சினிமா
Published:Updated:

ஸ்வீட் ‘வில்லி’ ஸ்ரீதேவி

கி.கார்த்திகேயன்

பிறந்து, தவழ்ந்து, நடந்து பேசத் தொடங்கிய பருவத்தில் இருந்து இப்போது வரை 'உச்ச நட்சத்திர’ அந்தஸ்துடன் இருக்கும் மிகச் சில இந்தியர்களில் ஒருவர் ஸ்ரீதேவி. அமிதாப், ரஜினி, கமல் போல இந்தியா முழுமைக்கும் தெரிந்த மிகச் சிலரில் ஒருவர். இவருடைய கவலை என்ன தெரியுமா? 'ஃப்ளைட் லேட் ஆகிரக் கூடாதுங்க. பொண்ணுங்க வீட்டுக்கு வர்றதுக்குள்ள நான் வீட்டுக்குப் போயிரணும்’ என நேரம் பார்த்துக்கொண்டே சிரிக்கிறார்.  தமிழ்நாட்டிலேயே இல்லை... ஆனால், பேச்சு முழுக்க அட்சர சுத்த தமிழ். அன்றைய 'மயில்’ நாயகி, இன்று 'புலி’ வில்லி!   

''சினிமாவில் நீங்க ரீ என்ட்ரி கொடுத்த 'இங்கிலீஷ் விங்கிலீஷ்’ சூப்பர் டூப்பர் ஹிட். அப்புறமும் ஒரு சின்ன பிரேக் எடுத்துக்கிட்டீங்க. அதுக்குப் பிறகு 'புலி’யில் நடிக்க என்ன காரணம்?''

'' 'இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்துக்குப்  பிறகு   ஒரு நல்ல கதை வேணுமே. அதனாலேயே எதுலயும் நான் நடிக்கலை. ஆனா, 'புலி’க்காக சிம்புதேவன் சொன்ன கதை மொத்தமா எதிர்துருவம்.  காட்டன் சேலை, மேக்கப் இல்லாம 'இங்கிலீஷ் விங்கிலீஷ்’ நடிச்சுட்டு  ஃபேன்டசி கதையான 'புலி’க்காக மகாராணி காஸ்ட்யூம், தலைமுடியில் இருந்து கால் விரல் நகம் வரை மேக்கப்னு நடிக்கிறதை நினைச்சாலே உற்சாகமா இருந்தது. பத்தாததுக்கு ஆக்‌ஷன் படம். இந்தப் படம் வீட்ல இருக்கிற தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குட்டிப் பாப்பானு எல்லாருக்கும் பிடிக்கும்!'  

'' 'கபாலி’ ரஜினி, 'தூங்காவனம்’ கமல், 'புலி’ ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவின் 'த்ரீ டார்லிங்ஸ்’ திரும்ப ஒரே சமயத்துல லைம்லைட்ல இருக்கீங்களே?'

''வாவ்... ஆமா! நீங்க கேட்ட பிறகுதான் எனக்கே தெரியுது. குட் ஓல்ட் டேய்ஸ். ரஜினி, கமல் ரெண்டு பேரும் எப்பவும் லைம்லைட்லதான் இருக்காங்க. நான்தான் அப்பப்போ பிரேக் எடுத்துட்டு ஓடிருவேன். நான் குழந்தை நட்சத்திரமா அறிமுகமானது தமிழ்லதான். ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சதும் தமிழ்லதான். அப்போ கிடைச்ச சந்தோஷம், இப்போ திரும்ப தமிழ்ல நடிக்கிறப்போ கிடைக்குது!''

ஸ்வீட் ‘வில்லி’ ஸ்ரீதேவி

''செல்ல குழந்தை நட்சத்திரம்... கிளாமர் குயின் ஹீரோயின்... பத்மஸ்ரீ... மூணு பருவத்தையும் எப்படிப் பார்க்கிறீங்க?''

''நாலு வயசுல நடிக்க வந்துட்டேன். அப்போ விளையாட்டுத்தனமா இருப்பேன்னு அம்மா சொல்வாங்க. ஷூட்டிங்ல வசனம் நல்லா சொல்லிட்டா எல்லாரும் கை தட்டுவாங்க, ஷாட் ஓ.கே பண்ணிட்டா சாக்லேட்ஸ் கொடுப்பாங்கனு சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிச்சிருக்கேன். ரொம்ப சின்ன வயசுல இருந்தே நடிக்க ஆரம்பிச்சுட்டதால, பள்ளி, கல்லூரி வாழ்க்கை எனக்குக் கிடைக்கவே இல்லை. எல்லாமே எல்லாருக்குமே கிடைச்சிராதுனு அப்புறம் சமாதானப்படுத்திக்கிட்டேன். பாலசந்தர் சார் 'மூன்று முடிச்சு’ படத்துல ஹீரோயினா என்னை நடிக்கவெச்சப்போ, எனக்கு 13 வயசு. அப்போ திட்டு வாங்காம நல்லா நடிச்சுரணுமேனு பயம், பதற்றம் மட்டும்தான் இருந்தது. அப்படி நடிச்சுட்டா சந்தோஷமா இருந்துச்சு. மத்த எதையும் யோசிக்கவே இல்லை. பெரிய ஹீரோயின் ஆகணும், நிறைய நிறையப் படங்கள் நடிக்கணும்னு நினைக்கவே இல்லை. நடிச்ச படங்களோ, ஜெயிச்ச விருதுகளோ... எதுக்கும் நான் பிளான் பண்ணவே இல்லை. இப்போ யோசிக்கிறப்ப, சினிமாவுல இருக்கிறவரை ஒவ்வொரு நாளும் சின்சியரா இருக்கணும்னு நினைச்சிருக்கேன்னு மட்டும் தோணுது. ரிசல்ட் பத்தி கவலைப்படாம கடுமையா உழைச்சுட்டே இருந்திருக்கேன். இந்த ஃபார்முலா என்னை எப்பவும் சந்தோஷமாவே வெச்சிருக்கு!''  

''ஸ்ரீதேவி இப்பவும் அழகா இருக்க என்ன காரணம்?''

''நேரத்துக்குச் சரியா சாப்பிடுவேன். கண்டதையும் சாப்பிட மாட்டேன். முக்கியமா சாய்ஞ்சு உட்கார்ந்து காலை நீட்டிக்கிட்டு டி.வி பார்த்துட்டே சாப்பிடுற பழக்கம் என் சிஸ்டம்லயே இல்லை. நாள் முழுக்க எனர்ஜியா இருப்பேன்; ஏதாவது வேலை பண்ணிட்டே இருப்பேன்; முக்கியமா எப்பவும் சந்தோஷமா இருப்பேன். இதெல்லாம்தான் காரணமா இருக்கும்!''

''என்னதான் அழகைத் தக்கவெச்சுக்கிட்டாலும் ஹீரோயின்கள் ஒரு வயசுக்குப் பிறகு அக்கா, அண்ணி, அம்மா ரோல்களுக்குனு செட் ஆகிடுறாங்க. நீங்க அந்த லிஸ்ட்ல இல்லை. ஆனா, ஹீரோக்கள் மட்டும் டூயட் பாடிட்டே இருக்காங்களே..!

''அதுக்குப் பல காரணங்கள் இருக்கு. அதுல முக்கியமான காரணம் ஹீரோயின்கள் அவங்களேதான். என்னதான் கல்யாணம் முடிச்சு குழந்தை பெத்துக்கிட்டாலும் தன் ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரிக்கணும். வயசு கூடிட்டே போனாலும் அதே அழகோடு, கிளாமரா இருந்தா... யாரும் நடிக்கவெக்க மாட்டேன்னு சொல்வாங்களா என்ன? ஃபாரீன் மூவீஸ்ல மெரீல் ஸ்ட்ரீப், சாண்ட்ரா புல்லாக், மோனிகா பெல்லுச்சினு பல உதாரணங்கள் இருக்காங்களே. இது ஹீரோயின்களுக்குன்னு இல்லை... எந்தப் பெண்ணுக்கும் பொருந்தும். நம்ம அடையாளம் என்னன்னு நாமதான் முடிவெடுக்கணும்!''

''சூப்பர் சீனியர்ல இருந்து ஜூனியர்ஸ் வரை எல்லாருக்கும் ஸ்ரீதேவி மேல ஒரு பிரமிப்பு கலந்த மரியாதை இருக்கு. ஆனா, உங்களை விழாக்கள், பார்ட்டினு எங்கேயும் பார்க்க முடியலையே... 'எய்ட்டீஸ்

ரீ யூனியன்’லகூட நீங்க கலந்துக்கிட்டது இல்லை. ஏன்?''

''இரண்டு காரணங்கள். ஒண்ணு, நான் லாஸ் ஏஞ்சலஸ்ல செட்டில் ஆகிட்டேன். ரெண்டு, ஒரு நிமிஷம்கூட நேரம் இல்லாம ஓடிட்டு இருக்கேன். ரெண்டு பொண்ணுங்களுக்கு அம்மான்னா சும்மாவா? அதான் எங்கேயும் என்னை நீங்க பார்த்திருக்க முடியாது. சினிமாகூட நிறையப் பார்க்க முடியிறது இல்லை. 'எய்ட்டீஸ் ரீயூனியன்’ல ரஜினி, கமல்கூட கலந்துக்கிட்டாங்களா? கிரேட். அடுத்தடுத்த வருஷங்கள்ல பார்க்கலாம்!''

ஸ்வீட் ‘வில்லி’ ஸ்ரீதேவி

''ஸ்ரீதேவியோட ஒரு நாள் எப்படிப் போகும்... பொழுதுபோக்குகள் என்னென்ன?''

''ஹா... ஹா... நேரமே இல்லைங்கிறேன்... இதுல எங்கே பொழுதுபோக்க? குழந்தைகளுக்காகத்தான் இப்போ என் எல்லா நேரமும். அவங்க ஸ்கூல் போயிட்டு வர்றதுக்குள்ள ஜிம், நடிப்புனு என் மத்த எல்லா வேலைகளையும் நான் முடிச்சிரணும். ஏன்னா, அவங்க வீட்டுக்கு வரும்போது, நான் அங்கே இருக்கணும். வேலை பார்க்கும் எல்லா அம்மாக்களுக்குமான பிரச்னைதான். அதை பேலன்ஸ் பண்ணவே, எனக்கு நேரம் சரியா இருக்கு!''

''உங்க பொண்ணுங்க ஜான்வி, குஷி என்ன பண்றாங்க?''

''பெரிய பாப்பா ஜான்வி, ட்வெல்த் முடிச்சுட்டாங்க. மேல என்ன படிக்கிறதுனு  யோசிச்சுட்டு இருக்காங்க. சின்ன பாப்பா குஷிக்கு 14 வயசு. நைன்த் படிக்கிறாங்க. என் உலகமும் அவங்கதான்; உலகத்துல என் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸும் அவங்கதான்!''

''உங்க ஃபேமிலி போட்டோஸ் பார்க்கிறப்பவே அது தெரியுது. டீனேஜ் பெண்களோட அம்மாவா எப்படி அவங்ககிட்ட அவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருக்கீங்க?''

''மகள்னு நினைக்காம ஒரு ஃப்ரெண்டாவே பழகுவேன். ஷாப்பிங், ஃபிலிம்ஸ், ஜாலி அரட்டைனு எல்லா விஷயங்களும் அவங்களோட பண்ணுவேன். அதே சமயம் ஒரு அம்மாவா அவங்க லிமிட் என்னன்னு தெளிவா சொல்லிருவேன். அதைத் தாண்ட வேண்டாம், தாண்டினா என்ன ஆகும்னு கண்டிப்பா சொல்லிருவேன். அவங்களுக்கே அவங்க பொறுப்பு புரிஞ்சிரும். ஏன்னா, இப்போ இருக்கிற குழந்தைங்க ரொம்ப ஸ்மார்ட். நம்மளைவிட அவங்களுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அவங்களுக்கான தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது மட்டும்தான் பெத்தவங்க கடமை. எந்தக் குழந்தையும் தன் அப்பா, அம்மாகிட்ட எந்தத் தயக்கமும் இல்லாம மனம்விட்டுப் பேசணும். அந்தச் சுதந்திரத்தை மட்டும் நாம கொடுத்திரணும். சில விஷயங்கள் பண்ணா அப்பா, அம்மாவுக்குப் பிடிக்காதுனு அவங்களுக்குப் புரியவெச்சாலே போதும். அதுக்கு மேல நாம எதுவும் பண்ண வேண்டாம். 'எங்க அப்பா, அம்மாவை நாங்க மதிக்கிறோம். அவங்களை நாங்க பெருமைப்படுத்துவோம்’னுதான் என் பொண்ணுங்க நினைப்பாங்க. இப்படியான ஒரு புரிதலோடு இருக்கிறதால, என்னைத் தங்களோட டீனேஜ் தோழியாத்தான் என் பொண்ணுங்க பார்க்கிறாங்க!''  

''உங்க மூத்த பொண்ணு ஜான்வி சினிமாவில் நடிக்கப்போறதா வர்ற தகவல்கள்... உண்மையா?''

ஸ்வீட் ‘வில்லி’ ஸ்ரீதேவி

''இல்லைங்க... ஜான்வி ரொம்பச் சின்ன பொண்ணு. இன்னும் படிக்கணும். இப்போதைக்கு அவங்க எந்த சினிமாவிலும் கமிட் ஆகலை. எதிர்காலத்துல அவங்க என்ன ஆவாங்கனு இப்போ நான் எதுவும் சொல்ல முடியாது!''

''நீங்க பண்ணாத கேரக்டர்களே இல்லை. அதுல உங்களுக்குப் பிடிச்ச கேரக்டர்கள்?''

'' 'மூன்று முடிச்சு’, 'மீண்டும் கோகிலா’, 'ஜானி’, 'மூன்றாம் பிறை’. இந்தப் படங்கள்ல நடிக்கும்போது ரொம்ப ரசிச்சுப் பண்ணேன். அதெல்லாம் பிரமாதமான வாய்ப்புகள்!''

''ஸ்ரீதேவி அடிக்கடி நினைச்சுப்பார்க்கும் விஷயம்... மறக்க நினைக்கும் விஷயம்?''

''ம்ம்ம்... அப்பா, அம்மா இப்போ என்கூட இருந்திருக்கலாமேனு அடிக்கடி தோணும். நான் இப்போ இருக்கிற நிலைமைக்கு அவங்கதான் காரணம். இப்போ பேத்திகள் வளர்ந்து நிக்கிறதைப் பார்க்க அவங்க இல்லையேனு வருத்தமா இருக்கும். மறக்க நினைக்கிற விஷயம்... ம்ம்ம்... மறந்துட்டேனே!''

''ஸ்ரீதேவி தன் லைஃப் டிராவல்ல இருந்து ஒரே ஒரு சக்சஸ் மந்திரம் சொல்லணும்னா, என்ன சொல்வாங்க?''

‘‘No pain... No gain.’’