Published:Updated:

கொஞ்சம் வம்பு... ரொம்ப அன்பு!

வர்றான் ‘தெறி’ போலீஸ்ம.கா.செந்தில்குமார்

‘‘செயின் அறுப்பு, கொலை, கொள்ளைனு இன்னைக்கு அவ்வளவு குற்றங்கள். இதுக்கு அரசு, அரசியல், மந்திரி, அதிகாரிகள், அது இதுனு எதுவுமே உடனடிக் காரணம் கிடையாது. வளைச்சு வளைச்சு ரௌடிகளைச் சுட்டாலும் இது அனைத்தும் முடிஞ்சிடாது. முதலில் ஒரு தனி மனிதனா என் கடமை என்ன? நான் முதலில் திருந்தினால் எல்லாம் தானாகவே மாறும். வீட்டைப் பற்றி தெரிஞ்சாதான், ஊர் எனக்குத் தெரியும், நாடு புரியும். வீடே தெரியாமல் வளர்ந்தால்... இந்தக் கருத்தைச் சொல்ல நான் தேர்ந்தெடுத்த   எமோஷனல் என்டர்டெய்னர்தான் ‘தெறி’ ’’... அட்லியின் வார்த்தைகளில் அவ்வளவு அன்பு, அவ்வளவு ஆதங்கம். வெரைட்டி விஜய், நடிகராக இயக்குநர் மகேந்திரன், குழந்தை நட்சத்திரமாக மீனாவின் மகள் என ஆச்சர்யங்கள் அடுக்கி ‘தெறி’க்கவிடுகிறார் அட்லி.

‘‘ ‘நண்பன்’ பட ஷூட்டிங். அப்ப நான் ஷங்கர் சாரின் அசோசியேட் டைரக்டர். அங்கதான் விஜய் அண்ணன் எனக்குப் பழக்கம். ஷூட்டிங்கின் கடைசி நாள், ‘நல்ல கன்டென்ட் வெச்சிருந் தீங்கன்னா எப்ப வேணும்னாலும் சொல்லுங்க தலைவா, நாம பண்ணலாம்’னு சொல்லியிருந்தார். ‘ராஜா ராணி’ ரிலீஸுக்குப் பிறகு சந்திச்சப்ப, கட்டி அணைச்சுக்கிட்டு, ‘எங்க வீட்ல எல்லாருக்கும் ‘ராஜா ராணி’ பிடிச்சிருந்தது’னு சொன்னவர், `தெறி' கதையைச் சொன்னதும், ‘மைண்ட் ப்ளோயிங்ணா... செமையா போகும். பண்ணலாம்’னு சொல்லி அவர் கொடுத்த அந்த தம்ஸ்அப்தான் இப்ப ‘தெறி’யா மாறி இருக்கு.’’

கொஞ்சம் வம்பு... ரொம்ப அன்பு!

‘‘விஜய்க்கு மீண்டும் ஒரு போலீஸ் ஸ்டோரியா?’’

‘‘நமக்கு ஏதாச்சும் ஒரு பிரச்னைனா, நம்மைக் காக்கிற காவல் துறையிடம்தானே போய் நிப்போம். அவங்கதான் தப்பைக் கண்டறியணும்; தட்டிக் கேட்கணும்; அதைச் சரிபண்ணணும். அப்படிப் பட்டவங்க அவ்வளவு சார்மிங்கா, அவ்வளவு மனிதநேயத்தோட இருந்தா எப்படி இருக்கும்னு யோசிக்கும்போது தோன்றியதுதான் இந்த ‘தெறி’ லைன். ஆனால், இதுவரை பண்ணாத  ஒரு போலீஸ் ஸ்டோரி பண்ணணும்னா, என்ன பண்ணலாம்? முதல்ல நாம ஒரு போலீஸை எப்படிப் பார்க்கிறோம், மிடுக்கா, விறைப்பா, கோபமா? ஆனால் அப்படி இல்லாம ரொம்ப எமோஷனலா, பயங்கர கனெக்ட டான ஒரு போலீஸ் ஆபீஸர் இருந்தா எப்படி இருக்கும்? நமக்கு ஒரு பிரச்னைனா பக்கத்து வீட்ல இருந்து ஒரு அண்ணன் சப்போர்ட் பண்ண வருவார்ல, அப்படியான ஒரு போலீஸ் ஆபீஸரா இருந்தா எப்படி இருக்கும்? இப்படியான கேள்விக் கான பதில்தான் இந்த ‘தெறி’ போலீஸ்.’’

‘‘எமோஷனல் போலீஸ்னு சொல்றீங்க. ஆனால், விஜய்க்கு அது மட்டுமே போதாதே... ஆக்‌ஷன் அதிரடி வேணுமே?’’

‘‘ `ராஜா ராணி’யில ஆக்‌ஷன் இருக்காது; இதுல ஆக்‌ஷனும் இருக்கும். அவ்வளவுதான். பயங்கரமான ஃபேமிலி படத்துல ஆக்‌ஷனும் மெசேஜும் இருந்தா எப்படி இருக்கும்? எம்.ஜி.ஆர்., ரஜினி சார் படங்களைப் பார்க்கும்போது குழந்தைங்களுக்கு ஒரு விஷயம், ஸ்கூல் பையன்களுக்கு வேறு ஒரு விஷயம், காதலர்களுக்கு, புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு, அப்பா-அம்மாவுக்கு, தாத்தா- பாட்டிக்குனு எட்டு பேர் கொண்ட ஒரு ஃபேமிலி படம் பார்க்கும்போது எல்லாரையும் திருப்திப்படுத்தக்கூடிய சினிமாவா அது இருக்கும். அப்படி 100 சதவிகிதம் என்டர்டெயின்மென்ட் சினிமாவா இருக்கணும்னு நினைச்சேன். அதை இதுக்குள்ள கொண்டுவந்திருக்கேன். அப்படி எல்லாருக்குமான படமா ஒரு முழுமையான சினிமாவா இது இருக்கும்.’’

கொஞ்சம் வம்பு... ரொம்ப அன்பு!

‘‘ஃபர்ஸ்ட் லுக்ல மூன்றுவிதமான விஜய் படங்கள். இதில் அவருக்கு மூன்று கேரக்டர்களா... வெவ்வேறுவிதமான கெட்அப்களா... என்ன ஸ்பெஷல்?’’

‘‘அது மூணு கேரக்டர்களா இருக்கலாம் அல்லது நாலு, ஐந்துனு மல்ட்டிபிள் ஆக்‌ஷனாக்கூட இருக்கலாம். ட்ரிபுள் பிரதர்ஸ், நெகட்டிவ் கேரக்டர்கள்கூட இருக்கலாம். ஆனா, எல்லாமே இதுவரை அவர் பண்ணாத சுவாரஸ்ய மான கேரக்டர்ஸ். ஒரு ஆளுக்கும் இன்னொரு ஆளுக்கும் என்னென்ன வித்தியாசம் இருக்குமோ... அது எல்லாம் இந்த ஒவ்வொரு கேரக்டருக்கும் இருக்கும்.’’

‘‘விஜயை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?’’

‘‘விஜய் அண்ணனுடன் நல்ல பழக்கம் இருந்தாலும், ஒரு இயக்குநரா ஒரு சூப்பர் ஸ்டாரை ஹேண்டில் பண்ணும்போது ஒரு தயக்கம் இருக்கும். ஆனா, முதல் நாள்ல இருந்து இப்ப வரை என்னை பயங்கரமான ஒரு கம்ஃபர்ட் ஸோன்லயே வெச்சிருக்கார். `100 அடி உயரம் உள்ள ஒரு பாலத்தில் இருந்து தண்ணியில் டூப் இல்லாமக் குதிச்சார்’னு தனித்தனியா என்னால சொல்ல முடியாது. சின்ன ஸ்மைல்ல இருந்து எக்ஸ்ட்ரா ஆர்டினரி ரிஸ்க்கி ஃபைட் வரை... நான் என்ன சொன் னாலும் அதை ஸ்கிரீன்ல கொண்டுவர்றதுக்கு அப்படி ஒரு எஃபர்ட் போடுறார். என் எழுத்தை காட்சியாகக் கடத்துறதுக்குத் தயாரா இருக்கார். எனக்குத் தேவையானதைக் கொடுத்தே ஆகணும்னு டேக்ஸ் போறது, கனகச்சிதமா பிசிறு இல்லாம அந்தக் காட்சி ஓ.கே ஆகுறது வரை மெனக்கெடுறதுனு... அவர் இயக்குநரின் நடிகர்.’’

‘‘இயக்குநர் மகேந்திரன் சார், எந்தத் தருணத்துல ‘தெறி’க்குள் வந்தார்?’’

‘‘ ‘ராஜா ராணி’க்கு பெரிய இன்ஸ்பிரேஷன் அவரோட எல்லா படங்களுமேதான். அதை அவர்கிட்டயே சொல்லியிருக்கேன். அவரின் குரல், ஆட்டிட்யூட், அவரோட காஸ்ட்யூம்ஸ், கையசைவுனு அவருக்கே அவருக்குனு உள்ள கனகச்சிதமான அந்த மேனரிசம் எனக்குப் பிடிக்கும். அவர் வாங்கின நடிப்பு, வாங்கிய இசை இன்னும் அதிருது. ஆனாலும் இந்த கேரக்டர்ல அவரை நான் யோசிக்கவே இல்லை. இது படத்துல முக்கியமான கேரக்டர். இதுவரை யாரும் பார்க்காத ஒரு பயங்கரமான பெர்ஃபாமரை உள்ளே கொண்டு வரணும்னு தோணிட்டே இருந்தது. `அது யாரா இருக்கலாம்?’னு யோசனை. அந்தச் சமயத்தில் மகேந்திரன் சாரின் ஒரு பேட்டியைப் பார்த்தேன். ‘நம்ம கேரக்டராவே இருக்காரே, இவரை நடிக்கவைக்கலாமே’னு டக்குனு ஒரு ஸ்பார்க்.’

கொஞ்சம் வம்பு... ரொம்ப அன்பு!

‘‘நடிக்கணும்னு கேட்டதும் அவர் என்ன சொன்னார்?’’

‘‘‘தம்பி உங்ககிட்ட ஒரு கதை சொல்லணும்னு விருப்பப்படுது’னு தயாரிப்பாளர் தாணு சார்தான் பேசினார். ‘எனக்கு `ராஜா ராணி’ ரொம்பப் பிடிச்சிருந்தது. வரச் சொல்லுங்க கேப்போம்’னார். ‘கதை சொல்றேன். அதில் உங்களுக்கு எந்த பார்ட் கனெக்ட் ஆகுதோ... அதுதான் உங்களுக்கு நான் சொல்ல வந்த கேரக்டர். எந்த பார்ட்டும் கனெக்ட் ஆகலைனா கதை எப்படி இருக்குனு மட்டும் சொல்லுங்க’ன்னேன். மூணு மணி நேரம் கதை சொன்னேன். நான் எங்கெங்க காமெடி சொன்னேனோ, அங்கெல்லாம் ஸ்மைல் பண்ணார். நான் எமோஷனலான சீன் சொல்லும்போது கண் கலங்கினார். ஆடியன்ஸ் என்ன ஃபீல் பண்ணணும்னு நினைச்சேனோ, அதை அவர் ஃபீல் பண்ணினார். உண்மையைச் சொல்லணும்னா ‘இந்தப் படம் எல்லாருக்கும் போய் சேரும்'கிற எதிர்வினையை அவர்கிட்டதான் 100 சதவிகிதம் ரிசீவ் பண்ணினேன். ‘எனக்கு கதை ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் இதைப் பண்ணணும்னு நினைச்சது எனக்கே ரொம்ப ஆச்சர்யம்’ன்னார். இவ்வளவு நாள் நடிக்காத, இயல்பாவே தன்னை வெளிப்படுத்திக்க நினைக்காத அவர் இதில் பங்கேற்கிறார்னா, இந்த கேரக்டர் நிச்சயமா அவரை எங்கோ ஓர் இடத்தில் பாதிக்க வெச்சிருக்கு. அந்தப் பாதிப்பை அவர் உங்களுக்குள்ளும் கடத்துவார்.’’

‘‘சமந்தா-ஏமி ஜாக்சன்னு ரெண்டு ஹீரோயின்கள். என்ன சொல்றாங்க?’’

‘‘ஹீரோயின்னா பெர்ஃபார்ம் பண்ணணும். உதாரணத்துக்கு `ராஜா ராணி’ நயன்தாரா-நஸ்ரியா மாதிரி.  அப்படி இதுல ரெண்டு பேருக்குமே பவர்ஃபுல் கேரக்டர்ஸ். அடுத்து ராதிகா மேடம். ‘ஊர்க்காவலன்’ல அவங்க பண்ணின கேரக்டரை ரெஃபரன்ஸா வெச்சு பண்ணியிருக்கேன். பயங்கர ஹியூமரஸா இன்னொசன்ட்டா ஒரு கேரக்டர்... பிச்சிட்டாங்க. பிரபு சார் கடல் மாதிரி. நடிக்கும்போதும் சரி... பேசும் போதும் சரி... நமக்குத் தேவையானதை அள்ளிக்கலாம்.’’

‘‘மீனாவின் மகள் நைனிகா அறிமுகமாகிறார். அப்படி என்ன ஸ்பெஷல் கேரக்டர்?’’

‘‘படத்துல விஜய் அண்ணா, மகேந்திரன் சார்... இவங்க ரெண்டு பேரோட முக்கியத்துவத்துக்கு சமமான கேரக்டர் ஒரு குழந்தைக்கு.  ‘தெய்வத் திருமகள்’ சாரா மாதிரியான கேரக்டர். அஞ்சு வயசுக்குள்ளதான் இருக்கணும். நடிக்கணும், பக்கம் பக்கமாப் பேசணும். நிறைய ஆடிஷன் பண்ணினேன். ஆனால் நம்ம தேடல் இது இல்லைனு தோணிட்டே இருந்துச்சு. ஒருகட்டத்துல பயங்கர அப்செட். ஒருநாள் ‘இந்தக் குழந்தை ஓ.கே-வானு பாருங்க’னு என் மனைவி செல்போன்ல ஒரு போட்டோவை காட்டினாங்க. ‘லைட்டா மீனா மேடம் மாதிரி இருக்கே’னு சொன்னேன். `அவங்க குழந்தையே தான்’னு சொன்னாங்க. மீனா மேடத்திடம் பேசினேன். கொஞ்சம் தயங்கினாங்க.  ‘ `அன்புள்ள ரஜினிகாந்த்’ல நீங்க, இப்ப `தெறி'ல விஜய் அண்ணாகூட உங்க பொண்ணு. உங்க பொண்ணை நான் டெஸ்ட் ஷூட் பண்றேன். அதுவும் உங்க திருப்திக்குத்தான்’னு சொன்னேன். அந்த டெஸ்ட் ஷூட் வீடியோவைப் பார்த்துட்டு, ‘தெய்வக் குழந்தைமா இது’ன்னார் தாணு சார். நீங்களும் அதை ஃபீல் பண்ணுவீங்க.’’

கொஞ்சம் வம்பு... ரொம்ப அன்பு!

‘‘ ‘ராஜா ராணி’ ரிலீஸான சமயத்தில் அது `மௌனராகம்’ மாதிரியே இருந்ததுனு சொன்னாங்க. இப்ப ‘தெறி’, `சத்ரியன்' படத் தழுவல்னு சொல்றாங்களே?’’

‘‘ ‘லவ் ஆஃப்டர் லவ் ஃபெயிலியர்’ங்கிறதுதான் `ராஜா ராணி' கன்டென்ட். கடந்தகாலக் காதலில் இருந்து வெளியே வந்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விஷயம் எல்லாருக்கும் போய் சேர்ந்ததால்தான் அது அவ்வளவு பெரிய ஹிட் ஆச்சு. அந்தப் படத்தைப் பார்த்துட்டு பேசினவங்களைவிட அழுதவங்க நிறையப் பேர். ‘கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னவ, `ராஜா ராணி’ பார்த்துட்டு மறுநாள் காலையில ஏழு மணிக்கு எழுப்பி `மாப்ள பாருங்க’னு சொன்னதா ஒரு அம்மா பேசினாங்க.  ஒரு படத்துல எமோஷனல் வேல்யூவை கரெக்டா கேரி பண்ணினா, அது எங்கேயோ யாரையோ திருத்துது. அதுதான் முக்கியம். தனிமனிதன் தன்னைத் திருத்திக் கொண்டால்... எல்லாரையும் திருத்துவதற்குச் சமம். இதுதான் `தெறி’. இப்படி நாம என்னதான் புதுசா சொன்னாலும் தழுவல், நழுவல்னு சொல்ற வங்களுக்கு கோபமா எங்கேயும் போய் பதில் பேசவே முடியாது.  ஏன்னா,  அது  பார்க்கிறவங்களோட பார்வை. அவங்க பார்வைக்கு நான் பதில் சொல்ல ஆரம்பிச்சிட்டேன்னா, என் பார்வையை நான் மறக்க ஆரம்பிச்சிடுவேன்!’’