மாயா - சினிமா விமர்சனம்
மாயவனத்தின் மர்ம முடிச்சை மாயா அவிழ்ப்பாளா?
'மாயவனம்’ எனும் திகில் காட்டுக்குள் சென்ற எவரும் திரும்பி வந்ததே இல்லை. அதை மையமாக வைத்து உருவாகும் நாவலுக்கு ஓவியங்கள் வரைகிறார் ஓவியர் ஆரி. வரையத் தொடங்கியதில் இருந்து அவரைச் சுற்றி ஏக அமானுஷ்ய அதிர்ச்சிகள். தன் நண்பன் இறப்புக்குக் காரணம் தேடி மாயவனத்துக்குச் செல்கிறார் ஆரி. இன்னொரு ட்ராக்கில், கணவரைப் பிரிந்து தன் குழந்தையுடன் வசிக்கும் நயன்தாரா, பணப் பிரச்னைகளுக்காக 'மாயவனம்’ கதையைக்கொண்டு உருவான பேய் படத்தை தனிமையில் பார்க்கும் போட்டியில் கலந்துகொள்கிறார். ஒரு திகில் திருப்பத்தில் படத்தில் நிகழும் சம்பவங்களில்,மாயவனத்தில் ஆரியும் நயன்தாராவும் சந்திக்கிறார்கள். என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பது திக்திக் த்ரில்!

திகீர் ஜீலிரென முதுகெலும்பைச் சில்லிடச் செய்யும் பேய் படம் கொடுத்ததற்காகவே அறிமுக இயக்குநர் அஸ்வின் சரவணனுக்கு மாயவனத்தில் 'மிட்நைட் ட்ரீட்’ கொடுக்கலாம். பேய் பட லாஜிக்குகளுக்குப் பழகிய மனதைப் பதற்றப்படுத்தி, ஆரம்ப சில நிமிடங்களுக்கு கறுப்பு-வெள்ளை அத்தியாயம், சினிமாவுக்குள் பய இனிமா, எதிர்பாரா வில்லன்கள் என திகில் ரைடு அடிக்கச்செய்கிறார்கள்!
பெரும்பாலும் அண்டர்ப்ளே... அவ்வப்போது அழுகை... அவ்வளவுதான் நயன்தாராவுக்கான ஸ்கோப். 'ஹேப்பி அனிவர்ஸரி’ எனும் கண்ணீர் காட்சியில் மட்டும் செம ஸ்கோர். முன்னாள் காதலியைத் தவிர்ப்பது, பேய் கதைகளைக் கிண்டலடிப்பது, தானே அபாயங்களை எதிர்கொள்ளும்போது அதிர்வது என ஃபார்முக்கு வந்திருக்கிறார் ஆரி.

பேய் படத்துக்கான அலறல், உளறல் இல்லாமல், இரண்டு கதைகளைக் கச்சிதமாகக் கொண்டு செலுத்திய திரைக்கதைதான் படத்தின் ஹீரோ. அந்தக் கதைகள் இணையும் இடமும், முதல் பாதியின் கேள்விகளுக்கு அங்கு கிடைக்கும் பதில்களும் பலே. அத்தனைக்கும் பிறகுமான அந்த க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்... பலே பலே!
இருள்சூழ் மாயவனத்தில் 360 டிகிரி பாய்ச்சல், வீட்டின் அறைகளுக்குள்ளேயே திகில் மிரட்டல் என சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு செம! பின்னணி இசையில் இரைச்சலும் கூச்சலுமாகக் களேபரப்படுத்தாமல் மெல்லிய உதறல்களிலேயே மெர்சல் செய்கிறார் ரான் ஈதன் யோஹன்.
'மாயவனத்துக்குள் போவியா?’ என மாயா அதட்டலுக்குப் பயப்படத்தான் வேண்டியிருக்கிறது!
- விகடன் விமர்சனக் குழு