Published:Updated:

மிஸ்டர் கூல்!

நா.சிபிச்சக்கரவர்த்தி

“இன்று நேற்று நாளை’ படத் துக்காக ஆனந்த விகடனின் புதுமுக இயக்குநர் விருதை ரவிக்குமாரும், காமெடிக்காக கருணாகரனும் வாங்கியிருக்காங்க. அதேபோல் ‘முண்டாசுப்பட்டி’ படத்துக்காக ராம்குமார் கடந்த ஆண்டு விருது வாங்கினார். இப்படி நம்முடன் வேலைபார்க்கிற, நம்மைச் சுற்றி இருக்கிற எல்லோருக்கும் நல்ல விஷயங்கள் நடக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என உற்சாகமாகப் பேசுகிறார் நடிகர் விஷ்ணு விஷால்.

“நடிகர் விஷ்ணு விஷால், இப்போது தயாரிப் பாளர் ஆகிவிட்டாரே... என்ன ஸ்பெஷல்?’'

`` `வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்',  நான் தயாரிக்கும் முதல் படம். கதையைக் கேட்டதுமே இது என்னைக் கொஞ்சம் சேஞ்ச் ஓவர் பண்ற படமா இருக்கும்னு நம்பிக்கை வந்தது. `நானே தயாரிக்கிறேன்'னு  இறங்கிட்டேன். இது திடீர்னு எடுத்த முடிவுதான். முதல் படம் தயாரிக்கும்போது சின்ன டென்ஷன் இருக்கும். ஆனா, உண்மையாவே சொல்றேன், எனக்கு எந்த டென்ஷனும் இல்லை. படத்தின் பாதி ஷூட்டிங்லயே எழில் சார்கிட்ட, `அடுத்த படமும் உங்ககூடத்தான் பண்ணப்போறேன்'னு சொல்லிட்டேன். தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் ரிலாக்ஸா இருக்கார்; நடிகர் விஷ்ணு விஷால்தான் கொஞ்சம் டென்ஷனா இருக்கார்.”

மிஸ்டர் கூல்!

`` `வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ டைட்டிலே வித்தியாசமா இருக்கே?”

“எம்.எல்.ஏ ரோபோ சங்கர்... அவருக்கு வலது கையா நான் இருக்கேன். ரோபோ சங்கருக்கும் போலீஸ் நிக்கி கல்ராணிக்கும் பிரச்னை. இதனால் எனக்கும் சில பிரச்னைகள் வருது. இதை எப்படிச் சமாளிக்கிறோம் என்பதுதான் கதை. படம் முழுக்கவே சிரிச்சுட்டே இருப்பீங்க. அவ்வளவு ஜாலியா இருக்கும்.”

“படத்தோட இயக்குநர் எழில், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ தொடங்கி ‘வெள்ளக்காரதுரை' வரை பல படங்கள் இயக்கியவர். நீங்க புதுமுக இயக்குநர்கள்கூடவே வேலை பார்த்துட்டு இவர்கூட வேலை பார்க்கிற அனுபவம் எப்படி இருக்கு?”

``இது நான் நடிக்கிற 10-வது படம். இந்தப் படத்துலதான் தினமும் ஷூட்டிங் போயிட்டு டென்ஷனே இல்லாம வீட்டுக்கு வந்திருக்கேன். காரணம், எழில் சார்தான். எல்லாமே காமெடி சீன்ஸ் என்பதால், எப்போதுமே எங்க டீம் ஃப்ரெஷ்ஷா இருக்கும். எழில் சார் மிஸ்டர் கூல் இயக்குநர்.” 

மிஸ்டர் கூல்!

“உங்களோட வளர்ச்சியில் யாரெல்லாம் இருக்காங்க?”

“என் அப்பாதான் சார். என்னைவிட என்மேல அவருக்குத்தான் ரொம்ப நம்பிக்கை. `கிரிக்கெட் விளையாடப்போறேன்'னு சொன்னேன். எந்தத் தயக்கமும் இல்லாம அனுப்பிவைச்சார். `சினிமாவுல நடிக்கப்போறேன்'னு சொன்னேன். ‘உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதைச் செய்’னு சொல்லி எனக்கு முழு எனர்ஜி கொடுத்தார். அவரும் என் குடும்பமும்தான் எனக்கு எல்லாம்.”

“உங்க மனைவி ரஜினி, ஓர் இயக்குநரோட பொண்ணு. அவங்களும் `படம் இயக்கும் ஆசை இருக்கு'னு சொல்லி யிருக்காங்க. அடுத்தது உங்களை இயக்கப்போறது அவங்கதானா?''

``இப்பவே அவங்க என்னை இயக்கிக் கிட்டுத்தானே இருக்காங்க. ரஜினி ரொம்ப பிரில்லியன்ட். என்னை வெச்சு ரெண்டு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணாங்க. எப்படியும் ஒரு படம் இயக்குவாங்க. அதுல நான்தான் ஹீரோ.''

புல்லட் கொஸ்டீன்ஸ்

``வயசு?''

``31.''

``வாழ்க்கைத் தத்துவம்?''

``யாருக்கும் எந்தத் தீங்கும் இல்லாம, ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழணும்.''

``பிடித்த நடிகை?''

``சோனியா அகர்வால்.''

``பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்?''

``கிரிக்கெட்ல சையத், விஜய் சாரதி. சினிமாவுல உதயநிதி ஸ்டாலின், விஷால், விக்ராந்த்.’’