Published:Updated:

“லவ் யூ சொல்லவே இல்லை!”

ம.கா.செந்தில்குமார், படங்கள்: தி.குமரகுருபரன்

''இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் இருக்கும்னு எதிர்பார்க்கலை. 'நாம அவ்வளவு பெரிய ஆளா?!’னு எங்களுக்கே ஷாக். ட்விட்டர்ல வந்த ஒவ்வொரு வாழ்த்துமே வெறித்தனமா இருந்தது. ஆங்காங்கே சில குமுறல்களும் இருந்தன'' - அஞ்சனா முகத்தில் விதவிதமான ஸ்மைலி எமோட்டிகான்ஸ் ஒளிர்கின்றன. சன் மியூஸிக் நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஞ்சனாவுக்கும் 'கயல்’ பட ஹீரோ சந்திரனுக்கும் வரும் மார்ச் மாதம் டும்டும்டும். 

''ட்விட்டர்ல இவங்களுக்கு ஃபாலோயர்ஸ் ஜாஸ்தி. இவங்க ஏதோ மலர் டீச்சர் மாதிரி, 'பிரேமம்’ நிவின்பாலி ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி ஆளாளுக்கு ஏகப்பட்ட அலம்பல்...'' - அஞ்சனாவைக் கொஞ்சிக் கலாய்க்கிறார் சந்திரன்.

''அப்ப இவருக்கு சூரியன் எஃப்.எம்ல வேலை. ஒரே கேம்பஸ்தான். ஆனாலும் ரெண்டு பேருக்கும் அப்ப பழக்கம் கிடையாது'' என்கிற அஞ்சனாவை இடைமறித்த சந்திரன், ''இவங்களை அங்க ஒருமுறை லிஃப்ட்ல பார்த்து லேசா சிரிச்சேன். ஆனா, முகத்தைத் திருப்பிக்கிட்டாங்க. அன்னைக்கே ஒரு லைக் விழுந்திருந்தா, மூணு நாலு வருஷம் லவ் பண்ணி ரிலாக்ஸா கல்யாணம் பண்ணியிருக்கலாம். அதை மிஸ் பண்ணிட்டாங்க. ஆனா 'கயல்’ எங்களைச் சேர்த்துவெச்சிருச்சு. படம் முடிஞ்ச பிறகு ஒரு அவார்டு ஃபங்ஷன்ல சந்திச்சு, நட்பாகி, காதலாகி இப்ப கல்யாணத்தை நோக்கிப் போயிட்டிருக்கோம்'' - அஞ்சனாவைப் பார்த்துப் பேசுகிறார் சந்திரன்.

 “லவ் யூ சொல்லவே இல்லை!”

''பொதுவா அவார்டு ஃபங்ஷன்ல அவார்டை வாங்கிட்டு, பேசிட்டுப் போயிடுவாங்க. ஆனா இவர், ரொம்பத் தன்மையா எல்லாருக்கும் கைகொடுத்து தேங்க்ஸ் சொல்லி அவார்டு வாங்கினார். 'நல்ல பையனா இருக்காரே’னு எனக்குள் அப்ப ஒரு ஃப்ளாஷ். அவ்வளவுதான். பிறகு, ட்விட்டர்ல வாழ்த்தியிருந்தேன். ரிப்ளை, மெசேஜ், போன்கால், வாட்ஸ்அப்னு ஆரம்பிச்சோம். இது லவ் ஸ்டோரி என்பதைவிட ஒரு ஃப்ரெண்ட்ஷிப் ஸ்டோரி'' - வெட்கத்தோடு பேசுகிறார் அஞ்சனா.

''வீட்ல சின்ன எதிர்ப்பாவது இருந்திருக்குமே?'' என்றால், ''எங்க கதையில எல்லாமே உல்டாதான். நாங்க கொஞ்சம் நெருக்கமான பிறகு, வீட்டுக்கு என்னை இன்வைட் பண்ணினார் சந்திரன். உண்மையிலேயே இவங்க வீட்ல எல்லாரும் பயங்கர ஸ்வீட். நான் வீட்டுக்கு வரலைனாகூட, இவங்க அம்மாவே போன் பண்ணி, 'ஏன் ஹீரோ சார் இருந்தாத்தான் வீட்டுக்கு வருவீங்களோ?’னு செல்லமா கோவிச்சுப்பாங்க. அப்படி ஒருமுறை வீட்டுக்கு வந்திருந்தப்ப, 'கல்யாணம் பண்ணிக்கிறியா?’னு கேட்டுட்டார் சந்திரன். வழக்கமான 'ஐ லவ் யூ’ங்கிற வார்த்தைகள் எல்லாம் எங்களுக்குள்ள சொல்லிக்கவே இல்லை. ஆனா, எங்க வீட்லதான் அம்மாவுக்கு ஒரு சின்னத் தயக்கம்'' - சின்ன இடைவெளிவிட்ட அஞ்சனாவைத் தொடர்கிறார் சந்திரன்.

 “லவ் யூ சொல்லவே இல்லை!”

''அது நிச்சயம் தேவையான தயக்கம்தான். அவங்க கேட்ட கேள்வி, 'பையன் சினிமாவுல இருக்கானே... சம்பாதிப்பானா... பொண்ணை வெச்சுக் காப்பாத்துவானா?’ங்கிற கவலை. நடிகன் என்பதைத் தாண்டி, நான் பி.ஜி படிச்சு முடிச்சிருக்கேன். ஏதாவது வேலைக்குப் போய்கூட பொழைச்சுக்குவேன்னு நினைச்சிருப்பாங்கபோல. பிறகு, அவங்களும் ஓ.கே சொல்லிட்டாங்க'' என்கிறார் சந்திரன்.

''பையன் செம டெடிக்கேட். காலேஜ் நாட்கள்ல இருந்து நடிப்புத்தான் பேஷன். நடிப்புக்காகத் தன்னை நிறைய வருத்திப்பார். இப்பக்கூட பிரபு சாலமன் சார் தயாரிப்பில், 'சாட்டை’ அன்பழகன் சார் டைரக்ஷன்ல 'பைசல்’னு ஒரு படம் பண்ணிட்டிருக்கார். படம் ஃபுல்லா ஒரே சட்டை, ஒரே லுங்கிதான் காஸ்ட்யூம். அது இவரை அடுத்த ஸ்டெப்புக்கு அழைச்சிட்டுப்போகும்'' - சந்திரனுக்கு செம அப்ளாஸ் கொடுக்கிறார் அஞ்சனா.

''இவங்களும், சேனல்ல ரொம்ப கேஷுவலா பேசி லைக்ஸ் தட்டுறாங்க. தவிர, பெரிய படங்களோட இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்குறாங்க. இதெல்லாம் எனக்கும் பெருமைதானே! ஆனால், என் ஆடியோ லான்ச்களை கண்டிப்பா இவங்களை ஹோஸ்ட் பண்ண விட மாட்டேன். என்கூட பக்கத்துல உட்கார்ந்து பெருமையாப் பார்க்கணும்'' என்ற சந்திரனை இடைமறித்து, ''நாங்க எப்பவும் இப்படி சந்தோஷமா இருக்கணும்னு நீங்களும் ப்ரே பண்ணிக்கங்க ப்ரோ'' என்கிற அஞ்சனாவை ஆறுதலாக அணைத்துக்கொள்கிறார் சந்திரன்!