எம்.குணா
தமிழ் சினிமாவில் 'ஆச்சி’ இனி இல்லை!
தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சியிலும் பல தலைமுறை நடிகர்களுடனும் பயணித்த மனோரமா தன் 78-வது வயதில் கடந்த வாரம் காலமாகிவிட்டார். 'ஹீரோயின்’ அந்தஸ்து இல்லாமல் சினிமாவின் அத்தனை உச்ச அங்கீகாரங்களையும், ரசிகர்களின் அபிமானங்களையும் குவித்த மனோரமாவின் சாதனையை, இனி ஒருவரால் எட்டிப்பிடிக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்!


''கதாநாயனாக நடித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர் உலக அளவில் பெற்ற பெயரை, புகழை, காமெடி நடிகையாக சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய ஒரு நடிகையாலும் பெற முடியும் என நிரூபித்துக்காட்டியவர் மனோரமா'' என மனோரமா குறித்த நினைவுகளை அழுத்தமாகப் பதிவுசெய்கிறார் நடிகர் சிவகுமார்.


''கடந்த ஐம்பது ஆண்டுகளாக, தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் சினிமா கேமரா முன் நின்ற ஒரே நடிகை மனோரமாதான். தனக்கு என ஒரு வீடு - ஒரு குடும்பம் எல்லாம் இருந்தும், வீட்டுச் சாப்பாடு சாப்பிடும் கொடுப்பினை கிடைக்காதவர் மனோரமா. காலை டிபன், மதியச் சாப்பாடு எப்போதும் மனோரமாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில்தான். அறியாத வயதில், திரைப்படத் துறையில் பிரபலமாவதற்கு முன்னரே, காதலித்து திருமணம் செய்துகொண்டவர். குழந்தையைக் கொடுத்துவிட்டு விலகிய கணவன் ராமநாதன், வேறு ஒரு திருமணம் செய்துகொண்டார். ஆனால், அவர்களுக்கு 30 ஆண்டுகளாக குழந்தையே பிறக்கவில்லை. பிரிந்துசென்ற கணவன் ஒருநாள் இறந்துவிட்டார். அவருடைய மகன் பூபதி கொள்ளிபோட வரவேண்டும் என உறவினர்கள் விரும்பினார்கள். மனோரமாவுக்கு அதில் விருப்பம் இல்லை. அப்போது நான் மனோரமாவிடம், 'உங்க அம்மா ராமாமிர்தம் உங்க அப்பாவை நம்பி உங்களை வளர்க்கலை. அதுபோல நீங்களும் உங்க கணவரை நம்பி பூபதியை வளர்க்கலை. ஆனால், அவருக்கு பூபதியோட தயவு தேவை’ என எடுத்துச் சொல்லி, கொள்ளி போடுவதற்கு பூபதியை அனுப்ப சம்மதிக்கவைத்தேன். 'இத்தனை வருஷமா யாருக்கு எதிரா நான் வாள் சுழற்றிட்டு இருந்தேனோ, அவரே இறந்துட்டார். இனி நான் எதுக்கு வீணாக வாள் சுழற்றணும்?’ என விரக்தியாகச் சிரித்தார் மனோரமா. 'கண்காட்சி’ எனும் படத்தில் மனோரமாவுக்குத் துப்பறியும் வேடம். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க எட்டு வித்தியாச வேடங்களில் போவார். அந்த வகையில் 'நவராத்திரி’ சிவாஜிக்கே காமெடி சவால் கொடுத்திருப்பார் மனோரமா. 'திருவிளையாடல்’ தருமி வேடம் எப்படி நாகேஷ§க்கு அடையாளமோ, அதுபோல 'தில்லானா மோகனாம்பாள்’ ஜில்ஜில் ரமாமணி வேடம் மனோரமாவுக்கு அடையாளம். தமிழ் சினிமாவில் அந்த ரமாமணியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!''

மனோரமாவின் ஐம்பது ஆண்டு கால தோழி சரோஜாதேவி, ''திரையுலகிலும் சரி... தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி... தனி மனுஷியாக போராடிக்கொண்டே இருந்தார் மனோரமா. வாழ்க்கை முழுக்க அந்தப் போராட்டம்தான் மனோரமாவின் அடையாளம். மூன்று வருடங்களுக்கு முன்னர் காளஹஸ்தி கோயிலுக்குப் போயிருந்தபோது, கால் தவறி விழுந்துவிட்டார். அதன் பிறகே அவருக்கு இரண்டு கால் முட்டிகளிலும் ஆபரேஷன் செய்து செயற்கை முட்டிகளைப் பொருத்தினார்கள். அதனால் அவருடைய நடமாட்டம் முடங்கிவிட்டது. சில வருடங்களாக, 'சரோஜாம்மா... சினிமாவுல கேமரா முன்னாடி நடிச்சுக்கிட்டு இருக்கும்போதே எனக்கு உயிர் பிரிஞ்சிரணும். அதைவிட வேற பாக்கியம் எதுவும் எனக்கு வேண்டாம்’ எனச் சொல்லிக்கொண்டே இருப்பார். தமிழ் சினிமா அந்தப் பாக்கியத்தை இழந்துவிட்டது'' என்கிறார் வருத்தமான குரலில்.


'நடிகன்’, 'சின்ன தம்பி’, 'மன்னன்’ என பல முத்திரை சினிமாக்களில் மனோரமாவை நடிக்கவைத்த இயக்குநர் பி.வாசு, '' 'நடிகன்’ படத்தில் மனோரமா நடித்த கேரக்டர் கத்தி மேல் நடப்பதற்குச் சமம். 50 வயதுப் பெண் பளபள மேக்கப் போட்டுக்கொண்டு, விரசம் இல்லாமல் காதல் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்பது பெரிய சவால். அதை அத்தனை எளிமையாகச் சாதித்தார் ஆச்சி. அதுவும் படத்தில் சத்யராஜ் மீது ஓர் அபிப்பிராயம் உண்டான பிறகு, அவரைக் காதலுடன் பார்க்கும் காட்சிகளில் அசத்திவிட்டார் ஆச்சி. அதில் காமெடி இருக்கும்; காதல் இருக்கும். ஆனால், துளிகூட விரசம் இருக்காது. 'சின்ன தம்பி’ க்ளைமாக்ஸ் காட்சியில் விதவைத் தாயான மனோரமா மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றுவார்கள்; நெற்றியில் குங்குமம் வைப்பார்கள். அப்போது ஆச்சி வழக்கத்தைவிட ரொம்ப சீரியஸாக இருந்தார். 'என்னாச்சு?’ எனக் கேட்டேன். 'ஒண்ணுமில்ல... என் வாழ்க்கைக்கும் இந்தக் காட்சிக்கும் என்னமோ சம்பந்தம் இருக்கு’ என வேதனையோடு சிரித்தார். மனசுக்கு ரொம்பக் கஷ்டமாகிவிட்டது. எப்போதும் ஆச்சியை நான் அந்த அளவுக்கு வருத்தமாகப் பார்த்தது இல்லை. 'மன்னன்’ படத்தின் 'அம்மா என்றழைக்காத...’ பாடல் ஆச்சிக்கு அவ்வளவு பிடிக்கும். அதைக் கேட்கிறபோது எல்லாம் கண்கள் கலங்கிவிடுவார். ஏனென்றால், அந்த அளவுக்கு அவர் அம்மா மீது ஆச்சிக்கு அதிக பாசம். தமிழ் சினிமாவுக்கு 'அம்மா’ என்றால் அது ஆச்சிதான்!'' என நெகிழ்கிறார்!