சினிமா
Published:Updated:

சக்சஸ் ’ஜெயம்’ பிரதர்ஸ்

ம.கா.செந்தில்குமார், படங்கள்: கே.ராஜசேகரன்

''நான் ரீமேக் பண்றதுக்காகப் பிறக்கலை. ஆனா, துணி வாங்கப் போனாக்கூட, 'அடுத்து எந்தப் படம் சார் ரீமேக் பண்ணப் போறீங்க?’னு கடைக்காரங்க கேட்கிற அளவுக்குப் பிரபலமாகிட்டேன். நானும் 'ஆமாங்க’னு சிரிச்சுட்டு வந்துடுவேன். கிட்டத்தட்ட 50 படங்களை ஸ்கிப் பண்ணிட்டு, கருத்து சொல்ற ஒரு நல்ல படத்தைத் தேர்ந்தெடுத்து அதை ரீமேக் பண்றது எவ்வளவு சிரமம்னு எங்களுக்குத்தான் தெரியும். எங்களை நாங்களே காப்பாத்திக்கிட்டு, எங்களை நம்பி ஓடிவர்றவங்களையும் காப்பாத்திக்கிட்டு, ரசிகர்களுக்கும் நம்பிக்கையைத் தந்துட்டு, அந்த 'நம்பிக்கை’யைக் காப்பாத்த நாங்க கையில எடுத்த விஷயம்தான் ரீமேக். அந்த 'ரீமேக் டைரக்டர்’ விமர்சனங்களை 'தனி ஒருவன்’ அடிச்சு உடைச்சிருக்கான்!''  -  மோகன் ராஜாவின் பேச்சில் அத்தனை உற்சாகம். வெளியான நான்கு வாரங்கள் கடந்தும் பரபரவென ஓடிக்கொண்டிருக்கும் 'தனி ஒருவன்’, மோகன் ராஜா என்ற தனி ஒருவனுக்கு மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே நம்பிக்கை அளித்திருக்கிறது. அந்தச் சந்தோஷத்தை 'ஜெயம்’ பிரதர்ஸ் ராஜா-ரவி இருவரும் பகிர்ந்துகொண்டார்கள்.   

''அண்ணனின் திறமை எங்களுக்குத் தெரியும். 'நேரடிப் படம் பண்ணு’னு ஆரம்பத்துல இருந்தே சொல்லிட்டு இருப்பேன். 'இந்த சினிமா உனக்கு நிறைய வெற்றிகளைக் குடுத்திருக்கு. நீ இந்த சினிமாவுக்கு ஏதாவது ஒண்ணு கொடுக்கணும்’னும் சொல்வேன். இப்ப அவர் சினிமாவுக்குக் கொடுத்த கிஃப்ட்டுத்தான் 'தனி ஒருவன்’. நான் தோல்வியில் இருக்கும் சமயங்களில் எல்லாம் 'ரீமேக் டைரக்டர்’ங்கிற பேரை தான் வாங்கிட்டு, 'ஹிட் ஹீரோ’ங்கிற பேரை எனக்குத் தந்து என்னைத் தூக்கிவிட்டுட்டுப் போயிடுவார். ஆமா... இதுவரை எனக்காக ஐந்து ஹிட் ரீமேக்குகள் பண்ணியிருக்கார்'' என அண்ணனுக்காகப் பூரிக்கிறார் ரவி.  

சக்சஸ் ’ஜெயம்’ பிரதர்ஸ்

''இன்னைக்கு வரை டப்பிங், ரீமேக் படங்களைத் தயாரிக்கிறவர், எடிட்டிங் பண்றவர்னுதான் அப்பாவை மக்களுக்குத் தெரியும். மதுரையில இருந்து ஓடிவந்து, தி.நகர் வீதிகள்ல செக்யூரிட்டி வேலையில இருந்து தன்னை உயர்த்திக்கிட்ட அவரோட சின்ன வயசு வாழ்க்கை யாருக்கும் தெரியாது. அப்போ அவருக்குத் தேவை வெற்றி மட்டுமே. 99 சதவிகித வெற்றி எல்லாம் கிடையாது. 100 சதவிகித வெற்றி. அது மிஸ் ஆகக் கூடாது. மிஸ் ஆச்சுன்னா காப்பாத்த ஆள் கிடையாது. ஒருவழிப் பாதை மாதிரி. அவருடைய தொடர்ச்சிதான் நான். அதனால் மிஸ் ஆகாத வெற்றிக்காகத் தேர்ந்தெடுத்ததுதான் ரீமேக்.  'ரிலே ரேஸ் மாதிரிதான்டா வாழ்க்கை. நான் கடைசியா ஓடிட்டு, அந்த உழைப்பை உன்கிட்ட தர்றேன்.     நீ ஓடி ஜெயிச்சாதான் நான் உழைச்சதுக்கு மரியாதை. நீ ஓடலைன்னா நான் தோத்துட்டேன்’னு சொல்வார் அப்பா'' என உணர்ச்சிவசப்பட்ட ராஜா, சின்ன இடைவெளி எடுத்துக்கொண்டு தொடர்கிறார்.

''எத்தனை பேர், யார் யார் பேசினாங்கனு நினைவுல வெச்சுக்க முடியாத அளவுக்கு அவ்வளவு வாழ்த்துகள். 'என்னா திரைக்கதைய்யா..’ னு பாக்யராஜ் சாரே பாராட்டினதை பாக்கியமா நினைக்கிறேன். ரஜினி சார்,  'சூப்பர் படம். நல்ல மெசேஜை இவ்வளவு  சுவாரஸ்யமா சொல்ல முடியுமானு ஆச்சர்யமா இருக்கு...’னு சொல்லியிருக்காங்க. டீஸர் பார்த்துட்டே வாழ்த்திய கௌதம் மேனன் சார், படம் ரிசல்ட் கேள்விப்பட்டு 'உங்க இதயம் அந்தப் படத்துல இருந்த மாதிரி தோணுச்சு’னு மறுபடியும் வாழ்த்தினார். 'பூ’ சசி, 'உன்கிட்ட நாலு நாள் வந்து சில விஷயங்களைக் கத்துக்கணும்’னு சொன்னார். ஒரு பெரிய நடிகர், 'உனக்கு வயசு குறைவா இருக்குப்பா. இல்லைனா உன் கால்ல விழுந்துடுவேன்’னு சொன்னார். 'உங்க படம் பார்க்கும்போது எனக்கு புது எனர்ஜியே வந்திருச்சு’னு லிங்குசாமி சார் சொன்னார். 'இனிமேல் ஓ.பி அடிச்சு படம் எடுக்க முடியாதுனு ஒரு ட்ரெண்ட் கொண்டுவந்துட்டீங்க’னு சிரிச்சார் கே.வி.ஆனந்த். இவ்வளவு மகிழ்ச்சியை என் வாழ்க்கையில நான் அனுபவிச்சது இல்லை!''  

சக்சஸ் ’ஜெயம்’ பிரதர்ஸ்

ரவி தன் பங்கு சந்தோஷம் சொல்கிறார். ''விக்ரம் சார், 'என்னப்பா இது... இப்படி மிரட்டிட்ட!’னு கொண்டாடிட்டார். ஆர்யா, 'ஹாரர், காமெடி இல்லாம ஒரு படம் ஓடி ரொம்ப வருஷம் ஆச்சு. நீங்க அதை உடைச்சிட்டீங்க’னு சொன்னார். விஷால் 'உனக்கு தேவையான வெற்றி’னு சந்தோஷப்பட்டார். கார்த்தி ஃபேஸ்புக்ல அவ்வளவு பெரிய கமென்ட் போட்டு இருந்தார். இன்னும் ஜீவா, சிம்பு, தனுஷ்னு எல்லா ஹீரோக்களும் லைக்ஸ் கொட்டிட்டாங்க. இதுல இன்னொரு பியூட்டி என்னன்னா, இப்போ அண்ணனுக்கு வரும் வாய்ப்புகள்ல பாதி, 'தனி ஒருவன்’ ரீமேக் பண்ணும் அழைப்புகள்'' எனச் சிரிக்கிறார்.

''புனித் ராஜ்குமார் சார் கன்னடத்துல மாஸ் ஹீரோ. 'இந்தப் படம் நீங்க பண்ணினா நான் கன்னடத்துல பண்றேன்’னு சொன்னார். தெலுங்கு 'கில்லி’ மகேஷ்பாபு, 'அவுட் ஸ்டாண்டிங் ஃபிலிம். அடுத்த கதை ரெடின்னா, உடனே நாம பண்ணலாம்’னு மெசேஜ் அனுப்பினார். 'என்னங்க... இப்படி ஒரு படம் பண்ணிட்டு இவ்வளவு அடக்கமா இருக்கீங்க!’னு சிரிக்கிறார் ராம் சரண். ராணாகிட்ட பேசினேன். 'ராணா என்னால அடக்கமா இருக்க முடியலை’னேன். 'அடக்காம இருக்காதீங்க. அப்புறம் இப்ப நான் அடக்கமே இல்லாம ஒரு அமவுன்ட் சொல்றேன். இதை வாங்கிட்டு எனக்கு அந்தப் படத்தைப் பண்ணித் தாங்க’னு சொன்னார். பட்ஜெட், சம்பளம் எல்லாம் விடுங்க. மரியாதையான காஸ்டிங் அமைஞ்சா உடனே தொடங்கிடலாம். இதை எத்தனை மொழிகள்ல நான் பண்ணுவேன்னு தெரியாது. ஆனா, அடுத்த புராஜெக்ட் என் பட ரீமேக்தான்'' - பெருமிதம் தெறிக்கிறது ராஜா குரலில்.  

''இன்னொரு விஷயம்... இதை விகடன் பேட்டியிலதான் சொல்ல முடியும். 'வசனங்கள் எல்லாம் வேற மாதிரி இருக்கு. ஆனா, நீ எந்தப் புத்தகமும் படிக்கிறவன் கிடையாதே. எப்படி?’னு என் மனைவி கேட்டாங்க. அந்த ரகசியத்தை இப்போ சொல்றேன். என் இந்த வெற்றியில் விகடனுக்கு பெரிய பங்கு இருக்கு. இது கொஞ்சம் கூட மிகை இல்லாத வார்த்தைகள். ஏன்னா, தீவிர இலக்கியம் வாசிக்கிற அளவுக்கு நேரமோ பொறுமையோ எனக்குக் கிடையாது. அப்பப்போ நண்பர்கள் பரிந்துரைக்கும் சில நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் வாசிக்கிறேனே தவிர, தீவிரமா இலக்கியம் வாசிக்க மாட்டேன். ஆனா, ஒரு வாரம்கூட தவறவிடாமல் நான் தொடர்ந்து வாசிக்கும் புத்தகம் விகடன்தான். ஏன்னா, அதுல எல்லாமே இருக்கு. ஆழ்ந்த இலக்கியம், அற்புதமான காதல், வைரல் ட்ரெண்டு, எல்லாத்தையும் தாண்டி ரொம்ப சுத்தமான, யாருக்கும் அஞ்சாத சமூகக் கோபம்னு எல்லாமே இருக்கும். அந்த பேக்கேஜ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவும் விகடன்  தலையங்கத்தை ஒரு வாரம்கூட நான் தவறவிட்டதே இல்லை. அதன் கண்டிப்பு எனக்குப் பிடிக்கும். நல்லதை மட்டும் ஏற்றுக்கொள்ளும், உண்மையான திறமைகளைக் கொண்டாடும் விகடனின் பண்பு எனக்குப் பிடிக்கும். இந்த வாசிப்புதான் வசனமா படத்தில் வந்துச்சு!''

சக்சஸ் ’ஜெயம்’ பிரதர்ஸ்

''இவ்ளோ உழைப்பு, உணர்வைக் கொட்டியிருக்கீங்க. ஆனா, கடைசியில அர்விந்த் சுவாமி பெருசா ஸ்கோர் பண்ணிட்டாரே...'' எனக் கேட்டதுமே இருவருமே சிரித்துவிட்டனர். ''முதல்ல அர்விந்த் சுவாமி இந்தப் படத்துக்குள்ள எப்படி வந்தார்னு சொல்லிடுறேன். இந்தக் கேரக்டரை ஒரு ஹீரோதான் பண்ணணும் என்பதில் உறுதியா இருந்தேன். அஜித் சாரைக்கூட மனசுல வெச்சிருந்தேன். ஆனா, அவர்கிட்ட சொல்லலை. ராணா முயற்சி பண்ணினேன். சுதீப்-ஐ நினைச்சேன். அந்தச் சமயத்தில் தனியா படம் பண்ண முயற்சி பண்ணிட்டு இருந்த என் அசோஸியேட், 'இப்பக்கூட அர்விந்த் சுவாமி சாருக்கு கதை சொல்லிட்டு வந்தேன்’னு சொன்னார். அங்க அடிச்ச ஸ்பார்க்தான் அர்விந்த் சுவாமியை சித்தார்த் அபிமன்யூ ஆக்கிருச்சு.

சக்சஸ் ’ஜெயம்’ பிரதர்ஸ்

ஒரு பொய் ரொம்ப வசீகரமான தோற்றத்துல இருக்கும்போதுதான், அது ரொம்ப வீரியமா இருக்கும். அர்விந்த் சுவாமியின் வசீகரம் தேவைனு முடிவுபண்ணி அவர்கிட்ட கதை சொன்னேன். முடிச்சதும், 'இந்தக் கதை எனக்குத் தேவை; இந்தக் கதைக்கு நான் தேவை’னு சொல்லி உடனே கமிட் ஆகிட்டார். அவர் படத்துல நடிச்சதையும் கடந்து இந்தப் படத்தில் அவரின் அன்பு, ஈடுபாடு எல்லாமே வேற லெவல். மத்தபடி எங்களுக்குள்ள எந்த  ஈகோவும் கிடையாது! சொல்லப்போனா, இப்போ அவரை நாங்க பெரியண்ணன்னுதான் கூப்பிடுறது. இன்னும் சின்ன தம்பி 'ஹிப்ஹாப்’ ஆதி. ஒவ்வொருத்தர் வளர்ச்சியிலும் அவ்வளவு அக்கறை எடுத்துக்குவோம்'' எனச் சிரிக்கிறார்கள் சகோதரர்கள் இருவரும்.

'' 'வேலாயுதம் வந்து நாலு வருஷங்கள் ஆச்சு. இன்னும் அடுத்த படம் வரலை’னு அண்ணனைத் திட்டிட்டே இருப்பேன். ஆனா இப்போ, 'அடுத்த படத்துக்கு இன்னும் மூணு வருஷங்கள்கூட எடுத்துக்க. ஆனா, இப்படியான படம் கொடு’னு சொல்லிருக்கேன்'' என அண்ணனை ரவி கட்டிக்கொள்ள, ''எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுனு தெரியலை. நன்றி.. நன்றி... எல்லாருக்கும் நன்றி'' - கண்ணீர் மல்க கைகூப்புகிறார் மோகன் ராஜா!

ஒரு குடும்பம்... நான்கு காதல்கள்!

எடிட்டர் மோகன், அவரது பிள்ளைகள் மூவர் என வீட்டில் நால்வருமே காதல் திருமணம் செய்தவர்கள்!

மோகன்-வரலட்சுமி: மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மோகன், சினிமா ஆர்வத்தில் சென்னை வந்தவர். 'டணால்’ தங்கவேலுவின் வளர்ப்பு மகன்போல கூடவே இருந்தவர். 7-ம் வகுப்பு வரை படித்திருந்த மோகன், பட்டதாரியான வரலட்சுமியைக் காதலித்து மணந்தார். ராஜா, ரவி, ரோஜா மூன்று பிள்ளைகள். 1979-ம் ஆண்டில் இருந்து 1988-ம் ஆண்டு வரை ஆங்கிலப் படங்களை நேரடியாகவும் தென்இந்திய மொழிகளில் டப்பிங் செய்தும் விநியோகம் செய்தார். 'ஒரு தொட்டில் சபதம்’ என்ற படத்தை கதை, திரைக்கதை அமைத்து தயாரித்தார். 1990-ம் ஆண்டில் இருந்து 2001-ம் ஆண்டு வரை ஒன்பது தெலுங்குப் படங்களைத் தயாரித்தவர், ரவியை ஹீரோவாக்க தமிழில் 'ஜெயம்’ தயாரித்தார். ரவியை வைத்தே நான்கு தமிழ்ப் படங்களைத் தயாரித்திருக்கிறார்.

ராஜா - பிருந்தா: இருவரும் சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள். அப்போதே காதல். பிருந்தா ஒளிப்பதிவு படித்தவர். திருமணத்துக்குப் பிறகு மாஸ் கம்யூனிக்கேஷனில் முதுகலை படித்துவிட்டு, தற்போது யோகாவில் டாக்டரேட் படித்துவருகிறார். இவர்களுக்கு வர்ணிகா, பிரணவ் மோகன் என இரு குழந்தைகள். வர்ணிகாவுக்கு 'டைரக்டர்’ ஆர்வம் உண்டாம்.

ரவி-ஆர்த்தி: காதல் திருமணம். ஆரவ், அயான், இரு மகன்கள்.

ரோஜா-சசிக்குமார்: பல் மருத்துவரான ரோஜா, தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்த சசிக்குமாரைக் காதலித்துத் திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு த்ரிஷா, ப்ரதிக்ஷானு இரு மகள்கள்!