எக்ஸ்ட்ரா எனர்ஜி விக்ரம்ம.கா.செந்தில்குமார்
''இன்னைக்கும் எங்கே போனாலும் 'ஐ’ பத்தி கேட்கிறாங்க; பாராட்டுறாங்க. அதைப் பற்றி சொல்ல நிறைய இருந்தாலும், ஒண்ணேஒண்ணு மட்டும் சொல்றேன். ஒரு ஹீரோ ரொம்ப ஸ்வீட்டா சொன்னார். அவர் யார்னுலாம் கேட்காதீங்க. 'விக்ரம்... 'ஐ’ பார்த்ததும் எனக்கு இதான் தோணுச்சு... 'இந்த ஷாட்டுக்காக நீங்க கொஞ்சம் சாக முடியுமா?’னு உங்ககிட்ட ஒரு டைரக்டர் கேட்டிருந்தா, 'ஓ.கே சார்... டப்பிங் முடிச்ச பிறகு அந்த ஷாட் வெச்சுக்கலாம்’னு சொல்லிட்டு, நீங்க அந்தக் காட்சிக்காக உயிரை விட்டாலும் நான் ஆச்சர்யப்பட மாட்டேன்’னு சொன்னார். 'ஐ’ பற்றின பாராட்டுக்கள்லயே அதான் பெஸ்ட். ஆனா, அந்த மாதிரி ஒரு கேரக்டர் கிடைச்சா, அப்படிக்கூடப் பண்ணிடலாமேனு தோணுச்சு. ரெடி ஃபார் எனி கேம் இன் சினிமா'' - இந்த எனர்ஜிதான் விக்ரம். பல வருடங்களுக்கு முன் சினிமா ஆர்வத்துடன் சென்னைக்குக் கிளம்பிய அந்த மனநிலையிலேயே இன்றும் இருக்கிறார். இப்போது '10 எண்றதுக்குள்ள’ என தம் கட்டி தம்ஸ்-அப் சொல்கிறார் கென்னி!
'' 'சாமுராய்’ படத்தில் 'மூங்கில் காடுகளே...’ பாட்டு பண்ணும்போது இருந்தே விஜய் மில்டன் எனக்குப் பழக்கம். பெஸ்ட் ஒளிப்பதிவாளர். 'கோலிசோடா’ படத்துல இயக்குநரா மிரட்டிட்டார். 'படம் ரொம்ப நல்லா இருந்துச்சு மில்டன்’னு பேசிட்டு இருந்தப்ப, 'ஏதாவது கதை வெச்சிருக்கீங்களா?’னு கேட்டேன். 'இருக்கு’னு ஒன்லைன் சொன்னார். ரொம்பப் பிடிச்சிருந்தது. இந்தியாவின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்குப் போற பயணம்தான் படம். கமர்ஷியல் விஷயங்களும் யதார்த்த சங்கதிகளும் ஒரே படத்துல இருக்கணும்னு திட்டமிட்டு பண்ணின ஸ்கிரிப்ட் இது!''

''நல்ல நல்ல படங்களா நடிக்கிறீங்க. ஆனா, ஒவ்வொரு படத்துக்கும் இடையில ஏன் இவ்ளோ இடைவெளி?''
''எந்த நடிகரும் வேணும்னே ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் பண்ணணும்னு நினைக்கிறது இல்லை. எல்லாருமே, 'நிறையப் படங்கள் கொடுங்க, நிறையப் பணம் கொடுங்க’னுதான் நினைப்பாங்க. நானும் அப்படித்தான். ஆனா, பல காரணங்களால் என் ஒவ்வொரு படமும் தாமதமாகி இருக்கு. ஆனா, இனி அப்படி நேரத்தை வீணாக்க விரும்பலை. 'ஐ’ படத்துக்கு அப்புறம் ஒரு முடிவு எடுத்துட்டேன்... வருஷத்துக்கு ரெண்டு படங்கள் நடிக்கணும். இந்த வருஷ ஆரம்பத்துல 'ஐ’ வந்துச்சு. இதோ வருஷக் கடைசியில் '10 எண்றதுக்குள்ள’ வரப்போகுது. இனி இப்படி வருஷத்துக்கு ரெண்டு படங்கள் வரலைன்னா, 'ஏன் விக்ரம்?’னு கேளுங்க. நான் மொட்டை போட்டுக்கிறேன்!''
'' 'ஐ’ படத்துக்கு எப்படி அந்த லுக் வரவெச்சீங்க... இன்னும் அதை ரகசியமா வெச்சிருக்கீங்களே..?''
'' 'ஐ’, என் கரியரில் முக்கியமான சினிமா. ஏன்னா, அந்த அளவுக்கு அசுரத்தனமா உழைச்சேன். அந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கான ஒரே சவால்... நேரம்தான்! 'ஐ’ பற்றி சொன்ன ஷங்கர் சார், 'பாடிபில்டர், மாடல், அகோரமா ஒரு கூனன்’னு மூணு கெட்டப். முதல்ல பாடிபில்டர். தயாராகிடுங்க’னு சொன்னார். ஷூட்டிங் ஆரம்பிக்க மூணு மாசம்தான் இருந்தது. அதுக்குள்ள பாடிபில்டருக்கான கட்ஸ் கொண்டுவரணும். வழக்கமா பாடிபில்டர்களுக்கு சாப்பாடு, தூக்கம், உடற்பயிற்சி மூணும் சரிசமமா இருக்கணும். ஆனா, எனக்கு நேரமும் கம்மி; தூக்கமும் கம்மி. சிலர் 'ஸ்டெராய்ட் எடுத்துக்கலாம்’னு சொன்னாங்க. 'வேண்டாம்... நானே வொர்க் பண்றேன்’னு சொல்லிட்டுப் பண்ணேன். நல்ல ரிசல்ட். அடுத்து மாடல் கெட்டப். ஒல்லியா இருக்கணும்; ஆனா, முகம் ஃப்ரெஷ்ஷா இருக்கணும். வெயிட் குறைச்சா முகம் எப்படி ஃப்ரெஷ்ஷா இருக்கும்னு குழப்பம். ஆனா, யோசிக்க நேரம் இல்லை. ரெண்டு மாசம்தான் கையில இருந்தது. ஜிம், டயட்னு ஏத்தின கட்ஸைக் கரைச்சு மாடல் லுக் கொண்டுவந்துட்டேன். 'கூனன்’ கெட்டப்புக்கு எடையை எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைக்கணும். ஆனா, சாப்பிடாம இருந்தா மசில்ஸ் போயிடும். அதுக்காக குருவி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டேன். ஒரு நாளைக்கு 15 வேளை சாப்பிடுவேன். ஒரு வேளை சாப்பாடுங்கிறது அரை ஆப்பிள்தான், அப்புறம் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, மூணாவது வேளைக்கு வாழைத்தண்டு ஜூஸ்... இவ்ளோதான் ஒரு வேளையின் அதிகபட்ச சாப்பாடு. தினமும் சாப்பாடு மூலமா நம்ம உடம்புக்கு 1,500 கலோரி கிடைச்சா, உழைப்பின் மூலமா அதில் 1,000 கலோரிகளை எரிப்போம். மீதி 500 கலோரி கொழுப்பா உடம்புல சேரும். ஆனா, நான் சாப்பாடு மூலமா 1,000 கலோரி எடுத்துக்கிட்டு, ஜிம், சைக்கிளிங்னு 2,000 கலோரி எரிச்சேன். எடை குறைச்சுக் குறைச்சு 53 கிலோ வந்துட்டேன். 'ரவுண்டா 50 கிலோ வரை போயிரலாம்’னு சொன்னேன். 'அது ரிஸ்க். நம்ம உடம்பு ஓர் அதிசயம். என்ன சிக்கல் இருந்தாலும் வேலை செய்யும். ஆனா, 50 கிலோவுக்குக் கீழே போனா ஒருவேளை உடம்புல ஏதாவது ஓர் உறுப்பு ஃபெய்லியர் ஆச்சுன்னா, அப்புறம் ஒண்ணுமே பண்ண முடியாது’னு டாக்டர்கள் சொன்னாங்க. மனசே இல்லாம 53 கிலோவோடு நிறுத்திட்டேன். என் பயிற்சியாளர் பரத் இந்த டிராவல் முழுக்க என் கூடவே இருந்தார். பொதுவா இவ்வளவு மெனக்கெட்டா, உடம்பு இயல்புக்குத் திரும்ப அஞ்சு வருஷத்துக்கு மேல ஆகுமாம். ஹாலிவுட் ஹீரோக்களுக்கு அப்படித்தான் நடந்திருக்கு. ஆனா, நான் ஒரே வருஷத்தில் பழைய பூரிப்பைக் கொண்டு வந்துட்டேன். இப்போ நான் அடுத்தடுத்த படங்கள்ல எதுக்கும் தயார்!''

''அப்போ ஏதாவது ஒரு கஷ்டமான தருணத்தில், 'ஏன் இந்தப் படத்துல கமிட் ஆனோம்’னு நினைச்சது உண்டா?''
''நிச்சயமா இல்லை. 'இதை நான் சந்தோஷமா அனுபவிக்கப்போறேன். இதுல எந்தச் சிரமமும் இல்லை’னு முடிவுபண்ணித்தான் 'ஐ’ புராஜெக்ட்டுக்குள்ள வந்தேன். 'இதை எல்லாராலயும் பண்ண முடியாது. உன்னால முடியும். நீ நினைச்சா முடியும்’னு சொல்லிட்டே இருந்தேன். அதனால பெரிய கஷ்டமா தெரியலை! என்ன... வீட்லதான் ரொம்ப அப்செட்டா இருந்தாங்க. அரை தக்காளியோ, அரை முட்டையோ அது நேரத்துக்கு வந்துரணும். ஒரு நிமிஷம் லேட் ஆனாலும் கோபம் பிச்சிக்கும். ஏன்னா, அந்த அளவுக்கு எப்பவும் பசிச்சுட்டே இருக்கும். அப்போ என்னைச் சமாளிக்க ரொம்பச் சிரமப்பட்டுட்டாங்க. ஆனா, படம் பார்க்கிறப்ப அதெல்லாம் மறந்துட்டாங்க!''
'' 'எந்திரன்-2’வில் ரஜினிக்கு நீங்கதான் வில்லன்னு ஒரு தகவல். உண்மையா?''
''இல்லை. உங்களைப்போல நானும் தகவலாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். இது பற்றி ஷங்கர் சார், ஐங்கரன் கருணாகிட்டதான் கேட்கணும்!''

''உங்க பையன் துருவ் நடிக்கப்போறார்னும் ஒரு தகவல்...''
''ஹா... ஹா..! இதைக் கேட்டா அவரே பெருசா சிரிப்பார். உடனே நடிக்கணும்னு அவருக்கு எந்த ஐடியாவும் கிடையாது. ஆனா, ரொம்பச் சின்ன வயசுல இருந்தே அவருக்கு நடிக்கிறதுக்கான ஆஃபர்ஸ் வந்துட்டே இருக்கு. நாங்கதான் அவருக்கு ஓர் இயல்பான இளமைப் பருவம் இருக்கணும்னு தீர்மானமா இருக்கோம். அவருக்கு என்னை மாதிரியே போட்டோகிராஃபி, மியூஸிக் பிடிக்குது. மிமிக்ரி பண்றார்; பாடுறார். ஆனா, என்னைவிட எல்லாத்தையும் பெட்டரா பண்றார். அவர் பண்ண டப்ஸ்மாஷ்ல நல்லாவே நடிச்சிருந்தார். இப்படி எல்லாமே ஜாலியா பண்ணிட்டு இருக்கார். ஆனா, அதுல எதை தன் புரொஃபஷனா எடுத்துக்குவார்னு இப்போ எனக்கும் தெரியலை; அவருக்கும் தெரியாது!''