Published:Updated:

“ரஹ்மான் மியூஸிக்ல நான் நடிக்கணும்!”

ம.கா.செந்தில்குமார்

''சண்டையே போடத்தெரியாத ஒருத்தனை, ஒரு போர்க்களத்துல இறக்கிவிட்டா எப்படி இருக்கும்? சுத்தி எல்லாரும் சண்டை போட்டுட்டு இருக்கும்போது அவன் என்ன பண்ணுவான்? லூட்டிதானே அடிப்பான். அந்த லூட்டிதான் இந்த 'புரூஸ் லீ’!'' - 'டார்லிங்’, 'த்ரிஷா இல்லனா நயன்தாரா’ கொடுத்த உற்சாகத்தில் 'புரூஸ் லீ’ போஸ்கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார்.

'' 'டார்லிங்’னு பேய் பயம் காட்டுனீங்க. அடுத்து 'த்ரிஷா இல்லனா நயன்தாரா’னு டீன் மூவி. இப்ப 'புரூஸ் லீ’னு ஆக்ஷன் மோடு. என்னதான் உங்க ஐடியா?''

''இங்கே என்ன பிரச்னைனா ஒரு படம் ஹிட்டுன்னா, அதே ஜானர் கதைகளோடு வந்து கதவைத் தட்டுறாங்க. 'டார்லிங்’குக்குப் பிறகு 10 பேய்க் கதைகளாவது வந்திருக்கும். 'த்ரிஷா இல்லனா நயன்தாரா’ முடிச்சதும், 'அதைவிட செம கிளுகிளுப்பான படம் சார்’னுதான் ஆரம்பிக்கிறாங்க. ஒரே மாதிரி ஜானர்ல சிக்கக் கூடாதுனு நான் உறுதியா இருக்கேன். அதான் அடுத்த தலைமுறை இளைஞர்களைக் குறிவெச்சு சப்ஜெக்ட் பிடிக்கிறோம்!

மூணாவது படமா நான் புதுமுக இயக்குநருக்கு வாய்ப்பு தர்றேன். 'புரூஸ் லீ’ இயக்குநர் பிரசாந்த், 'நாளைய இயக்குநர் சீஸன்-4’ல கலந்துக்கிட்டவர். எந்தெந்த சோர்ஸ்லயோ முயற்சிபண்ணி என்னைப் பிடிச்சிட்டார். அறிமுக இயக்குநர்களோடு வேலைசெய்யும்போது, அபாரமான எனர்ஜி இருக்கும். அதான் என் முதல் ரெண்டு படங்களின் வெற்றிக்குக் காரணம். அதான் புதுப்புது இயக்குநர்கள்... புதுப்புது களம்!''

 “ரஹ்மான் மியூஸிக்ல நான் நடிக்கணும்!”

''அப்படி 'புரூஸ் லீ’யில் என்ன புதுசு?''

''தன்னை புரூஸ் லீயாவே ஃபீல் பண்ணிட்டு இருக்கிற ஒரு பையனைப் பத்தின கதை. மனசுலதான் 'புரூஸ் லீ’னு நினைப்பு. ஆனா, போலீஸைப் பார்த்தாலே பயம். அவன் மன்சூர் அலிகானின் பெரிய ஃபேன். அவருக்கு கட்அவுட் வெச்சு ஏரியாவையே அதகளப்படுத்துவான். படத்தில், 'இந்த கேரக்டர் இப்படித்தான் இருக்கும்’னு நம்ம எதிர்பார்ப்புக்கு எதிர்ப்பதமா ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு சம்பவமும் பயணிக்கும்!''

''படத்துக்கு ஹீரோயின் நயன்தாரா, ஹன்சிகா... இப்படி எல்லாம் பேச்சு வந்துச்சு. இப்போ புதுப் பொண்ணா இருக்காங்களே...''

''என்னங்க பண்றது?! நாங்க ஒரு ஹீரோயின்கிட்ட கதை சொல்லி கமிட் பண்ணா, அவங்களுக்கு யாராவது போன் பண்ணி கெடுத்துவிட்டுர்றாங்க. இதுக்கு மேல என்ன சொல்ல?''

''நீங்க என்னதான் சமாளிச்சாலும், 'த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தைத் திட்டி தீர்த்தாங்களே...''

''சிம்பு கூப்பிட்டு 'படம் செம’னு சொல்லி அரை மணி நேரம் பேசினார். நான் நல்லா டான்ஸ் ஆடியிருக்கிறதா ரஜினி சார், தாணு சார்கிட்ட சொல்லியிருக்கார். அதேசமயம் நெகட்டிவ் ஃபீட் பேக்கும் இருந்தது. அப்பப்போ சில படங்கள் அப்படி சென்சேஷன் ஆகும்... 'துள்ளுவதோ இளமை’ மாதிரி. அந்த விமர்சனத்தையும் நாம ஓப்பனா எடுத்துக்கணும்!''

 “ரஹ்மான் மியூஸிக்ல நான் நடிக்கணும்!”

'' 'ஹீரோவா நடிக்கிறப்ப ஹீரோயினுக்கு முத்தம் கொடுக்கக் கூடாது’னு உங்க மனைவி சைந்தவி கண்டிஷன் போட்டாங்கனு சொன்னீங்க. இப்போ இதுக்கு என்ன சொல்றாங்க?''

''எதுவும் சொல்ல மாட்டேங்கிறாங்க. அதான் பயமா இருக்கு. போஸ்டர்ஸ் பாக்கும்போது எல்லாம் முறைச்சுட்டே போறாங்க!''

''உங்க மாமா ஏ.ஆர்.ரஹ்மான் என்ன சொன்னார்?''

''டிரெய்லர் பார்த்துட்டு ஹாலிவுட்ல உள்ள நடிப்புப் பயிற்சியாளர்கள் சிலரோடு என்னைப் பேசவெச்சார். ஸ்கைப்லயே அவங்ககிட்ட நடிப்புப் பயிற்சி எடுத்தேன். என் ஆசை, ரஹ்மான் சார் மியூஸிக்ல ஒரு படம் நடிக்கணும்!''

 “ரஹ்மான் மியூஸிக்ல நான் நடிக்கணும்!”

''அதான் முழுநேர நடிகர் ஆகிட்டீங்களே... நடிகர் சங்கத்துல உறுப்பினராகி இருப்பீங்க. தேர்தல்ல உங்க ஓட்டு யாருக்கு?''

''நிச்சயமா ஓட்டுப் போடுவேன். ஆனா, 'இவங்களுக்குத்தான் ஆதரவு’னு சொல்லிட்டா, கண்டபடி திட்டுவாங்க. அந்த நேரத்துல யாருக்கு ஆதரவு அளிக்கத் தோணுதோ, அவங்களுக்குத்தான் என் வாக்கு!''