சினிமா
Published:Updated:

“டான்ஸ்ல விஜய்தான் வின்னர்!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படம்: எம்.உசேன்

ஷோபி... தமிழ் சினிமாவின் 'மோஸ்ட் வான்டட்’ நடன இயக்குநர். 

22 வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 200 படங்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் என அத்தனை மாஸ் ஹீரோக்களையும் ஆட்டுவித்தவர். இவரது மனைவி லலிதாவும்  நடன இயக்குநர்தான்.  ''பேட்டி கொடுக்கும்போது இருவரா இருக்கோம். பேட்டி வர்றதுக்குள்ள அநேகமா ஒரு ஜூனியர் வந்திருவாங்க!'' எனச் சிரிக்கிறார் ஷோபி. லலிதா... இப்போது நிறை மாதக் கர்ப்பிணி. ''எப்படி உக்கார்ந்தாலும் உதைக்குமே செல்லம்!'' என்றபடி காதல் கணவனின் மடியில் சாய்ந்து அமர்கிறார் லலிதா. சினிமா, நடனம், காதல் என லீடு பிடித்து கதை சொல்லத் தொடங்கினார் ஷோபி.

''ரெண்டு பேரும் சோறும் தண்ணியும்கூட இல்லாம இருந்துடுவோம்; ஆனா, சினிமாவும் டான்ஸும் இல்லாம இருக்க முடியாது.  அப்பா பால்ராஜ் டான்ஸ் மாஸ்டர். அவர் மூலம்தான் டான்ஸ் ஆர்வம் வந்தது. மத்தவங்க ஆசைக்கு பி.காம் படிச்சுட்டு, என் ஆசைக்கு டான்ஸ் ஆட வந்துட்டேன். சின்னி பிரகாஷ், சுந்தரம் மாஸ்டர், ராஜூ சுந்தரம், பிரபு தேவானு எல்லா மாஸ்டர்களிடமும் வேலைபார்த்தவன் நான். லலிதாவுக்கு, சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டார். அவங்க அம்மா சகுந்தலாதான் அவங்களை வளர்த்தாங்க. பரதநாட்டியம், வெஸ்டர்ன்னு பல வகை டான்ஸ் கத்துக்கிட்டு, மாஸ்டர் ஆகிட்டாங்க!'' என்று ஷோபி சொல்ல, ''என் கதை நான் சொல்லிக்கிறேன்!'' என்று இடைமறிக்கிறார் லலிதா.

 “டான்ஸ்ல விஜய்தான் வின்னர்!”

''பல வருஷம் டான்ஸரா இருந்தேன். இயக்குநர் ராஜமௌலிதான் 'மரியாத ராமண்ணா’ தெலுங்குப் படத்தில் என்னை நடன இயக்குநரா அறிமுகப்படுத்தினார். ஆனா, என்னை ஒரு ஹீரோயினா அறிமுகப்படுத்தணும்தான் அவருக்கு ஆசை. அதுக்கான சூழல் அமையலை. அங்கே ஆரம்பிச்சு அமிதாப் பச்சன், கமல் ஹாசன், சிரஞ்சீவி, அஜித், விஜய், பிரபாஸ், ஐஸ்வர்யா ராய், ஜோதிகானு எல்லாருக்கும் நடன இயக்குநராக இருந்திருக்கேன். இப்போ ஃபுல் ரெஸ்ட். அப்புறம்...  எங்க ரெண்டு குடும்பமும் சின்ன வயசுல இருந்தே பழக்கம். ராஜூ சுந்தரம் மாஸ்டர்கிட்ட ஒண்ணா வேலை பார்த்துட்டு இருந்தோம். அப்ப ஃப்ரெண்ட்ஸ்லாம் 'நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறீங்கதானே?’னு கிண்டல் அடிப்பாங்க. அப்போ வரை நண்பர்களாத்தான் இருந்தோம். அப்புறம் காதல் வந்தது. பத்து வருஷக் காதல் கல்யாணத்துல முடிஞ்சது. இப்போ குட்டிப் பாப்பாவுக்கு வெயிட்டிங்!''

 “டான்ஸ்ல விஜய்தான் வின்னர்!”

'உங்க சினிமா கேரியரின் ஹைலைட்ஸ் சொல்லுங்க...'' - ஷோபி மாஸ்டருக்கான கேள்வி.

'' 'விருமாண்டி’ படத்துக்கு, ஒரு நடன இயக்குநருக்கான எல்லா தகுதியும் உள்ள உதவி நடன இயக்குநர் தேவைனு கேட்டு, என்னை ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டார் கமல் சார். ஒவ்வொரு விநாடியும் அவர்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். சினிமாவுக்காக மட்டுமே வாழ்றவர் அவர். அந்தப் படத்துல நடிச்ச காளை மாட்டை, அது கன்னுக்குட்டியா இருக்கிறப்ப இருந்தே வீட்ல வெச்சு  வளர்த்திருக்கார். அப்பதான் ஷூட்டிங் சமயம் அவர்கூட  சொல்றதைக் கேட்டு நடிக்கும்... அந்தக் காட்சி இயல்பா இருக்கும்னு பிளான். அவ்வளவு தொலைநோக்குப் பார்வையோடு செயல்படுறவர். லலிதாவை 'உத்தம வில்லன்’ மூலமா தமிழ்ல நடன இயக்குநரா அறிமுகம் செய்ததும் கமல் சார்தான்.    

அப்புறம் 'எந்திரன்’ படத்துக்காக என்னைக் கூப்பிட்டார் ஷங்கர் சார். 'ஒரு ரோபோவுக்கும் ஒரு பொண்ணுக்கும் காதல் வருது. பெரிய பாட்டு கிடையாது. சின்ன பிட்தான். ஆனா, அதுதான் படத்தின் அடுத்தடுத்த காட்சிகளுக்கு அழுத்தம்  கொடுக்கும். ரஜினிதான் அந்த ரோபோ. அந்தப் பொண்ணு ஐஸ்வர்யா ராய்’னு சொன்னார். மியூசிக்குக்கு ஃபுல் ஸ்விங் டான்ஸ் போட்டோம். ரஜினி சார் அதைப் பார்த்துட்டு, 'சூப்பர்டா கண்ணா. செமத்தியா ஆடுன. இதை நான் பண்ண முடியுமா?’னு கேட்டார். 'கவலையேபடாதீங்க. கலக்கிடலாம்’னேன். ஒரு ரோபோ எப்படி டான்ஸ் ஆடும்னு புரிஞ்சுக்கிட்டு ரிப்பீட் மோடில் பயிற்சி எடுத்து ஆடி அசத்தினார். சின்னச் சின்ன விஷயம் பண்ணாலும் பெருசா உற்சாகப்படுத்துவார் ரஜினி சார். ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும், 'குடும்பத்துக்கும் நேரம் செலுத்துங்க. கடுமையா உழைங்க... கண்டிப்பா ஜெயிப்பீங்க’னு சொல்வார்.

 “டான்ஸ்ல விஜய்தான் வின்னர்!”

எவ்வளவு கஷ்டமான ஸ்டெப் போட்டாலும் அதை மாத்தச் சொல்ல மாட்டார் விஜய். அஜித் சார்  இப்போ நடிச்சுட்டு இருக்கிற படத்துல தரை லோக்கலா ஒரு டான்ஸ் ஆடியிருக்கார். தியேட்டர் தெறிக்கும். சூர்யா எந்த சவாலுக்கும் ரெடினு வந்து நிப்பார். இப்படி தனுஷ், சிம்பு, ஆர்யானு எல்லா ஹீரோக்களுக்கும் டான்ஸ்னா அவ்வளவு பிரியம்!''

'சரி... இந்த ஹீரோக்கள்ல செமத்தியா டான்ஸ் ஆடுறவங்க யார்?''

''ஓ... இவரைச் சிக்கவைக்கப் பார்க்கிறீங்களா... அதுக்கு அசர மாட்டார்!'' என்று லலிதா சிரிக்க, தொடர்கிறார் ஷோபி.

''இதுல சந்தேகம் என்னங்க... விஜய் சார்தான்! இதை நான் சொல்றதால எந்த ஹீரோவும் கோவிச்சுக்க மாட்டாங்களே... ஏன்னா, அது அவங்களுக்கே தெரியும். எந்த ஸ்டைல் டான்ஸ் கொடுத்தாலும் அடிச்சு தூள் பண்ணிடுவார் விஜய்.

'கத்தி’ படத்துல 'பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா...’ பாட்டு பீட் கேட்டதும், டான்ஸ்ல விஜய் சாரை வெச்சு நிறைய மேஜிக் பண்ண முடியும்னு நினைச்சேன். அவரும், 'பாட்டு தாறுமாறு. கொஞ்சம் பார்த்துப் பண்ணுங்க’ன்னார். ஏர்போர்ட் செட்டப்ல ஃபிளைட்ல ஆரம்பிச்சு அத்தனை பொருட்களையும் பிராப்பர்ட்டியா வெச்சு பட்டையைக் கிளப்பிட்டோம். படத்துல பார்த்தா அது ஒரு ஏர்போர்ட் மாதிரியே தெரியாது. ஏதோ பப் மாதிரி இருக்கும். அந்தப் பாடலின் கொரியோகிராபிக்குத்தான் விகடன் எனக்கு 'சிறந்த நடன இயக்குநர்’ விருது கொடுத்தது. அப்புறம் ஏழு விருதுகள் வாங்கிட்டேன். இதுக்கு எல்லாம் காரணம் விஜய் சார்தான். இன்னைக்கு ட்ரெண்டுக்கு தமிழ் சினிமால விஜய்தான் டான்ஸ்ல நம்பர் 1.''

'அந்தப் பாட்டு போக, கஷ்டப்பட்டு வேலை பார்த்த பாடல்கள் எவை?''

'' 'ஐ’ படத்துல வரும் 'மெர்சலாகிட்டேன்’ பாட்டு. அதுல விக்ரம் செம லோக்கலா ஆடுவார். அதே சமயத்துல ஏமி ஒரு ரிச் மாடலா ஆடணும். அந்த ரெண்டு ஒரே பாட்டுல பொருந்தணும். அது செம சவாலா இருந்தது. 'மன்மதன் அம்பு’ படத்துல 'நீள வானம்...’ பாட்டு ரிவர்ஸ்லயே போகும். அதுக்கு நிறைய முன்னேற்பாடுகள் பண்ணவேண்டி இருந்தது. 'தில்லாலங்கடி’ படத்துல 'சொல் பேச்சு கேட்காத சுந்தரியே...’ பாட்டுல நிறைய 'ஜெயம்’ ரவி, தமன்னா ஒரே ஃப்ரேம்ல ஆடிட்டே வர்றது, 'டாக்ஸி... டாக்ஸி’, 'வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’னு அடுக்கிட்டே போகலாம்!''

 “டான்ஸ்ல விஜய்தான் வின்னர்!”

''போதும்... போதும்... நானும் கொஞ்சம் பேசணும்!'' என்று கணவனை ம்யூட் பண்ணிவிட்டு தொடர்ந்தார் லலிதா.

''ஹீரோயின்கள்ல எல்லாருமே மிரட்டல் குயின்கள். குஷ்பு, சிம்ரன்ல ஆரம்பிச்சு இப்போ ஸ்ருதி, தமன்னா, லட்சுமி மேனன் வரை எல்லாரும் போட்டிபோட்டு டான்ஸ் ஆடுவாங்க. தமன்னாவுக்குத் தமிழ் தெரியாது. ஆனா, பாட்டைக் கேட்டுக் கேட்டு மனப்பாடம் பண்ணிட்டு டான்ஸ் ஆடிட்டே கச்சிதமான டைமிங்ல லிப் சிங்க் பண்ணிருவாங்க. ஸ்ருதி ஒவ்வொரு பாட்டுலயும் ஏதாவது வித்தியாசமா ஸ்கோர் பண்ண நினைப்பாங்க. த்ரிஷா டான்ஸ் பண்ணிட்டே முகத்துல அவ்வளவு எக்ஸ்பிரஷன்ஸ் கொடுப்பாங்க. 'குஷி’ சமயத்துல இருந்தே, ஜோதிகா மேம் பழக்கம். இப்போ

 “டான்ஸ்ல விஜய்தான் வின்னர்!”

'36 வயதினிலே’ 'வாடி ராசாத்தி’ பாட்டுக்கு என்னை கொரியோகிராப் பண்ணக் கூப்பிட்டாங்க. நான் அப்போ நாலு மாசக் கர்ப்பம். ஆனா, ஜோதிகா ரீ-என்டரி படம்னு உடனே சம்மதிச்சேன். அந்தப் பாட்டுக்காக லுக், காஸ்ட்யூம், பாடி லாங்வேஜ்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் அவ்வளவு மெனக்கெட்டாங்க ஜோ!''

'வெளியே இருந்து பார்க்கிறப்போ டான்ஸர்களின் வாழ்க்கை ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு. நிஜத்திலும் அப்படித்தானா?'

''சூப்பர் கேள்வி! எப்பவும் கலர் கலரா டிரெஸ் போட்டுட்டு ஜாலியா பிரபலங்களோடு ஆடிட்டே இருக்கிற மாதிரி தெரியும். ஆனா, நாங்க அனுபவிக்கிற வேதனைகள் வெளியே யாருக்கும் தெரியாது. டான்ஸ் பண்ணா அது ஓர் உடற்பயிற்சி, உடம்பு ஆரோக்கியமாக இருக்கும்னு எல்லாரும் நினைப்பாங்க. ஆனா, அதுலாம் தினம் கொஞ்ச நேரம் பண்ணாதான் அப்படி. ஒரு நாளைக்கு, தொடர்ந்து 10 மணி நேரம் ஆடிட்டே இருந்தா, வலி பின்னும். குரூப் டான்ஸர்கள் பலருக்கும் 40 வயசுக்கு மேல எலும்பு தேஞ்சிரும். ஒருகட்டத்துக்கு மேல அவங்களால் ஆடவே முடியாத சூழ்நிலை வந்திரும். அதுவும் 1,000 பேர் எங்க சங்கத்துல மெம்பரா இருக்காங்க. அத்தனை பேருக்கும் வேலை கிடைச்சிராது. ஒரு படத்துல அஞ்சு பாட்டு இருந்தா, அதுல ரெண்டு, மூணு பாடல்கள்ல ஹீரோ, ஹீரோயின் மட்டும் ஆடிருவாங்க. ஒண்ணு ரெண்டு பாட்டுக்குத்தான் 30 டான்ஸர்ஸ் வரை தேவைப்படுவாங்க. சில படங்கள் பாட்டே இல்லாம வரும். நான் எதையும் தப்பா சொல்லலை. இவ்ளோ பிரச்னைகளை மீறித்தான் சில டான்ஸர்களுக்கு வேலை கிடைக்கும். ஒரு நாள் சம்பளம் 2,000 ரூபாய். ஒரு பாட்டு அதிகபட்சம் ஆறு நாள்ல ஷூட்டிங் முடிஞ்சுடும். மீதி நாள் எல்லாம் வருமானத்துக்கு என்ன பண்ணுவாங்க? அதுவும் 35 வயசுக்கு மேல இருக்கிறவங்களுக்கு அந்த வாய்ப்பும் வராது.  அவங்களுக்கு டான்ஸ் தவிர வேற எதுவுமே தெரியாது. ஆனா, வயிறுனு ஒண்ணு இருக்குல்ல... ஆட்டோ ஓட்டுவாங்க, வாட்ச்மேன்,  ஹோட்டல்ல சர்வர்னு வேலை பார்ப்பாங்க. இப்போதான் சங்கத் தேர்தல்ல ஜெயிச்சிருக்கேன். பார்ப்போம் என்னால என்ன எல்லாம் நல்லது பண்ண முடியும்னு!'' என்று கணவனை தாய்மைப் பூரிப்பு மினுங்க பெருமையாகப் பார்க்கிறார் லலிதா.