சினிமா
Published:Updated:

“எதுவும் செய்யலாம்கிற லைசென்ஸ் எனக்கு இருக்கு!”

ம.கா.செந்தில்குமார், படம்: ர.சதானந்த்

''இப்படிப்பட்ட பயணம் யாருக்குக்கிடைக்கும்? இதுல வலிகள், சந்தோஷங்கள், புது தொடுவானங்கள், புதுப் பாதைகள், புது ருசி, புது நதிகள், புது மனிதர்கள், புது அனுபவங்கள், என் சிந்தனையை மாற்றிய சில விஷயங்கள், என்னைக் கீழே தள்ளினால் மறுபடியும் எழுந்து நிற்கும் சக்தியை நானே உணர்ந்த விநாடிகள் இருக்கு. 'பரவாயில்லையே, இதுவரைக்கும் தப்பிச்சு வந்துட்டியே’னு நினைக்கத்தோணுது!'' - ''இத்தனை வருடப் பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது எப்படி இருக்கு?'' என்ற கேள்விக்கு, இப்படிப் பதில் சொல்கிறார் பிரகாஷ்ராஜ்.

பல மொழிப் படங்களுக்காகப் பரபரவென பறந்துகொண்டிருப்பவரை 'தூங்காவனம்’ டிரெய்லர் வெளியீட்டுக்காக வந்திருந்தபோது சந்தித்தேன்.

''கமலுடன் நடிக்கும் மூன்றாவது படம் 'தூங்காவனம்’. இரண்டு பவர் பெர்ஃபார்மர்கள் சேரும்போது கண்டிப்பாகப் போட்டி இருந்திருக்குமே?''

''ஒரு கதை, ஒரு விநாடி, ஓர் உணர்வு... அதை வெளிப்படுத்துவதற்கு எவ்வளவு தேவையோ அதுதான் நடிப்பு. ஒருவரைவிட இன்னொருவர் அதிகமாகவோ குறைவாகவோ நன்றாகவோ நடிக்கிறார் என்பது அல்ல நடிப்பு... கொடுத்த கதாபாத்திரத்தை அந்த அளவில் வெளிப்படுத்த முடியுமா என்பதுதான். ஆனால், கமல் சாரிடம் அனுபவங்களைத் தாண்டி பல கதாபாத்திரங்களின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் வேற ரேஞ்சில் இருக்கு. அப்பேர்ப்பட்ட சிறந்த நடிகரோடு நடிக்கும்போது உங்களை அறியாமல் அது இன்னோர் இடத்துக்கு போய் நிற்கும். அது ஆரோக்கியமான சேலஞ்ச். இந்தப் படத்தைப் பார்க்கும்போது அந்த ஆச்சர்யத்தை உணர்வீர்கள். அப்படி அடர்த்தியான நடிப்பு, கதாபாத்திர அமைப்பு... இந்தப் படம் பெரிய அனுபவமா இருக்கும்.''

 “எதுவும் செய்யலாம்கிற லைசென்ஸ் எனக்கு இருக்கு!”

''தூங்காவனம்’ படத்தின் சிறப்பு என்ன?''

''இதிலும் நிச்சயமாக ஓர் அடர்த்தியான எதிர்மறைக் கதாபாத்திரம்தான். எனக்கு நடிப்பைவிட இந்தப் படத்தில் பிடித்தது ராஜேஷ் என்கிற இயக்குநர், ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ், சுகா என்கிற எழுத்தாளர் என இந்த டீம் அமைந்த விதம். இன்னோர் இடத்துக்கு இன்னோர் உயரத்துக்குப் போகக்கூடிய நடிப்பை, ஓர் எழுத்தை, ஓர் இசையைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இப்படி முழுமையான ஒரு புரொடக்ஷனை வெகுநாளைக்குப் பிறகு வியந்து பார்க்கிறேன். அதனால்தான் கமல் சாரை நான் வியக்கிறேன். அவர் தேர்ந்தெடுத்த இந்தக் கதை மட்டும் இல்லாமல், ஒரு சினிமாவை அடுத்த தளத்துக்கு எப்படி எடுத்துட்டுப்போகணும் என்ற எண்ணத்தில் டிசைனிங் செய்திருக்கிறார். நாம் இருப்போம். நாம் இல்லாத இடத்திலும் நாம் இருப்போம்; இதுல அந்த விஷன், அவர் இல்லாத இடத்திலும் இருக்கும். அவங்கவங்க வேலையை பொறுப்பா செய்வதற்கான சுதந்திரமும் அந்த வேலையைச் செய்ய அவர் தேர்ந்தெடுத்த மனிதர்களும் நம்பக்கூடியவர்களாக இருந்தார்கள்; நம்பிக்கைக்குத் தகுதியுடையவர்களாக இருந்தனர். அதுதான் 'தூங்காவனம்’ படத்தின் சிறப்பு.''

''த்ரிஷா... நீங்கள் அவருடன் தொடர்ந்து பல படங்களில் பயணிக்கிறீர்கள்...''

'' 'கில்லி’யில் துரத்தித் துரத்திக் காதலிக்கிற வில்லனாக இருப்பேன். 'அபியும் நானும்’ல ரொம்ப நேசிக்கிற அப்பாவாக, அப்படியே ஆந்திரா சென்றால் ஒரு மாமனாராக இருப்பேன், இன்னொரு படத்தில் காமுகனாக இருப்பேன். ஒருமுறை ஒரு விமானப் பயணத்தில் த்ரிஷாவே இந்தக் கேள்வியைக் கேட்டாங்க. 'பிரகாஷ், நான் உங்களை எப்படிப் புரிஞ்சிக்கிறது? அந்தந்த விநாடியில் அது அதுவாக இருக்கீங்க. எல்லாமுமாக இருக்கீங்க?’ன்னாங்க. பிரபலமான நடிகர்கள், நடிகைகள் பலருக்கும் இந்தக் கேள்வி இருக்கு. ஆனால், மக்கள் ரொம்பத் தெளிவா இருக்காங்க. அவங்க ஒரு படைப்பாகத்தான் திறமையைப் பார்க்கிறாங்க. ஒரு நடிகன் என்பவன் எல்லாவற்றையும் பண்ணிட்டு இருக்கணும். சிலருக்கு மட்டும்தான் மக்கள் அந்த லைசென்ஸைக் கொடுப்பாங்க. 'நீ என்ன வேணும்னாலும் பண்ணு, அதை நான் ஏத்துக்கிறேன். உனக்கு அந்த இமேஜ் கிடையாது’ங்கிற அந்த அற்புதமான லைசென்ஸை மக்கள் எனக்குத் தந்திருக்காங்க. அதை நான் கொண்டாடிட்டு இருக்கேன். அவ்வளவுதான்.''

''டேய்... டூய்...னு கத்தி கதறுற வில்லன் தொடங்கி இன்று 'தனி ஒருவன்’ சைலன்ட் கில்லர் வில்லன் அர்விந்த் சுவாமி வரை... வில்லன்களின் பரிணாம வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க?''

''அது இயக்குநர்களைப் பொறுத்து மாறும். எம்.ஆர்.ராதா, நம்பியார் சார், எஸ்.வி.ரங்காராவ், பாலையா, அசோகன், ரகுவரன், அடுத்து பிரகாஷ்ராஜ், இப்ப வந்திருக்கும் அர்விந்த் சுவாமி, சம்பத், கிஷோர்... இப்படி வெவ்வேறுவிதமான வில்லன் பாத்திரங்கள் வந்துட்டுத்தான் இருக்கும். கத்திட்டே இருக்கிற, சிரிச்சிட்டே பேசுற, காதலிக்கிற... வில்லன்கள், எண்ணங்களால் வில்லனாக இருப்பவர்கள்னு இந்த நெகட்டிவ் ஷேட்ஸ் காலத்துக்கு தகுந்தாற்போல் மாறிட்டே இருக்கும். 'தூங்காவனம்’ வில்லன் வேறயா இருப்பான். 'கில்லி’யின் வில்லன் வேறயா இருப்பான். நான் ஹ்யூமரை உள்ளே எடுத்துட்டு வந்துட்டேன். அதுவும் ஓர் உணர்வுதானே? இன்னைக்கு நவாஸுதின் சித்திக், இர்ஃபான் கான், பொம்மன் இரானினு வெவ்வேறு வில்லன்கள் வெவ்வேறு கோணத்தைக் கொண்டு வருகிறார்கள். இயக்குநர்களின் பார்வை வெவ்வேறுவிதமான டைமன்ஷன்ல இருக்கும்போது அதுக்கு அடாப்ட் ஆக முடிஞ்சா அவங்க இருப்பாங்க. இல்லைனா, புது ட்ரெண்டும், புது நடிகர்களும் வருவாங்க.''

 “எதுவும் செய்யலாம்கிற லைசென்ஸ் எனக்கு இருக்கு!”

''பல படங்களைத் தயாரித்து இருக்கிறீர்கள்... சில படங்களை இயக்கியும் இருக்கிறீர்கள். ஆனால், அவை கமர்ஷியலாகப் பெரிதாக வெற்றிபெறவில்லை என்ற வருத்தம் இருக்கிறதா?''

''வருத்தம் இல்லை... வலி. உண்மையாவே வலிக்குது. நீ நேசிக்கும் ஒரு விஷயத்தின் மூலமா உனக்கு ஓர் அடையாளம் வேணும். இதுதான் என் அடையாளம்னு சொல்லும்போது அது பணரீதியா எனக்கு நஷ்டத்தைக் கொடுக்கும்போது அது பணத்தைவிட அது சேரவேண்டிய அளவுக்குப் போய் சேரலையே என்கிற வலி. அதை ஒண்ணும் பண்ண முடியாது. தனக்குப் பிடிச்ச படங்கள் பார்க்கணும் என்பது பார்க்கிறவர்களின் உரிமை. 'நான் கஷ்டப்பட்டு ஒரு படம் எடுத்திருக்கேன். நீ இதைத்தான் பார்க்கணும்’ என நிர்ணயிக்கவோ யாரையும் நிர்பந்திக்கவோ முடியாது. ஏன்னா, அவன் பார்த்தாதான் அது சினிமா. உண்மையைச் சொல்றதா இருந்தா, நான் எடுக்கிற படங்களைப் பார்க்கிறவர்களின் எண்ணிக்கை கம்மியா இருக்கு. அதுக்காக நாம மாற முடியாது. நான் நானாகத்தான் இருக்கணும், அவங்க அவங்களாத்தான் இருக்கணும். என்னைக்காவது ஒருநாள் என் படங்களைப் பார்ப்பாங்கனு நம்புறேன். தவிர, தொலைப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லை. நான் வெறும் 140 ரூபாயுடன்தான் சென்னைக்கு வந்தேன். நான், என் உடம்பு, உன் மனசு, என் நம்பிக்கை, என் லட்சியம் எல்லாமே என்கிட்டதான் இருக்கு. தொலைச்சது வெறும் காசுதான். அதுவும் சம்பாதிச்சதைத்தான் தொலைச்சிருக்கேன். சொத்தை விக்கலை, சோறு இல்லாம உட்காரலை. நீங்க எனக்குக் கொடுத்திருக்கிற கௌரவமா இருக்கட்டும், அதைப் பிரசவிச்ச ஒரு சந்தோஷமா இருக்கட்டும் அதைக் காசால நீங்க நிர்ணயிக்க முடியாது. என்னை மக்களுக்குப் பிடிக்கிறதும் இதனாலதான். வலி எப்போதுமே நம்மதா இருக்கணும்; சந்தோஷத்தை மட்டும்தான் நாலு பேருக்குக் கொடுக்கணும். மூச்சு வாங்கிறதை நிறுத்த முடியாதே நண்பா. வாழ்ந்துட்டே இருக்கணும், போராடிட்டே இருக்கணும், செஞ்சிட்டே இருக்கணும். பல உளிகளின் அடி பட்டால்தான், அழகான ஒரு சிற்பம். அதைக் கடைசியில் பார்ப்போம். ஆமாம், அந்த 140 ரூபாய் இன்னும் என்கிட்ட அப்படியே இருக்கு.''

''உங்களை கண்டறிந்த கே.பி சாரை, இன்னைக்கு எந்த அளவுக்கு மிஸ் பண்றீங்க?''

''ரொம்ப. ஞாபகம் வருது. கடன் தீர்க்க முடியலையே! அவர் கொடுத்த அளவுக்கு அவருக்குத் திருப்பிக் கொடுக்க முடியலையேனு தோணுது. பித்தனின் கவிதைதான் ஞாபகம் வருது. 'எரிவதைவிட ஏற்றியது உயர்ந்தது’. அவர் ஏற்றினார்... நான் தீபமாகிட்டேன். நானும் நாளைக்கு ஏற்றணும். தாய்க்கு அன்பைத் திருப்பித் தர முடியுமா... பூமிக்கு நாம் திருப்பித் தர முடியுமா? அதனுடைய வயது என்ன, நம் வயது என்ன? அவர் எங்கள் எல்லார் மூலமாகவும் இப்பவும் வாழ்ந்துட்டு இருக்கார். நாளைக்கு நான் ஏதாவது தவறு பண்ணிட்டா, 'கே.பி-யோட புள்ளை இப்படிப் பண்ணிட்டானா?’ என்ற கெட்ட பெயர் எடுத்துட்டு வராத அளவுக்கு வாழ்ந்துட்டு இருந்தாலே போதும். அவர் இழப்பு ரொம்பப் பெரிய வலி. ஏன்னா, என் திசையை மாற்றிய தீபம் அவர். 'நான் என் சுயநலத்துக்காகத் தானே அவங்க எல்லாரையும் என் படத்துல பயன்படுத்தினேன். அவனவன் திறமையில் அவனவன் நின்னான்’னு சொன்னது அவரது பெருந்தன்மை. எங்களைப் போன்ற ஆயிரம் ஆயிரம் பேருக்கு வழிகாட்டியதுபோல், எங்களாலும் 10 பேரை உருவாக்க, வழிகாட்ட முடிந்தால் பெரிய விஷயம். அதுதான் எங்களால் கொடுக்க முடிந்தது. நானும் கமல் சாரும் கடந்து வந்த வாழ்க்கை வேறு வேறு. அவர் வாழ்க்கையைப் பற்றி எனக்கோ, என் வாழ்க்கையைப் பற்றி அவருக்கோ தெரியாது. அப்படிப்பட்ட இருவர் ஒருவரைப் பற்றி பேசும்போது எங்க இருவர் கண்களிலும் கண்ணீர். அவரை மிஸ் பண்ணுகிறோம். ஆனால், அப்பேர்பட்ட ஒரு மனிதரால் அறிமுகப்படுத்தப்பட்டோம் என்கிற பாக்கியம் இருக்கிறது. உண்மையில் எங்களைவிட பெரிய பணக்காரர்கள் இல்லை.''