Published:Updated:

“ஒரு நபர் ராஜாங்கம் இப்போ இல்லை !”

பா.ஜான்ஸன்

டேப் ரிக்கார்டர், சி.டி யுகத்தில் 'அழகிய அசுரா...’, 'டேய்... கைய வெச்சுக்கிட்டு சும்மா இருடா...’ ஹிட்கள். ஐ டியூன்ஸ், சார்ட் பஸ்டர் யுகத்தில் 'சொய்... சொய்...’, 'ஊதாக்கலரு ரிப்பன்...’, 'டண்டணக்கா ணக்கா ணக்கா...’ வைரல்கள். காலங்கள் மாறினாலும் டிரெண்டிங் டியூன்களில் பின்னுகிறார் டி.இமான்.  

''முதல் படத்துக்குப் பிறகு பல தடங்கல்கள்.  இப்போ உங்க டியூன்களை, பல மொழிகளில் ரைட்ஸ் வாங்கி ரீமேக் பண்ற அளவுக்கு வளர்ச்சி. இமான் ஹேப்பியா?''  

''ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஆனா, அந்தச் சந்தோஷத்துக்குப் பிறகு பல கண்ணீர் இரவுகள் இருக்கு. 'காதலே சுவாசம்’னு முதல் படத்துக்கு நான் மியூசிக் பண்ணப்போ, எனக்கு 15 வயசு. அந்தப் படம் இன்னைக்கு வரை வெளியாகலை. அப்புறம் மியூசிக் பண்ண படங்கள்ல பாடல்கள் எல்லாம் நல்லா இருக்குனு சொல்வாங்க. ஆனா, அடுத்து வாய்ப்புகள் வராது. 'ஐயோ... மியூசிக் இமானா..? வேண்டாமே’னு பல தயாரிப்பாளர்கள் சொல்லி நானே கேட்டிருக்கேன். அப்போ அர்ஜுன் சாரும், சுந்தர்.சி சாரும்தான் நிறையப் படங்கள் கொடுத்து, என்னைத் தேத்தினாங்க.  அவங்க ஆதரவு இல்லைன்னா, இப்போ நான் இல்லை!''

“ஒரு நபர் ராஜாங்கம் இப்போ இல்லை !”

''எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்னு ஒவ்வொருத்தரும் ஒரு பீரியடுல இண்டஸ்ட்ரியைக் கையில் வெச்சிருந்தாங்க. இப்போ  அந்த அளவுக்குப் பலத்த தாக்கத்தை எந்த இசையமைப்பாளரும் ஏற்படுத்தலையே?''

'' இசையோ, இயக்கமோ, வேற எதுவோ... சில குறிப்பிட்ட நபர்களை மட்டும் சார்ந்து இயங்குற நிலைமையில் சினிமா இப்போ இல்லை. ஒரே ஒருத்தர் ராஜாங்கம் நடத்துன காலம் மாறிடுச்சு. புதுப்புது திறமைகளோடு, ஐடியாக்களோடு நிறையப் பேர் வர்றாங்க. அதனால் இது இன்னாருடைய காலகட்டம்னு நிர்ணயிக்க முடியாது. அதே மாதிரி எப்பவுமே ஒரு நல்ல பாடல் மட்டும்தான் ஜெயிக்குதானு கேட்டா... இல்லை. வெற்றிபெற்ற எல்லா பாடல்களும் நல்ல பாடல்களானு கேட்டா... அதுவும் இல்லை. அதனால் ரசிகர்களின் ரசனையை ஈர்க்கும்  இசையைக் கொடுக்கிறவங்க, அந்தந்தச் சமயத்துல சென்டர் ஸ்டேஜ் எடுத்துப்பாங்க. இதுதான் இப்போ நிலைமை!''

''நீங்க யாரோட மியூசிக் விரும்பிக் கேட்பீங்க?''

''நான் ஸ்கூலுக்குப் போயிட்டிருந்தப்ப ரஹ்மான் சார் டைம். நான் முதன்முதலா விரும்பிக் கேட்ட மியூசிக் அவருடையதுதான். மியூசிக் பண்ண ஆரம்பிச்ச பிறகுதான், ராஜா சார் மியூசிக் கேட்க ஆரம்பிச்சேன். இப்போ எனக்குள்ள ராஜாங்கம் பண்றது ராஜா சார் மியூசிக்தான்!''

''ஒவ்வொரு ஆல்பத்திலும் ஒரு ஹிட் கொடுத்துடுறீங்க. அந்த ஹிட் பாட்டு கம்போஸ் பண்ண மட்டும் ரொம்ப நேரம் எடுத்துக்குவீங்களோ?''

''ரொம்ப நேரம்  எடுத்துக்கிட்டா, அந்த டியூனை அப்படியே வெச்சுட்டு வேற யோசிக்க ஆரம்பிச்சுடுவேன். ஒரு பாட்டுக்கான சூழல் சொன்னதும் டக்குனு ஒரு ஐடியா தோணும். அதுதான் இதுவரை ஹிட் ஆகியிருக்கு. ஒரு பாடலின் முதல் ரசிகர் இயக்குநர்தான். அவரை அந்த டியூன் திருப்திப்படுத்தணும். 'முதல் ரெண்டு லைன் ஓ.கே. சரணம் மட்டும் மாத்திக்கலாம்’னு யாராவது சொன்னா, 'அந்த டியூனே வேண்டாம்’னு சொல்லிடுவேன். அதனால் அதிகபட்சம் 25 நிமிஷத்துக்குள் ஒரு பாட்டு தயாராகிடும். ரொம்ப நேரம் எடுத்துக்கிற எந்த டியூனும் என் ஸ்டுடியோ விட்டு வெளியே போகாது. சமயங்கள்ல அப்படி ஒரு பட கம்போஸிங்ல நேரம் எடுத்துக்கிட்ட டியூன், இன்னொரு பட கம்போஸிங்ல பக்காவா செட் ஆகும். 'ஊதா கலரு ரிப்பன்...’ டியூன் முதல்ல 'தேசிங்குராஜா’ படத்துக்காக கம்போஸ் பண்ணது. ஆனா, அப்ப செட் ஆகலை. அப்புறம்  'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ சமயம் அது பயன்பட்டது. ஆல்பத்துல அந்தப் பாட்டு பெரிய ஹிட்டாகவும் படத்துல அந்தப் பாட்டுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்தாங்க. மறக்க முடியாத பாட்டு அது!''

“ஒரு நபர் ராஜாங்கம் இப்போ இல்லை !”

''இசையமைப்பாளரா அறிமுகமான 'தமிழன்’ படத்துலயே நீங்க விஜயைப் பாடவெச்சீங்க. இப்போ புது பாடகர்களை அதிகமா அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டுறதும் நீங்கதான். பிரபலத்துக்கும் அறிமுகத்துக்கும் என்ன வித்தியாசம்?''

''வித்தியாசம் எதுவும் இல்லை. புதுத் திறமையாளர்களை அடையாளப்படுத்தணும்னு ஒரே நோக்கம்தான். புதிய பாடகர்களைப் பயன்படுத்தும்போது பாடலே வேற டோன்ல தெரியும். அவங்களுக்கும் ஓர் அறிமுகம் கிடைக்கும். அப்படி தேடிக் கேட்டு நான் மிரண்ட குரல் வைக்கம் விஜயலட்சுமியின் குரல். மலையாளத்தில் ஏற்கெனவே பாடிட்டு இருந்தவங்களை தமிழ்ல பாடவைக்கலாம்னு முடிவெடுத்தப்ப, மாற்றுத்திறனாளியான அவங்களை அலையவெச்சு சிரமம் கொடுக்க வேணாம்னு கேரளாவுக்கேப் போயிட்டோம். அதுவரை நான் பாடல் பதிவுபண்ண மொத்த அனுபவத்தையும் மொத்தமா மாத்திட்டாங்க விஜயலட்சுமி. 'என்னமோ ஏதோ’ படத்துக்காக 'புதிய உலகை’ பாட்டு. டியூன், வரிகள் சொல்லி ரெண்டு, மூணு தடவைதான் பாடிக் காமிச்சேன். ஒரே டேக்ல பாடிட்டாங்க. எனக்குச் சிலிர்த்துடுச்சு. இப்போ அதைச் சொல்லும்போதும்கூட எனக்குப் புல்லரிக்குது. இறைவனின் குழந்தை அவங்க!''

''திடீர்னு தொடர்ந்து ஹீரோயின்களைப் பாட வெச்சுட்டிருக்கீங்களே... அதுவும் புதுத் திறமையை அடையாளப்படுத்தத்தானா?''

''நம்புங்க... அதான் ஐடியா! 'ஃபை ஃபை ஃபை... கலாச்சிஃபை’ பாடலை யாரைப் பாடவைக்கலாம்னு யோசிச்சுட்டே இருந்தேன். 'இவன் மெஹரூபன்’னு ஒரு மலையாளப் படத்தில் 'ஆண்டே லோண்டே...’னு ஒரு செம சாங்... சூப்பர்ப் குரல். அதை அடிக்கடி கேட்பேன். அந்தக் குரல் இந்தப் பாட்டுக்குப் பொருத்தமா இருக்குமேனு விசாரிச்சா, அதைப் பாடினது ரம்யா நம்பீசன்னு சொன்னாங்க. லட்சுமி மேனனுக்குள் இருந்த பாடகியை எனக்கு அடையாளம் காட்டியது விகடன்தான். யூடியூப்ல விகடன் வீடியோவில், 'ஐயய்யயோ ஆனந்தமே...’ பாட்டை அவங்க பேஸ் வாய்ஸ்ல பாடியிருந்தாங்க. அவங்க பாடின விதம் ரொம்ப நல்லா இருந்தது. அந்தக் குரலுக்குப் பொருந்துற பாட்டு வரட்டும்னு காத்திருந்து, அவங்களை  'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ பட 'குக்குறு குக்குறு...’ பாட்டு பாட வெச்சேன்.''

''குடும்பம் பத்திச் சொல்லுங்களேன்...''

''மனைவி மோனிகா ரிச்சர்டு. ரெண்டு பெண் குழந்தைகள். வெரோனிகா, ப்ளசிகா. என் டியூன்களுக்கு, 'இது ஓ.கே’, 'இது வேண்டாம்’னு டிக் போடுறதே அவங்கதான். கார்ல போறப்ப என் புது டியூன் ப்ளே பண்ணுவேன். அவங்களுக்குப் பிடிக்கலைனா, உடனே பாட்டை மாத்தச் சொல்லுவாங்க. பிடிச்சிருந்தா, கூடவே சேர்ந்து பாட ஆரம்பிச்சுடுவாங்க. மழலைக் குரல்ல அவங்க பாட ஆரம்பிச்சா, அப்புறம் எஃப்.எம்-கள்ல அது ரிப்பீட் அடிக்கும்.

“ஒரு நபர் ராஜாங்கம் இப்போ இல்லை !”

அப்பா டேவிட் என்கூட இருக்கார். அம்மா மஞ்சுளா டேவிட் பத்தி பேசிட்டே இருக்கலாம். என் இசைக் கனவுகளை நனவாக்கினது அம்மாவின் ஆதரவுதான். ஸ்கூல் பையனா இருந்தப்போ, கீ-போர்டு வகுப்புக்கு, அம்மாதான் கீ-போர்டை சுமந்துட்டே வருவாங்க. ரொம்ப சின்ன வயசுலயே  என் திறமை, விருப்பத்தைப் புரிஞ்சுட்டு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாம எனக்கு பக்கபலமா இருந்தாங்க. ஆறு வருஷம் முன்னாடி இறந்துட்டாங்க. பெரிய இழப்பு. அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன். கண்டிப்பா என் இசையை எங்கேயோ இருந்து கேட்டுட்டேதான் இருப்பாங்க!''