Published:Updated:

கன்னிப் பொங்கல் @ ஃபன்னி பொங்கல்!

ச.ஆனந்தப்பிரியா, லோ.சியாம் சுந்தர், ஓவியங்கள்: எம்.ஜெயசூர்யா

நேத்து வாங்கின ஆண்ட்ராய்டு போனே நாலு நாளுக்கு ஒரு தரம் அப்டேட் ஆகுற இந்தக் காலத்துல, நாம காலங்காலமா கொண்டாடுற பொங்கல் `ஃபன்'டிகை மட்டும் அப்டேட் ஆகாமலா இருக்கும்? பொங்கலோட அப்டேட்டடு ஆண்ட்ராய்டு வெர்ஷன் எப்படி இருக்கும்? - இந்தக் கடினமான கேள்விகளுக்கு விடை காண, கீழே ஸ்க்ரோல் பண்ணுங்க மக்காஸ்!

வாழ்க்கையை மட்டும் அல்ல, யூத்துங்களோட பொங்கல் கொண்டாட்டத்தையும் `ஜில், ஜங், ஜக்'னு மூணு வகையாப் பிரிக்கலாம். படிச்சிட்டு ரொம்பப் பொங்காதீங்க... பொங்கலில் பொங்காமை நன்று!

ஜில்:

`பாய்சன் ஆகிருச்சே’னு கொளுத்துனா, அது பேரு மேகி. `பழசாயிருச்சே’னு கொளுத்துனா, அதுக்குப் பேரு போகி. மார்கழி மாச ஜில்ஜில் குளிர்ல பல் எல்லாம் பல்லாங்குழி ஆட குளிக்காமலே குஜாலா கிளம்புற, உஜாலா போட்டாலும் வெளுக்காத சுமார் மூஞ்சி குமாருங்க எல்லாம் குளிக்கிறதுக்காகவே கொண்டாடுற ஃபெஸ்ட்டிவல்தான் போகி. இருபது வருஷத்துக்கு முன்னாடி சித்தப்பா போட்ட பேகியையும், பத்து வருஷத்துக்கு முன்னாடி தாத்தாவைப் படுக்கவெச்ச பாயையும், அவ்வளவு ஏன் பத்து நாளுக்கு முன்னாடி ஃப்ளிப்கார்ட்ல வாங்கின டாயையும் ஒண்ணாப் போட்டுக் கொளுத்துற சமத்துவ தினம்தான்யா போகி!

கன்னிப் பொங்கல் @ ஃபன்னி பொங்கல்!

பிரவுசர் ஹிஸ்ட்ரியை வாரத்துக்கு ஒரு தபா க்ளியர் பண்ற சிறுசுங்களுக்கு, தினம் தினம் போகிதான்டியோவ்! ஹேங் ஆகுற போனுக்கு கேஷிய க்ளியர் பண்ணி, செம்பரம்பாக்கம் கணக்கா ஓசோன் திறந்துவிடுற பொல்யூஷன் நாள்தான் இந்தப் போகி. எத்தனை நம்மாழ்வார் வந்தும் திருந்தாம டயரைக் கொளுத்தி அதுல நாலு சட்டையைக் கொளுத்தி... ப்ப்பா முடில பாஸ். இப்படிப்பட்ட பொல்யூஷனுக்கு ஒரே சொல்யூஷன், யூஸ் ஆகாத பொருளை எல்லாம் OLX-ல வித்துடுங்க. சிம்பிளா சொல்லணும்னா, பழையன கழிதலும், புதியன அப்லோடலுமாக இந்தப் போகி கடக்கக் கடவது!

போகிக்கு நெக்ஸ்ட் டார்கெட் பொங்கல்தான். பொங்கல் அன்னிக்கு டெம்பிளுக்குப் போகாம டெம்பிள் ரன்னே போதும்னு வீட்டுல இருக்கிற ஹோம்லி கேர்ள்ஸால, பாய்ஸ் எல்லாம் தெருவுல இருக்கிற பசங்களோடு சந்துப்பொங்கல் ஈவென்ட் கோ-ஆர்டினேட்டரா போய்டுவாங்க. ஸ்னாப்டீல்ல பொங்கல் பானையை ஆர்டர் பண்ணிட்டு `என்னாச்சோ, ஏதாச்சோ எர்வாமாட்டின் தீர்ந்துபோச்சோ'னு கடைசி நேரம் வரைக்கும் டெலிவரிக்கு வெயிட் பண்ணி வெக்ஸ் ஆகிப்போன தலைமுறைய்யா இது? மூணாவது நாள் இவிய்ங்க கட்டம்போட்டுத் தூக்கிறது அப்பாவி மாடுகளைத்தான். வருஷம் பூரா வேலைசெய்த மாட்டுக்கு மேக்கப் போட்டு ட்ரீட் கொடுக்கிற நண்பேன்டா ஃபெஸ்டிவல்தான் இது. அமைதியான காளை எல்லாம் ஆங்கிரி பேர்டா மாறிக் குதறுற வரைக்கும் அதைப்போட்டு ஒருவழி பண்ணுவாங்க. ஃபுல் ஷேவ் பண்ண துல்கர் சல்மான் எல்லாம் கலர் வேட்டி கட்டின ராமராஜனா மாறி மெடிக்கல் மிராக்கிள் சொல்லவெப்பாங்க.

கன்னிப் பொங்கலுக்கு மஞ்சத்தண்ணி தெளிச்ச காலம் எல்லாம் மோடிகூட சேர்ந்து வெளிநாட்டுக்கு ஃப்ளைட் ஏறி பல நாள் ஆச்சு. தெரியுதோ தெரியலையோ... புரியுதோ புரியலையோ புரொஃபைல் பிக்சரை மாத்தி புரட்சி பண்றதுல, புரட்சித் தலைவரையே மிஞ்சிருவாங்க. இப்படி மஞ்சள் கலர்ல டி.பி வெச்சு, பிபாஷாக்குக் கோடு போட்டு, ஒத்த ரோசா வரைக்கும் எல்லாருக்கும் ஃப்ரெண்டு ரெக்வஸ்ட் கொடுத்து சாட்ல ரோடு போடுறவன்தான் நம்ம நெட்டிசன். காலாகாலத்துல அத்தைப் பொண்ணுங்களுக்கு ரூட்விட்டு வாழ்க்கையை டெவலப் பண்ண யூஸ் பண்ற இந்தப் பொங்கலை, மத்த பொண்ணுங்களுக்கு ரூட்விட்டு யூஸ் பண்றவன்தான் மாடர்ன் தமிழன். நாலு நாள் பொங்கல் வேலையில டயர்டு ஆகி லாக் அவுட் பண்ற நாள்தான் கன்னிப் பொங்கல் என்ற ஃபன்னி பொங்கல்.

ஆகவே, கட்டக்கடைசியா பொங்கச்சாமியைக் கும்பிட்டு, `டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா?'னு கேட்ட காஜல் அகர்வாலுக்கும், த்தூனு துப்பின சித்தப்பாவுக்கும் மற்றும் இன்ன இன்ன இத்தியாயிகளுக்கும் சொல்லவர்ற கருத்து ஒண்ணே ஒண்ணுதான், பச்சை அரிசியில செஞ்சாலும் அது வெண்பொங்கல்தான் எனதருமை ஃப்ரெண்ட்ஸ். ஹேப்பி பொங்கல்!

ஜங்:

அலை அலையா வந்த ஒலியும் ஒளியும் தொடங்கி, ஆரவாரமா வந்த காபி வித் டிடி வரைக்கும் காலங்காலமா மக்களோட மனசை என்டர்டெயின் பண்ணணும்கிற ஒரே எய்மை தாரகமந்திரமா வெச்சு பல வருஷமா பண்டிகை நாள்ல நம்மளைப் பளபளப்பா வெச்சிருக்கிறதே டி.வி-தான் பாஸ். சாதா நாள்லயே சமோசா விக்கிறவங்க, பொங்கல்னா மட்டும் சும்மாவா இருப்பாங்க? `டி.ஆர்.பி-யே கண், டி.ஆர்-க்கு எதுக்கு சன்?'னு அலேக்காத் தூக்கி அல்வா சாப்பிட்ட கதையா, கண்ணு வலிக்க வலிக்க பண்டிகை நாட்கள்ல போட்டுப் பொளக்குற சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய சின்ன இன்ட்ரோ பாஸ்.
மங்கலகரமா நாகஸ்வரத்தோடு ஆரம்பிக்கிற அந்த நாள், அதுக்குப் பிறகு தடுக்கி விழுறது பிரபலங்களோட பேட்டியாத்தான் இருக்கும். ‘உங்க நாய்க்குட்டிக்கு என்ன நாலு காலா... டீயில என்ன ஆவின் பாலா?’னு பதில் தெரியாத கேள்விகளுக்கு எல்லாம் பிரபலங்களைப் பலிகடா ஆக்குறது நியாயமாஜி? இதுல ஒரே ஆளு எல்லா சேனல்லயும் வெவ்வேற காஸ்ட்யூம்ல `இஷ்டப்பட்டு நடிக்க வந்த நான் கஷ்டப்பட்டு முன்னேறினேன்'னு ஒரே கதையை ரிப்பீட் மோடில் ரிவிட் அடிப்பார். அதை எல்லாம் நாள் பூரா கேட்டா `அன்பே சிவம்' கமல்கூட `ஆளவந்தான்' கமலா மாறிடுவாரே!

கன்னிப் பொங்கல் @ ஃபன்னி பொங்கல்!

அடுத்து அட்டாக் பண்ண காத்திருப்பது பல்லேலக்கா பட்டிமன்றங்கள். `பொங்கலுக்கு, முந்திரி பெஸ்ட்டா... திராட்சை பெஸ்ட்டா?’னு அச்சுபிச்சு தலைப்புகளைப் பிடிச்சு கிச்சுக்கிச்சு மூட்டுறதுதான் இவங்களோட மெயின் டியூட்டி. தொண்டையில ஆபரேஷன் பண்ணவன் கணக்கா ஒரு மணி நேரக் கதறலுக்கு அப்புறம் தீர்ப்பு `முந்திரியா... திராட்சையா?'னு பொது ஜனம் வாயைத் திறந்து தேவுடு காத்திருக்க, வழக்கம்போல ‘என் ஓட்டு பொங்கலுக்கே’னு பொத்தாம்பொதுவா தீர்ப்பைச் சொல்லித் தெறிக்கவிட்டு, குமாரசாமிக்கே டஃப் காம்பெடிஷன் தருவாப்ல நம்ம ஜட்ஜய்யா. முடியலய்யா!
இப்படிப்பட்ட தலைப்புகளுக்கு மத்தியில `கடமையே என் கண்ணு... அதுல கலக்காத நீ பன்னு’னு கடமை கண்ணாயிரமா வர்றதுக்குப் பேர்தான் விளம்பரம். `வாஷிங் பவுடர் நிர்மா'னு ஸ்டார்ட் பண்ணின இந்த பப்ளிக்குட்டி விளம்பரங்கள், ஆச்சி மசாலா குருமாவுல வந்து கெத்தா நிக்குது. `சென்னை அமிர்தா சென்னையிலதான் இருக்குது, திருச்சி பஸ் ஸ்டாண்டு திருச்சியிலதான் இருக்குது'னு பல அரிய பெரிய கண்டுபிடிப்புகள் கொடுக்கும் அலப்பறைகள் ஒரு பக்கம்னா, பத்து செகண்ட்ல முப்பது ஸ்பான்ஸர்கள் பேர் சொல்ற வாய்ஸுக்கு பவர்ஸ்டார் கையாலயே ஆஸ்கர் அவார்டு கொடுக்கலாம்யா. `ஜினல் ஜினல் ஒரிஜினல், லைஃப் ஜிங்கலாலா... ஆலுமா டோலுமா'... ஏன்மா இதெல்லாம் ஒரு விளம்பரமாம்மா?

மேலே சொன்ன வன்கொடுமை எல்லாம் தாங்கிட்டு நெஞ்சை அழுத்திப் பிடிச்சிட்டு உக்காந்தோம்னா, மணல் பறக்கற புழுதியில மாஸா என்ட்ரி கொடுப்பாரு நம்ம பொங்கல் பட ஹீரோ. வட்ட சோபா மாநாடுல மொக்கை போட்டு படத்துக்கு பில்ட்-அப் ஏத்துற ஏத்துல ரெண்டு லோடு பூ காதைச் சுத்திலும் இருந்தாலும் இருக்கும் பார்த்துக்கங்க மக்கா!

இதுக்கும் மேலே பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கலாய்ச்சா, ஃபன் கொடுமை தடுப்புச் சட்டத்துல அப்படியே குண்டுக்கட்டா தூக்கிட்டுப் போய்டுவாங்கங்கிறதால குப்புறப் படுத்து கும்பிடு போட்டு டி.வி-யை ஆஃப் பண்ணிக்கலாம் மக்களே!

ஜக்:

இது சோஷியல் மீடியா கும்மிப் பொங்கல். ஊரு உலகத்துல இருக்கிற நான்ஸ்டாப் நான்சென்ஸ் எல்லாம் பாரபட்சம் இல்லாம இலவசமா வந்து கும்மி அடிக்கிற ஒரே இடம் இதுதான். சாட்சாத் ‘அம்மா’வே ஜக்கம்மாவா மாறி இறங்கி வந்து வாட்ஸ்அப் குறி சொன்ன இடம். கண்ணுக்கு மை வைக்கிறதுல இருந்து கரும்பு கடிக்கிற வரை போட்டோஸ் அப்லோடு பண்ணிட்டு ஒரே பரபரப்பா இருப்பாங்க நம்ம நெட்டிசன்ஸ். ஒரே போட்டோவை எல்லா சோஷியல் மீடியாவுலயும் அப்லோடு பண்ணி, லைக், ஆர்.டி-னு அள்ளுற நம்ம புள்ளைகளோட ஃபெஸ்டிவல் ஆக்டிவிட்டீஸுக்குப் பயந்து அர்னால்டே அரைபாடி வண்டியேறி அமெரிக்கா போயிடுவாரு.

பசங்களோட மார்க் எல்லாம் காலி பண்ற தம்பி மார்க்கோட ஃபேஸ்புக்தான் இப்ப சோஷியல் மீடியாவுல மாஸ்புக். பொங்கல் இவங்க நிஜமாவே கொண்டாடுறாங்ளோ இல்லையே, கரும்பும் கையுமா செல்ஃபி எடுத்து கண்ணைக் குத்தவானு கன்ஃபியூஸ் பண்ணுவாங்க.

பொங்கல் பானையை புரொஃபைல் பிக்சரா வைக்கிறதுல இருந்து, கட்டுக் கரும்பை கவர் போட்டாவா வைக்கிற வரைக்கும் இவங்க அட்ராசிட்டிஸ் தாங்காது. சரி, பயபுள்ளை இவ்வளவு கஷ்டப்பட்டு ஜூனியர் நம்மாழ்வாரா ஃபீல் பண்ணுதேனு, ஒரு பொங்கல் வாழ்த்தை கமென்ட்டா போட்டா, வடிவேலு ரியாக்‌ஷன்ஸைப் போட்டுக் காலி பண்ணுவானுங்க. கெட்ட பய சார் சோஷியல் மீடியா கய்ஸ். `என் ஆளு பேரு செல்வி, அவகூட எடுப்பேன் செல்ஃபி'னு கவித்துவமா பொங்கல் செலிப்ரேஷனுக்கு ரவுண்டு கட்டி அடிப்பாங்க இந்த ரோஃபல் ரோமியோஸ். பொண்ணுங்கன்னா சும்மாவா... `யம்மீ... ஈட்டிங் டெலிஷியஸ் பொங்கல் வித் கோக்கனட் சில்... ஃபீலிங் ப்ளிஸ்ஃபுல்'னு ஸ்டேட்டஸ் போட்டு ஒரு புள்ள தேங்காய்ச்சில்லைக் கடிச்சுத் துப்பி பி.பி ஏத்தும்.

உள்ளூர்க்காரன்தான் இப்படி அலப்பறை கூட்டுறான்னா, ஊர்விட்டு ஊர் போனவன் ‘எனக்கென யாரும் இல்லையே, பொங்கலுக்கு சோறு இல்லையே'னு சோலோவா சோக கீதம் வாசிப்பான். `முன்னொரு காலத்திலே...'னு டவுசர் காலத்து பொங்கல் நினைவுகளை நாலு பக்கத்துக்கு நீட்டி எழுதி ஃபீலிங் பீப்பி வாசிப்பான். அப்படி இப்படினு இவங்க பண்ற குரங்கு வித்தைக்கு அம்பது லைக்ஸ் ஆச்சும் வந்தாதான் இவங்க மனசு நிறையும்.

இதை எல்லாம்கூட மன்னிச்சுடலாம். வருஷம் மாறாம `ஹேப்பி மாட்டுப் பொங்கல் டே விஷஸ்!'னு அனுப்புற அப்டேட்டே ஆகாத ஆபத்தான ஒரு கும்பல் வாட்ஸ் அப்-ல உலவிட்டு இருக்கு. அதுகளைக் கண்டுக்கவே செய்யாதீங்க.

மூச்சு வாங்குதுல்ல... ட்விட்டரையும் ஒரு ரவுண்டு அடிப்போம். வண்டியில ஏறுங்க. பல நவீனப் புரட்சியாளர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்தின இடம் பாஸ் இது. நேத்து முளைச்ச அனிருத்ல இருந்து இன்னைக்கு நீக்கப்பட்ட நாஞ்சில் சம்பத் வரை வயசு வித்தியாசமே இல்லாம அனைவரும் கலாய்க்கப்படுற விர்ச்சுவல் கசாப்புக் கடை இது. சாதா நாள்லயே கம்பு சுத்துற இவங்க ஃபெஸ்டிவல் டைம்ல மட்டும் கரும்பு கடிக்காமலா இருப்பாங்க? #பொங்கல்செலிபிரேஷன்ஸ், #மைபொங்கல் #தமிழ்ப்பொங்கல், #காணும்பொங்கல்கலாட்டா என எக்கச்சக்க ஹேஷ்டேக்கை வைரலில் உலாவவிட்டு ட்விட்டரையே பொங்கல் மணக்கச் செய்வார்கள். தல-தளபதி ஃபேன்ஸ் மட்டும் சும்மாவா? தங்கள் தலைவனின் பொங்கல் ரிலீஸ் படங்களில் எது பெஸ்ட் என்ற போட்டியில் மாறிமாறி தாக்கி `ஒய் பிளட்... சேம் பிளட்' என ஃபீல் பண்ணி `வில்லு’, `ஆழ்வார்’, `ஜில்லா’ `சுறா’க்களை வான்டடா வண்டியில் ஏற்றி செல்ஃப் டிஸ்ட்ரக்‌ஷன் செய்வார்கள். ஏன்பா ஏன்?

போதும், இத்தோட நிறுத்திக்குவோம்... எல்லாத்தையும் நிறுத்திக்குவோம். ஏன்னா, நெட் எம்.பி கம்மியா இருக்கு. ஆஃப்லைன் போங்க. வாழ்க்கை ஆஃப் ஆகாம பாத்துக்கோங்க. லாக் அவுட்!

பொங்கல் வாழ்த்துகள் மக்களே!