கார்க்கிபவா
'நான் ஏதோ மலையிலே கல் உடைக்கிறேன் என்று அவர்கள் அலட்சியமாகப் பார்த்தனர். பாவம்... அவர்களுக்குத் தெரியாது நான் அந்த மலையையே உடைத்துக்கொண்டிருக்கிறேனென்று!’
- ஸ்டெல்லா புரூஸ்
பிறருக்கு முட்டாள்தனமாகத் தெரியும் விஷயமே, ஒரு கலைஞனின் துணிச்சல் அடையாளமாக இருக்கும். தன் முயற்சியில் தோற்றால் உலகம் அவனைப் பார்த்துச் சிரிக்கும்; வென்றால், உலகைப் பார்த்து அவன் சிரிப்பான். அப்படிப்பட்ட ஆத்மார்த்தமான கலைஞன் ஒருவனை பற்றிய அட்டகாசமான ஹாலிவுட் சினிமாதான் 'தி வாக்’!

1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி. அப்போது நியூயார்க் நகரில் 'ட்வின் டவர்’ கட்டப்பட்டுக்கொண்டிருந்தது (ஆம்... 2001-ம் ஆண்டில் தரைமட்டமாக்கப்பட்ட அதே இரட்டைக் கோபுரங்கள்தான்!). அன்று காலை அந்த வழியே சென்றவர்களுக்கு ஆச்சர்யம். 400 மீட்டர் உயரம், 110 மாடிகள் கொண்ட அந்தக் கட்டடங்களை உச்சியில் ஒரு கயிறு இணைத்துக்கொண்டிருந்தது. அதன் மீது ஒருவன் கையில் நீண்ட குச்சியுடன் நடந்துகொண்டிருந்தான். நூற்றுக்கணக்கானோர் தங்கள் உயிரைப் பிடித்துக்கொண்டு பார்க்க, எட்டு முறை இங்கும் அங்கும் நடந்தான். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள். நடப்பது மட்டும் அல்லாமல், கயிற்றின் மேலே படுப்பது, பார்ப்பவர்களுக்கு வணக்கம் செலுத்துவது என பல சாகசங்களை நடத்திக்கொண்டிருந்தான். திடீரென மழை வர, தனது ஷோவை நிறுத்தி கட்டடத்துக்குத் தாவினான். தயாராக இருந்த நியூயார்க் போலீஸ் அவனைக் கைதுசெய்தது. அந்த இளைஞனின் பெயர் பிலிப். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அவனுக்கு அப்போது வயது 24.
பிலிப்பின் கதைதான் 'தி வாக்’ சினிமாவாக உலகையே ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. 17 வயதில், பிரான்ஸின் ஒரு மருத்துவமனையில், தற்செயலாக பத்திரிகைச் செய்தியாகத்தான் ட்வின் டவர் பிலிப்பின் கண்களில் படுகிறது. சிறு வயது முதலே கயிற்றில் நடக்கும் கலையில் ஆர்வம்கொண்ட பிலிப்புக்கு அன்று ஒரு கனவு உதிக்கிறது. தங்கள் நாட்டு ஈஃபிள் டவரைவிட 100 மீட்டர் உயரமான ட்வின் டவர் உச்சியில் கயிற்றின் மீது நடக்க வேண்டும். அன்று முதல் அவனது வாழ்க்கை நதி ட்வின் டவரை நோக்கியே ஓடியது. நண்பர்கள் உதவியுடன், அந்தக் கட்டடத்தின் உச்சிக்குச் செல்கிறான், தேவையான கயிற்றைக் கட்டுகிறான், நினைத்ததைச் சாதிக்கிறான் என்பது... வெள்ளித்திரையில், 3-டி அனுபவத்தில் பார்த்தே ஆகவேண்டிய விஷயம்.

ஒரு காட்சியில், ட்வின் டவரின் உயரத்தை நாம் உணர, கட்டடத்தின் அடியில் இருந்து உயரத்தை நோக்கி ஒரு ஷாட் வைத்திருக்கிறார்கள். அதன் முடிவு நம் கண்ணுக்குத் தெரியவில்லை. 'இது சாத்தியம் அல்ல’ என பிலிப் நினைக்க, நாமும் அதையே நினைக்கிறோம். ஆனால், நாம் அசந்த நேரத்தில் பிலிப் நம்மையும் அதன் உச்சிக்கு அழைத்துச்செல்கிறான். தனது ராஜபாட்டையில் கம்பீர நடை நடக்கிறான். நாமும் அந்த 1,350 அடி உயரத்தில் இருப்பதுபோலவே இருக்கிறது. 3டி தொழில்நுட்பம் கொடுக்கும் உச்சபட்சக் குதூகலமாக இந்தப் படத்தைச் சொல்லலாம்.
'பேக் டு த ஃப்யூச்சர்’, 'ஃபாரஸ்ட் கம்ப்’, 'கேஸ்ட் அவே’, போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய ராபர்ட் செமிக்ஸ்க்கு 'தி வாக்’ இன்னொரு மைல்கல். விஷ§வலாக மட்டும் அசத்தாமல் பிலிப்பின் மனக் குழப்பங்களையும், நினைத்தது நடக்கும்போது அவனுக்குக் கிடைக்கும் பூரணத்துவத்தையும் அப்படியே பார்வையாளனுக்குக் கடத்தியிருக்கிறார். இவரது அசாத்திய திரைமொழியால் 'தி வாக்’ கமர்ஷியல் கொண்டாட்டம் கிளாசிக் புத்திசாலித்தனம் இணைந்த கலவையாக வந்திருக்கிறது. 'இதுவரை இவரது நடிப்பு சொதப்பியதே இல்லை’ என விமர்சகர்கள் ஜோசப் கார்டன் லெவிட்டை இறுக்கி அணைத்து, உச்சி முகர்ந்து பாராட்டுகிறார்கள். 'உலகின் சிறந்த மோசமான கலைக் குற்றம் (World's best artistic crime) இதுவாகத்தான் இருக்கும்’ என கண்களில் நம்பிக்கை ஒளி மின்ன அவர் சொல்லும் இடங்களில் நமக்குப் பதறுகிறது.
ஏற்கெனவே தெரிந்த கதையைப் படமாக்குவதே சவால். அதில் காட்சி சுவாரஸ்யங்கள் மட்டும் அல்லாமல், திரைக்கதையிலும் மேஜிக்செய்வது சாதாரண விஷயம் அல்ல. உலகத் தரம் என்பது ஸ்கிரிப்ட்டிலே இருக்க வேண்டும் என்பதற்கு 'தி வாக்’ நல்ல உதாரணம். பிலிப்பின் குருவாக பென் கிங்க்ஸ்லீ. மனரீதியாக அவனைத் தயார்ப்படுத்தும் காட்சிகளில் அவரது அனுபவம் தெரிகிறது.
'கனவு காணுங்கள். அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் கவலை வேண்டாம். அதற்காக மட்டுமே வாழுங்கள். வெற்றி உங்களுக்குத்தான்’ என சிலிண்டர் நிறைய தன்னம்பிக்கை ஆக்சிஜனை நமக்குள் ஏற்றி வெளியே அனுப்புகிறது 'தி வாக்’!
பிலிப்பின் கனவைவிடவா உங்கள் கனவு பெரியது?