தமிழ்மகன், படம்: கே.ராஜசேகரன்
60 வயதுக்கு மேல் சிறுகதை எழுத ஆரம்பிப்பதே, அசாதாரண முயற்சிதான். அசத்தியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.
இதில் இடம்பெற்றுள்ள 40 கதைகளும் சிறுகதை அம்சம் வேர்விட்டவை. எல்லா கதைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பது வைரமுத்துவே நேரில் வந்து பேசுவதுபோன்ற ஒரு தொனி. அவர் எதை எழுத கை வைத்தாலும், அதில் எதுகை தொனிக்கும்.
`அவன் முகத்தைத் தொட்டான்; அவள் முதுகுகாட்டி அமர்ந்தாள்.’
`லாரியை மறி. சூரியை எறி.’
`படுக்கையில் பரவினாள்.’
`ஆமென் என்றான் ராமன்.’
இப்படி வரிக்கு வரி வார்த்தைகள் வந்துவிழுகின்றன. `இந்தப் பிரத்யேக மொழியை என் சிறுகதைகளுக்கு நான் சிற்பித்துக்கொண்டேன்’ என்கிறார் முன்னுரையில். அதில் அவரே சொல்லியிருப்பதுபோல பலம் - பலவீனம் இரண்டும் அதுதான். `பெருமை என்று கூறுவாரும் உளர்; சிறுமை என்று சீறுவாரும் உளர்’ என்பது அவருக்கே தெரிந்திருக்கிறது. கடினமான கூட்டுச் சொற்றொடர்களில் ஒவ்வொரு வாக்கியத்தையும் நீட்டி முழக்கி, அழுத்திச் சொல்வது ஒரு வகை. நவீன சிறுகதை உலகில் மொழியை அப்படித்தான் கையாள்கிறார்கள் சிலர். வைரமுத்துவின் நடையோ பெரும் பாய்ச்சல் நடை. நறுக்கென வெட்டி வீசும் மொழி அவருடையது.
`பசியில் இருப்பவன் பார்சலைப் பிரிக்கும் அவசரத்தோடு ஆடையை அவிழ்க்கிறாள்’ - போன்ற பொருத்தமான உதாரணங்கள்.
`குழந்தை கத்திய கத்தலில் சுவாமிமலை முருகனைத் தவிர எல்லோரும் வந்து கூடி விட்டார்கள்’ - போன்ற நாசூக்கான கிண்டல்கள்.

`அய்யர் உரையாடலில் குற்றியலுகரத்துக்கு இடமே இல்லை. உண்டு என்பதிலும் உண்டூ என்று நெடில் இடுவார். தமிழ்ச் சொற்களிலும் கிரந்தம் கலந்து பேஸுவார்’ - என வர்ணிப்புகளில் மொழி ஜாலங்கள்.
அவர் சிற்பித்த மொழியில் அவருடைய தனிமுத்திரைகள்.
காதல், பெற்றோரைப் புறக்கணிக்கும் பிள்ளைகள், பிரிவு, இரக்கம், மனிதத்தன்மை, ஈரம், துரோகம்... போன்றவையே இவருடைய கதைக்களங்கள்.
40 கதைகளிலும் கூறியது கூறாத புதிய களங்களைத் தேர்வு செய்திருக்கிறார்.
ஹரியானாவுக்குக் கடத்தப்படும் டெல்லி குரங்குகள், கேரளத்துக்குக் அடிமாடாகக் கடத்தப்படும் கோயில் மாடுகள் வரை உயிரினங்கள் மீது மனிதன் நடத்தும் வன்முறைகளுக்கு என்னதான் சொல்கிறது இ.பி.கோ?

`ஏழையின் தாஜ்மகால்’, `புத்தருக்கும் அடிசறுக்கும்’, `ராஜராஜன்’ போன்றவை சரித்திரக் கணங்களில் இருந்து இழைபிரித்து எடுத்தவை. வரலாற்றின் வெற்றிடங்களில் கற்பனையைப் பூசி நிரப்பியவை. இன்றைய நடப்பையும் விட்டுவைக்கவில்லை. நேபாள பூகம்பம், மலேசிய விமானம் கடலில் மூழ்கியது எல்லாம் இவருடைய கற்பனையில் வேறு சாளரங்களைத் திறக்கின்றன.
`வேதங்களில் சொல்லப்படாதது' கதையில் சங்கராச்சாரியாரைக் கதாபாத்திரமாக்கி மூன்றாம் வகை பிராமணருக்குப் பாடம் எடுப்பது துணிச்சலுக்கு உதாரணம்.
சின்னச் சின்ன உத்திகள், சின்னச் சின்னப் பத்திகள் என கதைகளை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் வைரமுத்து. 40 கதைகளையும் வீண் வர்ணனைகள் இல்லாமல் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். அதற்காக ஒற்றைத் தன்மையுடன் அவற்றை நகர்த்திச்செல்வதிலும், முடிவை நோக்கி கதையை விரட்டுவதிலும், மலரும் முன்னர் மொட்டுகளைப் பறிக்கிற அவசரம் இருப்பதையும் உணர முடிகிறது!
அரைமணி நேரத்தில் படித்துவிடக்கூடிய தாகவும் 40 பக்கங்களுக்குள்ளாகவும் சிறுகதை இருக்க வேண்டும் என ஆரம்ப சிறுகதை இலக்கணம் இருந்தது. இப்போது அது 10 செகண்ட் கதைகள் வரை வந்துவிட்டது. ஆனால், கவிதை மொழியில் கதைகள் இருக்கக் கூடாது என எந்த இலக்கணமும் வகுக்கப் படவில்லை. முழுக்க முழுக்க ஆங்கில வார்த்தை களைத் தமிழ்ப்படுத்தி, படுத்தி எடுக்கும் உரைநடைகளுக்கு இந்தக் கவி நடை எந்தவிதத்திலும் தவறே இல்லை. `அந்த எட்டயப்புரத்து ஏழைத் தெருவொன்றில் அந்தப் பிஞ்சு சூரியன் பிறந்தது' எனக் கவிராஜன் கதை எழுதினார். இவை, அந்தக் கதையின் அடுத்த கதைகள்.
`எண்ட மக்களே எங்கட தலைவரே' என ஒரு சிறுகதை.
காலை இழந்த போராளிக்கு செயற்கைக்கால் வாங்குகிறாள் மனைவி. கால்... கை மாறுவதற்குள், கணவனைக் கைதுசெய்துவிடுகிறது ராணுவம். மிச்சம் இருக்கும் ஒரு செயற்கைக் காலை வைத்து உயிரோட்டமான ஒரு கதை முடிவைச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.
`அவர்கள் பக்கம் எண்ணிக்கையிருந்தது; எங்கள் பக்கம் நியாயமிருந்தது.
அவர்கள் பக்கம் ஆயுதமிருந்தது; எங்கள் பக்கம் சத்தியமிருந்தது...' என அடுக்கிச் செல்பவர் முக்கியமான அடுத்த பட்டியலையும் சொல்லத் தவறவில்லை... `அவர்கள் பக்கம் அமெரிக்கா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் இருந்தன; எங்கள் பக்கம் தியாகமிருந்தது.'
`எங்கள் சரித்திரம் பூகோளத்துக்குள் புதைக்கப்படுகிறது... தலைவன் வீடு தடயமில்லாமல் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டது' என்பது வலிக்கவைக்கும் விவரம்.
கவிதை பூசிய இந்தச் சிறுகதைகள் தமிழுக்குப் புதிய அலங்கரிப்பு.