பா.ஜான்ஸன்
நிஜ வாழ்க்கை 'ரியல் ஹீரோ’க்கள் கதையில் மானே, தேனே மசாலா தடவி 'ரீல் ஹீரோ’க்கள் நடிக்கும் 'பயோபிக் கலாசாரம்’ இப்போது சினிமாவில் டிரெண்டிங். 'மேரிகோம்’, 'மில்கா சிங்’ என்பவை வெளிவந்த உதாரணங்கள். வெளிவரவிருக்கும் உதாரணங்களின் டீஸர்-கட் இங்கே...
மண்டோ

சாதத் ஹசன் மண்டோ... பாகிஸ்தானைச் சேர்ந்த உருது மொழி எழுத்தாளர். உருது இலக்கியத்தில் பெரும் ஆளுமையான இவர், உருது மொழித் தேர்வில் தோல்வியடைந்தவர். துணிச்சலான தளங்களே அவரது கதைக்களங்கள். குறிப்பாக, 'ஓப்பன் இட்’ (தமிழில்...'திற’) சிறுகதை மிகவும் பிரபலம். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைதான் மண்டோ கதைகளின் பிரதான காலம் களம். பிரிவினை உண்டாக்கிய பாதிப்புகள், பாலியல் குற்றங்கள், மரணங்களை இவர் கதைகள் விலாவாரியாக விவரிக்க, அவை பல சர்ச்சைகளைக் கிளப்பின. மண்டோ தன் இறுதி ஏழு வருடங்களில் எழுதிய கதைகள், அவற்றால் அவர் சந்தித்த பிரச்னைகள்... இவைதான் இந்தப் படத்தின் கதைக்களம். மண்டோவின் கதைகளைப்போலவே படமும் எந்தச் சமரசமும் இன்றி ரத்தத்தையும் சத்தத்தையும் அழகியலோடு பதிவுசெய்திருக்கிறதாம். 'பாகிஸ்தான் திரை வரலாற்றில் படம் ஒரு ட்ரெண்ட் செட்டர் ஆகும்’ என்கிறார், மண்டோவாக நடித்ததோடு படத்தை இயக்கியிருக்கும் சர்மத் கூசத். இப்போதைக்கு பாகிஸ்தானில் மட்டும் வெளியாகியிருக்கும் இந்தப் படம், விரைவில் திரைவிழாக்கள் மூலம் நம்மையும் நெருங்கும் என எதிர்பார்த்திருக்கிறார்கள் மண்டோவின் அதிதீவிர ரசிகர்கள்.
தல்வார்

2008-ம் ஆண்டு நடந்தது ஆருஷி படுகொலை. 'பெற்றோரே மகளைக் கொலை செய்தார்கள்’ என்ற செய்தி கேட்டு நாடே பரபரத்தது. அந்தச் சம்பவம்தான் 'தல்வார்’ இந்திப் படம். பிரபல இந்தி பாடலாசிரியர் குல்ஸாரின் மகள் மேக்னா குல்ஸார்தான் படத்தின் இயக்குநர். கொலைக்கான தண்டனை பெற்ற பிறகும் தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாகச் சொல்லும் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார் தம்பதியின் கோணம், சி.பி.ஐ-யின் கோணம், ஊடகம் மற்றும் பொதுமக்களின் கோணம்... எனப் பல கோணங்களில் அந்தப் பிரச்னையை அணுகுகிறதாம் படம். 'இன்னார்தான் குற்றவாளி’ என்ற எந்த விஷயத்தையும் முன்வைக்காமல் அவரவர் தரப்பு நியாயங்களை மட்டும் திரைக்கதை பிரதானப்படுத்துமாம். படத்தில், வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக இர்ஃபான் கான், ஆருஷியின் தாயாக கொங்கனா சென், தந்தையாக நீரஜ் கபி என பெரும் நட்சத்திரப் பட்டாளம். திரைவிழா பரபரப்பு மூலம் தியேட்டரில் அதகளப்படுத்தலாம் என்பது படக்குழுவினரின் எதிர்பார்ப்பு!
ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றி ஏற்கெனவே இரண்டு படங்கள் வெளியாகியிருக்கின்றன. மூன்றாவது சினிமா 'ஸ்டீவ் ஜாப்ஸ்’. முதலில் வெளியான ஜாப்ஸ் படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறாததும் இந்தப் படம் உருவாக ஒரு காரணமாம். ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்த பின், வால்டர் இசாக்சன் எழுதிய ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியானது. அந்தப் புத்தகம்தான் இந்த சினிமாவுக்கு அடிப்படை. '300’, 'எக்ஸ் மேன்’, '12 இயர்ஸ் எ ஸ்லேவ்’ போன்ற படங்களில் நடித்த மைக்கேல் ஃபேஸ்பெண்டர், ஸ்டீவ் ஜாப்ஸாக நடிக்கிறார். 'ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையின் அதிமுக்கியப் பக்கங்களைப் படம் காட்டும்’ என்கிறார் இயக்குநர் டேனி பாயல். 'டெல்லுரைட்’ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு டெரா பைட் பாராட்டுகளைக் குவித்த படம் அக்டோபரில் ரிலீஸ்!
ஹசீனா

மும்பையின் ஒரிஜினல் 'பாட்ஷா’ 'தாவூத் இப்ராஹிம்'. அவரின் 12 தங்கைகளில் ஒருவர்தான் ஹசீனா பார்க்கர். 'காட்மதர் ஆஃப் நாக்பாடா’ என அழைக்கப்படும் ஹசீனா மீது மிரட்டல், நில அபகரிப்பு... எனப் பல வழக்குகள் இருக்கின்றன. ஹசீனாவின் கணவர் இஸ்மாயில், 1991-ம் ஆண்டு ஒரு துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டார். தாவூத்தின் அண்டர்கிரவுண்டு டீலிங்கைக் கவனித்துக்கொண்டதில் ஹசீனாவுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. லேடி டானாக ஊரையே கலக்கிவந்தவருக்கு, சென்ற வருடம் ரம்ஜான் நோன்பின்போது மாரடைப்பு வந்திருக்கிறது. மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் முன்பே உயிர் பிரிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அத்தனை பெரிய டானின் தங்கையின் மரணத்தில் என்ன மர்மம்... இதுதான் படம். 'ஹசீனா’வாக நடிக்கவிருப்பது சோனாக்ஷி சின்ஹா. கிளாமர் பொம்மையாக இல்லாமல், அதட்டல் மிரட்டல் டானாக சோனாக்ஷி என்ன செய்வார் எனக் காத்திருக்கிறது பாலிவுட்!
பாஜிராவ் மஸ்தானி

ரோமியோ-ஜூலியட் கதையைத் தழுவி 'ராம்லீலா’வாக எடுத்த சஞ்ஜய்லீலா பன்சாலியின் அடுத்த வரலாற்றுத் திரைப்படம் 'பாஜிராவ் மஸ்தானி’. 1720-ம் ஆண்டில் மராத்தியப் படையில் பேஷ்வாவாக இருந்தவர்தான் பாஜிராவ். 'பேஷ்வா’ என்றால் தலைமை அமைச்சர். பாஜிராவ், பேஷ்வாவாக இருந்தபோது நடந்த 41 யுத்தங்களிலும் வெற்றி கண்டார். ஆனால், படத்தின் பேசுபொருள் அது அல்ல. பாஜிராவ், காசிபாய் என்கிற பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறக்கிறார்கள். அதன்பின் 'மஸ்தானி’ என்ற இஸ்லாமியப் பெண்ணுடன் நடக்கும் திருமணம், அவர்களுக்குப் பிறக்கும் மகன்... அதனால் பாஜிராவைத் தாக்கும் அரசியல் எனப் பயணிக்கிறதாம் கதை. பாஜிராவாக ரன்வீர் சிங், காசிபாயாக பிரியங்கா சோப்ரா, மஸ்தானியாக தீபிகா படுகோன் என செம ஸ்டார் காஸ்டிங். இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் தயாராகிவரும் படத்தின் பட்ஜெட் 120 கோடிக்கும் மேல். போர்க்காட்சிகள், பிரமாண்ட அரண்மனைகள்... என படத்தின் டீஸரே லைக்ஸை அள்ள, படத்துக்காக கண்கள் படபடக்கக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். 'ராம்லீலா’வைப்போல இதிலும் விமர்சனம் ப்ளஸ் வசூல் அள்ளிவிடவேண்டும் எனக் கவனமாக ஒவ்வோர் அடியையும் எடுத்து வைத்திருக்கிறாராம் சஞ்சய்!
என்னு நின்டே மொய்தீன்

60-களில் நடந்த நிஜ சம்பவம்தான் 'என்னு நின்டே மொய்தீன்’ மலையாள சினிமா. கோழிக்கோட்டில் உள்ள பள்ளியில் படிக்கும் மொய்தீனும் காஞ்சனாவும் நண்பர்கள். சூழ்நிலையால் வெவ்வேறு பள்ளிகளில் சேர்கிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகு காஞ்சனாவிடம் மொய்தீன் தன் காதலைச் சொல்ல, அவரும் சம்மதிக்கிறார். ஆனால், இருவீட்டாரும் எதிர்க்கிறார்கள். வீட்டுக் காவலில் அடைத்து வைக்கப்படுகிறார் காஞ்சனா. 'கண்டிப்பாக நான் திரும்ப வருவேன், இது என் வாக்கு’ எனச் சொல்லிவிட்டு முக்கியமான வேலைக்காகக் கிளம்புகிறார் மொய்தீன். அதுதான் காஞ்சனா, மொய்தீனைக் கடைசியாகச் சந்தித்தது. பிறகு மொய்தீன் படகு விபத்தில் இறந்த செய்தி மட்டும் வந்து சேர்கிறது. இன்றும் மொய்தீனின் நினைவுகளுடன் கேரளாவில் வாழ்கிறார் காஞ்சனா. மொய்தீனாக பிருத்விராஜும், காஞ்சனாவாக பார்வதி மேனனும் நடிக்க, படத்தை விமல் இயக்கியிருக்கிறார். காஞ்சனாவுக்கு ஒரு புத்தகம் தபாலில் வருகிறது. சில வாரங்களில் மீண்டும் அதேபோல ஒரு புத்தகம். புத்தகத்தின் உள்ளே சில பக்கங்களில் ஓர் எழுத்து மட்டும் வட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த எழுத்துக்களைச் சேர்த்து வரிசைப்படுத்த, 'எம்...ஓ...ஐ...’ எனும்போதே அது மொய்தீன் எனத் தெரிந்துகொள்கிறார் காஞ்சனா. இப்படி கவிதையாகவே காட்சிகளை வடித்திருக்கிறார்கள். கிளாசிக் காதல் சினிமாவாக ஃப்ரேமுக்கு ஃப்ரேம் செதுக்கியிருக்கிறார்களாம் படத்தை!