கத்துக்குட்டி - சினிமா விமர்சனம்
காவிரி டெல்டா விவசாயிகளை மிரட்டும் மீத்தேன் அரக்கனை எதிர்க்கும் கத்துக்குட்டி!
குடி, சண்டை, காதல்... என கிராமத்து கமர்ஷியல் சினிமா ஹீரோவின் பயோடேட்டா நரேனுக்கும் அவர் நண்பன் சூரிக்கும். மற்ற ஊர் நிலங்களை வளைத்த மீத்தேன் கும்பலுக்கு, இவர்கள் ஊரில் மட்டும் சில எதிர்ப்புகள். இந்த நிலையில் நரேன் அப்பாவுக்கு தேர்தலில் கிடைக்கவேண்டிய எம்.எல்.ஏ ஸீட், நரேனுக்குக் கிடைக்கிறது. ஆளும் கட்சி வியூகங்களை எதிர்த்து நரேன் எம்.எல்.ஏ ஆனாரா என்பது கிராமத்து அதிசய க்ளைமாக்ஸ்!
விவசாயத்தின் ஆதாரமான நிலத்தை மலடாக்கும், விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும், மீத்தேன் திட்டத் திண்டாட்டங்களை ஒரு கிராமத்துக் கொண்டாட்ட சினிமாவில் பேசியதற்காக இயக்குநர் இரா.சரவணனுக்கு வந்தனம். படம் முழுக்க வளைத்துப் போடப்படும் விவசாய நிலங்கள், 'பிளாட்’கள் ஆகும் விளைநிலங்கள், பட்டினிச்சாவு, ஈமுகோழி, மின்வெட்டு... என பல ஃப்ரேம்களில் சமூக அக்கறை தூக்கல். அதற்காக ஹீரோ, ஹீரோவின் நண்பர், ஹீரோயின், ஹீரோயின் அப்பா என சீனுக்கு வரும் எல்லோருமே ஏதோ மெசேஜ் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதுவும் ஹீரோ கடைசி வரை குடித்துக்கொண்டே கருத்து மழை பொழிகிறார்.

'வில்லேஜ் சினிமா பாரம்பர்யம்’ மீறாத ஹீரோ- ஹீரோயின்தான் நரேனும், சிருஷ்டி டாங்கேவும். ஆனால், கிராமத்து கேரக்டர்களுக்கான எந்தப் பிரத்யேக அடையாளமும் இல்லாமல் உலவுகிறார்கள் இருவரும். நரேன் வரும் காட்சிகளில் எல்லாம் சூரியும் வருகிறார். 'எறும்புக்கு எலும்பு சூப் வெச்சுக் குடு’, 'சரக்கை மட்டும் நீங்க முடிவு பண்ணுங்க. சைட் டிஷ்ஷை நாங்க முடிவு பண்ணிக்கிறோம்’ என மப்பு சலம்பல்களுக்கு எதுகை மோனை அலம்பல்கள்! 'எறும்புக்கு எதுக்கு பூச்சி மருந்து? சர்க்கரையைப் போட்டா அதுவா போயிடப்போகுது’ என 'நம்மாழ்வார் பேத்தி’யாகவே வாழ்ந்திருக்கிறார் சிருஷ்டி.
'சாப்பிட வழி இல்லாம சாகுறதுக்குப் பேரு பட்டினிச்சாவு இல்ல. 'நாலு பேருக்கு சாப்பாடு போட முடியாமபோச்சே’னு நினைச்சு சாகுறதுக்குப் பேர்தான் பட்டினிச்சாவு’ - சமயங்களில் பொளேரென அறைகின்றன வசனங்கள். ஆனால், நரேன் எம்.எல்.ஏ-வானால் மீத்தேன் திட்டம் நிறுத்தப்படும் என்ற எதிர்பார்ப்புக்கு என்ன லாஜிக்? சர்வதேசக் கண்ணிகளுடன் மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்தத் துடிப்பது மத்திய - மாநில அதிகார அரசியலின் கூட்டுச்சதி அல்லவா? 'சைட் டிஷ்’போல மீத்தேன் பிரச்னையைத் தொட்டிருப்பதற்குப் பதிலாக விரிவான, அழுத்தமான களம் அமைத்திருக்கலாம்.

என்னதான், 'மளிகைப் பொருள் பட்டியலில் மதுபானம் இடம்பெற்றுவிட்டதால்...’ என்றெல்லாம் சால்ஜாப்பு சொன்னாலும், படம் நெடுக இவ்வளவு குடி நிமித்தக் காட்சிகள் தேவையா? செயல்படத் தொடங்காத மீத்தேன் திட்டம் மட்டும்தான் தமிழர்களுக்குப் பிரச்னையா... கோடிகளில் கல்லா கட்டும் டாஸ்மாக் இல்லையா?!
திரைக்கதையில் இன்னும் இன்னும் விறுவிறு வைட்டமின் சேர்த்திருந்தால், செம கெத்து காட்டியிருப்பான் இந்தக் 'கத்துக்குட்டி!’
- விகடன் விமர்சனக் குழு