Published:Updated:

"ஸ்வீடன்ல ஜெயிச்சோம்... சென்னையிலயும் ஜெயிப்போம் !”

ம.கா.செந்தில்குமார்

அட... 'லவ்வர் பாய்’ ஆர்யா, இப்போது சைக்கிளிங் சாம்பியன்! ஸ்வீடனில் நடக்கும் 'வாடெர்ன் ருண்டன்’ எனும் சைக்கிள் பந்தயத்தில் 300 கி.மீ தூரத்தை 15 மணி நேரத்துக்குள் கடந்திருக்கிறது ஆர்யாவின் 'டீம் ஜாமி’. ஆள் இன்னும் மெலிந்து, இறுகி, செம ரஃப் லுக்கில் இருக்கிறார் ஆர்யா. 

''ரேஸ்ல கலந்துக்கணும்னு நான் சைக்கிளிங் பண்ணலை. உடல் எடையை சீக்கிரம் குறைக்க சைக்கிளிங்தான் சிறந்த பயிற்சினு ஆரம்பிச்சேன். நாலைஞ்சு மணி நேரம் தொடர்ந்து சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சப்போ, ஸ்வீடன் போட்டி பற்றிய நியூஸ் படிச்சேன். அதுல 'இந்தியர்கள் சிலர் கலந்திருக்காங்க. ஆனா, இந்தியர்கள் ஒரு டீமா அந்தச் சவாலை முறியடிச்சது இல்லை’னு சொன்னாங்க. மணிக்கணக்கா சைக்கிள் ஓட்டின ஆர்வத்துல, 11 நண்பர்களைப் பிடிச்சு ஒரு டீமை உருவாக்கினேன். அதுல நான் மட்டும்தான் சினிமா ஆளு. மத்தவங்க எல்லாரும் வேற வேற துறை!''

   "ஸ்வீடன்ல ஜெயிச்சோம்... சென்னையிலயும் ஜெயிப்போம் !”

''என்னவெல்லாம் பயிற்சி எடுத்துக்கிட்டீங்க?''

''டீம் உருவாக்கத்தான் ரொம்பக் கஷ்டப்பட்டேன். 'என்னது... 300 கிலோமீட்டரா, சைக்கிள்லயா?’னு நண்பர்கள் தயங்கினாங்க. ஆனா, முடிவெடுத்து இறங்கின பிறகு அவங்களோட ஆர்வமும் வியர்வையும் ஆச்சர்யம். 'இப்படி இப்படிப் பண்ணலாம்’னு நாம ஐடியா கொடுக்கலாம். ஆனா, அவங்கதானே பயிற்சி எடுக்கணும். வாரத்துல ஒரு நாள், ரெண்டு நாள் வேணும்னா அதிகாலை 3 மணிக்கே எழுந்திரிச்சு பயிற்சிக்கு வந்துடலாம். ஆனா, ஒருநாள்கூட மிஸ் ஆகாம தொடர்ந்து ஆறு மாசம் அப்படிப் பயிற்சி எடுக்கிறது சாதாரண விஷயம் இல்லை. அப்புறம் ஸ்வீடன்ல பந்தயத் தூரம் 300 கிலோமீட்டரும் மலை, ஏரிப் பகுதிகள்தான். அந்த மாதிரியான மலையும் மலை சார்ந்த பகுதிகளும் சென்னையில இல்லை. இதுக்காக தினமும் ஊட்டி, கொடைக்கானல்னு போய் பயிற்சி எடுக்கவும் முடியாது. ஆனா, அதிக தூரத்துக்கு இங்கே தீவிரமா பயிற்சி எடுத்தா, நிச்சயமா 300 கிலோமீட்டரை ஸ்வீடன்ல தாண்டலாம்னு நம்பிக்கையோடு பயிற்சி எடுத்தோம். தினமும் அதிகாலையில் கிளம்பி, குறைஞ்சது 175 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுவோம். ஏற்ற இறக்கமான மலைப் பகுதிகளில் சோர்வு அடையாம சைக்கிள் ஓட்ட, உடம்புல எப்பவும் எனர்ஜி இருக்கணும். அதுக்கு ஜிம், பீச் ரன்னிங்னு நிறையப் பயிற்சிகள். இப்படி மாசக்கணக்கா கஷ்டப்பட்டு ஸ்வீடன்ல 300 கி.மீ தூரத்தை சைக்கிள்லயே கடந்தப்ப, 'இந்தியாவில் இருந்து முதல்முறையாக ஒரு டீம் இந்தச் சவாலில் சாதித்திருக்கிறார்கள்’னு அறிவிச்சாங்க. நம்புங்க பாஸ்... எதையும் 'ஜஸ்ட் லைக் தட்டா’ எடுத்துக்கிற எனக்கே மெய் சிலிர்த்திருச்சு!''

''சுள்ளுனு எடை குறைஞ்சிட்டீங்களே... இது, உங்க ஹீரோ கேரியருக்கு சிக்கலை உண்டாக்குமா?''

''நல்லதுதான் பண்ணும். பொதுவா நாம எவ்வளவு வெயிட்டா இருந்தாலும், பைக் நம்மை மல்லுக்கட்டி இழுத்துட்டுப்போயிரும். ஆனா சைக்கிள்ல, உங்க வெயிட்டை நீங்கதான் தூக்கிச் சுமக்கணும். நீங்க அஞ்சு கிலோ கூடுதலா இருந்தா, 300 கி.மீ வரைக்கும் அந்த  எடையை நீங்கதான் தூக்கிட்டுப் போகணும். அது இன்னும் பிரஷர். வேகம் குறையும். அப்ப நிச்சயமா நீங்க உயரத்துக்கு ஏற்ற வெயிட்தான் இருக்கணும். அதுக்கு டயட் முக்கியம். கூடுதலா நாலைஞ்சு மணி நேரம் சைக்கிள் மிதிச்சு அந்த எடையைக் குறைக்கலாமேனு மிதிச்சேன். உடம்புல தேவை இல்லாத கொழுப்பு எல்லாம் காலி. உடம்பே மிதக்கிற மாதிரி இருக்கு. என் கால்கள் இப்போ இரும்பு மாதிரி இருக்கு. போட்டி முடிஞ்சிட்டாலும் அவுட்டோர் ஷூட் போறப்போ சைக்கிளையும் எடுத்துட்டுப்போய் ஓட்டலாம்னு தோணுது. ஜாலியா ஊர் சுத்திப் பார்த்த மாதிரியும் ஆச்சு... எடையைக் கட்டுப்பாட்டுல வெச்சுக்கிட்ட மாதிரியும் ஆச்சு!''

   "ஸ்வீடன்ல ஜெயிச்சோம்... சென்னையிலயும் ஜெயிப்போம் !”

''அந்த 11 பேர் கொண்ட குழுவில் உங்க சினிமா நண்பர்களையும் பிடிச்சுப் போட்டிருக்கலாம்ல?''

''இப்பவே விஷால், கார்த்தி, ஜீவா, சந்தானம் எல்லாரும் என்கூட சும்மா சைக்கிளிங் பண்ணாங்க. ஆனா, போட்டியில கலந்துக்கிற அளவுக்குத் தீவிரமா பண்ணலை. அடுத்த வருஷம் எல்லாரும் இந்த ரேஸ்ல கலந்துக்கணும்னு ஆர்வமா இருக்காங்க. காரணம்... இது ஒரு வாழ்நாள் அனுபவமா இருக்கும். பல நாடுகள்ல இருந்து வந்த 20 ஆயிரம் பேரோடு சைக்கிள் ஓட்டுறது நிறைய விஷயத்தைப் புரியவைக்கும். அவங்க என்ன ஸ்டைல்ல, என்ன ஸ்பீடுல ஓட்டுறாங்க. அவங்களோட பலம், ஸ்டாமினா எந்த அளவுக்கு இருக்குனு அங்கே போன பிறகுதான் தெரிஞ்சது. 60 வயசு தாண்டின தாத்தா, பாட்டி எல்லாம் பந்தயத் தூரத்தை சுலபமா கடந்தாங்க. நம்ம ஊர்ல எல்லா தாத்தா பாட்டிகளாலயும் அது முடியுமா? வாழ்க்கை முழுக்கவே உடம்பைக் கட்டுக்கோப்பா வெச்சிருக்கணும்னு திட்டம்போட்டு வாழ்றாங்க. அதைக் கத்துக்கவாவது ஹீரோ பாய்ஸை ஸ்வீடனுக்குக் கடத்திட்டுப்போயிருவேன்!''

''நீங்க கூப்பிட்டா உங்க ஹீரோயின் தோழிகளும் வந்திருவாங்களே?''

''கேட்டுட்டேனே (அதானே..!) 'ஷ்யூர் ஜாமி... நிச்சயம் வர்றோம்’னு சொல்லியிருக்காங்க. ஏன்னா, அங்கே சைக்கிளிங் பண்ணவங்கள்ல

35 சதவிகிதம் பெண்கள்தான். இதெல்லாம் சொல்லி கேன்வாஸ் பண்ணவும், 'டீல்... அடுத்த வருஷம் நிச்சயமா நாங்களும் வர்றோம்’னு சொல்லிட்டாங்க. ஆனா, அடுத்த வருஷம் கூப்பிடுறப்போதான் தெரியும் யார் எல்லாம் வர்றா, யார் எல்லாம் தெறிச்சு ஓடுறாங்கனு. அதுவும்போக, ஏற்கெனவே நமக்கு இங்கே நல்ல பேர். இதுல சில ஹீரோயின்களை நான் அங்கே அழைச்சுட்டுப் போயிட்டா, 'ஹீரோயின்களை அழைத்துச் சென்றுவிட்டார்... ஆர்ர்ர்ர்ர்யா’னு கதை கட்ட ஆரம்பிச்சுடுவாங்க!''

''உங்க தோழி நயன்தாரா மீண்டும் காதல், கல்யாண சர்ச்சையில் சிக்கியிருக்காங்க. அவங்ககிட்ட பேசினீங்களா?''

''தப்பா பேசுறவன் எப்பவும் பேசிட்டேதான் இருப்பான். அதையெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டா இங்கே எதுவுமே செய்ய முடியாது. என்னையும் நயன்தாராவையும் கமிட் பண்ணி ஒரு பேச்சு இருந்துச்சு. ஆனா, நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோமா என்ன? 'பாருங்கப்பா... அந்தக் கிசுகிசு எல்லாம் உடான்ஸ்’னு இப்போ நான் சத்தம்போட்டுச் சொல்லிட்டிருக்க முடியுமா என்ன? காதல் அவங்கவங்களோட பெர்சனல் விருப்பம். ஆனால், அந்த லவ்வுல அவங்க சந்தோஷமா இருக்கணும். அவ்ளோதான்!''

''நடிகர் சங்கத் தேர்தல்ல சீனியர்களைத் தாண்டி உங்க டீம் ஜெயிக்க முடியும்னு நம்புறீங்களா?''

''ஜெயிப்போம்னு நம்பித்தான் போட்டி போடுறோம். ஒரு விஷயத்தைக் கூடி விவாதிக்கக்கூட எங்களுக்குனு ஒரு இடம் இல்லைங்கிற விஷயத்தை வெளியே கொண்டுவந்திருக்கோம். அதுவே எங்களுக்கு வெற்றிதான். நாங்க யாரும் வாக்குறுதி கொடுத்துட்டு ஓடிப்போற ஆள் இல்லை. நாங்க எல்லாரும் அடுத்தடுத்து நிறையப் படங்கள் பண்ணிட்டிருக்கோம். இங்கேயேதான் இருக்கப்போறோம். தவிர, வெற்றி-தோல்வியைத் தாண்டி நடிகர் சங்கத்துல தீர்க்கவேண்டிய  பிரச்னைகள் ஏகப்பட்டது இருக்கு. அட... மத்த எல்லாத்தையும் விடுங்க... 'இத்தனை வருஷங்களா நீங்க பொறுப்புல இருந்துட்டீங்கள்ல. அடுத்து இளைஞர்களுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க’னுதான் நாங்க கேட்கிறோம். ஏன்னா, ஒரு கட்டடம் கட்டுறதோ, காம்ப்ளெக்ஸ் கட்டுறதோ, எங்களைப் பொறுத்தவரை ரொம்ப சுலபமான விஷயம். இளம் ஹீரோக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு ஸ்டார் நைட்டோ, ஒரு படமோ பண்ணா தேவைப்படும் நிதியை சுலபமா வசூலிச்சுடுவோம். இதுக்கு ஏன் இத்தனை வருஷப் போராட்டம்னுதான் எங்களுக்கு ஆச்சர்யமா இருக்கு!''