Published:Updated:

"காதல் இருக்கு... தோல்வியும் இருக்கு!”

நா.சிபிச்சக்கரவர்த்தி

'நான் சினிமாவுக்கு வந்து 14 வருஷங்கள் ஆச்சு. 25 படங்கள் நடிச்சுட்டேன். 'ஜில் ஜங் ஜக்’ எனக்கு 26-வது படம். ஆனா, ஹீரோயின் இல்லாம நான் நடிக்கிற முதல் படம். அதேபோல ஹீரோயின்கள் பற்றி பேசாத முதல் பேட்டியா இது இருக்கட்டுமே... என்ன பாஸ், டீல் ஓ.கே-வா?' - கண் சிமிட்டிச் சிரிக்கிறார் சித்தார்த். 

'ஹீரோயின் இல்லாம படம் எடுக்கலாம். ஆனா, ஹீரோயின்கள் பற்றி நீங்க பேசாம ஒரு பேட்டியா?'

'சினிமாவுல எல்லாருமே என்னை 'ரொமான்டிக் ஹீரோ’, 'ச்சோ... க்யூட் அண்ட் ஹேண்ட்சம்’னு சொல்றாங்க. ஆனா, நான் ஸ்கூல், காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ணுகூட என்னைத் திரும்பிப் பார்க்கலை. இப்ப எனக்கு நடக்கிறது எல்லாம் சினிமாவும் கடவுளும் கொடுத்த பரிசு. சரி, நம்ப பாயின்ட்டுக்கு வருவோம். ஹீரோயின் பற்றி பேசுறது ரொம்ப போர். அதனாலதான் ஹீரோயின் இல்லாம படம் தயாரிச்சு, நடிச்சுட்டேன்.'

' 'ஜில் ஜங் ஜக்’ - இது வடிவேலோட ஃபேமஸ் டயலாக் ஆச்சே?'

'ஆமா. வடிவேல் சார் டயலாக்கை தலைப்பா வெச்ச அத்தனை படங்களும் ஹிட். இந்தப் படமும் நிச்சயம் ஹிட்டடிக்கும். இது மூணு பசங்களைப் பற்றின கதை. இந்தப் படத்துல வேலைசெஞ்ச எல்லாருக்கும் வயசு 25-க்குள்ளதான். சினிமாவுல இதுவரைக்கும் யார்கிட்டயும் அவங்க அசிஸ்டென்டா வேலை பார்க்காத ரொம்ப ஃப்ரெஷ் டீம். இந்தப் படத்தை எட்டு நிமிடக் குறும்படமா எடுத்து என்கிட்ட காட்டினாங்க. ஒரு நடிகரா எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதான் நானே தயாரிச்சேன்.'

 "காதல் இருக்கு... தோல்வியும் இருக்கு!”

'முழுக்க முழுக்க தமிழ் சினிமாவுல மட்டும்தான் கவனம் செலுத்துறீங்கபோல?'

'ஆமா... போன வருஷம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். 'ஜிகர்தண்டா’, 'காவியத் தலைவன்’, 'எனக்குள் ஒருவன்’னு எல்லாப் படங்களும் ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தம் இல்லாத கதைக்களம் கொண்டது. எல்லாமே எனக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்த படங்கள். இந்த வருஷத் தொடக்கத்துல ஒரு நல்ல படம் தயாரிக்கணும்னு நினைச்சேன். 'காதலில் சொதப்புவது எப்படி?’ படத்துக்கு நான் கோ-புரொடியூசர்தான். இப்போ 'ஜில் ஜங் ஜக்’ படம் மூலமா முழுமையான தயாரிப்பாளரா மாறியிருக்கேன்.'

'ஒரு தயாரிப்பாளரா நீங்கள் சந்திக்கிற சவால்கள் என்னென்ன?''

'நான் எம்.பி.ஏ படிச்சிருக்கேன். எப்படி பிசினஸ் பண்ணணும்னு எனக்குக் கொஞ்சம் தெரியும். அதன் மூலம் லாபம்கூடப் பார்த்துடலாம். ஆனா, இதை எல்லாம் தாண்டி, ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிச்ச கதையை திரையில் சொல்லணும். இதுதான் என் ஆசை. இப்போ எங்க டீம் மூணு கதைகளை டெவலப் பண்ணிட்டு இருக்காங்க. பார்ப்போம்... அவை அடுத்த ஆண்டு திரைக்கு வரலாம்.'

''அரண்மனை-2’ பேய் படம், அதுல நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?'

'சுந்தர்.சி படம்னா நான் கதைகூடக் கேட்க மாட்டேன். எங்க அம்மாகூட 'நீ சுந்தர்.சி படங்கள்ல நடிப்பா’னு சொல்வாங்க. காரணம், அப்ப மட்டும் ஒருவித அமைதியோடு வீட்டுல சிரிச்சுக்கிட்டே இருப்பேன். மனசு ரிலாக்ஸாக சிலர் யோகா, அவுட்டிங்னு போவாங்க. நான் சுந்தர்.சி-கூட இருப்பேன்..'

 "காதல் இருக்கு... தோல்வியும் இருக்கு!”

'உதவி இயக்குநராக இருந்து நடிகரா மாறுனீங்க. எப்போ முழு சினிமா இயக்கப்போறீங்க?'

'படம் இயக்கத்தான் நான் சினிமாவுக்கு வந்தேன். 'முதல்ல நீ நடி’னு கடவுள் என்னைத் திசை திருப்பிவிட்டுட்டார். நான் 15 வயசுல இருந்தே கதை எழுதிட்டு இருக்கேன். பக்கம் பக்கமாக பல கதைகள் இருக்கு. அதுல ஏதாவது ஒரு கதையை நிச்சயம் இயக்குவேன். எனக்குள் இருக்கும் இயக்குநர் தூங்கிக்கிட்டு இருக்கார். தீயா வேலைசெஞ்சு அவரை எழுப்பணும்.'

'இளம் கதாநாயகர்களில் உங்களுக்குப் பிடிச்சவங்க யார்?'

'பாஸ்... நானே இளம் கதாநாயகன்தானே (சிரிக்கிறார்). கௌதம் கார்த்திக் மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. அவர் நடிச்ச எல்லாப் படங்களையும் பார்த்தது மட்டும் இல்ல... அவர்கூடப் பழகியும் இருக்கேன். ரொம்ப இன்ட்ரஸ்டிங் கேரக்டர்.'

'சினிமாவுல உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்..?'

'முதல் நண்பன் கார்த்திக் சுப்புராஜ். 'ஜிகர்தண்டா’ ஷூட்டிங் தொடங்கி இன்னைக்கு வரைக்கும் தினமும் நாங்க பேசிடுறோம். நான் என்ன பண்றேன்னு அவருக்குத் தெரியும்; அவர் என்ன பண்றார்னு எனக்குத் தெரியும். கார்த்திக் சுப்புராஜைப் பார்த்து தமிழ் சினிமாவுல ஒரு ஜெனரேஷன் உருவாகிட்டு இருக்கு. அதேபோலத்தான் சந்தோஷ் நாராயணன் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். வீக் எண்ட்ல நேரம் கிடைக்கும்போது சந்திச்சு ஜாலி பண்ணுவோம். சுந்தர்.சி, ஆர்.ஜே.பாலாஜினு என் ஃப்ரெண்ட் லிஸ்ட் ரொம்பச் சின்னது.'

' 'ஹீரோயின்கள் பற்றிப் பேச வேண்டாம்’னு சொல்றீங்க. ஆனால், உங்களைச் சுற்றி நிறையக் கிசுகிசுக்கள் வட்டமடிக்குதே..?'

'ஆரம்பத்துல ரொம்பக் கடுப்பா இருக்கும். இப்போ பழகிருச்சு. கிசுகிசுக்கள் பற்றி என் ப்ரெண்ட்ஸுக்கும் குடும்பத்துக்கும் பதில் சொல்லியாச்சு... அது போதும்னு நினைக்கிறேன். மத்தபடி எனக்கும் காதல் இருக்கு... அதுல தோல்வியும் இருக்கு. இதை வெளிப்படையா பேசும்போதுதான், கஷ்டமா இருக்கு.'

 "காதல் இருக்கு... தோல்வியும் இருக்கு!”

'எப்போ கல்யாணம்?'

'என் அம்மா, அப்பா என்னை 'சாப்பிட்டியா?’னுகூடக் கேட்கிறது இல்லை... ஆனா, 'எப்போ கல்யாணம் பண்ணிக்கப்போற?’னு தினமும் கேக்கிறாங்க. கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணணும்.'

ஆல் தி பெஸ்ட்!