்குள்ள ஆன்மிகத்துல சிம்புவுக்கு இருக்கிற நம்பிக்கை... அபார நம்பிக்கை. அந்த அளவுக்கு என் பையன் பட்ட கஷ்டம், அவரை இறைவனை நோக்கிப் பயணிக்கவெச்சிருக்கு. ஆண்டவனைப் பற்றிய அற்புத நம்பிக்கையை, மனநிலையை இன்னைக்கு என் மகன் பெற்றிருக்கார். அப்படி ஆண்டவன் மீது வைத்த அதே அபார நம்பிக்கையை, இந்த அப்பா மீதும் வைத்ததால், நான் என் மகன் மீது நம்பிக்கை வைத்து, இந்தப் படத்தை வெளியிடுறேன். 'இந்தப் படத்தை டி.ஆர். ரிலீஸ் பண்ணுவார்’னு என் மகன் வெச்சான் பாருங்க ஒரு நம்பிக்கை. ஒரு மன்னன் போராடணும்னா கையில வாள் எடுப்பான். நான் என் மகனுக்காகப் போராட இந்த 'வாலு’வைக் கையில எடுத்திருக்கேன் சார்!''
''சமீபத்துல சிம்பு, 'பணம் போச்சு, லவ் பண்ணின பொண்ணும் போயிடுச்சு’னு ரொம்ப விரக்தியா பேசினாரே. அவருக்கு என்னதான் பிரச்னை?''
''பணம் ஒரு விஷயம் இல்லை. அதை விடுங்க. இதுவரை சம்பாதிச்சதைவிட சிம்பு இன்னும் நிறைய சம்பாதிப்பார். ஆனா, காதலிச்ச பொண்ணு போயிடுச்சுனு அவர் பேசினதுல இருந்து, இன்றைய இளைஞர்கள் ஒரு பாடம் படிக்கணும். காதல் மட்டுமே திருமணத்தை நடத்திவைக்காது. காலம் மட்டும்தான் திருமணத்தை நடத்திவைக்கும்!''
''இப்போ இருக்கிற இளம் ஹீரோக்கள் பலர், சிம்பு ஃபீல்டுக்கு வந்த பிறகு நடிக்க வந்தவங்க. ஆனா, சிம்பு நடிச்ச படம் கடந்த மூணு வருஷமா ரிலீஸ் ஆகலை. அவர் நடிக்கிற படங்களில் பிரச்னை வர யார்தான் காரணம்?''
''இங்கே சிக்கல் இல்லாத மனுஷன் யார் சார் இருக்கான்? அம்பானிக்கும் பிரச்னை வரும்; அம்பாசிடர் கார் வெச்சிருக்கிறவனுக்கும் பிரச்னை வரும். மனுஷனுக்கு, விக்கல் வந்தா தண்ணி குடிக்கணும்; சிக்கல் வந்தா தன்னம்பிக்கையோடு போராடணும். இது டி.ஆரோட வழக்கமான எதுகை - மோனைனு நினைக்காதீங்க. வாழ்க்கையின் அர்த்தமே இதுக்குள்ளதான் இருக்கு.
ஆனா, எனக்கே ஒண்ணு புரியலை. இன்னைக்கு சினிமாவே கஷ்டமான சூழல்ல இருக்கு. என்னமோ சிம்பு படத்துக்கு மட்டும்தான் சிக்கல்ங்கிற மாதிரி பேசுறீங்க. நான் கேக்குறதுக்குப் பதில் சொல்லுங்களேன்... 'கோச்சடையான¢’ பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு ஏன் பல நாட்கள் தள்ளிப்போச்சு? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிச்ச படம்தானே! 'லிங்கா’ படம் சம்பந்தமா திரையுலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு பிரச்னைகள் வந்ததே. கமல் ஹாசனின் 'உத்தம வில்லன்’ படமும் சொன்ன தேதியில் வெளிவரலையே. அவரோட 'விஸ்வரூபம்’ படத்துக்கு ஏன் பிரச்னை வந்துச்சு? 'இளைய தளபதி’ விஜய்க்கு 'காவலன்’, 'தலைவா’, 'கத்தி’னு வரிசையா பிரச்னைகள் வந்துச்சே. அவங்களை எல்லாம் விட்டுட்டு, சின்னப் பையன் சிம்புவை மட்டும் ஏன் சார் டார்கெட் பண்றீங்க? ரஜினி, கமல், விஜய்க்கு இல்லை சத்தம்... சிம்புன்னா மட்டும் ஏன் குத்தம்? இன்னைக்கு வருஷத்தின் 365 நாட்கள்ல 240 படம் ரிலீஸானா பிரச்னை வராமல் இருக்குமா சார்? ஆனா, மூணு வருஷம் கழிச்சு வந்தாலும் 'வாலு’ படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. அதுக்குக் காரணம்... சிலம்பரசன்தான்!''

''ஆனா, மூணு வருஷம் கழிச்சு ரிலீஸாகும் படத்தை சரியா தனுஷ் படத்தோட ரிலீஸ் பண்ற மாதிரி ப்ளான் பண்ணியிருக்கீங்களே... ஏன் சார்?''
''இதுக்கு முன்னாடியே 'மன்மதன்’, 'ட்ரீம்ஸ்’னு அவங்க நடிச்ச படங்கள் ஒண்ணா வெளிவந்திருக்கு. இப்ப 'வாலு’வுடன் 'மாரி’ வருமா... இல்லை தேதி 'மாறி’ப் போகுமானு எனக்குத் தெரியாது. சார் நான் இஸ்லாம், குர்ஆன் மேல நாட்டம் உள்ளவன். அதனால என் சூழ்நிலைக்காக இந்த ரம்ஜான் மாசத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறேனே தவிர, வேற எந்த எண்ணமும் கிடையாது!''
''மத்த படங்களை விடுங்க. உங்க 'ஒருதலைக் காதல்’ எப்ப சார் வரும்?''

''வரும் சார். நான் எத்தனை அவதாரம் எடுக்க வேண்டியிருக்குனு நீங்களே பார்க்கிறீங்க. ' 'வாலு’ படம் ஆரம்பிக்கும்போதே, 'வாலு’னு டைட்டில் வெச்சீங்கன்னா நீளும்’னு தொலைநோக்குச் சிந்தனையோடு சொன்னேன். 'வாலு’ லேட் ஆச்சு. நடுவுல ஒரு படம் பண்ணலாம்னு என் மகனுக்காக பாண்டிராஜைக் கூப்பிட்டு 'இது நம்ம ஆளு’ ஆரம்பிச்சேன். இடையில் என் மகள் திருமணம். இப்படி பலப்பல வேலைகளுக்கு மத்தியில்தான் 'ஒருதலைக் காதல்’ எடுத்துட்டிருக்கேன் சார். வரும்... தமிழ்நாடு அதிரும்!''
''நடிகர் சங்கத்தின் நீண்டகால உறுப்பினர் நீங்க. சங்கத் தேர்தல் விவகாரத்தைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?''
''சார்... ஆர்.கே. நகர் பத்திக் கேளுங்க. அது தேர்தல் களம். அதைப் பத்தியே நான் கருத்துச் சொல்லாம இருக்கேன். ஒரு நடிகர் சங்கத்தோட தேர்தல் களத்தைப் பத்தி என்கிட்ட கேட்கிறீங்களே!

''ஏன் சார்... என்ன சார் நடக்குது?''
''வெற்றி-தோல்வியைப் பத்திக் கவலைப்படாம போராடவேண்டிய தி.மு.க., இன்னைக்கு ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடாமத் தவிக்குது... தவிர்க்குது. 'எதிர்க்கட்சி’னு முரசு கொட்டுற தே.மு.தி.க-வும் போட்டி போடலை. வாய் கிழியப் பேசுற வைகோ என்ன ஆனார்? குஷ்பு மூலம் கொள்கை விளக்கங்கள் கொடுத்துட்டிருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் என்ன ஆனார்? இந்தியாவையே ஆளுற பா.ஜ.க ஏன் களத்துல இல்லை? அந்த அம்மாவை எதிர்த்து தினம் அறிக்கை விடுற பாட்டாளி மக்கள் கட்சி என்னாச்சு சார்? இப்படி யாருமே நிக்கலையாம். ஏன் நிக்கலைனு ஒரு விளக்கம்கூட இல்லையாம். 'இதெல்லாம் ஒரு இயக்கமா... தி.மு.க-வுக்கு இப்படி ஒரு தயக்கமா?’னு மக்கள் கேட்கிற கேள்விக்கு என்ன சார் பதில் சொல்வீங்க? இதுதான் என் கேள்வி. இதுக்கு மேல என்கிட்ட கேட்காதீங்க கேள்வி. நன்றி... வணக்கம்!''