சினிமா
Published:Updated:

49-ஓ - சினிமா விமர்சனம்

49-ஓ - சினிமா விமர்சனம்

'தேர்தல்ல நிக்கிற வேட்பாளர்கள் யாரும் பிடிக்கலைன்னா '49-ஓ’ போடச் சொல்றீங்க... சரி. தகுதி இல்லாத வேட்பாளர்களை நிறுத்துற அரசியல் கட்சிகளுக்கு என்ன தண்டனை?’ 

- சம்மட்டி அடியாகக் கேட்கிறார் 'கம்பேக்’ கவுண்டமணி!  

வறுமை பிய்த்துத் திங்க, ஊரில் இருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு விற்கிறார்கள். அதற்கான பணமும் வரமால், விவசாயமும் செய்ய முடியாமல் முடங்கிக்கிடக்கிறார்கள். சமாளிக்க முடியாமல் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்ள, 'இன்னும் ஒரு விவசாயிகூட தற்கொலை செய்துகொள்ளக் கூடாது’ எனக் கிளம்புகிறார் கவுண்டமணி. ஊரில் நடக்கும் இடைத்தேர்தலை வைத்து அரசியல்வாதிகளை மடக்க வியூகம் வகுக்கிறார். நிலங்கள் மீட்கப்பட்டதா என்பதே கதை!

'அட்றாசக்க... அட்றாசக்க... அட்றாசக்க’ ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் கவுண்டமணி. கவுன்ட்டர் காமெடிகளோடு தான் கோலோச்சிய லொள்ளு ஜொள்ளு யுகம் இப்போது இல்லை என்பதை உணர்ந்திருப்பவர், மிக சென்சிட்டிவ் பிரச்னை பேசும் படத்தில் தன் பழக்கவழக்கமான பன்ச்களை வெளுக்கிறார்!

49-ஓ - சினிமா விமர்சனம்

வகைதொகை இல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளையும் குத்திக்காட்டும் வசனங்கள், விவசாயிகளின் நிலைமையை சுளீர் வீரியத்துடன்  காட்சிப்படுத்தியது எனக் கரிசனம் காட்டியிருக்கும் அறிமுக இயக்குநர் ஆரோக்யதாஸுக்கு சம்சாரிகளின் சார்பாக வந்தனம்.

'ஏய்... யாருப்பா நீ... எம்.எல்.ஏ-வுக்கு நிக்கிறியா... போய் வரிசையில நில்லு!’, 'எங்களுக்கு 100, 200 வீசிட்டு நீ போய் கோடிகோடியா கொள்ளை அடிக்கிறியே!’, 'அரைப் படம் நடிச்சவன்லாம் ஹீரோவாம்... ரியல் எஸ்டேட் விளம்பரத்துல நடிக்க வந்துடுறான்’, 'மக்களுக்கு கெட்டது நடக்கிறப்போ தனித்தனியா நிக்கிற நீங்க, நல்லது நடக்கிறப்போ அதைக் கெடுக்க மட்டும்

49-ஓ - சினிமா விமர்சனம்

ஒண்ணு கூடிர்றீங்களே!’ - நக்கலும் நையாண்டியுமான வசனங்களே அதிர்வேட்டு. அது கவுண்டர் எகத்தாளத்துடன் வரும்போது டபுள் ட்ரீட்டு. அதிலும் ரியல் எஸ்டேட் விளம்பரங்களைக் கலாய்க்கும் 'ஆறடி தாய்மடி சுடுகாடு திட்டம்’ (மனைக்கு அருகில் பேருந்து நிலையம், மருத்துவமனை, வணிக வளாகம் போன்ற எந்த இழவும் இல்லை!) அட்டூழியம் கவுண்டரே! விவசாயிகள் பிரச்னை, அரசியல்வாதிகளின் சுயநலம், ரியல் எஸ்டேட் கொள்ளை, ஓட்டுக்குப் பணம் வாங்கும் மக்கள் மனம் என பல சீரியஸ் பிரச்னைகளைப் பேசிக்கொண்டே இருப்பதால், படம் முழுக்க ஒரே பிரசார நெடி. அதனாலேயே, சின்ன படமாக இருந்தாலும் இரண்டு ஷோ பார்க்கும் உணர்வு!

ஆனாலும், அரசாங்கமே அக்கறை காட்டாத விவசாயிகள் மீது கவனம் குவிக்கும் இந்த '49-ஓ’-வுக்கு அழுத்தமாகக் குத்தலாம் ஓர் ஓட்டு!

- விகடன் விமர்சனக் குழு