பா.ஜான்ஸன்
இதுவரை இல்லாத புதிய முயற்சியாக, 11 இயக்குநர்கள் ஒன்றுசேர்ந்து இயக்கியிருக்கும் படம் 'எக்ஸ்’.
11 கதைகள், 11 விதமான கதை சொல்லல்கள். ஒரு நாள் ஓர் இரவுதான் கதைக்களம். இப்படி ஒரு சினிமாவை உங்களால் கற்பனைசெய்ய முடிகிறதா?
'பாஸ்ட் இஸ் பிரசென்ட்’ - இதுதான் எக்ஸ் படத்தின் ஒன்லைன். கே என்கிற இயக்குநர், ஒரு திரைவிழாவில் ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். அவளை இவனுக்கு முன்-பின் தெரியாது. ஆனால் அவள், இவனின் முன்-பின் வாழ்க்கையை அவனுக்கு மறுபடி காட்டுகிறாள். அதாவது, அவன் கடந்துவந்த 10 பெண்களின் நினைவுகளை ஓர் ஒழுங்கற்ற வரிசையில் முன்னும்பின்னுமாக ஞாபகப் படுத்துகிறாள். அந்தப் பெண் யார், அவள் பெயர் என்ன, உண்மையில் அவள் பெண்தானா, இல்லை இவனின் கற்பனையா... என, புதிர் திருப்பங்களோடு பயணிக்கிறது கதை.
வழக்கமாக பல இயக்குநர்கள் இணையும் படம் என்பது, ஒரு ‘Anthology'’ யாக (பல கதைகளின் தொகுப்பு) இருக்கும். இதற்கு முன் மலையாளத்தில் வந்த 'கேரளா கஃபே’, தமிழில் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட 'பெஞ்ச் டாக்கீஸ்’ ஆகியவை இந்த வகையைச் சேர்ந்ததே. ஆனால், 'எக்ஸ்’ Anthology படம் அல்ல. இந்தப் படத்தில் ஒரே கதைதான். அதன் பகுதிகள் மட்டும் பிரிக்கப்பட்டு 11 இயக்குநர்களால் இயக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒவ்வொரு விதமான கதை சொல்லல் இருக்கும். உதாரணத்துக்கு, ஓர் அத்தியாயம் மட்டும்...

கே, தன் வீட்டில் வேலைசெய்யும் பெண் பாசந்தியிடம், தான் எழுதிய கதை பற்றி சொல்கிறான். அதை எப்படித் தொடர்வது என அவளிடம் கேட்கிறான். அந்தக் கதையில், கதாநாயகி பாருவுடன் ஓர் அறையில் இருக்கிறான் கே. அப்போது அந்த அறையின் கதவு தட்டப்படுகிறது. வெளியில் இருப்பது சந்திரமுகி (ஜோதிகா இல்ல பாஸ்). உள்ளே இருக்கும் பாருவும், கதவுக்கு வெளியே இருக்கும் சந்திரமுகியும் ஒரே தோற்றம் உடையவர்கள். 'இதற்கு மேல் எப்படி இதைத் தொடர்வது?’ என பாசந்தியிடம் கேட்கிறான் கே. 'அந்தச் சந்திரமுகியை உள்ளே வரவிடு. உள்ளே வந்ததும் துப்பாக்கியால் கே-வைச் சுட்டுவிடுகிறாள்’ என பாசந்தி அதன் தொடர்ச்சியைச் சொல்வாள். இது படத்தில் வரும் ஓர் அத்தியாயம். இதில் இருப்பது மொத்தம் இரு கதைகள் கே-பாசந்தி ஒரு கதை, கே-பாரு-சந்திரமுகி ஒரு கதை. ஆனால், இரண்டும் ஒரே அத்தியாயம். இதைப்போல ஒவ்வோர் அத்தியாயத்திலும் ஒவ்வொரு திரைக்கதை. ஆனால், தனித்தனியாக இல்லாமல் ஒரே படத்தில் எல்லா அத்தியாயங்களும் முன்னும்பின்னுமாக வரும்.
11 பகுதிகளில் வரும் ஒரு பகுதியை தியாகராஜன் குமாரராஜா எழுத, நலன் குமரசாமி இயக்கியிருக்கிறார். அதை ஒளிப்பதிவு செய்திருப்பது 'சூது கவ்வும்’, 'தெகிடி’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன்.

சுதீஷ் காமத் இப்படி ஒரு படம் செய்ய வேண்டும் என நினைத்த உடன் அபினவ் ஷிவ் திவாரி, அனு மேனன், ஹேமந்த் கபா, தியாகராஜன் குமாரராஜா, ப்ரீத்தம் டி குப்தா, க்யூ, ராஜா சென், ராஜ் ஸ்ரீ ஓஜா, சந்தீப் மோகன், சுபெர்ன் வர்மா என 10 இயக்குநர்களை இணைத்தார். தன்னுடைய ஒன்லைனைச் சொல்லி, 'அந்த இயக்குநரின் 10 காதலிகள் பற்றி உங்கள் ஸ்டைலில் ஒரு கதை எழுதுங்கள்’ எனக் கூறியிருக்கிறார். ஒவ்வொருவரும் தன்னுடைய ஸ்டைலில் கதை எழுத, அதற்கு ஏற்றார்போல் தான் இயக்கும் அடிப்படைக் கதையில் சில திருத்தங்களைச் செய்திருக்கிறார். இறுதியில் தியாகராஜன் குமாரராஜாவால் இயக்க முடியாமல்போக, அதற்குப் பதில் 11-வது ஆளாக குழுவில் இணைந்திருக்கிறார் நலன் குமரசாமி. இந்தப் படத்தின் படத்தொகுப்பு மட்டும் ஒன்றரை வருடங்கள் நடந்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத் வழிகாட்டுதலின்படி படத்தின் இறுதி வடிவ எடிட்டிங்கை செய்திருக்கிறார் விஜய் பிரபாகரன்.

''இப்படிப்பட்ட முயற்சிக்கு செலவுசெய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தோம். ஒவ்வொரு பகுதிக்கும் 1 லட்சம்தான் பட்ஜெட். அதிலேயே எடிட்டிங் செலவும் அடங்கும். அதைக் கச்சிதமாகச் செய்யவும் முடிந்தது. ஆனால், படத்தைப் புரிந்துகொள்வார்களா... இல்லையா என்பதை எல்லாம் ஒரு புது முயற்சியின்போது யோசிக்க முடியாது. இதுபோன்ற படத்தை உலகிலேயே முதன்முறை எடுக்கிறோம் எனும்போது இது நல்ல தொடக்கமாக இருக்கும் என்றுதான் தோன்றியது. அதைப் பல திரை விழாக்களிலும் எங்களால் உணர முடிகிறது'' என்று தன் குழுவின் வெற்றி பகிர்ந்துகொள்கிறார் சுதீஷ் காமத்.

'சினிமா என்பது, என் நிஜ வாழ்க்கையின் துன்பமான தருணங்களில் இருந்து தப்பிக்க எனக்குக் கிடைக்கும் ஒரு டிக்கெட்’ என படத்தில் ஒரு வசனம் வரும். அப்படிப்பட்ட ஒரு டிக்கெட்தான் 'எக்ஸ்’!