Published:Updated:

டெட்லி வில்லன் சூர்யா!

ம.கா.செந்தில்குமார்

விக்ரம் கே குமார், அரிதாகப் படம் பண்ணும் இயக்குநர். தெலுங்கில் மாஸ் ஹிட்டடித்த 'மனம்’ தந்தவர், இப்போது '24’-க்காக சூர்யாவுடன் கைகோத்திருக்கிறார். 

'' என் 'மனம்’, சூர்யா சார் குடும்பத்துக்கே ரொம்ப பிடிச்சிருந்தது. அதை சிவகுமார் சார், சூர்யா சார், கார்த்தி, ஜோதிகா மேடம் நடிக்க தமிழில் ரீமேக் பண்ணலாம்னுதான் அவங்க தரப்பில் இருந்து என்னை அணுகினாங்க. 'என்கிட்ட வேற ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் ஸ்கிரிப்ட் இருக்கு... கேளுங்க. பிடிச்சிருந்தா, அதைப் பண்ணலாம். இல்லைனா, 'மனம்’ ரீமேக் பண்ணலாம்’னு சொன்னேன். 'ஓ.கே., ஆனா அரை மணி நேரம்தான் டைம். அதுக்குள்ள கதை சொல்லிடணும்’னு சொன்னார் சூர்யா சார். நான் நாலரை மணி நேரம் கதை சொன்னேன்'' - குலுங்கிச் சிரிக்கிறார் விக்ரம்.

''இந்தப் படத்தை சூர்யாவே தயாரிக்கும் அளவுக்கு அவரை வியக்கவைத்த விஷயம் எது?''

''இதில் அவருக்கு மூணு கேரக்டர்கள். அதில் ஒண்ணு வில்லன். 'ஆத்ரேயா’ங்கிற அந்த வில்லன், சாதாரண ஆள் கிடையாது; செம டெட்லி வில்லன். அந்த கேரக்டரை அவ்வளவு நேசிச்சு அழகா பண்ணியிருக்கார். 'சினிமாவில் வில்லனா நடிச்சா, இப்படி ஒரு வில்லனாதான் நடிக்கணும்’னு சொன்னார். சூர்யா சாரோட சினிமா வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, 'ஆத்ரேயா’ கேரக்டர் நிச்சயம் பேசப்படும். படம் ரிலீஸுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கு. அதனால், மத்த ரெண்டு கேரக்டர் பத்தி அப்புறம் சொல்றேன்.''

டெட்லி வில்லன் சூர்யா!

''அந்த வில்லன் கேரக்டர்ல அப்படி என்ன ஸ்பெஷல்?''

''வில்லன் கேரக்டர் உள்பட ஒவ்வொரு சீனையும் எழுதும்போது அவ்வளவு கஷ்டப்பட்டேன்.

'நீ இவ்வளவு யோசிச்சிருக்கல்ல, அதை மீறி நான் உனக்கு தர்றேன் பார்’ங்கிற அளவுக்கு சூர்யா நடிச்சிருக்கார். இதுல அவருக்கு ஸ்பெஷல் மேக்கப். அந்த மேக்கப் போட்டு முடிக்க நாலு மணி நேரம் ஆகும். அவர் அதிகாலையில் ஐந்து மணிக்கு லொக்கேஷன்ல இருந்தாதான், காலையில ஒன்பது மணிக்கு ஃபர்ஸ்ட் ஷாட் எடுக்க முடியும். அப்படி ஒரு நெருக்கடியைத் தாண்டி நடிச்சிருக்கார் சூர்யா சார். மிக உயரமான பாலத்தில் இருந்து கீழே ஓடுற ட்ரெயின் மேல குதிக்கணும். 'டூப் வேணாம்’னு சொல்லிட்டார். என்னதான் சேஃப்ட்டி ஏற்பாடுகள் இருந்தாலும், எனக்கு பயம். ஆனா, எந்தத் தயக்கமும் இல்லாம அவ்வளவு அற்புதமா பண்ணினார்.''

'' '24’-படம் பேரே வித்தியாசமா இருக்கே?''

'' 'ஏன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்’னு இடைவேளைக்கு அடுத்து வரும் காட்சிகள் புரியவைக்கும். ஸ்கிரிப்ட்டின் மெயின் லைனே இந்த '24’ மேல்தான் டிராவல் ஆகுது. சூர்யாவிடம் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே, 'இந்த ஸ்கிரிப்ட்டின் தலைப்பு 24’-னு சொன்னேன். 'முதல்ல கதை சொல்லுங்க. தலைப்பு பற்றி அப்புறம் பேசுவோம்’னு சொன்னார். கதை கேட்டு முடிச்சதும், 'இந்தக் கதைக்கு '24’-தான் பொருத்தமான தலைப்பு’னு சொன்னார். படம் பார்த்த பிறகு நீங்களும் இதைத்தான் சொல்வீங்க.''

டெட்லி வில்லன் சூர்யா!

''டைம் டிராவல் கதையா?''

''சயின்ஸ் ஃபிக்ஷன் சினிமா. சயின்ஸ்ல இப்ப இப்படி ஒரு விஷயம் நடக்க சாத்தியம் இல்லை;  நடந்தா எப்படி இருக்கும் என்பதுதான் கதை. இந்த மாதிரி சப்ஜெக்ட்ல ஹாலிவுட் படங்கள் நிறைய வந்திருக்கு. அங்க அதை எப்படி  ஹேண்டில் பண்ணியிருக்காங்கனு தெரிஞ்சுக்க, 50 பெஸ்ட் படங்களையாவது பார்த்திருப்பேன். ஆனா, அந்தச் சாயல் எதுவும் என் படத்தில் இருக்காது. நாம எங்க இருந்தாவது ஒரு விஷயத்தை எடுத்து சேர்த்திருந்தாக்கூட ரிலீஸ் அன்னைக்கே, 'இது இந்தப் படத்தின் காட்சி, இது காப்பி’னு ஆன்லைன்ல எழுதி கேவலப்படுத்துறாங்க. அந்த காப்பி பேஸ்ட் வேலை இதுல இல்லை.''

''சமந்தா, நித்யா மேனன்னு இரண்டு ஹீரோயின்கள். அவங்களுக்கு என்ன ரோல்?''

''சமந்தாகூட 'மனம்’ பண்ணினேன். இந்தத் தலைமுறை நடிகைகளில் திறமையானவர்களில் ஒருவர். 'கஜினி’யில சூர்யா - அசின் காம்போ எப்படி இருக்குமோ அந்த மாதிரி, இதுல சூர்யா- சமந்தா லவ்ல செம காமெடி இருக்கும். படம் வந்த பிறகு சமந்தாவை நீங்க லவ் பண்ண ஆரம்பிச்சிருவீங்க. நித்யா மேனன், என் 'இஷ்க்’ பட ஹீரோயின்; நல்ல ஃப்ரெண்ட். அவங்களுக்கு சற்றே நீளமான குணச்சித்திர கேரக்டர். அடுத்து சரண்யா மேடம். நான் பண்ணினது மொத்தம் அஞ்சு படங்கள். இது அவங்ககூட எனக்கு நாலாவது படம். ரொம்ப முக்கியமான கேரக்டர்.''

''ஏ.ஆர்.ரஹ்மானை எப்படிப் பிடிச்சீங்க?''

''சூர்யா சார் கதை கேட்டு முடிச்சதும், 'இதுல ரஹ்மான் சார்தான் மியூஸிக். முதல்ல சார்கிட்ட  கதை சொல்லுங்க’னு சொன்னார். அது ரம்ஜான் மாதம். சார் நோன்புல இருந்தார். 'அரை மணி நேரம் டைம். கதை கேட்டு முடிச்சிட்டு நோன்பு திறக்கப்போகணும்’னு சொன்னார். செல்லை சைலன்ட் மோடுல போட்டு மூடி வெச்சுட்டு கதை கேட்க ஆரம்பிச்சார். அரை மணி நேரம் என்றவர் நேரம்போனதே தெரியாமக் கேட்டுட்டே இருந்தார். யதேச்சையா போனைப் பார்த்தபோது வீட்டில் இருந்து 10 மிஸ்டு கால்ஸ். 'நான் போய் நோன்பை முடிச்சிட்டு வந்துடுறேன். எங்கேயும் போயிடாதீங்க’னு சொல்லிட்டுப் போய் திரும்ப வந்து மூன்றரை மணி நேரம் கதை கேட்டார். நான் சொல்லி முடிச்சதும் சூர்யா சாருக்கு போன் போட்டு, 'கண்டிப்பா நான் பண்றேன். கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு’னு சொன்னார். ஐந்து பாடல்கள். எல்லாமே செம கலக்கல் ஹிட் நம்பர்ஸ்!''

''சயின்ஸ் ஃபிக்ஷன் படம்னா, ஒளிப்பதிவு முக்கியம். உங்க ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பி.சி இதில் இல்லையே?''

''என் எந்தப் படமா இருந்தாலும் பி.சி சார் ஒப்பீனியன் ரொம்ப முக்கியம். என் எல்லா கதைகளையும் முதல்ல அவர்கிட்டதான் சொல்வேன். 'மனம்’ பார்த்துட்டு, 'ரொம்ப நல்லா இருந்துச்சுய்யா’னு சொன்னார். '24’ம் அவர்கிட்டதான் கேட்டேன். 'யோவ்... நாம ஏற்கெனவே ரெண்டு படங்கள் பண்ணிட்டோம். கொஞ்சம் பிரேக் எடுத்துப்போம்’னு சொன்னார். நான் ப்ரியதர்ஷன் சார் அசிஸ்டென்ட். அவர் ஒளிப்பதிவாளர் திரு காம்பினேஷன்ல நிறையப் படங்கள் பண்ணியிருக்கார். அப்ப இருந்தே திரு சார் பழக்கம். எதைச் சேர்க்கிறது, எதை நீக்குறதுனு யோசிக்கிற அளவுக்கு அப்படி ஒரு ஃபுட்டேஜ் எடுத்துக்கொடுத்திருக்கார்.''

டெட்லி வில்லன் சூர்யா!

''செட்டும் கிராஃபிக்ஸும் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்துக்கு ரொம்ப முக்கியமாச்சே?''

''இந்தப் படத்துல முக்கியமான விஷயம் ஆர்ட் டைரக்ஷன். அமித் ரே மற்றும் சுபோத் சக்ரபர்த்தி. சமீபத்தில் வந்த 'ஹைதர்’, 'தல்வார்’, 'ஹவாய்ஜாதா’, 'ஹீரோ’, 'கட்டி பட்டி’னு நிறையப் படங்கள் இவங்க கைவண்ணம்தான். நான் ஸ்கிரிப்ட் முடிச்சதும், 'செட் இப்படித்தான் இருக்கணும்’னு அவங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சென்னைக்கு வந்துட்டேன். ஒரு மாசத்துக்குப் பிறகு, 'செட் ரெடி, வந்து பார்த்துடுங்க’னாங்க. ஸ்கிரிப்ட்ல ஒரு இடத்துல, 'அந்த கேரக்டர் வந்து நின்னு பார்க்கும்போது அப்படியே அந்த லேபாரட்டரிக்கு உயிர் வந்த மாதிரி இருக்கும்’னு எழுதியிருப்பேன். 'இதை கிராஃபிக்ஸ்ல பண்ண வேணாம். இந்த லேப் அப்படியே மூவ் பண்ணிட்டு இருக்கணும்’னு சொன்னேன். நான் நினைச்சது மாதிரியே பண்ணியிருந்தாங்க. யூனிட்ல எல்லாரும் எங்களை மறந்து கைதட்டிட்டோம்.

டெட்லி வில்லன் சூர்யா!

அடுத்து ஃபாரின் லேடி க்ளோர். படத்துக்கு இவங்கதான் மேக்கப் ஸ்பெஷலிஸ்ட். இதுவரை சூர்யா சார் பண்ணின எந்தக் கதாபாத்திரச் சாயலும் இல்லாம புதுசா இருக்கணும்னு முயற்சிபண்ணி, ஒரு லுக் கொண்டுவந்திருக்காங்க.

கிராஃபிக்ஸுக்கு, ஜூலியன். பிரான்ஸ் ஆள். இவர்தான் விஷுவல் எஃபெக்ட்ஸ் சூப்பர்வைசர். 'கபாலி’-க்கு ஸ்டன்ட் பண்ற அன்பு-அறிவு இருவரும்தான் சண்டைக் காட்சிகள் பண்றாங்க. எடிட்டர், பிரவீன் பூடி, என் 'மனம்’ எடிட்டர். இந்த மாதிரி சூப்பர் டெக்னீஷியன்ஸ் இருந்ததால்தான் இப்படி ஒரு படம் பண்ண முடிஞ்சிருக்கு.''

'' நாகார்ஜுனா குடும்பமே நடிச்ச 'மனம்’ படத்துக்காக ஆந்திராவே உங்களைக் கொண்டாடுச்சே. அதை எப்ப தமிழ்ல பண்ணப்போறீங்க?''

'' 'மனம்’ படத்தை தெலுங்கு பட உலகில் ஒவ்வொருவரும் தன் படமா எடுத்துக்கிட்டு ரொம்பப்  பெருமைப்பட்டாங்க. நாம ஒரு கதை சொல்லி முடிச்சாச்சு. அது போய்ச் சேர வேண்டியவங்ககிட்ட சேர்ந்துருச்சு. மறுபடி அதே கதையைப் பண்ணினா காசு வருமே தவிர, நமக்கு எந்த முன்னேற்றமும் இருக்காது. ஒரு வருஷம் வேஸ்ட் ஆகும். இந்த '24’-ம், 'மனம்’ படம் மாதிரி உங்க மனசுக்கு நெருக்கமா இருக்கும்.''