நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: தி.குமரகுருபரன்
``வாவ்..! சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஆனந்த விகடன் விருது ஜெயிச்சது எனக்கு அவ்ளோ சந்தோஷம். நான் எதிர்பார்த்த நேரத்துல கிடைச்ச, பெருமையான, நம்பிக்கையான விருது'' - சந்தோஷம் பொங்கப் பேசுகிறார் நடிகர் கருணாகரன்.
``எல்லா ஃப்ளாஷ்பேக்லயும் சொல்ற மாதிரி, திருச்சியில படிச்சு முடிச்சதும் நானும் வேலை தேடி சென்னைக்கு வந்தவன்தான். மார்க்கெட்டிங் வேலைதான் முதல் வேலை. அங்க மூணு மாசம் வேலைசெஞ்சு, ஒரு கிளையன்ட்கூட பிடிக்க முடியலை. வேலையைவிட்டுத் தூக்கிட்டாங்க. அடுத்து ஆறு மாசம் பி.பி.ஓ-ல வேலை. அங்க இருந்து ஒரு ஐ.டி நிறுவனத்துல வேலைக்குப் போனேன். ரொம்ப நல்ல பிள்ளையா, பொறுப்பா ஆறு வருஷம் வேலைபார்த்தேன். அங்கதான் என் மனைவி தென்றலைச் சந்திச்சேன். அந்த கம்பெனியில தென்றல் எங்க ஹெச்.ஆர்'' என்றவர் ``என்னம்மா நான் சொல்றது சரிதானே'' என்று மெல்லிய குரலில் கேட்க, சிரித்துக்கொண்டே `டபுள் ஓ.கே' சொல்லி தலையாட்டுகிறார் தென்றல்.
`` என் மனைவி தென்றலோட தாய்மாமாதான் சண்முகநாதன் சார். கலைஞர் ஐயா தலைமையில்தான் எங்க காதல் கல்யாணம் நடந்தது. மூத்த மகள் மேக்னா, ப்ளஸ் ஒன் படிக்கிறாங்க. ரெண்டாவது மகள் தில்லானா, ஸ்கூலுக்குப் பொறுமையா போலாம்னு வீட்டுலயே விளையாடிட்டு இருக்காங்க'' என்று ஃபேமிலி இன்ட்ரோ கொடுத்த கருணாகரன், அடுத்து சினிமா இன்ட்ரோவுக்குள் நுழைந்தார்.

`இயக்குநர் நலன்குமரசாமி என் ஸ்கூல் ஃப்ரெண்ட். ஐ.டி கம்பெனியில் டீம் லீடரா நான் புரமோஷன் வாங்கின நேரம்... `ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்கப்போறேன், நீதான் நடிக்கணும்'னு நலன் கேட்டான். எனக்கு அப்ப வரைக்கும் ஸ்கூல் நாடகத்துல நடிச்ச அனுபவம் மட்டும்தான் இருந்தது. ஒரு கேமராவை வாடகைக்கு எடுத்து, தட்டுத்தடுமாறி படம் எடுத்து `நாளைய இயக்குநர்' நிகழ்ச்சிக்கு அனுப்பினோம்.
நம்ப முடியாத ஆச்சர்யம், `நீங்க `நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில் செலெக்ட் ஆகிட்டீங்க'னு நலனுக்கு போன் வந்தது. முதல் ரவுண்டு தொடங்கி படிப்படியா ஃபைனல் ரவுண்டு வரைக்கும் வந்துட்டோம். ஃபைனலில் `நெஞ்சுக்கு நீதி' குறும்படத்தில் நடிச்சேன். அதுக்கு இயக்குநர் ஷங்கர் சார் ஜட்ஜ். படத்தைப் பார்த்தவர் `I like your acting’-னு சொன்னார். செம ஜில்லுனு இருந்தது. மூணு நாள் ஆபீஸுக்கு லீவு போட்டுட்டு, அவர் சொன்னதை நினைச்சு நினைச்சு சந்தோஷப்பட்டேன். வீட்டுல பயங்கர திட்டு. `ஒழுங்கா வேலையைப் பாரு'னு எங்க அப்பா சொன்னார். ஆனா, எனக்கு சினிமா ஆசை இன்னும் அதிகம் ஆகிருச்சு.
`சூது கவ்வும்' படத்தை இயக்கத் தொடங்கிய நலன், `அருமைப்பிரகாசம்' கேரக்டரில் நடிக்கச் சொன்னான். அந்தச் சமயத்துல இன்னொரு பெரிய வாய்ப்பு வந்தது. கொஞ்சம் தயங்கினேன். நலன்தான் `எல்லா படத்திலும் நடிக்கணும்னு ஆசைப்படக் கூடாது. உனக்கு இந்த `அருமைப்பிரகாசம்' கேரக்டரைப் புரிஞ்சிக்க முடியாது. முதலில் நடி, அப்புறம் பாரு'னு சொன்னான். அவன் சொன்னதுபோலவே வாழ்க்கை மாறி... இப்ப ஆனந்த விகடன் விருது வரைக்கும் வாங்கிக் கொடுத்திருக்கு'' என கருணாகரன் நிறுத்த, அவர் மனைவி தென்றல் தொடர்கிறார்.

``இவர் சினிமாவுல நடிக்கிறது எனக்கு செம ஹேப்பி. இவர் நடிச்சதுல எனக்குப் பிடிச்ச படம் `இன்று நேற்று நாளை'தான். நேரம் கிடைக்கும்போது எல்லாம் ஃபேமிலிகூட நிறைய நேரம் செலவழிப்பார். ஒரு குடும்பஸ்தராகவும் நடிகராகவும் எனக்கு முழு நம்பிக்கை இவர் மேல இருக்கு'' என மனைவி பாராட்ட, ``எனக்கு குளிர் ஜுரம் வரப்போகுதுனு நினைக்கிறேன்'' எனக் கலாய்க்கிறார் கருணா.
``போன வருஷம் `கெத்து', `இறைவி', `ஜாக்சன்துரை'னு மூணு படங்களும் ஒரே சமயத்துல ஷூட்டிங். காலையில சென்னை, மதியம் கோவானு செம பிஸி. அதனால் ஃபேமிலிகூட சரியா டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலை. அதான் கொஞ்சம் வஞ்சப்புகழ்ச்சி அணியில் பேசறாங்க'' என மனைவியை சமாதானப்படுத்துகிறார்.
``இன்று நேற்று நாளை' படத்துக்காக விருது வாங்குவோம்னு நினைச்சீங்களா?''
`` `யாமிருமிக்க பயமே' படம் பண்ணும்போது இந்த வருஷம் எனக்குத்தான் பெஸ்ட் காமெடியன் அவார்டு கிடைக்கும்னு நம்பினேன். அப்ப கிடைக்கலை. இப்ப ஆனந்த விகடன் விருதுனு முதலில் போன் வந்ததும் யாரோ விளையாடுறாங்கனுதான் நினைச்சேன். ஏன்னா நான் இப்படி நிறையப் பேரைக் கலாய்ச்சிருக்கேன். உண்மைனு தெரிஞ்சதும் என்னைச் சுத்தி இருக்கும் எல்லாருக்கும் செம ஹேப்பி''- மகள்களை அணைத்தபடி சிரிக்கிறார் கருணாகரன்!