பா.ஜான்ஸன்
''பொதுவா நான் 'நிறைய டைம் எடுத்துக்கிறேன்’னு சொல்றாங்க. அப்படி சொல்றதைவிட, 'டைம், என்னை அதிகம் எடுத்துக்குது’னு சொல்றதுதான் சரி' - நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் அறிவழகன். 'ஈரம்’, 'வல்லினம்’ என முதல் இரண்டு படங்களில் கவனிக்கவைத்தவர் கொஞ்சம் இடைவெளி க்குப் பிறகு 'ஆறாது சினம்’ மூலம் வருகிறார்.
''இவ்வளவு டைம் எடுத்துக்கிட்ட பிறகும் ஏன் ரீமேக் படம் பண்றீங்க?''
''ரீமேக் பண்றதுல எனக்கு எப்பவுமே ஆர்வம் இல்லை. ஆனா, ராஜ்குமார் ஹிரானி இயக்கின 'லகே ரஹோ முன்னா பாய்’ படம் பார்த்தபோது, 'இதை நிச்சயம் ரீமேக் பண்ணணும்’னு தோணுச்சு. அதே எண்ணம்தான் 'மெமரீஸ்’ படம் பார்க்கும்போதும். ஏன்னா, நமக்குப் பிடிச்ச விஷயத்தைப் பண்ணும்போது ஆத்மார்த்தமா செய்ய முடியும்.''
'' 'மெமரீஸ்’, மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிச்ச மாஸ் ஹிட் படம். இதில் அருள்நிதி எந்த அளவுக்குப் பொருந்திவருவார்?''
'' 'காக்க காக்க’ சூர்யாவுக்கும், இப்போ இருக்கிற சூர்யாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. சூர்யாவுக்கு 'காக்க காக்க’ படம்போல, அருள்நிதிக்கு 'ஆறாது சினம்’ இருக்கும். 'மௌனகுரு’, 'டிமான்டி காலனி’னு அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள், அவர் நடிப்பில் முன்னேறிவரும் விதம் பிரமாதம். அருள்நிதி கிராஃப் அழகா ஏறுது.''

'' 'ஈரம்’ல நீங்க பண்ணின இன்வெஸ்டிகேஷன் டைப் படம்தான் 'மெமரீஸ்’ படக் கதையும். இதுல உங்களுக்கு என்ன சவால் இருக்கு?''
'' 'ஈரம்’, 'வல்லினம்’ ரெண்டு படங்களிலும் விஷுவலா அழகா கதை சொல்லியிருப்பேன். ஒரு சீன் யோசிக்கும்போதே அதை விஷ§வலாவும் யோசிச்சதால் அது சாத்தியமாச்சு. ஆனா 'ஆறாது சினம்’ படத்துக்கு கண் முன்னாடியே ஒரு சாம்பிள் இருக்கு. பொதுவா ரீமேக்ல இருக்கிற சவால், ஒரிஜினலோடு கம்பேர் பண்ணப்படுறதுதான். 'மெமரீஸ்’ படத்தை இங்கே நிறையப் பேர் பார்த்திருப்பாங்க. ஆனா, என் பார்வையில் இதை எப்படிக் கொடுக்கிறேன்கிறதுதான் விஷயம். 'த்ரிஷ்யம்’ படத்தை நான் ரீமேக் பண்ணியிருந்தா, எதையும் மாத்தியிருக்க மாட்டேன். ஏன்னா, அது நம்ம ஊருக்கு ஏற்ற படம். 'மெமரீஸ்’லகூட இன்வெஸ்டிகேஷன் விஷயங்களில் எதையும் மாத்தலை. ஆனா, படத்துல எமோஷனலான, அழகான போர்ஷன் இருக்கு. அதை நம்ம மக்களுக்கு ஏற்ற மாதிரி கொடுக்கிறதுலதான் எனக்கு சவால் இருக்கு.''

''மூன்றாவது படத்திலும் தமன்தான் இசையமைப்பாளர்... என்ன ஸ்பெஷல்?''
'' 'பாய்ஸ்’ படத்தில் வேலைசெஞ்சதில் இருந்தே தமன் எனக்கு நல்ல நண்பன். ஸ்கிரீனுக்கும் ஆடியன்ஸுக்கும் இடையே இருக்கிற வெற்றிடத்தை நிரப்புறது இசைதான். அந்த விஷயத்தைச் சரியா செய்றவன் தமன். தெலுங்குல சார் ரொம்ப பிஸி. ஆனா, தமிழ்ல அவனுக்கு இன்னும் சரியான இடம் அமையல.''
'' 'ஈரம்’ படம் வந்தபோதே அதிகம் கவனிக்கப்பட்ட இயக்குநர் நீங்கள். 'வல்லினம்’ படமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இன்னமும் நீங்கள் சரியான ஓர் இடத்தை அடையவில்லையே?''
''சமீபத்தில் நான் பார்த்த பெஸ்ட் படங்கள் 'காக்கா முட்டை’, 'குற்றம் கடிதல்’. ஆனா, 'காக்கா முட்டை’ ரீச்சுக்கும் 'குற்றம் கடிதல்’ ரீச்சுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கு? எனக்கு 'நல்ல இயக்குநர்’னு ஒரு அடையாளம் இருக்கு. ஆனா, நீங்க சொல்ற அந்தப் பளிச் இடத்துக்குப் போக, வெற்றி பெற்ற ஒரு ஸ்டார்கூட இணையணும். அப்போதான் படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைக்கும். அந்த விஷயம் 'ஆறாது சினம்’ல அமைஞ்சிருக்கு.''

''திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?''
''மனைவி பேரு ஹீரா. லவ் மேரேஜ். 'ஈரம்’ பட சமயத்தில் மீட் பண்ணிக்கிட்டோம். அப்பவே அவங்களைப் பிடிச்சிருந்தது. அதுக்குப் பிறகு போன் பண்ணி அடிக்கடி பேசிப்போம். 'வல்லினம்’ முடிஞ்ச சமயத்தில் எளிமையா கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஒரு நல்ல வாழ்க்கைத் துணை கிடைச்சிருக்காங்க. சந்தோஷமா இருக்கோம்.''