ஒருநாள் இரவில்! - சினிமா விமர்சனம்
தப்பே செய்யாத ஒருவனை, தடுமாறவைக்கும் 'ஒருநாள் இரவு’தான் படத்தின் ஒன்லைன்.
சிங்கப்பூர் ரிட்டர்ன் சத்யராஜ், ரொம்ப ஸ்ட்ரிக்ட் அப்பா. தன் மகள் நண்பனுடன் பைக்கில் ஒன்றாக வருவதைப் பார்த்து, காதல் எனத் தவறாகப் புரிந்துகொள்கிறார். அதனால் மகளின் கல்லூரிப் படிப்பை நிறுத்திவிட்டு, குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். இந்தச் சூழலில் நண்பர்களுடன், வீட்டு வாசலில் தனக்குச் சொந்தமான கடையில் மது அருந்துகிறார். அங்கே போதைக்கு பாலியல் தொழிலாளிகளைப் பற்றிய வர்ணனையை சைடுடிஷ்ஷாகத் தொட்டுக்கொள்கிறார்கள். அங்கு தடுமாறும் சத்யராஜ், பாலியல் தொழிலாளி அனுமோலை அழைத்துவருகிறார். சந்தர்ப்ப சூழ்நிலையால் சத்யராஜும் அனுமோலும் கடையிலேயே சிக்கிக்கொள்கிறார்கள். இதற்கு இடையில் ஃபீல்டு அவுட்டான சினிமா இயக்குநர் யூகிசேதுவின் கதையும், ஸ்கிரிப்ட் பேப்பரும் அந்தக் கடைக்குள் சிக்கிக்கொள்கின்றன. அவை அந்தக் கடைக்குள் எப்படிப் போனது? சத்யராஜும் அனுமோலும் அந்தக் கடையில் இருந்து வெளியே வந்தார்களா என்பது மீதிக் கதை.
மலையாளத்தில் வெளிவந்து பாராட்டுக்களைக் குவித்த 'ஷட்டர்’ படத்தை தமிழில் இயக்கி இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் எடிட்டர் ஆண்டனி.

சிங்கப்பூர் ரிட்டர்ன் சிடுமூஞ்சி அப்பாவாக சத்யராஜ் கச்சிதம். மகள், நண்பனுடன் பழகுவதைக் கண்டு கோபம், சின்ன சபலம் தரும் தடுமாற்றம், மாட்டிவிடுவோமா என்ற பதைபதைப்பு, முதன்முதலாக வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் தனிமை... என தன் அனுபவ நடிப்பில் அபார வெரைட்டி காட்டுகிறார் மனிதர்.
'இங்க ஒருத்தர்னு சொல்லிட்டு அங்க போய் ரெண்டு மூணு பேர் வரக் கூடாது’ எனப்

பேசுவதாகட்டும், சத்யராஜின் நிலைமை புரியாமல் சத்தமாகச் சலம்புவதாகட்டும், சின்னச் சின்ன ரியாக்ஷன்களிலும் அசத்துகிறார் அனுமோல்.
வலுவான கதை, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இருந்தும் மலையாளத்தில் இருந்த அந்தப் பதைபதைப்பு தமிழில் மிஸ்ஸிங். ஆட்டோ ஓட்டுநர் வருண் உள்பட சிலரின் நடிப்பில் செயற்கைத் தனம். அயிட்டம் சாங் ஷூட்டிங் தேவை இல்லாத திணிப்பு.
ஒரே அறை, வெவ்வேறு கோணங்கள்... எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரிய மைலேஜ். பின்னணி இசையில் படபடப்பை அதிகரிக்கச்செய்து ஈர்க்கிறது நவினின் இசை.
இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், அதிரவைத்திருக்கும் இந்த இரவு!
- விகடன் விமர்சனக் குழு