சினிமா
Published:Updated:

உலகை உலுக்கும் தமிழ் குரல்!

டி.அருள்எழிலன்

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான  'விசாரணை’ திரைப்படம்,    தமிழ்நாட்டில் திரைக்கு வருவதற்கு முன்பே வெனிஸ் திரைவிழாவில் விருது வென்றிருக்கிறது. வெனிஸ் திரைவிழாவோடு, உலக அளவில் மனித உரிமைக்கான மிக முக்கிய அமைப்பான 'அம்னெஸ்டி இன்டர்நேஷன’லும் இணைந்து நடத்தும் திரைவிழாவில் அம்னெஸ்டி அமைப்பின் இத்தாலி பிரிவு, இந்த ஆண்டுக்கான சிறந்த மனித உரிமைப் படைப்பு விருதை 'விசாரணை’ திரைப்படத்துக்கு வழங்கி உள்ளது. உலக அளவில் மனித உரிமைத் தளத்தில் ஒரு தமிழ் சினிமா விருது பெறுவது இதுவே முதல்முறை! 'விசாரணை’ இன்னும் தமிழ்நாட்டில் சென்சார் ஆகாத நிலையில், வெனிஸ் திரைவிழா அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள் படத்தின் இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் சமுத்திரக்கனியும். 

'' 'விசாரணை’ பட வேலைகளைத் தொடங்கும்போதே தமிழ்நாட்டு சினிமா சந்தையையும், இந்தியாவுக்கு வெளியே உள்ள சர்வதேச சினிமா சந்தையையும் மனசுல வெச்சிருந்தேன். வெளிநாடுகளில் தமிழ் சினிமாவுக்குனு ஒரு மார்க்கெட் இருக்கு. ஆனா, நான் ஆசைப்பட்டது அதையும் தாண்டி அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் இந்தப் படம் போய்ச் சேரணும்னுதான். வெளிநாட்டு ரசிகர்கள் உலகின் பல மொழி சினிமாக்களைப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பை திரைவிழாக்கள்தான் தரும். அதனாலதான் திரைவிழாக்கள் மீது கவனம் பதிச்சேன்.  'ஆடுகளம்’ படத்தை இயக்கியபோதே அதற்கான வாய்ப்புகள் இருந்தது. ஆனா, அந்தப் படத்தைத் தயாரிச்சவங்க அதுல எல்லாம் நம்பிக்கை இல்லாம இருந்தாங்க. அதான் அப்போ அனுப்ப முடியலை.

உலகை உலுக்கும் தமிழ் குரல்!

'விசாரணை’ படம் தயாரானதும் ரெண்டு, மூணு சர்வதேசத் திரைவிழாக்களுக்கு அனுப்பினோம். வெனிஸ் திரைப்பட விழாவில் ஆசியப் படங்களைத் தேர்வுசெய்யும் பொறுப்பில் பாவ்லோ என்பவர் இருந்தார். அவர் 'விசாரணை’ படத்தைப் பார்த்துட்டு சில கருத்துக்களைச் சொன்னார். இரண்டு மணி நேரமாக இருந்த படத்தின் நீளத்தை 1:46 மணி நேரமா குறைச்சோம். மொழி தெரியாத 'மேற்கு உலக ரசிகர்களிடம் படத்துக்கு என்ன வரவேற்பு இருக்கும்?’னு பதற்றத்தோடு காத்திருந்தோம். நாங்க எதிர்பார்க்காத வரவேற்பு. படத்தைக் கொண்டாடிட்டாங்க. அங்க எல்லாம் படம் பார்க்கும்போது எந்தச் சத்தமும் எழுப்ப மாட்டாங்க. ஆனா, 'விசாரணை’ படம் திரையிடலின்போது பார்வையாளர்களின் விசும்பல், அழுகுரல்கள் அரங்கத்தை நிறைத்தன. இப்படி படம் முடிகிறவரை அதன் ஒவ்வொரு உணர்வுக்கும் பார்வையாளர்கள் ரியாக்ட் பண்ணிட்டே இருந்தாங்க. படம் முடிஞ்ச பிறகு  கைதட்டல் அடங்க ரொம்ப நேரமாச்சு. மனித உரிமைக்கான விருது எங்க படத்துக்குக் கிடைச்சது, இது எங்க முயற்சிகளுக்கான, மிகப் பெரிய அங்கீகாரம்'' என நெகிழ்ந்து பூரிக்கிறார் வெற்றிமாறன்.

காவல் கஸ்டடியில் இருக்கும் இளைஞர்கள் பற்றிய கதையில் சமுத்திரக்கனிக்கு போலீஸ் அதிகாரி வேடம். அவரும் உற்சாகம் குறையாமல்  பேசினார்.

உலகை உலுக்கும் தமிழ் குரல்!

''நான் இதுவரை எந்தத் திரைப்பட விழாக்களுக்கும் சென்றது இல்லை. ஒருமுறை நம்ம ஊரில் நடந்த திரைவிழாவுக்குத் தாமதமாகச் சென்றதால், என்னால் அரங்கத்துக்குள்  செல்ல முடியவில்லை. அதைத் தவிர திரைவிழாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. முதன்முதலாக வெனிஸ் திரைவிழாவில்தான் பங்கேற்றேன். உலக அளவில் தரமான திரைவிழாக்கள் என ஒரு பட்டியலைத் தயார்செய்தால், அதில் வெனிஸ் திரைவிழாவுக்குப் பிரதான இடம் இருக்கும். அந்தத் திரைவிழாவில் எங்க படத்துக்குக் கிடைச்ச வரவேற்பு, என்னை ஆனந்தக்கண்ணீரில் ஆழ்த்திவிட்டது. படம் முடிந்து எல்லாரும் உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில், படத்தின் கருவான 'லாக்கப்’ நாவல் எழுதிய சந்திரகுமாரை மேடை ஏற்றினோம். தான் எழுதிய நூலை கையில் வைத்தபடி, 'இதோ இந்த நூல்தான் இந்தத் திரைப்படத்தின் ஆதாரம்’ என அவர் சொன்னபோது, மொத்த அரங்கமும் அவருக்காக மீண்டும் ஒருமுறை எழுந்து கரகோஷம் செய்தது.  

படத்தில் எனக்கு 'முத்துவேல்’ எனும் போலீஸ் கேரக்டர். பெரும்பாலும் இரவுதான் ஷூட்டிங் நடந்தது. இரவு முழுக்க நடிச்சுட்டு  காலையில வீட்டுக்குப் போனா, தூக்கமே வராது. அந்த அளவுக்குப் படம் என்னை தொந்தரவுபண்ணி மனபாரத்தோடு வெச்சிருக்கும். எத்தனை மனிதர்களுக்கு நிகழும் அநீதிகளைக் கண்டும் நாம் காணாமல் கடந்துபோயிருப்போம்னு ஒரு குற்றவுணர்ச்சியை மனசுக்குள்ள விதைத்தது படம். நடிச்ச நான் மட்டும் இல்ல, இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் படத்தில் ஒரு கேரக்டர்களாக மாறிவிடுவார்கள். அப்படி உண்மைக்கு மிக நெருக்கமான படைப்பா இருக்கும் இந்த 'விசாரணை’ '' என்கிறார் சமுத்திரக்கனி!

கோவையில் ஆட்டோ ஓட்டுநராக இருந்த சந்திரகுமார், தனது 17-வது வயதில் எதிர்கொண்ட காவல் நிலைய அனுபவங்களைத்தான் 'லாக்கப்’ என்ற பெயரில் நாவலாக எழுதியிருந்தார். அந்த உண்மைச் சம்பவம்தான் இப்போது 'விசாரணை’ படமாகி வெனிஸ் திரைவிழாவில் விருது வென்றிருக்கிறது.

உலகை உலுக்கும் தமிழ் குரல்!

''அந்த நாவலைப் படமாக்கும் எண்ணம் ஏன் வந்தது?'' என வெற்றிமாறனிடம் கேட்டேன்.

''எனக்கு தங்கவேல்னு ஒரு நண்பர் உண்டு. சினிமா தொடர்பான ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொடுத்தவர் அவர்தான். 'லாக்கப்’ நூலை கையில கொடுத்து, 'இதை வாசியுங்கள். ஒரு மெட்டீரியலாக இது உங்களுக்குப் பயன்படும்’ என்றார். மனித உரிமை மீறலுக்கு எதிரான ஒரு குரலாக சந்திரகுமாரின் அந்த நூல் இருந்தது.  உடனே அவரிடம் பேசி 'விசாரணை’ வேலைகளை ஆரம்பிச்சோம். 17 வயதில் கொடும் சித்ரவதைகளை அனுபவிச்ச சந்திரகுமாருக்கு இப்போ வயசு 53. படம் பார்த்துட்டு அவர் சொன்ன வார்த்தைகள்தான் முக்கியம்... 'அந்த நாட்கள்ல எங்க அழுகுரல்கள் நாலு சுவரைத் தாண்டி கேட்காதா?ங்கிற ஏக்கம் எங்களுக்கு இருந்தது. ஆனா, இத்தனை வருஷங்கள் கழிச்சு எங்க குரல் உலகத்துக்குக் கேட்கப்போகுது. ரொம்ப நன்றி’னு சொன்னார். உண்மையில் இந்தப் படத்தோட ஹீரோ அவர்தான்'' என்கிறார் வெற்றிமாறன்.

'' 'விசாரணை’ படத்தின் கதைக் களம் என்ன?''

''நான்கு இளைஞர்கள். அவங்க வாழ்க்கையில நடக்கும் துன்ப நிகழ்வுகள்தான் படம். விளிம்புநிலை மனிதர்களோட ஸ்திரமற்ற வாழ்க்கையைப் படம் பேசும். ஒரு நொடி மகிழ்ச்சியா இருக்காங்க... அடுத்த நொடியே அந்தச் சந்தோஷம் காணாப்போகுது. வாழ்வும் மரணமும் துன்பமும் இன்பமும் ஊடாடுற ஒரு வாழ்க்கைதான் இந்தப் படம். விளிம்புநிலை மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது என்ற கசப்பான உண்மையை முகத்துல அறைஞ்சுசொல்லும் இந்த 'விசாரணை’!''