Published:Updated:

சிம்ப்ளிசிட்டி... கெப்பாசிட்டி... பர பர பப்ளிகுட்டி!

தோட்டா ஜெகன், ஓவியங்கள்: ஷண்முகவேல்

'நாட்டுல எத்தனையோ பொண்ணுங்க இருந்தாலும், நான் ஏன் ஜெஸ்ஸி உன்னைய மட்டும் லவ் பண்ணினேன்?’னு நிமிஷத்துக்கு நாலு தடவை கேட்கிற 'விண்ணைத்தாண்டி வருவாயா’ சிம்புகூட, நம்மாளுங்க சிலரைப் பார்த்தா, 'நாட்டுல மும்பை சிட்டி, பெங்களூரு சிட்டி, சென்னை சிட்டினு எத்தனையோ சிட்டி இருக்கிறப்ப, நீங்க ஏன்யா பப்ளிசிட்டியை லவ் பண்றீங்க?’னு ஃபீல் பண்ணிக் கேட்டாலும் கேப்பாரு. இவங்க எல்லாரும் பால்குடம் எடுக்கிற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மாதிரி, தெரிஞ்சுதான் பண்றாங்களா... இல்லை எதுக்கு எடுக்கிறோம்னு தெரியாமலேயே படம் எடுக்கிற பவர் ஸ்டார் மாதிரி தெரியாமப் பண்றாங்களானு தெரியலை. 

'சிம்ப்ளிசிட்டியில இருந்து பப்ளிசிட்டிக்கு மாறுறவன்தான்டா பயப்படுவான். நாங்க எல்லாம் பப்ளிசிட்டியிலேயே வாழுறவய்ங்க’னு 'தனி ஒருவன்’ அர்விந்த் சுவாமி மாதிரி சொல்லி, எப்பவும் பப்ளிசிட்டி சுவரொட்டி ஒட்டுற இந்த அரசியல்வாதிகளை டீயில விழுந்த ஈயா தூக்கிப் போட்டுட்டுப் பார்த்தாலும், ஃபேமஸ் ஆகணும்கிற வெறியில திரியுறது பூரா நம்ம பயலுகதான்.

வெட்டி பந்தா காட்டி, வீண் பப்ளிசிட்டி தேடுறதுல ஆண்டு சந்தா கட்டி ஆயுட்கால உறுப்பினரா இருக்கிறதுல, முக்கால்வாசிப் பேரு சினிமா ரசிக வெறியர்கள்தான். தனது அபிமான நடிகரோட படம் ரிலீஸானா போதும்... நாக்குல சூடம் கொளுத்துறது, நெத்தியில சூடம் ஏத்துறதுனு திருநீறு வைக்கவேண்டிய இடத்துல எல்லாம் தீயை வெச்சுக்கிறாங்க. தஞ்சாவூர் கல்வெட்டுல தன்னோட தத்துவத்தை பொறிச்சுவைக்கிற மாதிரி, தன் தலையில தலைவனோட திரைப்படப் பேரை தலைமுடிக்கு நடுவுல கொத்திவைக்கிறதைக்கூட, என்னமோ எவரெஸ்ட் சிகரம் ஏறி எர்வாமாட்டின் மூலிகையை நட்டுவெச்ச ரேஞ்சுல, அதப்புல மிதக்குறானுங்க. புளிசோறுல முட்டைய வெச்சு 'சண்டே பிரியாணி’னு செல்ஃபி போடுறது, தன் தலைவனோட படத்தை தன் தொந்தியில டாட்டூ போடுறதுனு, அரிக்கிற முதுகுல சொறியிற கையாட்டம் ஆல் டைம் பிஸியா இருக்கானுங்க. நாம செய்றதை நாப்பது பேரு பார்க்கணும், அதுல பாதிப் பேரு 'எப்படி தம்பி இதெல்லாம்?’னு கேக்கணும்... இதுதான் இவங்களோட ஒரே டார்கெட்.

சிம்ப்ளிசிட்டி... கெப்பாசிட்டி... பர பர பப்ளிகுட்டி!

'ஃப்ரீயா பப்ளிசிட்டி கிடைக்குதுனா, நான் பத்தாத ஜீன்ஸ் பேன்ட்டைக்கூட பத்து நாள் போட்டிருப்பேன்’னு பாய்ஞ்சு வர்றவய்ங்கதான் நம்ம இன்டர்நெட் போராளிங்க. காலையில கம்ப்யூட்டரை ஆன் பண்ற வரை நல்லாத்தான் இருப்பாங்க. ஆபீஸ்ல வேலை கொஞ்சம் கம்மியா இருந்தா போதும், அன்றைய பிரச்னைக்கு ஆணி புடுங்க ஆரம்பிச்சுருவாங்க. டிரெய்னேஜ் அடைச்சுக்கிச்சுன்னா கவுன்சிலருக்கு கால் பண்ணிப் பேச கை நடுங்குற இவங்கதான், 'பத்து பேரு பாராட்டணும், பதினஞ்சு          பேருக்கிட்ட ரீச் ஆகணும்’னு, சமூகத்தின் மொத்த டேமேஜுக்கும் பர்னால் தடவி பேண்டேஜ் ஒட்டப்போற ரேஞ்சுல பேசுறாங்க.

ஜெர்மனி போறவன், ஜப்பான் போறவன்கூட ஆளும் கட்சி பந்த் மாதிரி அமைதியாப் போயிட்டு வந்திடுவான். ஆனா, இந்த ஜிம்முக்குப் போறவன் இருக்கானே... அய்யய்யய்யயோ... வெளிநாட்டு டூருக்குப் போயிருக்கிற பிரதமரைத் தவிர, ஊருல பூரா பயலுக்கும் சொல்லிட்டுத்தான் ஜிம்முக்குப் போவான். ரெண்டு நாளு போன ஜிம்முக்கே அவன் 'ஐ’ விக்ரம் மாதிரி ஆர்ம்ஸ் மடிச்சுக் காட்டுறப்ப, ஆடியோ ஃபங்ஷனுக்கு வந்த 'என்னமோ பேசுங்க. ஆனா, கொஞ்சம் சத்தம் இல்லாமப் பேசுங்க’ - அர்னால்டு மோடுக்கு நாம போயிடணும்.

'இறைவா, வாட்ஸ்அப் குரூப்களை நான் பார்த்துக்கொள்கிறேன்... இந்த ஃபேஸ்புக் குரூப்களில் இருந்து என்னைக் காப்பாற்று’னு வேண்டிக்கிற அளவுக்கு பாடாப்படுத்துறானுங்க. குரூப்பா குட் மார்னிங் சொல்றவனைக்கூட, காது கேட்காத நயன்தாராவா நினைச்சு மன்னிச்சுடலாம். ஆனா, நம்மளை ஒரு குரூப்ல சேர்த்துவிட்டுக் கும்மியடிக்கிறான் பாருங்க, அவனுக்கு எல்லாம் 'டேய்... ரெட் டி-ஷர்ட், உன்னை மறக்க மாட்டேன்டா’தான். இப்ப ஒரு குரூப் சுத்திக்கிட்டு இருக்கு, 'பேலியோ டயட்’னு. காலையில வந்து '30 கிராம் குறைஞ்சுட்டேன்’கிறாங்க. சாயந்திரம் பார்த்தா '300 கிராம் குறைஞ்சுட்டேன்’கிறாங்க. அடேய், உங்க பப்ளிசிட்டி வாயில ஃபெவிகால் போட்டு ஒட்ட. இப்படித்தான் கொஞ்ச நாளைக்கு முன்னால 'நாங்க கிரீன் டீ குடிக்கிறோம். நீங்க என்ன டீ குடிக்கிறீங்க?’னு குரூப்பா குவிஞ்சானுங்க. 'காலையில பிராந்தி குடிப்பேன்... சாயந்திரம் வாந்தி எடுப்பேன்’னு துரத்தி விடுறதுக்குள்ள 'வாலு’ படமே ரிலீஸாகிருச்சு.

'இதெல்லாம் என்னா சார் மேட்டரு, பப்ளிசிட்டி குடிச்சு வளர்ந்ததே நம்ம இண்டஸ்ட்ரி வாட்டரு’னு நெஞ்சை நிமிர்த்திச் சொல்லக்கூடியது, மண்புழுவைக் காட்டினாக்கூட அதைப் பெண் புழுவாகக் காட்டும் நம்ம சினிமா இண்டஸ்ட்ரி. காஞ்சிபுரம் பட்டுப்புடவையில இருக்கிற ரகங்களைவிட நம்ம கோடம்பாக்கம் பப்ளிசிட்டியில காட்டின விதங்கள் அதிகம். 'முத்தக் காட்சிக்கு முந்நூறு டேக் எடுத்தாங்க’னு நியூஸ் கொடுப்பாங்க. யோசிச்சுப்பாருங்க மக்களே, முந்நூறு தடவை கொடுத்தா அது முத்தமா இருக்குமா... இல்ல, மூஞ்சி முழுக்க ரத்தமா இருக்குமா?

படமே மறுநாள்தான் ரிலீஸாகும். ஆனா, மொத நாளே 'மாபெரும் வெற்றி’னு பேப்பர்ல விளம்பரம் கொடுக்கிறது எல்லாம் 'ஆர்யாவுக்கு ஆறு மாசம் இளையவரு சூர்யா’னு சொல்ற மாதிரி. எடுக்கிற படம் முடியுற நேரத்துல 'இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் மோதல்’, 'ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் காதல்’னு கோலிவுட்டுல கொளுத்திப்போட்ட ரீலை எடுத்தா, சிம்புக்கு எல்லாம் இந்நேரம் அறுபதாம் கல்யாணமே ஆகியிருக்கணும். பப்ளிசிட்டியில நாம பம்பரம்விட்டா, சினிமாக்காரங்க புல்லட் ரயிலே விடுவாங்க.

சிம்ப்ளிசிட்டி... கெப்பாசிட்டி... பர பர பப்ளிகுட்டி!

ஒரு படம் வந்தா போதும், 'இந்த சீன் இந்த ஹாலிவுட் படத்துல காப்பியடிச்சது, அந்த சீன் கொரியன் படத்துல காப்பியடிச்சது’னு கிளம்பி, ஒலக சினிமா அறிவை பப்ளிக்குட்டி பண்ணுவாங்க. 'எங்களுக்கு எல்லாம் எது எது எங்கெங்க காப்பியடிச்சதுனுலாம் தெரியாது. மூணு அடி வாங்கிட்டு எம்.ஜி.ஆர் திருப்பி அடிச்சது மட்டும்தான் தெரியும். 'பேசாமப் போறியா இல்ல.... வாயில பாட்டரி செல்லைப் போடவா’னு அவனுங்களைத் துரத்துறதுக்குள்ள 'பாகுபலி’ பார்ட் த்ரீ வந்துடும்.

காதுக்கு இனியது 'கம்ப ராமாயணம்’னா, கண்ணுக்குக் கொடியது ஃப்ளெக்ஸ் போர்டுல இவங்க பண்ற ரம்ப ராமாயணம். நல்லவேளை திருவள்ளுவர் இன்னிக்கு இல்லை; இருந்திருந்தா இவனுங்க ஃப்ளெக்ஸ்ல போடுற திருவாசகங்களில் ஒரு வாசகத்தைப் பாத்திருந்தாலும் தற்கொலை முயற்சி செஞ்சிருப்பாரு. கம்பர் எல்லாம் இருந்திருந்தா, மதுரைப் பக்கம் நம்மாளுங்க ஃப்ளெக்ஸ்ல பப்ளிசிட்டிக்குப் பயன்படுத்துற வார்த்தைகளைப் படிச்சுட்டு, விஷால் போல 'நானும் மதுரைக்காரன்தான்டா’னு மணல் லாரி பம்பரை எடுத்து ஃப்ளெக்ஸ் வெச்சவன் மண்டையிலேயே போட்டிருப்பாரு.

'கைமாத்துக் காசைத் திருப்பிக்கொடுத்த வள்ளலே’, 'கட்டிங், ஷேவிங் செய்யப்போகும் குண்டலகேசியே’னு எல்லாம் வாசகம் வைக்கிறீங்களேடா? இதைக்கூடப் பொறுத்துக்கலாம். ஆனா, பப்ளிசிட்டி ஆசையில புலி மூஞ்சியில உங்க மூஞ்சிய மார்ஃபிங் பண்ணிவைக்கிற கொடுமையை எல்லாம் சகிச்சுக்கவே முடியலை.

புதுசா ஜாகிங் போக ஆரம்பிச்சவன், தன் பிராண்டு ஷூவை வீட்டுக்கு வர்றவங்க கண்ணுக்குத் தெரியுற மாதிரி வைக்கிறது ஒரு பப்ளிசிட்டிதான். ஃப்ளைட்ல போயிட்டு வந்து, பல வருஷமாகி பேரன்-பேத்தி எடுத்த பிறகும், சூட்கேஸ்ல இருந்து லக்கேஜ் tag - ஐ எடுக்காம இருக்கிறதும் ஒரு பப்ளிசிட்டிதான். எல்லோரும் கிரிக்கெட் பற்றிப் பேசிக்கிட்டு இருக்கிறப்ப, 'கிரிக்கெட் வேஸ்ட்டுங்க, கரகாட்டம்தான் பெஸ்ட்டுங்க’னு மைதா மாவு பிசையறப்ப கோலமாவைக் கலக்க வர்றதும் பப்ளிசிட்டிதான். எப்பவாவது ஸ்டார் ஹோட்டல்ல தங்கினா, அந்த ரூம்ல இருக்கிற ஷாம்பூ, சோப்பு, சீப்பை வீட்டுக்கு எடுத்துட்டு வந்து, வர்றவங்க போறவங்களுக்கு விளக்கம் கொடுக்கிறதும் பப்ளிசிட்டிதான். இன்னைக்கு ஆன்லைன் ஷாப்பிங் மோகம் அதிகரிச்சிருக்கக் காரணமே, நமக்குள்ள இருக்கும் அந்த பந்தா பப்ளிசிட்டி பேய்தான்!

கடைசியா, கருத்து சொல்லித்தான் கட்டுரையை முடிக்கணுமாம். அதனால நாங்க என்ன சொல்ல வர்றோம்னா, காஸ்ட்லியான பிராண்டுல ஜட்டி வாங்குறது அவனவன் கெப்பாசிட்டி. அந்த பிராண்ட் தெரியுற மாதிரி ஜட்டி போடுறது பப்ளிசிட்டி. ஆனா, காஸ்ட்லி ஜட்டியா இருந்தாலும் அதை பேன்ட்டை போட்டு மறைக்கிறதுதான் சிம்ப்ளிசிட்டி.